ஞாயிறு நிதானமாக எழலாம் என்ற எண்ணத்தில் விழி திறவாமல் உறக்கத்திலேயே புரண்டுப் படுக்க முயன்றவளை எதுவோ தடுக்க, பட்டென கண்விழித்துப் பார்த்தாள் செண்பகா. ரத்னதீபனின் கைகள் அரணாய் அவளை சுற்றி வளைத்திருப்பது மட்டுமில்லாமல் அவள் தோள்களை அவன் மஞ்சமாக்கி பாதி உடலை இவள்மேல் கிடத்தி உறங்கிக் கொண்டிருந்தான். சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள, குனிந்து அவன் முகம் பார்த்தாள். தன்னகங்காரம், திமிர், அலட்சியம் என அனைத்தையும் துறந்தவன் போல் நிர்மலமாக உறக்கத்தின் சாயலை தத்தெடுத்திருந்தது அவன் முகம். சீராக இறங்கி ஏறும் மூச்சுக்களின் சூடு அவள் தோள்பட்டையை பதம் பார்க்க, சிலிர்த்துக்கொண்டு நின்றது அவளது மயிர்க்கால்கள். இன்னும் நெருங்கி வாயேன் என்பது போல் காத்திருந்து துடித்தது அவள் கழுத்து நரம்புகள்.
புதிதாக பிரவாகம் எடுக்கும் உணர்வுகளின் பிடியில் லேசாக பதட்டம் கொண்டவள் மனதின் கோபங்கள் பின்செல்ல, அவன் நெருக்கம் பிடிப்பது போல் இருந்தது. உரிமையான அவனது ஆக்கிரமிப்பும் அசைய விடாமல் பொத்தி வைத்துக்கொண்டது போலான உணர்வு கொடுத்த அவன் உடும்புபிடிப்பும் கணவன்பால் அவளை சாய்க்க, அவளையும் அறியாமல் அவனுடன் ஒண்டிக்கொண்டது பெண். உறக்கத்தில் லேசாக அசைந்து தன் காலை மனைவியின் மேல் தூக்கிப்போட்ட ரத்னதீபனை அணைக்க தன்னைப்போல் அவள் கரங்கள் உயர,
‘கோவம் கோவம்னுட்டு இப்படி ஒருதடவை கட்டிக்கிட்டதுக்கே வழியிறியேடி.’ மனசாட்சி காரித்துப்ப, கையை அப்படியே கீழே இறக்கிவிட்டாள்.
‘தூங்கதான செய்யுறான். இப்போ புடிச்சா தெரியவா போகுது? உன் புருஷன் நீ கட்டிக்காம எவ கட்டிப்பா?’ அறிவு அவளை உந்த, இதழ் கடித்து அவனை குனிந்துப் பார்த்தவள் மெல்ல கைகளை உயர்த்தி அவனை பிடித்துக்கொண்டாள். ஒரு கை அவன் இடுப்பையும் மற்றொன்று அவன் தோளையும் சுற்றிப் படர்ந்து அவன் எனக்கானவன் என்று உரிமைக் கொடி நாட்டியது. சாரலுடன் சேர்த்து ஏதோ சாதித்துவிட்ட உணர்வு. என்னுடையது என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது என்ற நிம்மதியுடன் குனிந்து தாடையைத் தாழ்த்தி அவன் தலையில் லேசாக மூக்குரசி கண்களை மூட, மனதின் நிர்மலம் மெல்ல அவளை உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது. மீண்டுமொரு ஆழ்ந்த உறக்கம். கணவன் விழித்து அதிர்வுடன் அவளை பார்ப்பது கூட தெரியாதளவு தூக்கம்.
தானாக உறக்கம் கலைந்து விழித்தவனுக்கு தான் மனைவியை வளைத்துப்பிடித்து அணைத்திருப்பதுதான் கருத்தில் பதிந்தது, மனைவி அவனை பிடித்திருப்பதை உணரவே இல்லை அவன்.
