*16*

“அவருக்கு நான் இங்க இருக்குற விஷயத்தை எதுக்கு நீ சொன்ன?” தங்கை அழைக்கிறாள் என ஆர்வமுடன் அழைப்பை ஏற்றவன் செவி அடைந்தது அவளது வசவு.

அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் செவிக்கு கொடுத்த வளவன், “என்ன பாப்பா? ஏன் இவ்ளோ சூடா இருக்க? சாப்பிட்டியா?” 

“உன் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டதுக்கு அது ஒன்னுதான் குறைச்சல் இப்போ.” அவளின் மொழியே அவள் கோபத்தின் அளவை எடுத்துரைக்க, ரத்னதீபன் என்ன செய்து வைத்தானோ என பதறியது உடன்பிறந்தவன் மனது.

“செண்பா?”

இன்று அலுவலக கிளைக்கு கணவன் வந்தது, கணக்கு துவங்கியது, வேலை மாறுதலுக்கு அவன் ஏற்பாடு செய்தது குறித்து மேலாளர் சொன்னது, இவள் கேட்ட பின் மாறுதலுக்கான கோரிக்கை வைத்துவிட்டு அதனை அவன் பின்தொடராமல் விட்டது என அனைத்தையும் சொன்னவள், “இவர் என்ன நினைச்சிட்டு இருக்காருன்னு எனக்குத் தெரியல. இதுல நீ வேற என்னை இங்க வந்து விட்டுட்டு அவர்கிட்ட சொல்லிட்டு போயிருக்கன்னா என்ன அர்த்தம்? யாருமே என் பேச்சை கேக்கக்கூடாதுனு இருக்கீங்களா?”

“பக்கத்துல இருக்காருன்னு தெரிஞ்ச பின்னாடியும் எப்படி பாப்பா சொல்லாம இருக்க முடியும். என்னைக்கு இருந்தாலும் உங்களுக்குள்ள சரியாகிடும் அப்போ சொல்லாம விட்டது பிரச்சனையா நிக்க வேணாம்னு பாத்தேன்.”

“நீ சொன்னதால மட்டும் பிரச்சனை வாசல் வரை வராம போய்டுச்சா? போ அண்ணே… அந்த மனுஷன் நீ முக்கியம்னு என்கிட்ட சொல்லிட்டு அந்தப்பக்கம் அவளையும் வீட்டுக்கு வர சொல்லியிருக்காரு. எனக்கு புடிக்கலைனு தெரியுதுல என்ன செய்யணும் அப்போ?” சலிப்பாய் கேட்டவள் பாரத்தை தமையனிடம் இறக்கிவிட்டு, “நீயும் என்ன செய்வ. அரசியல்வாதி புத்தி அவரோடது. அதுமாதிரி நமக்கெல்லாம் யோசிக்க வராது.” என புலம்பலுடன் தன் அழைப்பை துண்டித்து அந்நாளை முடித்துக்கொண்டாள். 

தங்கையின் பாரத்தை தன்னுள் போட்டு உளப்பிக்கொண்டிருந்தவன் பெரும் தயக்கத்திற்கு பின் ரத்னதீபனுக்கு அழைத்தான். எப்போதும் போல் அவன் அழைப்பை தவறவிட, தங்கை போலவே எரிச்சலானது இவனுக்கும்.

‘இந்த மனுஷன் எதுக்குத்தான் போன் வச்சிருக்காரு. பாப்பா சொல்ற மாதிரி தேவைக்கு மட்டும் நியாபகம் வரும் போல.’ கடுப்புடன் முனங்கி அலைபேசியை வெறிக்க, நாயகனிடமிருந்து அழைப்பு வந்தது. பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றவன் பொதுவான நலவிசாரிப்புகளுடன் பேச்சை துவங்க,

“என்ன உங்க தங்கச்சி வந்து கம்ப்ளைண்ட் பண்ணாளா? விசாரிக்க எனக்கு அடிச்சிட்டீங்களா?” 

இதுல எல்லாம் மனுஷன் ஷார்ப் என மனதிற்குள் நக்கல் செய்தவன், “உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுதே மாப்பிள்ளை.”

