*9*

“சென்னைக்கு வேலை மாத்திட்டாங்களாமே. நல்லதா போச்சு. ரத்தினமும் வீடு பாத்துட்டான், அடுத்த வாரத்துல நல்ல நாள் இருக்கு அன்னைக்கே பால் காய்ச்சி குடி போய்டுங்க. இப்போ விட்டா ஆடி வந்துடும்.  அங்கிருந்தே நீ வேலைக்கு போய்க்கலாம். கல்யாணத்தப்போ உனக்கு வாங்கிக்கொடுத்த சீர் வரிசை சாமான் எல்லாம் மேல தான கடக்கு அதை எடுத்துக்கலாம். மத்த சாமான் எல்லாம் பொறுமையா பாத்து உங்களுக்கு ஏத்த மாதிரி வாங்கிக்கோங்க. மாமாகிட்ட பேசிட்டு தேதி சொல்றேன். பாத்துக்கோ செண்பா. மாவு ஆட்டிட்டு இருக்கேன் உளுந்து முடிஞ்சிடுச்சு எடுக்கணும் அப்புறம் கூப்பிடுறேன்.” எங்கே பேச வாய்ப்பு கொடுத்தால் மறுப்பு தெரிவிப்பாளோ என்று அழைப்பை துண்டித்துவிட்டார் அபிராமி.

‘எனக்கு அங்க வேலை மாறுதல் வந்தது இவங்களுக்கு எப்படி தெரிஞ்சிது? எல்லாம் இவங்க முடிவா? இவங்க புள்ளை வீடு பாத்துட்டா நான் உடனே போய்டணுமா?’ கடுகடுவென இருந்தவள் அன்றைய தினம் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததுமே,

“வாயை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க முடியாதா ம்மா? இங்க நடக்குறது எல்லாத்தையும் உடனே உடனே அங்க ஒளிபரப்பிடணுமா? எனக்குன்னு பிரைவசியே கிடையாது. எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணி வச்சிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடக்கணும்னு நினைக்குறது எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற கதைதான்.” என பொரிய, அமுதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுப்பை அணைத்துவிட்டு புருவச் சுருக்கத்துடன் மகளை பார்த்தவர், “எதுக்கு இப்போ எண்ணையில போட்ட கடுகாட்டம் வெடிக்குற? என்னாச்சு?”

“என் மாமியார் போன் போட்டு அவங்க பையன் வீடு பாத்துட்டாரு சீக்கிரம் பால் காய்ச்சிட்டு அங்கிருந்தே வேலைக்கு போன்னு பேசுறாங்க. நீங்க சொல்லாம அவங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்?”

“வீடு பாத்துட்டாரா? அப்போ உனக்கும் வசதிதானடி. ஹாஸ்டல்ல தங்க வேண்டாம்.” மகள் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அவள் கூறிய தகவலை பிடித்துக்கொண்டார். 

“ம்மா…” பல்லைக்கடித்த செண்பகாவின் முகம் போன போக்கில் கப்பென்று வாய் மூடிக்கொண்டார் அமுதா.

“அவங்களை மாதிரி உனக்கும் இதே எண்ணம் இருந்தா அதை தண்ணி ஊத்தி அழிச்சிடு சொல்லிட்டேன். என்னால எல்லாம் அங்க போக முடியாது.” 

“என்னடி இப்படி சொல்ற?” பாவமாக அமுதா பார்க்க,

“ரொம்ப பண்ணீங்கன்னா இந்த வேலையே வேணாம்னு எழுதி கொடுத்துட்டு இங்கேயே இருக்குற மாதிரி வேற வேலை தேடிக்குவேன். இல்லையா இன்னும் தூரமா எங்க கிடைக்குதோ அங்க போய்டுவேன்.” என்று மிரட்டல் விடுக்க ஐயோவென்று ஆனது அமுதாவுக்கு.

