வாடிய முகத்துடன் அமைதியாக மனைவி வேலைக்கு கிளம்பிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான் ரத்னதீபன். சமீபமாக கிடைத்து வந்த காபியும் மனைவியின் மனதை கொள்ளை கொண்டதன் பலனாய் கைக்கே வந்த உணவும் மாறிப்போய் இப்போது சிறு பார்வைக்கே பஞ்சமாகிவிட்டது. தானே சென்று பேசினால் அவ்விடத்தில் நிற்பதையே தவிர்த்துவிடுகிறாள் மனைவி. கோபத்தின் பிடியில் இருந்தபோது கூட ஒன்றாக அருகருகே இருந்த உறக்கம் இப்போது தனித்தனி அறைகளாகிவிட்டது. இவன் சென்று கூப்பிட்டால் இங்கிருக்கவா கிளம்பிவிடவா என்பது போல் வாசலையும் அவனையும் ஒரு பார்வை பார்ப்பாள் அதிலேயே ஒதுங்கிவிடுகிறான் ரத்னதீபன். விட்டுச் செல்லாமல் உடன் இருக்கிறாளே என சமாதானம் செய்துகொண்டான்.
முன்பெல்லாம் அவளுக்கு முன் வெளியே கிளம்பிவிடுபவன் இரவு தாமதமாக வீடு வருவான். இப்போதோ அவள் கிளம்பும் வரை உடன் இருந்து அவளை நெருங்க வழிகள் தேடிக்கொண்டிருக்கிறான். நீ ஓரடி முன்வைத்தால் நான் இருபதடி பின்செல்வேன் என மனைவி செயல்முறையில் காட்டிவிட, எட்ட நின்றே இயலாமையுடன் அவள் செய்கைகளை கவனித்து அமர்ந்திருக்கிறான். அங்கு அவன் ஒருவன் இருப்பதையே கவனியாதவள் போல் குளித்துக்கிளம்பி சிற்றுண்டி உண்டு மதியத்திற்கும் கட்டிச் சென்றவளை வருத்தத்துடன் பார்த்தவன் தானும் குளித்துக் கிளம்பி வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை பார்த்தான். தெரியாமல் கூட இவனிடம் பேச்சு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற உறுதியில் வீட்டிற்கு இன்னொரு சாவி போட்டுக்கொண்டு அவள் வேலையைப் பார்த்துக்கொள்கிறாள் செண்பகா. இவனுக்குதான் மண்டை காய்ந்தது.
இரு வருடம் பேசாது எட்ட நின்று கோபத்தில் கழித்த பொழுதுகள் கூட இப்படி வலி கொடுக்கவில்லை. ஒரே வீட்டினில் இருந்துகொண்டு நான் யாரோ நீ யாரோ என்பது போல் இருப்பது அவன் வேதனையின் அளவை அதிகப்படுத்திக்கொண்டே சென்றது. அவளின் புறக்கணிப்பு அவனை போட்டு அழுத்த, ஆளே சோர்ந்துபோய் வலம் வந்தான். கூடவே அவளும்தானே வேதனையை புதைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறாள் என அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கவலை கொண்டவனுக்கு அவளை எப்படி நெருங்குவது என்றும் புரியவில்லை. சண்டை போட என்னவோ எளிமையாக வந்துவிடுகிறது இந்த சமாதானம் தான் மக்கர்.
‘ஒன்னா சேர்ந்து மூணு மாசம் இருக்குமா? அதுக்குள்ள இப்படி ஒரு மனக்கசப்பு. இருந்தும் கஷ்டம் இல்லாதப்பையும் கஷ்டம். ஆக மொத்தம் இந்த கல்யாணமே கசப்புதான்யா.’ என்ற எண்ணம் இருவர் மனதிலும்.
அன்றைக்கும் சோர்வுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு விமலிடமிருந்து அழைப்பு வந்தது. இது போன்று வேலை நேரங்களில் அவன் அழைக்க மாட்டேனே என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்க, பொதுவான நலவிசாரிப்புகளுக்குப் பின்,
“தாம்பரம் கார்ப்ரேஷன்ல ஏரி தூர்வார கான்ட்ராக்டர்ஸ்கு டெண்டர் நோட்டீஸ் விட்டுருக்காங்க. நமக்கு கிடைக்குற மாதிரி நீங்கதான் பாத்து பண்ணி குடுக்கணும் மச்சான்.”