‘ஐயோ எழுந்து பார்த்தா சாமியாடிடுவா.’ என உடனே அலறிய மனதை சமாதானப்படுத்த வார்த்தைகள் தேட விழைந்தவன் அதை கைவிட்டு, ‘அவ எந்திரிக்குறதுக்கு முன்னாடி நாம எழுந்து போயிடுவோம். இல்லைனா கெஸ்ட்கிட்ட இப்படித்தான் நடந்துப்பீங்களான்னு வச்சி செய்வா.’ என புலம்பிக்கொண்டே மெல்ல எழ முயல, அதில் கைகளை தளர்த்தி அசைந்து படுத்தாள் செண்பகா.
எழுந்துவிட்டாளோ என ஒருநிமிடம் மூச்சைப் பிடித்து கண்கள் விரிய பதறிய ரத்னதீபனுக்கு தன்னைக்குறித்தே கழிவிரக்கம், ‘எப்படி விறைப்பா சுத்துனவன் நான், என்னை இப்படி பயப்பட வச்சிட்டாளே.’ என நொந்துகொண்டே மீண்டும் அவன் எழ முயல, முடியவில்லை. யோசனையுடன் எது எழ விடாமல் தடுக்கிறது எனப் பார்க்க, அவன் இடை தழுவியிருந்த துண்டின் நுனி அவள் இடைக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்தது. லேசாக அதை அவன் இழுக்கப்பார்க்க வரவில்லை. கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இழுக்க அந்த அதிர்வில் எழுந்துவிட்டாள் செண்பகா. உடனே இழுப்பதை நிறுத்தியவன்,
“ஐயோ நான் இல்லை.” என்று அவன் அலற, அவனைப் பார்த்த அவளும் அலறினாள்.
கண்களை மூடிக்கொண்டு அவள் திடுக்கிட்ட பாவனையில் குழப்பமுற்றவன் தன் அதிர்வை குறைத்து, ‘இவ எதுக்கு கத்துறா?’ என்று பார்க்க,
“ஐயோ… வெக்கமா இல்லையா உங்களுக்கு. அச்சோ… போங்க.” சிணுங்கிக்கொண்டே அவள் எழுந்து ஓடிவிட, ஒன்றும் புரியாமல் விழித்தவன் குழப்பத்துடன் எழ முயல, இடை நழுவிய துண்டு அவனை விட்டு மொத்தமாய் விலக அதிர்வில் அப்படியே கட்டிலில் அமர்ந்து துண்டை இழுத்துக் கட்டிக்கொண்டான். முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்துவிட, துடித்த இதழ்களை அடக்கி முகத்தை மூடி அமர்ந்துவிட்டான்.
‘என்ன இப்போ அவதான… அதுக்கு ஏன் வெட்கம் வருதாம்?’ சில நிமிடங்களில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு எழுந்தவன் மீண்டுமொருமுறை துண்டை இறுக்கமாக கட்டிக்கொண்டு மனைவியைத் தேடி வெளியே செல்ல, சமையலறை மேடையில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டு இதழ்களுக்கிடையில் எதையோ முணுமுணுத்தபடி இருந்தாள் செண்பகா.
அவளைக் கண்டதும் சூடேறிய தன் உடலை கட்டுக்குள் கொண்டுவந்து அவளை நெருங்கியவன் பின்னிருந்து அவளை அணைக்க,
“ஐயோ என்ன பண்றீங்க விடுங்க…” இரு வருடங்களில் கேட்டிராத ஒரு குரலில் குழைந்து வெட்கம் கொண்டு செண்பகா விலக முனைய, தன் அணைப்பில் சிலிர்த்து சிவந்து நின்ற மனைவியைப் பார்த்தான்.