“டென்சன் ஆகாத பாப்பா. எதார்த்தமா அப்பா சம்பந்திகிட்ட சொல்லியிருப்பாரா இருக்கும். அவங்களுக்கும் நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து வாழணும்னு ஆசை இருக்கும்ல.”

“அதுக்கு புள்ளையை ஒழுங்கா வளர்ந்திருக்கணும்.” என்றாள் வெடுக்கென்று. 

சட்டென அமுதாவின் முகம் சுருங்கிப்போக, “நாங்கதான் நல்ல மாப்பிள்ளையா பாத்து உனக்கு கட்டிவைக்கலையோ?” எனக் கேட்க, இவளும் சோர்ந்து போனாள். 

“ப்ச்… நீங்க நல்லதுன்னுதானே பண்ணீங்க. விடு. சூடா காபி போடு, மண்டையெல்லாம் சூடா இருக்கு.” என்று சொல்லிவிட்டு உடை மாற்றச் சென்றாள். 

செல்லும் மகளை கவலையுடன் பார்த்த அமுதாவுக்கு இது எங்கு சென்று முடியுமோ என்றிருந்தது. மகனுக்கு முப்பது ஆகிறது இன்னும் ஒன்றும் கைகூடவில்லை. மகளோ இருக்கும் வாழ்க்கை வேண்டாம் என்கிறாளே ஒழிய அதிலிந்து வெளியே வரும் வழியைக் காணும். எதற்காக இன்னும் இதை பிடித்துக்கொண்டு இப்படி இருக்கிறாள் என்றும் புரியவில்லை. இவர்களிடம் மாட்டிக்கொண்டு தங்களின் மனநிம்மதி போனதுதான் மிச்சம் என்று பெருமூச்சு எழுந்தது. மகள் கேட்டது போல் சூடாக ஸ்ட்ராங்காக காபி போட்டு வைத்தவர் அவள் வந்ததும் பொதுவாக விடுதியில் தங்க என்னென்ன எடுத்துப் போக வேண்டும் என்று பேசி லிஸ்ட் எடுத்தார். 

“சாப்பாடு எப்படி இருக்கோ தெரியல எதுக்கும் நான் போடி, ஊறுகாய், வத்தல் குழம்பு எல்லாம் வச்சித்தரேன். எடுத்துட்டு போ.” 

‘உன்னை மிஸ் பண்ணுவேன் அம்மா.’ அம்மாவின் தோளில் சாய்ந்து அவரை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச எழுந்த ஆசையை அடக்கிக்கொண்டு அவரை ஒட்டியது போல் அமர்ந்தாள். 

கல்லூரியில் அடியெடுத்து வைத்ததுமே செல்லம் கொஞ்சல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிட்டது. பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள் என பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டனர். அப்போது சுதந்தரம் பெற்றதாய் மகிழ்வு கொண்டு சிறகடிக்கத் துடித்த மனது இப்போது அந்த இடைவெளியை வெறுத்து இணக்கத்திற்கு ஏங்கியது. சிறுபிள்ளையாகவே இருந்திருக்கலாம் இந்த வேதனை எல்லாம் தெரிந்திருக்காது என்று ஏதேதோ எண்ணங்கள். 

மகள் மனம் வாடுகிறாள் என்று புரிந்த அமுதாவுக்கும் வருத்தம்தான். என்றைக்கு இருந்தாலும் திருமணம் செய்துகொண்டு வேறு வீட்டிற்கு செல்லும் பெண் என்ற எண்ணம் இருந்தமையால் அவளது பிரிவை ஏற்க எப்போதோ மனதளவில் தயாராகியிருந்தார். இப்போதும் இப்பிரிவு மகளின் நல்வாழ்க்கையில் முடிந்துவிடாதா என்ற ஏக்கம் நெஞ்சு முட்ட, அதனை காட்டிக்கொள்ளவில்லை. 

“நைட் சாப்பாடு செய்யணும்டி. என்ன வேணும் உனக்கு?” 

“நானும் ஹெல்ப் பண்றேன் வா…” என அன்னைக்கு உதவியாய் அடுப்பறை சென்றாள். 