‘நமக்கா?’ அதிர்ந்து போன ரத்னதீபன், “நம்ம ஊர் பக்கம்தான பண்ணிட்டு இருந்தீங்க. இந்த பக்கம்னா கஷ்டமா இருக்குமே.” என சொல்லிப் பார்த்தான். சிபாரிசு என வெளியிலிருந்து ஆட்கள் நிறைய பேர் அணுகியிருக்க, பெரிதாக எதிலும் தலைக்கொடுக்காமல் தப்பித்து வந்தவனுக்கு தங்கைக் கணவனின் கணக்கு சங்கடம் கொடுப்பதாய்.
“கஷ்டம் எல்லாம் பாத்தா வளர முடியுமா மச்சான்? எவ்ளோ நாள் சின்ன சின்ன கான்ட்ராக்ட் எடுத்து பண்ணிட்டு இருக்க முடியும்? நேரம் வர்றப்போ விரிவுப்படுத்தணும்ல. அந்த டெண்டர் என் நிலைமைக்கு மீறுனதுதான், நீங்க இருக்கும்போது என்ன பயம்னு துணிஞ்சி இறங்கலாம்னு நினைச்சேன். உங்களுக்குத் தெரியாதா என் தொழில் சுத்தம் எப்படினு.” என விமல் சரளமாய் பேச,
“அது சரிவராது மச்சான். நாளைக்கே என் குடும்பத்துக்கு பேவர் பண்ணிட்டேன்னு என்மேல ஒரு சொல் வந்துடும்.” உடனே மறுத்தான் ரத்னதீபன். அதனை அலட்சியம் செய்தவனாய்,
“பேசட்டுமே மச்சான். நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்? வேலையை செஞ்சிட்டு அதுக்கான கூலி வாங்கிக்க போறோம். நான் இல்லைனா வேற யாருக்கோ போகும், அவங்க சம்பாரிக்க போறாங்க. அதுக்கு எனக்கு வர மாதிரி பண்ணிக் குடுத்தா நம்ம குடும்பம் வளரும்ல. அதோட நீங்க கேக்காத காசிப்பா சொல்லுங்க…” என விமல் நிறுத்த, நெற்றியை தேய்த்துக்கொண்டான் ரத்னதீபன்.
விமலுக்கு பரிந்துரை செய்வது பிரச்சனையில்லை அவன் தொழில் நேர்த்தி அப்படி. ஆனால் அவன் பேச்சு… அது அவிழ்த்துவிடும் வார்த்தைகள் நாளை தனக்கு எதிராக நின்றுவிடுமோ என்ற அச்சம் ரத்னதீபனை உதவி செய்ய முன்வரவிடாமல் தடுத்தது.
“என்ன மச்சான் அமைதியா இருக்கீங்க? அவன் அவன் அதிகாரம் வந்ததும் அங்காளி பங்காளி எல்லாம் பணக்காரன் ஆக்கி விடுறான். சொந்த மச்சானை கைகொடுத்து தூக்கிவிட இப்படி யோசிக்குறீங்க. என்ன சொல்லுங்க உங்களுக்கு கிடைச்ச மச்சான் மாதிரி எனக்கு வாய்க்கல.” விமல் போலியாக பெருமூச்சுவிட்டுக்கொள்ள, இங்கு இவனுக்கு தலையிடி ஆனது.
“நீங்க அப்பளை பண்ணுங்க பாத்துக்கலாம்.” பட்டும்படாமல் இதிலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்பது போல் ரத்னதீபன் சொல்ல, விடுவேனா என காரியத்தில் கண்ணாக இருந்தான் விமல்.
“எவ்ளோ கொட்டேஷன் கொடுத்தா கான்ட்ராக்ட் கிடைக்கும்னு பாத்து சொல்லுங்க மச்சான். அதுபடி பண்ணிடுறேன். பேனர்லாம் அடிச்சி ரசிகர் பக்கம்லாம் வச்சிருக்கேன் உங்களுக்கு, பாத்து பண்ணிவிடுங்க.” என தன் செயல்களையும் விளையாட்டு போலவே சொல்லிவிட்டு வைத்தான் விமல்.
நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்ட ரத்னதீபன் பிரபுவை அழைத்துச் சொல்ல, “கண்டிப்பா பண்ணனுமா அண்ணே? இதுவரைக்கும் நாம இப்படி பெரிய விஷயத்துல இறங்குனது இல்லையே.” எனத் தயங்கினான்.