“காரியம் இல்லாம உங்ககிட்ட இருந்து போன் வருமா? அதுவும் தங்கச்சிக்குன்னா உடனே வந்துடுமே போன்…”

“காரியத்தோட போன் போட்டாலே நீங்க எடுக்க மாட்டிங்க. இதுல நான் சும்மா கூப்பிட்டாலும்.” லேசாக அலுத்துக்கொண்டவன், “பாப்பாவை ரொம்ப சீண்டிப் பாக்குறீங்க.” என கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான் அந்த பாசக்காரன். 

“பின்ன உங்களை மாதிரி சீராட்டிக்கிட்டே இருக்கனுமோ?” ஏனோ பதில்களும் மனைவியிடம் சொல்வது போல் குதர்க்கமாகவே வந்தது. அதுவும் எப்போதும் தணிந்து பேசும் மச்சினன் கூட இன்று கடினத்தன்மையுடன் பேச, இவனுக்கு இலகுவாக பேச வரவில்லை. 

“சீராட்டலைனாலும் சிதற வைக்காம இருக்கலாம்.”

“அரசியல்வாதி மச்சான்னு ரைமிங்கா பேச கத்துக்கிட்டிங்களோ…” என கேலி போல் துவங்கியவன் பின் இயல்பாகி, “இப்போ என்ன உங்க தங்கச்சியை நான் சீராட்டணும், அதுதானே? அதுக்கு மொதல்ல அவளை இங்க கொண்டு வந்து விடுங்க இல்லையா என் போன் எடுக்க சொல்லுங்க.” தன் நிலை விட்டு இறங்கி பேச வேண்டும் என்றில்லை என்றாலும் தற்சமயம் அவனிடமும் மனைவியை சமாளிக்கும் சாமர்த்தியம் இல்லை எனவும் தயக்கம் உதறி இலகுவாக தன்னை காட்டிக்கொண்டான் ரத்னதீபன்.

“பதவி ஏற்பு பங்ஷனுக்கு எல்லாம் சரியா பண்ணி செண்பாவை அங்க கூப்டுப்பீங்கன்னு பாத்தா முன்னாடியே அந்த பொண்ணை உக்கார வச்சிருக்கீங்க. இப்போ என்னன்னா பாப்பாவை முன்னாடி வீட்டுக்கு  கூட்டிட்டு வந்துட்டு அந்த பொண்ணை பின்னாடி வரசொல்றீங்க. இதெல்லாம் பாத்தா அவ மனசு எப்படி மாறும்?” மனதின் கேள்விகளை வளவனும் தயக்கம் உடைத்துக் கேட்டுவிட்டான். யாரேனும் ஒருவர் கேட்டாலாவது மாற்றம் வருகிறதா என்ற நப்பாசை. 

“இதுக்கு பதில் உங்க தங்கச்சிகிட்ட சொன்னா போதுமா இல்லை உங்களுக்கும் வேணுமா?” இப்படி கேள்விகள் வருகிறதே இது மனைவியின் மொழியா இல்லை இவனின் தனிப்பட்ட சந்தேகமா என்ற கோணத்தில் ரத்னதீபன் அழுத்தம் கொடுக்க, 

“போன வாரம் வரைக்கும் அவளுக்கு மட்டும் போதும், இந்த வாரம் அப்படியில்லைனு நினைக்குறேன்.” என்றான் உட்பொருளை புரிந்துகொண்ட வளவனும்.

சென்ற வாரம் மந்த்ரா வீட்டிற்கு வரும்வரை இருந்த நம்பிக்கை தற்சமயம் இல்லை என்பது போல் அவன் பேசவும் ரத்னதீபனுக்கு சுர்ரென்று ஏறத்தான் செய்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டான். அம்மா, மனைவி என்று அனைவரும் இதில் அவனுக்கு எதிராய் திரும்பியிருக்க இவனிடம் மட்டும் என்ன எதிர்பார்த்திட முடியும். அதற்காக உடனே நெஞ்சைக் கிழித்து மனைவியின் முகத்தை காட்டுமளவுக்கு எல்லாம் பணிந்து செல்ல அறிவு இடம் கொடுக்கவில்லை. இப்படி மச்சினன் கேள்வி கேட்க பதில் சொல்ல வேண்டிய குற்றவாளி போல் நிற்கவும் மனதில்லை. என் ஒழுக்கம் பற்றி எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு கொஞ்சம் முருக்கேற்றியது. அது உடல்மொழியிலும் ஒரு இறுக்கத்தை கொடுக்க, நேர்மைக்கு உரித்தான திடம் என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான். 