இரவு அனைவரும் உண்டு படுக்கச் சென்றபின் கணவரை பிடித்து விஷயத்தை கூறினார் அமுதா. 

“நீங்கதான் சொன்னீங்களா? பாப்பா பயங்கர கோபத்துல இருந்தா.”

“நான் எதுவும் சொல்லலையே. நான் பேசவே இல்லை.” என்றார் வையாபுரி.

“அப்போ வளவன் சொல்லியிருப்பான். இப்போ பாப்பாவை வச்சி பால் காய்ச்சணும்னு நினைக்குறாங்க. பாப்பா முடியாதுனு இருக்கா. ஒரு பிரச்சனை இருக்கு.” 

“ஒரே தலையிடியா இருக்கு.” என தலையை பிடித்துக்கொண்ட வையாபுரிக்கு மகளை வறப்புறுத்த விருப்பமில்லை. அவர் நினைத்திருந்தால் மகள் கோபித்துக்கொண்டு வந்த சில நாட்களிலேயே பிடிவாதமாய் அவளை அழைத்துச் சென்று ரத்னதீபனிடம் விட்டிருக்க முடியும். அவர்கள் அளவில் அருமை பெருமையாய் வளர்த்த மகளின் மனம் கோணிவிடக்கூடாது என்றே இத்தனை பொறுமை. அதுவும் கணவன் மீது கோபம் என்று வந்தவள் ஒருநாளும் அவன் வேண்டாம் என உறவை முறித்துக்கொள்வது பற்றி பேசிடவில்லை. அதன் பொருட்டே மாப்பிள்ளை என்று மருமகனுக்கு இன்னமும் மரியாதை குறைவின்றி உபச்சாரம் இருக்கிறது. 

“நடக்குறது நடக்கட்டும் விடுங்க. நாமளும் சொல்லிப்பாத்துட்டோம். இப்போ எட்ட எட்ட இருக்காங்க. பாப்பா அங்க போனதும் ஒருவேளை ஏதாவது மாறுதான்னு பாப்போம்.” அமுதா சமாதானம் போல் சொல்ல,

“இன்னும் ஆறு மாசம் பாப்போம். சேரணும்னு இருந்தா சேரட்டும் இல்லையா பெரியவங்களை வச்சி பேசி விலகிடலாம். வேற நல்ல வரனா பாத்து பாப்பா வாழ்க்கைக்கு ஒருவழி பண்ணிடுவோம்.” என்று தன் முடிவை தெரிவிக்க அதிர்ந்துபோனார் அமுதா. பழைய உறவிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு புது வாழ்க்கை அமைத்துக்கொள்வது ஒன்றும் இந்த காலத்தில் அத்தனை தவறில்லை என்றாலும் தன் மகளுக்கு என வருகையில் கலக்கமானது.

“வேற எதுக்கு? நாம கொஞ்சம் அழுத்தம் கொடுத்தா மாப்பிள்ளையோட சேர்ந்துடுவா.”

“வேற வழியில்லாம சேர்ந்ததா இருக்க வேணாம் அமுதா. அவளுக்கா தோணனும்.” என வையாபுரி தெளிவாக முடிவெடுத்துவிட்டது போல் பேச, அமுதாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உறக்கம் கெட்டு வெகு நேரம் கவலையில் புரண்டவர் ஒருகட்டத்தில் உறங்கிப் போனார்.

முக்கிய மேம்பாலங்கள் தவிர்த்து ஏனைய மேம்பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தடுப்பு வைத்து மூடப்பட்டிருக்க, அதனையெல்லாம் கவனித்தபடி ஊரடங்கி மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிக்கு வண்டியை செலுத்தினான் பிரபு. கும்மிருட்டை விரட்டும் வண்ணம் போடப்பட்டிருந்த விளக்குகளில் சிலது மங்கியும் சிலது எரியாமலும் இருக்க, அந்த குடியிருப்புப் பகுதி அத்தனை சுகாதாரமாகவும் இல்லை. சாலை ஓரங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் துர்நாற்றம் வீசத்துவங்கியிருந்தது. பிரபுவின் பின் அமர்ந்திருந்த ரத்னதீபன் முகம் சுழித்து, 

“இந்த ஏரியாவ க்ளீன் பண்ணனும்டா. எப்படி இதுல மக்கள் வாழுறாங்களோ.” 

வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதி அது. பெரிதாக கட்டிடங்கள் இன்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மேற்கூரையாக ஷீட்டுக்கள் போடப்பட்டிருந்தது.

“நம்ம ஏரியா ஸ்லம் இப்படியில்லாம வேற எப்படி இருக்கும்? ஏதோ நடுராத்தியில வர்றதால வண்டி ஓட்ட முடியுது இல்லைனா கசகசன்னு இருக்கும்.” என்ற பிரபு லாவகமாக அந்த சின்னத்தெருவில் வண்டியைத் திருப்பி வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்டு இருக்கும் ஒரு ஏரி நோக்கி வண்டியை விட்டான். இருசக்கர வாகனத்தில் செல்வதற்கே சிரத்தை எடுத்து ஓட்ட வேண்டியிருந்தது.

“அவங்க சொல்லும் போதுகூட இவ்ளோ மோசமா இருக்கும்னு நினைக்கலடா. கடந்த அஞ்சு வருஷத்துல நம்ம தமிழ்நாட்டுல அறுபத்தி மூணு சதவீதம் இதுமாதிரி ஸ்லம் அதிகமாகியிருக்குனு சொல்றாங்க. சென்னையில மட்டும் தொண்ணூறு சதவீதம் அதிகமாகியிருக்காம். மொத்தமும் இங்கதான் இருக்கும் போலடா.” என்று சொல்லிக்கொண்டே வந்த ரத்னதீபன் வண்டி நின்றதும் இறங்கினான்.

ஏரியின் ஒருபக்க கரையொட்டி வண்டியை நிறுத்தியிருந்தான் பிரபு. தண்ணீரின்றி வறண்டிருந்த ஏரியை ஏரி என்று நம்பவைக்க நடுவே கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் இருந்தது. மீதி இடங்களில் கல்லும் மண்ணும் கண்ணாபின்னாவென்று கொட்டப்பட்டிருந்த அழகிலேயே வேறெங்கோ நடக்கும் கட்டட வேலையின் மிச்சங்களை இங்கு குமித்திருக்கின்றனர் என்று புரிந்தது. கரை எதுவென்றே தெரியாத வண்ணம் குப்பைகளும் ஆங்காங்கு சிதறிக்கிடந்தது. அதிகம் நெகிழிக் கழிவுகளும் வேண்டாத துணிகளும் உடைந்த பொருட்களும் நாய்களால் குதறி வைக்கப்பட்டு பார்க்கவே சுகிக்கவில்லை. கெட்ட வாடையும் வீச, கைக்குட்டை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டனர் இருவரும். ஏரியின் கரையொட்டி மெதுவாக இருவரும் நடைபோட, ஒருபக்கம் முழுதும் வெளிச்சமில்லை.

“இருங்க டார்ச் அடிக்குறேன் இருட்டுல போக வேண்டாம்.” ரத்னதீபனை பிடித்து நிறுத்தி தன் அலைபேசியில் வெளிச்சத்தை ஒளிரவிட்டு ஒத்தையடி பாதை போல் இருந்த மணலில் பிரபு முன்னே நடக்க ரத்னதீபன் பின்னே சென்றான்.

“அதோ அந்த பக்கம் ஈரம் தெரியுது அண்ணே.” தேடி வந்தது கண்ணில் பட்டுவிட விரைந்து முன்னேறினான் பிரபு. ரத்னதீபன் கண்கள் அவ்விடத்தை கூர்மையாக கவனித்து மனதில் ஏற்றுக்கொண்டது. 