“என் மச்சான் எவ்வளவுக்கு எவ்வளவு இனிச்சி பேசுறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு காரியக்கார். அவர் நினைச்சது நடக்குற வரை ஓயமாட்டாரு. அவரையெல்லாம் அவாயிட் பண்ண முடியாது. எதிர்கேள்வி கேக்காம சொன்ன வேலையை முடிச்சிக் கொடு. இதுவே ரொம்ப லேட், இன்னும் ரெண்டு மாசத்துல நல்ல மழை ஆரம்பிச்சிடும், அதுக்குள்ள எப்போ தூர்வாரி எப்படி எல்லாம் நடக்கப்போகுதோ.” பிரபு முகம் பார்க்காது சலித்துக்கொண்டே அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டான்.
அடுத்த வாரத்தின் ஒரு தினம் வேலை முடித்து இரவு வீடு திரும்புகையில் மனைவியை அந்த நிலைமையில் பார்ப்போம் என நினைக்கவே இல்லை ரத்னதீபன். லேசான தூரல் கொஞ்சம் வேகம்பிடிக்க, தன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த முனைந்தவன் சட்டென பிரேக் போட்டான். பூட்டியிருக்கும் கடையின் வாசலில் கோபம் கொப்பளிக்க கைப்பையை அழுந்தப் பற்றிப்படி அமர்ந்திருந்தாள் செண்பகா.
அதிர்ந்தவனாய் வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தவன், “என்னாச்சு? ஏன் இங்க இருக்க?” எனக் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள் முகம் ஆசுவாசம் அடைந்து பின் கோபத்தை பூசிக்கொண்டது.
“செண்பா?” யோசனையாய் அவள் கையை பிடிக்க வர, பட்டென எழுந்தவள் விறுவிறுவென சாலையில் இறங்கி நடந்தாள்.
என்னவாகிற்று? இந்த நேரத்தில் வீட்டிற்கு போகாமல் எதற்கு இப்படி இங்கு அமர்ந்திருக்கிறாள்? என புரியாதவனாய் அவளை பின்தொடர்ந்து வேக நடையிட்டவன் இடையே தலையில் அடித்துக்கொண்டு வண்டியை கிளப்பி அவளை மறிப்பது போல் நிற்க, முறைத்துப் பார்த்தது பெண்.
“என்னன்னாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். ஏறு வண்டியில, மழை அதிகமாகுது.”
அண்ணாந்துப் பார்த்தவள் முகத்தில் மழைத்தூறல் பொத்தென்று விழ, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வண்டியில் அவசரமாக ஏறினாள். குழப்பத்துடனே வண்டியை செலுத்தியவனுக்கு சிறிது தூரத்திலேயே காரணம் பிடிபட்டுவிட்டது. அவர்கள் வீடு இருக்கும் பக்கம் முழுதும் வீடுகளை ஒட்டி பெரிதாக பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். பலரது வாகனங்கள் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல முடியாமல் வெளியிலேயே நின்றது. சில வீடுகளில் பலகைகள் தற்காலிக பாலமாக சாலையையும் வீட்டையும் இணைத்துக் கொண்டிருந்தது. இவன் வீட்டில் அப்படி பாலம் போன்ற அமைப்பு எதுவும் இல்லை என்பதால் செண்பகாவால் உள்ளே போக முடியவில்லை எனப் புரிந்தது. பள்ளத்தில் இறங்கி நின்று வீட்டின் இரும்புக் கதவை திறந்துகொண்டு செல்வது இயலாத காரியம்.
“எவ்ளோ நேரமா அங்க உக்காந்திருக்க? பக்கத்துல சொல்லியிருந்தா யாரும் ஹெல்ப் பண்ணி இருப்பாங்க. அதை விட்டு பத்து மணி வரைக்கும் அங்க உக்காந்திருக்க? இல்லைனா உடனே எனக்கு கூப்பிட வேண்டியதுதான?” என கேட்டுக்கொண்டே பலகை எதுவும் கிடைக்கிறதா எனத் தேடினான்.
கையை கட்டிக்கொண்டு மழைக்கு ஏதுவாய் துப்பட்டாவை தலைக்கு போர்த்திக்கொண்டு அவனை வேடிக்கை பார்த்து நின்றாள் செண்பகா.
“வீட்ல ஆள் இல்லைனா அப்படியே தோண்டிப் போட்டு போயிடுவாங்களே. வீட்டுக்காரங்க எப்படி உள்ள போயிட்டு வருவாங்கனு யோசனையே கிடையாது.” என்ற முணுமுணுப்புடன் எங்கிருந்தோ ஒரு சிறு பலகையை எடுத்துவந்து போட்டவன் வீட்டுக்கதவை திறந்துவிட்டு, “மெல்ல கால் வச்சி…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேகமாக அதில் ஏறிவிட்ட செண்பகா இரண்டே தாவலில் வீட்டினுள் சென்றுவிட்டாள். பெருமூச்சுடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தான் ரத்னதீபன்.