கழுத்தை ஒட்டியிருந்த தோல்களில் சிலிர்த்ததுக்கான அடையாளமாய் சிறு சிறு முட்டுக்கள் போல் பூனை முடிகளின் வேர்க்கால்கள் கூம்பி நிற்க, இளஞ்சிவப்பு பூசிய வெண்பஞ்சாய் அவள் செவிகள் அவனை அழைத்தது. வெகு நிதானமாய் அவ்விடத்தில் பட்டும்படாமல் ரத்னதீபன் தன் இதழ் ஒற்ற, கூச்சத்தில் உடல் சுருக்கி கால்விரல்களை மடக்கி அவனுடன் ஒன்றி நின்றாள் செண்பகா.
“செண்பா…” தாபமான கணவனின் அழைப்பு மனைவியின் செவி எட்டும் முன்னர் குட்டி குட்டியாய் நிறைய முத்தங்கள் தொடர்வண்டியென அவள் செவியை அலங்கரித்தன.
மேடு பள்ளத்தில் இறங்கி ஏறுவது போல் அவனது சூடான இதழ்களும் செவிக்கும் கழுத்துக்கும் பயணம் செய்ய, கூசி நின்ற பெண்ணவள் பிடிமானத்திற்கு மேடையை பிடித்துக்கொண்டாள். அவன் மீதிருந்த வருத்தம், ஆதங்கம், கோபம், வீம்பு எல்லாம் எங்கோ சென்று ஒளிந்துகொள்ள, மனைவியாய் கணவனை ஏற்கும் தலைவியாய் மயங்கி நின்றாள் செண்பகா. மனைவியின் இணக்கம் கணவனைத் தூண்ட, இதழ்களுக்கு கொடுத்த வேலை போலவே கைகளுக்கும் கொடுத்தான். அதுவும் வேலையை கற்றுக்கொள்ளும் ஆவலில் ஊர்வலம் சென்று இடங்களை ஆய்வு செய்தது.
அவன் விளையாட்டுகளின் தீவிரம் பெண்ணவளை வலுவிழக்கச் செய்ய, அவன் செய்கைகளுக்கு தடை விதிப்பது போல் பட்டென திரும்பி கணவனை அணைத்துக்கொண்டாள் செண்பகா. அதுவரை மோன நிலையில் இருந்த தலைவனுக்கு மனைவியின் அணைப்பு சுகஅவஸ்தையானது. அவள் கரங்கள் தன் முதுகின் நீள அகலங்களை கணக்கிடுவது புரிய, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாதவனாய் அவளை தன்னிலிருந்து பிரித்து, கன்னக்கதுப்புகளை தனக்குள் அடக்கி அவள் இதழ்களை தன்வசமாக்கிக்கொண்டான் ரத்னதீபன். இசைந்து கொடுத்த பெண்ணின் அனுமதியில் அவளை எப்போது தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்தான் என இருவருக்கும் தெரியவில்லை. எப்போது ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஒருவரில் ஒருவர் கரையத் துவங்கினர் என்ற விவரமும் தெரியாது. தெரியப்படுத்தவென அவன் அலைபேசி ஒலிக்க, முதலில் விழித்தது பெண்மை. கழுத்துக்கடியில் புதைந்து முரட்டுத்தனமாய் தன் முத்தங்களை வாரிவழங்கிக் கொண்டிருந்தவன் பிடரி முடி பிடித்து தூக்கினாள் செண்பகா.
தடைபட்ட சுணக்கத்தில் அவன் நிமிர, அலைபேசியை சுட்டிக்காண்பித்த செண்பகா லேசாக அசைந்து நகரப் பார்த்தாள். அவளை பிடித்துக்கொண்டே அலைபேசியை அமைதிப்படுத்திய ரத்னதீபன் மீண்டும் மனைவியிடம் தஞ்சம் புக, நடப்பவற்றை கிரகிக்க முயன்றுகொண்டிருந்த செண்பகா அவனை நெருங்கவிடாமல் பிடித்துக்கொண்டாள்.