ஏரியின் ஒருபகுதியில் அதிக செடிகள் காடு போல் மண்டிக்கிடக்க அதன் கீழே சட்டென்று கண்ணில் படாதவண்ணம் நீர் ஓடியது. மெல்ல அது மண்ணில் இறங்கி ஏரியின் உட்பகுதி நோக்கி ஓட,

“இதோட சோர்ஸ் கண்டுபுடிக்கணும்டா… இப்படி ஏரி எல்லாத்துலையும் செப்டிக் டாங்க் மாதிரி கழிவை கொண்டு வந்து விட்டா நல்ல தண்ணி எங்கிருந்து வரும்.” ஆதங்கப்பட்ட ரத்னதீபனுக்கு வந்த புகார்களில் இதுவும் ஒன்று. 

கழிவு நீரை ஏரியில் கலக்கிறார்கள். அதுவும் இரவாகிவிட்டால் வெளியிலிருந்து லாரிகளில் வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஆபத்து நேர்கிறது. கவனிக்காமல் விட்டால் சுற்றி இருக்கும் குடியிருப்பு பகுதிகளின் குடிநீர் ஆதாரம் மாசுபட்டு பல்வேறு உடல்நலக்கேடுகள் மக்களை அண்டும். வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வளர இதுபோன்ற களைகளை களையெடுக்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தனர். அது உண்மையா என பார்க்க வந்திருந்தனர் இருவரும். 

“லைட்டை ஆப் பண்ணு பிரபு. அந்த பக்கம் ஏதோ சத்தம் கேக்குது. வா…” என்ற ரத்னதீபன் சத்தம் கூட்டாமல் கழிவு நீர் வரும் பாதையையும் சத்தம் வரும் திசையையும் கணக்கிட்டு அதன் நோக்கி செல்ல, இருலாரிகளில் இருந்து பெரிய குழாய் போட்டு கழிவுகளை ஏரியில் விடுவது புரிந்தது. உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரத்னதீபன் அழைத்துவிட, சிறிது நேரத்தில் அந்த இடமே பரபரப்பானது. காவல்துறையினர் வந்து லாரியை கையகப்படுத்தி அதன் ஓட்டுனர்களை கைது செய்தனர். சுகாதாரத்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் உடனே அவ்விடம் வந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வோம் என்று உறுதியளிக்க,

“இத்தனை வருஷமா உங்களுக்கு தெரியாமலா இது நடந்துட்டு இருக்கு? உங்க வீட்டுக்கு பக்கத்துல இப்படி நடந்தா சும்மா இருப்பீங்களா?” என வெளுத்து வாங்கியவன் ஒரு வாரத்தில் அந்த ஏரியை சுத்தம் செய்து தூர் வார ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டான்.

அனைத்திற்கும் மண்டை ஆட்டிய அதிகாரிகள் மீது நம்பிக்கை வரவில்லை ரத்னதீபனுக்கு. இவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் பிரபுவுடன் கிளம்ப,

“இந்த ஒரு ஏரியில நடக்குறதை இன்னைக்கு புடிச்சிட்டோம். இது மாதிரி இன்னும் எத்தனை இருக்கோ.” என்றான் பிரபு ஆயாசமாய்.

“இப்படியே ஏரியெல்லாம் துத்துட்டுட்டு அப்புறம் மழை பேஞ்சா தண்ணி நிக்குது, சென்னையே மிதக்குது. மழை பேயாம போச்சுன்னா சென்னையே தண்ணீர் பஞ்சத்துல தலைவிரிச்சி ஆடுதுனு இவனுங்க நியூஸ்ல ஆடவிடுவானுங்க.” என ரத்னதீபனும் சலித்துக்கொண்டான்.

“இதுல ஆக்கிரமிப்பு வேற இருக்கு. இப்போ பாதி ஏரி தான் இருக்குங்குறாங்க.”