அவனது அலுவலக அறையில் அவள் உடைமாற்றி வர, “நேரமே உன் வேலை முடிஞ்சிருக்குமே. அப்போவே யாரையாவது பலகை போட சொல்லி வீட்டுக்கு வந்திருக்கலாம்ல. எனக்கு போன் போட்டிருக்கலாம்.” என்றதை அவள் கண்டுகொள்ளாமல் நகர, பிடிவாதமாக அவளை பிடித்து நிறுத்தியவன்,
“பதறிப்போய் உன் மேல இருக்குற அக்கறையில கேட்டா பதில் சொல்ல மாட்டியா? என்னனு நினைக்குறது நான்?”
“என்ன தெரியணும் இப்போ ஹான்? இன்னைக்கு வேலை பாக்குறவங்களோட வெளில போயிட்டு லேட்டாதான் வந்தேன். எல்லா வீடும் பூட்டியிருக்கவும் உனக்குத்தான் போன் போட்டேன். உனக்குத்தான் என்னைவிட ஆயிரம் வேலை இருக்குமே.” இகழ்ச்சியாக சொல்லி கைகளை உருவிக்கொண்டு அவள் நகர, அலைபேசியை எடுத்துப்பார்த்தான் ரத்னதீபன்.
அமைதிப்படுத்தப்பட்டிருந்த அவனது எண்ணிற்கு இருமுறை அழைத்திருந்தாள் செண்பகா. ‘சொதப்புறியேடா…’ அலைபேசியால் நெற்றியை தட்டிக்கொண்டு அவளை மன்னிப்பாய் பார்க்க,
“ரெண்டு நம்பர் வச்சிருந்தா மட்டும் பத்தாது. போன் வந்தா அதை அட்டென் பண்ணனும் இல்லையா ரெண்டு போன் வச்சுக்கணும். எம்.எல்.ஏன்னு பேரு, ஆனா…” பேசிக்கொண்டே சென்றவள் சட்டென பேச்சை நிறுத்தி அவனை நோக்கி தன் ஆட்காட்டி விரலை நீட்டியவள்,
“இந்த வீட்லேந்து போக வழி தெரியாம ஒன்னும் நான் இங்க இல்லை… நீ வேண்டாம்னு எல்லாரும் சொன்னதை மீறி உன்கூட வந்துட்டு எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு திரும்பப் போறதுன்னுதான் எந்த பங்ஷனுக்கும் ஊருக்கு போகாம இங்கேயே இருக்கேன். அதனால இந்த உரிமையெடுத்து கேள்வி கேக்குறது, கை புடிக்கிறது எல்லாம் வேண்டாம்.” என மிரட்டல் போல சொல்லிவிட்டு சென்றாள் செண்பகா.
இதற்கு தீர்வே கிடையாதா என்ற சோர்வு எட்டிப்பார்க்க, கூடத்தில் அப்படியே படுத்துவிட்டான் ரத்னதீபன். கவனித்தாலும் செண்பகா ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்க, செண்பகா முதலில் சென்றுவிட்டாள். நிதானமாக கிளம்பியவன் வீட்டு வாயிலில் ஆட்கள் வேலைக்கு வரும்வரை காத்திருந்து அவர்களிடம் எதற்கு வேலை நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டதோடு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதபடியும் திட்டமிட்டு செய்யும்படியும் கேட்டுக்கொண்டு கிளம்பினான்.
“எங்க தெருவுல வடிகால் வேலை நடக்குது, என் டேபிலுக்கு ஏன் அப்டேட்ஸ் வரல? நைட் பாத்தா அவ்ளோ பெரிய பள்ளம் நோண்டி வச்சிருக்காங்க. இப்போ விடிஞ்சதும் நானா கேட்டு தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கேன்.” பிரபு வந்ததும் கடுமையுடன் கேட்டான்.
அவனோ அப்படியா என இவனிடம் விவரம் கேட்டுக்கொண்டு தனக்கு கீழ் உள்ள உதவியாளர்களை தொடர்புகொண்டு வைதான்.
“இனிமே இப்படி நடக்காது அண்ணே. மழைநீர் வடிகால் முடிஞ்சதும் ரோட் போடுறதுதான் நெக்ஸ்ட்.” என சமாதானம் போல் சொல்லி அவனை ஏறிட, ரத்னதீபன் முகம் கடுகடுவென இருந்தது.