பதில் வராது என புரிந்துகொண்ட வளவன், “உங்களுக்கு இன்னும் இதோட தீவிரம் புரியல. பாப்பா காயம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது.” 

“ரெண்டு வருஷமா பாக்குறேன். எனக்கு புரியலைங்குறீங்களா? நல்லது அப்படியே நினைச்சுக்கோங்க. வேற எதுவும் சொல்லனுமா? எனக்கு இன்னொரு கால் வருது.” என்று கேட்டு வேறு விஷயமில்லை எனவும் அழைப்பை முடித்துக்கொண்டு பிரபுவிடமிருந்து விடுபட்ட அழைப்புக்கு மீண்டும் கூப்பிட்டான்.

“இப்போ என்னடா அவசரம்? எவன் வீடு பத்தி எரியுது இல்லை எவன் வீட்ல கொள்ளை போச்சு? இப்போதான் எல்லாத்தையும் முடிச்சிட்டு நகர்ந்தேன்.” மச்சான் பேச்சில் உதிர்த்த கோபம் பிரபுவிடம் இறங்கியது. அப்போதுதான் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பலாம் என்று பார்க்க, வெளியே சென்றிருந்த பிரபு அழைத்து மாட்டிக்கொண்டான்.

“மேடமோட அம்மாக்கு டெங்குவாம். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். போன் பண்ணி பேசுங்க.” 

“எனக்கு வேற வேலை இல்லைனு நினைச்சியாடா? அரசியல் ஆதாயத்துக்காக பழகுனோம் அது அரசியலோட முடிஞ்சி போச்சு. பர்சனல் விஷயங்கள்ல மூக்கை நுழைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.”

“ஒரு மரியாதைக்கு விசாரிக்க வேண்டாமா?” என்றவனை போட்டு விளாசிவிட்டான்.

“ஒரு இதுவும் வேண்டாம். இதெல்லாம் ஒரு விஷயம்னு தூக்கிட்டு வர. என்னோட எல்லை எதுன்னு உனக்குத் தெரியாதா இல்லை நீயும் நான் ரெண்டு சவாரி செய்றேன்னு நினைக்குறியா? எல்லாம் தெரிஞ்ச நீ ஒருத்தன் போதும் என்னை மொத்தமா முடிக்க. அவங்களோட பர்சனல்ல எப்போ நாம நுழைஞ்சிருக்கோம் இப்போ போன் போட்டு விசாரிக்க.”

“ஒரு மரியாதைக்கு விசாரிக்க சொன்னேன், இஷ்டம் இல்லையா விடுங்க.” என்று பிரபுவும் கொஞ்சம் எரிச்சலுடன்தான் பேசினான். 

“இனிமே யாரை எங்க நிறுத்தணும்னு யோசிச்சிட்டு என்கிட்ட விஷயத்தை கொண்டு வா.” என்று ரத்னதீபன் அழைப்பை துண்டிக்க, பிரபு கடுப்புடன் நின்றான்.