“இருந்துட்டு போகுது போடா. எந்த ஆட்சி வந்தாலும் எப்படியும் சென்னை மிதக்குதுனு நியூஸ் போடப்போறாங்க. இருக்குற இந்த மிச்ச சொச்ச ஏரிகளையாச்சு நாம காப்பாத்திவிட்டுட்டு போவோம். அதுல நமக்கு ஒரு நல்ல பேரு…”

“இப்போவே நேரமாச்சு. நல்லா தூங்குங்க, காலைல பாக்கலாம்.” என்று ரத்னதீபனை அவன் விடுதியில் விட்டு விடைபெற்று கிளம்பினான் பிரபு.

அறைக்குள் நுழைந்துகொண்டே அலைபேசியை பார்த்தான் ரத்னதீபன். அம்மாவிடமிருந்து மூன்றுமுறை அழைப்பு வந்திருந்தது. வீடு பார்த்துவிட்டேன் என்று எப்போது சொன்னானோ அதிலிருந்து பால் காய்ச்சிய பின்தான் அங்கு சென்று தங்க வேண்டும் என்று கட்டளை போட்டுவிட்டார். இல்லையென்றால் முடிவான உடனேயே தன் வசிப்பிடத்தை மாற்றியிருப்பான் ரத்னதீபன். அதுவும் செண்பகா வரவேண்டும் என்பது போல் பேசி வைக்க, இவன் பிடிகொடுக்கவில்லை. அது பற்றி பேசத்தான் அழைத்திருப்பார் என்று அலட்சியப்படுத்தியவன் எப்படியும் வீட்டினர் மொத்தமாய் கிளம்பி வந்து பால் காய்ச்சி குடியேறுவதை அமர்களப்படுத்திவிடுவர் என்ற இருமாப்புடன் கண்ணசந்தான்.

மறுநாள் பிரபு வந்து எழுப்பும் வரை எழவில்லை. அப்படியொரு உறக்கம்.

“ஏன்டா இவ்ளோ சீக்கிரம் வந்து இம்சை பண்ற?” கடுப்புடன் எழுந்தவனுக்கு இன்னுமே உறக்கம் கலையவில்லை. அலைபேசி அழைப்பு விடுத்து எழுப்பி விட்டவனை முடிந்தமட்டும் வசைபாடினான்.

“எழுந்துக்கோங்க… கடைக்கு போய் புது வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வந்துரலாம்.” 

“நான் வீடு குடிபோறதுல உனக்கு என்னடா அவ்வளவு ஆர்வம்?” எரிச்சலுடன் எழுந்துகொண்டே கேட்டான் ரத்னதீபன்.

“நம்ம அண்ணன் கல்யாணம் பண்ணியும் தனியா இருக்காறேன்னு ஒரு அக்கறை, பாசத்துலதான்…”

“உன் சக்கரையை கொண்டுபோய் உன் டீயில போடு. சாமான் எல்லாம் அங்க பரந்தூர் வீட்ல கடக்கு. அப்பாகிட்ட இல்லை மச்சான்கிட்ட சொன்னா அள்ளிப்போட்டு எடுத்துட்டு வந்துடுவாரு.” என்றவன் கண்ணாடி முன்னின்று கலைந்திருந்த சிகை கோதி தாடியை நீவிக்கொண்டான். 

“சரிதான். அப்போ ஆபிஸ் போலாம் வாங்க. நேத்தி பண்ண சம்பவத்துக்கு பப்லிசிட்டி பண்ண வேண்டாமா? நியூஸ் சேனல்ஸ் எல்லாம் விஷயம் கேள்விப்பட்டு நம்ம ஆபீஸ் வாசல்ல வெயிட்டிங். அதோட நேத்தி புடிச்சோமே ரெண்டு லாரி அது ஒரு பெரிய ஹாஸ்பிடலோடதாம். அதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு. எந்த பக்கத்துலேந்து வரும்னுதான் தெரியல.”

“பாத்துக்கலாம் விடு. குளிச்சிட்டு வரேன். சாப்பாடு வாங்கி வை.” 