“செண்பா?” சட்டென உணர்ச்சிகள் விடைபெற நிமிர்ந்தவனை யோசிக்கவிடாது அலைபேசி அழைப்பு மீண்டும் வர, வேறு வழியின்றி அவளிடமிருந்து நகர்ந்தான்.
இதுதான் சமயம் என உருண்டு நகர்ந்து சென்றவள் நெஞ்சில் கைவைத்து படபடக்கும் இதயத்தை சமன்செய்ய முயன்றாள். கண்ணைக்கட்டிவிட்டது போல் எப்படி தன்னையும் அறியாமல் இப்படியொன்று நடக்கவிருந்தது என்ற அலசல் அவளை பதட்டத்திலேயே வைத்துக்கொள்ள, அலைபேசியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தவன் வருகிறேன் என சொல்லிவிட்டு அலைபேசி வைக்கவும் பட்டென எழுந்தாள் செண்பகா. விட்டதை தொடர்கிறேன் என நெருங்கிவிடுவானோ என்ற பதட்டம் அவள் உடல்மொழியில் தெரிய, அவள் எண்ணம் போலத்தான் சம்சார சாகரத்தில் மூழ்க்க நினைத்தான் ரத்னதீபன்.
“எங்க போற நீ?” குழைந்து நெகிழ்ந்த அவன் குரல் அவளை தடுக்க, அவன் கைகளும் மனைவியை பற்றி நிறுத்தியது.
“எனக்கு வேலை இருக்கு.” அவனைப் பாராமல் கைகளை உருவிக்கொண்டே அவள் சொல்ல, எழுந்தமர்ந்து அவளை பின்னிருந்து அணைப்பது போல் அவன் பிடிக்க, நெளிந்தாள் மனைவி.
“இன்னைக்கு சண்டே.”
“சண்டே வயிறுக்கு லீவு கிடையாது. சமைக்கனும்.” மறுப்பிற்கான அழுத்தமின்றி மெல்லிய குரலில் அவள் பதில் உரைக்க, அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டான் ரத்னதீபன்.
“வெளில வாங்கிக்கலாம்.” என்றவன் முழுதாக அவளை வளைத்துப் பிடித்து அவள் கழுத்தினில் முகம் புரட்டி அவள் சதையை வலியாமல் கவ்விப்பிடிக்க, மறுத்துத் தடுக்க முயன்றாலும் செண்பகாவால் முடியவில்லை. காலை நீயும்தானே அவனை கொஞ்சிக்கொண்டாய் என அவள் அறிவே அவளுக்கு தடை விதிக்க, போராட்டக்களமாய் மாறியது அவள் உள்ளம். நெருக்கத்தை முழுமனதாய் ஏற்கவும் முடியாது அவனை விலக்கவும் முடியாது தடுமாறியவளை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தவனை மீண்டும் அழைப்பு கலைத்தது. இம்முறை அவனே விலகி அலைபேசியை கையிலெடுத்து அவளைப் பார்த்து பெருமூச்சுவிட, விட்டால் போதுமென்பது போல் எழுந்து சென்றுவிட்டாள் செண்பகா.
“என்னடா பிரச்சனை உனக்கு? எதுக்கு திரும்பத் திரும்ப கூப்பிடுற?” கடுப்புடன் எதிர் இருப்பவனை சில நொடிகள் பேசவே விடவில்லை.
“அமைச்சர் வேலுச்சாமி உங்களை பாக்கணுமாம். வீட்டுக்கு வர சொல்லியிருக்காரு இன்னைக்கு.” என்ற பிரபுவின் அறிவிப்பில் முற்றிலுமாக அரசியல்வாதியாக மாறிப்போனான் ரத்னதீபன்.
“காரணம் இல்லாம வீட்டுக்கு எல்லாம் கூப்பிடுற ஆள் இல்லையே அவர்.” என்று கூர்மையானவன் யோசனைகள் எல்லா பக்கமும் சென்றது.