ஆரம்பக் காலங்களில் மந்த்ராவுடன் விளம்பரத்திற்காக வெளியே சென்றிருக்கும் சமயங்களில் குடும்பத்தினர் பற்றி இருவருமே பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். தங்களின் வேலை குறித்த பொதுவான விஷயங்களும் பேசும்படியான சூழல்கள் வந்திருக்கிறது. பிரபு கூட தனிப்பட்ட விஷயங்கள் அதிகம் பகிர வேண்டாம் நாளையே அது பிரச்சனையாக முடியலாம்னு என்று யோசனை சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம், 

‘அவ்ளோ பெரிய ஹோட்டல்ல சாப்பாடு ஆடர் பண்ணா கூட லேட்டா வருது. அதுவரைக்கும் என்ன பண்றது? ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துட்டே இருக்க முடியுமா? இதுமாதிரி பேச வேண்டிய அவசியம் வந்துடுது. இதுவும் நல்லதுதானேடா, எனக்கும் குடும்பம் இருக்கு. என்னோட பிடிப்பு அங்கதான்னு அவங்களுக்கும் தெரியட்டும். அப்போதான் நம்ம மேலையும் அவங்களுக்கு நம்பிக்கை வரும்.’ என்று சொல்லி இவன் வாயடைத்திருக்கிறான்.

இப்போது என்னடாவென்றால் அவளது தனிப்பட்ட விஷயங்களை அவன் பார்வைக்கு கொண்டுவர வேண்டாமாம். மந்த்ராவுக்கு நம்பிக்கை அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது இவன்தான் அந்த நம்பிக்கையிழந்து நிற்கிறான். அதை சரிக்கட்ட முடியாமல் தன்னிடம் பாய்கிறான் என்று அந்நேரம் எரிச்சல் கொண்டவன் எனக்கென்ன என்பதுபோல் கடந்துவிட்டான். 

ரத்னதீபனுக்குதான் தலையிடி ஆனது. மனைவியை சமாதானம் செய்ய இயலவில்லை. இத்தனை நாள் தன் மீது நம்பிக்கை வைத்திருந்த குடும்பத்தினர் முன் ஓரடி கீழிறங்கிவிட்ட உணர்வு. இதையெல்லாம் தாண்டி வீடு வரை வந்துவிட்ட மந்த்ரா. நட்பு ரீதியான பழக்கம் எனினும் வெளியிடங்கள் தாண்டி தங்களின் தனிப்பட்ட இடத்திற்குள் நுழையாமல் தள்ளியே இருந்தனர். இப்போது என்ன புதிதாய் தன்னில் அவளின் ஈடுபாடு? இல்லை தனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா? எதார்த்தமாக அவள் வீடு வந்திருந்தாலும் தன்னிடம் கேட்டுவிட்டுதானே வந்திருக்க வேண்டும், ஆச்சர்யம் கொடுப்பது போல் திடீரென ஏன் வந்து நிற்க வேண்டும் என மண்டையை உடைத்துக்கொண்டு படுத்தான். எல்லாம் என் கட்டுப்பாட்டில் என்ற எண்ணத்திற்கு மாறாக வாழ்க்கை தன் கைமீறிப் போகிறதோ என்ற எண்ணம். எங்கோ சறுக்கும் உணர்வு. அதன் நூலை பிடித்துக்கொண்டாலும் அதனை தன்னுடன் பிடித்து வைத்துக்கொள்ளும் வித்தை தெரியவில்லை.

அன்றைக்கு வையாபுரிக்கு அவர் தம்பியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் தம்பி அரசியலில் இருப்பதால் நேரம் கிடைக்கும் போது பேசுவார். சில நாட்களாகவே அடிக்கடி தம்பி தனக்கு அழைத்துப் பேசுவது போல் தோன்றியது. முன்பெல்லாம் அதாவது செண்பகா பிறந்தகம் வருவதற்கு முன் வாரத்திற்கு மூன்று முறைக்கு குறையாமல் பேசிவிடுவார். அவள் கோபித்து வந்தபின் பெண்ணை சமாதானம் செய்து கணவனுடன் அனுப்ப வேண்டும் என்று அவர் அதிகம் வற்புறுத்தவும் சகோதரர்களுக்கு இடையே கொள்கை முரண் ஏற்பட்டு பேச்சுவார்த்தை குறைந்தது. இப்போது அதனை புதுப்பிக்கும் வண்ணம் வாரம் இருமுறை அழைப்பு வருகிறது.

பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின், “இன்னும் பொண்ணை வீட்ல வச்சிக்கிட்டு இருக்குறது சரியா அண்ணே? மாப்பிள்ளை எம்.எல்.ஏ ஆகிட்டாரு எவ்ளோ பெருமை உனக்கு. அதை புடிச்சுகிட்டு அப்படியே பொண்ணை அங்க அனுப்பி வைப்பியா அதை விட்டுட்டு கொஞ்சிட்டு இருக்க.” என்று மெல்ல பேச்சு கொடுத்தார்.

“எம்.எல்.ஏ ஆகிட்டாருங்குறத்துக்காக செண்பாவை நெருக்க முடியுமா? மனசு ஒப்பணும்ல.”

“அது சின்ன பொண்ணு என்ன தெரியும்? நாமதான் சரி பண்ணனும். மாப்பிள்ளை பத்தி அரசல்புரசலா வந்தப்போவே வெட்டி விட்டுடலாம்னு சொன்னேன். நீதான் பேச்சுவார்த்தை நடத்துன. சரியாச்சான்னா அதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு பொண்ணை வீட்ல வச்சிட்டு இருக்க? பையனுக்கும் ஒன்னும் பண்ணல.” 

“நாம நினச்ச மாதிரியா எல்லாம் நடக்குது?” என சலித்துக்கொண்ட வையாபுரிக்குமே சோர்வாய் இருந்தது. இப்படி அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் நிற்கிறோமே. எதுவும் சரியாக இல்லையே…

“சரி நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன். வளவனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கு. என் தோஸ்த்துன்னு வச்சுக்கோயேன், அரசியல்ல இருக்கான். பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. வளவனுக்கு ஒத்து வரும்னு சொன்னேன் பொண்ணோட வீட்ல செண்பாவை பத்திதான் யோசிக்குறாங்க. சீக்கிரம் முடிவெடு, இல்லைனா நல்ல பொண்ணெல்லாம் கைவிட்டு போயிடும். வாழ மாட்டேன்னு நிக்குற பொண்ணுக்காக வாழ வேண்டியவனை தனியா நிக்க வைக்காத.”

“இப்படில்லாம் பேசாத.” மகள் வாழவில்லை என்று சொல்லவும் லேசாக கோவம் எட்டிப்பார்த்தது வையாபுரிக்கு. 

“என் வாயை அடைக்கலாம். ஊர் வாயை எப்படி அடைப்ப? நல்லதுக்கு தான் சொல்றேன் ஒன்னு பொண்ணை மாப்பிளையோட அனுப்பு இல்லையா வெட்டிவிடு. நான் இன்னொரு நல்ல பையனா பாத்து கொடுக்கிறேன் ஜாம் ஜாம்னு நம்ம பொண்ணை வாழ வைக்கலாம்.” என்று சொல்லி வைக்க, யோசனையானது வையாபுரிக்கு. 

ஏற்கனவே செண்பகாவால் வளவன் திருமணம் தள்ளிப்போகிறது என்ற பேச்சிருப்பது காதிற்கு வந்தாலும் செண்பகா விஷயத்தை சிலமாத காலம் தள்ளிப்போடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இப்போதோ மகளுக்காக பார்த்து மகனை வஞ்சிக்கிறோமோ என்ற எண்ணம். மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்குமே பயம் வந்தது. இது குறித்த யோசனையோடு இருவரும் நடமாட, அவர்கள் எதிரேதான் வளவனுக்கு மாப்பிள்ளையிடமிருந்து அழைப்பு வந்து அவன் வெளியே சென்று பேசி வர, ஆர்வமுடன் மகனைப் பார்த்தனர்.  

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெற்றவர்களை கவனித்த வளவன் தங்கை பேசியதையும் தங்கை கணவன் பேசியதையும் பகிர்ந்துவிட்டான். 

“இந்த தலைவலி எல்லாம் நமக்கு வேண்டாம்டா. இதுக்கு மேல இது சரிவரும்னு தோணல. அந்த பொண்ணு வந்ததுட்டு போனதுக்கு அப்புறம் பாப்பா எப்படி அழுதான்னு பாத்தீல. காலத்துக்கு இது மனசுலேந்து அழியாது. அந்த பொண்ணை நேர்ல பாத்ததுக்கு அப்புறம் எனக்கே திக்குனுதான் இருக்கு. முடிச்சிடலாம் வளவா. பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமா பாத்து கரை சேர்த்துடலாம்.” ஒருவாரமாக அமைதியாக ஏதோ யோசனையில் இருந்த தந்தை இன்று மனம் திறக்கவும் கசங்கிய முகத்துடன் பார்த்தான் வளவன்.