“அந்த ஹோட்டல் கட்டுற பிரச்சனை பத்தி இருக்குமோ?” என பிரபு எடுத்துக்கொடுக்க, அதற்காக நேரில் வரச்சொல்கிறாரா? அப்படியென்றால் அந்த இடம் அத்தனை முக்கியம் அவருக்கு என்றே தோன்றியது ரத்னதீபனுக்கு. நேரில் சென்று வந்துவிடுவோம் என்று அப்பொழுதே கிளம்ப ஆரம்பித்தான்.
இவன் பேசிக்கொண்டிருக்கும் போதே குளியறையில் சுத்தப்படுத்திக்கொண்டு சமையலறை சென்றிருந்த செண்பகா இவனுக்காக காபி போட்டு வைத்திருந்தாள். ஆச்சர்யமாக அவன் பார்க்க, பின்னோடே தட்டில் உப்புமா வந்தது.
“சாப்பிட்டு கிளம்புங்க.” அவன் முகம் பார்க்காமல் தட்டை நீட்ட, வியப்புடன் வாங்கிக்கொண்டவன், “இன்னைக்கு மினிஸ்டரை பாக்க போறேன். அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காரு. அப்படியே தொகுதி பக்கம் போய் பார்த்துட்டு சீக்கிரம் வந்துறேன். சாயந்தரம் வெளில போலாம்.”
மனைவியின் இணக்கம் அனைத்தும் சரியான பாதை நோக்கி செல்கிறது என்ற பிடிப்பை கொடுக்க, நல்ல மனநிலையில் இருந்தவனுக்கு ஒருவழியாய் மனைவியை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. அன்றைக்கான தன் வேலையை பகிர்ந்து கொண்டான்.
இப்போது செண்பகாவும் வியப்புடன் அவனைப் பார்த்தாள். முன்பே கட்சிப் பணிகள் காரணமாக எப்போதாவதுதான் வெளியே அழைத்துச் செல்வான். பிரிவிற்கு பிறகு முதன்முறையாய் அவனாகவே அழைத்துச் செல்கிறேன் என்று சொல்ல, இனிய கற்பனைகள் அப்பொழுதே விரியத் துவங்கிவிட்டது.
வேகமாக உண்டு முடித்தவன் மனைவியின் கன்னத்தில் ஆழ முத்தமொன்றை பதித்து அவளை ஓய்வெடுக்கச் சொல்லி கிளம்பினான். வண்டியில் அமர்ந்தபடியே அவளிடம் கையசைத்து புன்னகை முகமாய் விடைபெற்று சென்றவனை வாசலில் நின்று பார்த்த செண்பகாவிற்கு சட்டென்று வானிலை மாறிய தோற்றம்.
நேற்று வரை அவன்மீது கோபத்தில் இருந்தவள் மனது சட்டென இன்று எப்படி சாரல் தாங்கி குளுமை வீசுகிறது? தன் கோபத்தின் வீரியம் அவ்வளவுதானா? அவனது சிறு தொடுகை, பெரும் முத்தம், ஆளை விழுங்கப்பார்க்கும் பார்வை, கட்டியணைக்கும் அவன் கரங்கள் இவ்வளவுதான் அவளை வலுவிழக்கச் செய்யும் ஆயுதங்களா? அவனது அலட்சியங்கள், தான் செய்வதனைத்தும் சரியென்ற இறுமாப்பு அதன்மீது அவள் கொண்ட வெறுப்பு இதுவனைத்தும் நொடியில் காணாமல் போகுமா என்ன? அகம் ஆக்கிரமித்த சிந்தனைகளால் ஒருபக்கம் குழம்பித் தவித்தாள் என்றால் மறுபுறம் இப்போதாவது என் பக்கம் இவன் கவனம் திரும்புகிறதே என குதூகலித்தது.