பெற்றவர்கள் முகமும் அப்படித்தான் இருந்தது. ஏதேனும் நடந்து மகள் வாழ்க்கை சிறக்காதா என்று காரணம் தேடி அலைந்தவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போதெல்லாம் மருமகன் அத்தனை சொல்கிறாரே மகள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாளே ஏதோ கோபம் சரியாகிவிடுவாள் என ஒதுக்கியவர்களுக்கு இப்போது அவள் மனதின் அழுத்தம் புரிவதாய் இருந்தது. கண்களை கட்டியிருந்த திரை விலக்கப்பட்டு நிதர்சனம் முகத்தில் அறைந்தது.

மனைவியாய் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் சிறிதோ பெரிதோ சிலவற்றிற்குள் மற்றவர்கள் மூக்கை நுழைக்கக்கூடாது. இது சரி இது தவறு என அதை நியாயப்படுத்தி இப்படி நடந்திருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என கருத்து சொல்வதும் சரியாய் இருக்காது. இப்போது தங்களுக்கு அந்த நிலைதான். மருமகன் மீது தவறே இல்லையென்றாலும் மகளின் மனநிலை அவனின் செயல்களால் பாதிக்கப்படுகிறது என்றால் அனுபவித்த வரை போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

“ஒரு ரெண்டு மாசம் வாழ்ந்திருப்பாளா. போதும் விடு.” என்றுவிட்டார் அமுதாவும்.

“நாம மட்டும் முடிவெடுக்க முடியாதே.” என்றான் வளவன் தங்கையை மனதில் வைத்து.

“நான் பேசுறேன்.” என்றுவிட்டார் அமுதா. 

“உடனே வேண்டாம். ஒரு வாரம் போகட்டும்.” என்றார் வையாபுரி. ஏற்கனவே உளைச்சலில் இருப்பவளிடம் மீண்டும் இதை பகிர்ந்து தங்கள் விருப்பத்திற்கு அவனை விட்டுவிடு என்று சொல்லவும் சிறு சங்கடம். வருந்த வைக்கவும் விருப்பமில்லை. 

இது சரியாய் வருமா என்ற கலக்கம் தவிப்பு இருந்தாலும் இதுதான் தங்கள் மகள் மனதில் இருக்கும் அழுத்தங்களை குறைத்து அவளுக்கு நிம்மதி கொடுக்கும் என்று நம்பினர். 

வளவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தாங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் சம்மந்தப்பட்ட இருவரும் பிடிகொடுக்காமல் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் விலகிப்போவதும் ஈகோ பார்ப்பதும் என்றிருந்தால் எப்படி சரியாக வரும்? தங்கை மனது அவள் கணவனிடம் என்றாலும் ஒத்துப்போகாத இருவரை ஒன்றி வாழ சொல்கிறோமோ என்றெல்லாம் அவனுக்கும் யோசனைகள் சென்றது. அதனால் பெற்றவர்கள் முடிவை ஏற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. சம்மந்தப்பட்டவள் முடிவெடுக்கட்டும் என்று ஒதுங்கிக்கொள்ள, இவர்கள் சொல்லும் முன்னமே கொண்டவன் மூலம் விஷயம் கேள்விப்பட்டு கொந்தளித்துவிட்டாள் செண்பகா.

என் வாழ்க்கையை யார் யாரோ தீர்மானிப்பார்களா? அத்தனை பரிதாபத்திற்குள்ளாகவா இருக்கிறேன்? கணவனை விட்டு தள்ளி இருந்தால் யார் வேண்டுமென்றாலும் என் வாழ்க்கையை அவர்கள் கையில் எடுத்துக்கொள்வார்களா? மனதிற்குள் பொருமியவள் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்தாள்.