நேசம் வைத்த மனதும் கோபம் கொண்ட அறிவும் தன் மனமாற்றத்தை கிரகிக்க முயன்று அறிந்துகொண்டது என்னவோ தனக்கு அவன்மீது இருப்பது அதிருப்திதானே ஒழிய வெறுப்பில்லை. அவன் நெருங்கும் சமயங்கள் அவன்மீதான அன்பு விழித்துக்கொண்ட அனைத்தையும் ஒதுக்கிவிடுகிறது, அவனை ஏற்றுவிடுகிறது.
தீர்க்கப்படாத சஞ்சலங்களும் விடை கிடைக்காத கேள்விகளும் முன்செய்த செயலின் வீரியத்தால் உண்டான கசப்புகள், கோபங்கள் என அனைத்தும் இன்னும் அப்படியே இருக்க அவனது நெருக்கங்களை ஆசையுடன் ஏற்றுக்கொள்ளும் தன்னகம் உச்சரித்தது ‘காதல்’
அதற்குத்தான் நொடியில் கோபம் கொள்ளவும் தெரியும், அதனை மறந்து மன்னிக்கவும் தெரியும். நேசம் வைத்த நெஞ்சம் ஈட்டியின் நுனியால் கிழிபட்டாலும் அந்த காயத்தை ஆற்றிக்கொண்டு மீண்டும் அவ்விடத்தை பட்டா போட்டுக்கொடுக்க துணிய வைக்கும் இந்தக் காதல். வேண்டாம் என பயந்து ஒதுங்கிப் போனாலும் வழி கண்டுபிடித்து பாறையில்கூட வேர் பிடிக்க வைத்துவிடும். கள்ளிச்செடிகளாய் இருக்கும் பாலைவனத்தை முட்கள் கொண்ட ரோசாக்கள் நிறைந்த பூவனமாய் மாற்றிவிடும்.
மலர்வனச் சோலையில் வீசும் நறுமணமென அவள் அகத்தில் அவன் வருகை எண்ணி தென்றலாய் ஒரு ஆவல் தழுவி நிற்க, ஒருவித மோனநிலையில் அன்றைய நாளை கடந்த செண்பகா மாலை பார்த்து பார்த்து அலங்காரம் செய்துகொண்டு கணவனுடன் வெளியே செல்ல ஆவலாய் காத்திருந்தாள். அலைபேசியில் அழைத்துப் பார்த்தும் அவன் எடுக்காததில் லேசாக ஏமாற்றம் கொண்ட பெண்,
‘மினிஸ்டர பாக்க போயிருக்காரு. முன்ன பின்னதான் ஆகும். அவர் வேலையை பத்தி உனக்குத் தெரியாதா? அங்கேயே சாப்பிட்டுருப்பாரா? இனி முடிஞ்சளவுக்கு வீட்ல சாப்பிட சொல்லணும், அடிக்கடி வெளில சாப்பிட்டா உடம்பு போயிடும்.’ என அவனைக் குறித்த சிந்தனைகளுடன் நடமாடியவள் ஒருகட்டத்தில் வாசலிலேயே அமர்ந்துவிட்டாள். சிறிது நேரத்தில் வாசலில் வண்டிச் சத்தம் கேட்க, வேகமாக எழுந்து சென்று கதவை திறந்துவிட்டாள் செண்பகா.
அதுவரை மன்னவன் வருவான் என எதிர்பார்த்து பூத்திருந்த விழிகள் மன்னவனை கண்டபின் எரிமலையின் தகிப்பாய் அனலைக் கக்கத் தயாரானது. அத்தனை நேரம் காதலில் கசிந்துருகி மிதந்துகொண்டிருந்த இனிமை மொத்தமாய் அழிக்கப்பட்டு வாசம் தொலைத்த மலராய் வாடிப்போன கொடியாய் வேரை பிடித்துக்கொண்டு ஆட்டம் கண்டது.