சிறிது நேரத்தில் டிப்டாப்பாக கிளம்பியவன் கீழே இறங்கி வர வண்டியில் காத்துக்கொண்டிருந்தான் பிரபு. அவனுடனே சேர்ந்து அலுவலகம் சென்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க, சிறிது நேரம் தலைப்பு செய்தியில் இடம்பிடித்தான் ரத்னதீபன். அடுத்த ஒருமணி நேரத்தில் அழைப்பு மேல் அழைப்பு வந்தது மேலிடத்திலிருந்து. அவன் கட்சியில் இருக்கும் ஒருவரின் மருத்துவமனை கழிவை கொட்டும் சமயம்தான் இவன் பிடித்திருக்கிறான். அது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

“அந்த லாரில இருந்த கழிவு யாரோடதுனு கண்டுபுடிச்சி அபராதம் போடணும்னு மக்கள் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்யா நீ இதெல்லாம் பண்ற?” என்று கேள்வி எழுப்ப, 

“நம்ம ஆளோட லாரினு தெரியாதுங்களே. ஆனா இதுதான் இப்போ டிரெண்டிங் ஆகிட்டு இருக்கு. மக்களுக்கு நம்ம ஆட்சி மேல நம்பிக்கை வந்திருக்கு. நம்ம ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் பிரபலமாகுற மிகப்பெரிய விஷயமா இது வளர்ந்துட்டு இருக்கு.” என ரத்னதீபன் தன் தரப்பை நியாயப்படுத்திக்கொள்ள, 

“அதுக்குன்னு நம்ம கண்ணையே நாம குத்திக்க முடியுமா?” மேலிடம் அவனை கேள்விகளால் துளைத்தெடுக்க, இந்த பஞ்சாயத்தே மாற்றி மாற்றி அவனை இரண்டு நாட்கள் முழுவதும் பிசியாக வைத்துக்கொண்டது.

“நானும் அங்கிருந்து அஞ்சு கிலோமீட்டர் தொலைவுலதான் இருக்கேன். இப்படி கழிவை கொட்டுறதால என் உடல்நிலைக்கு பாதிப்பு வராதுன்னு என்ன நிச்சயம்.” என்றும் பேசிப்பார்த்தான். 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுய்யா. அங்க இருக்குறவங்க என்ன செத்தா போயிட்டாங்க, வேலை சரியா இல்லைனாலும் அந்த குப்பத்துல எல்லாம் மூணு நாலு புள்ளைங்க பெத்துட்டு நிம்மதியாதான் இருக்குங்க. இதோட இதை விட்டுடு. ஆறப்போட்டா மக்கள் மறந்துடுவாங்க. இந்த கேஸை கிடப்புல போடச்சொல்லியாச்சு. நல்லது செய்றேன் ட்ரெண்ட் ஆகுறேன்னு நீ நோண்டாம இரு.” என அவனை அமைதிப்படுத்தினர் கட்சியின் மேலிடத்தினர்.

“இந்த குப்பை கழிவுதான் நமக்கு தலைவலியா இருக்கும் போல அண்ணா.” என்று நொந்துகொண்டான் பிரபு.

“பாத்துக்கலாம். இப்போதானடா வந்திருக்கோம். ரெண்டு மாசம்தான ஆகுது. இதுமாதிரி சமயத்துலதான தெரியுது சில நேரம் எதிர்க்கட்சியை மட்டுமில்லை நம்ம கட்சியையும் எதிர்த்து நிக்குற நிலைமை வரும்னு.” என பிரபுவின் தோளை தட்டிக்கொடுத்து ரத்னதீபனுக்கு அனைத்தும் அனுபவப்பாடமாகியது.

இந்த சலசலப்பு அடங்கியதும் அன்றைக்கு இரவு சற்று ஓய்வாய் இருந்த சமயம் அபிராமிக்கு அழைத்தான். 

“இப்போதான் என் நியாபகம் வந்துச்சா?” என செல்லமாக சடைத்துக்கொண்டவர், “டீவில உன்னை பாத்தேன்டா ரத்தினம். அந்த லாரியை புடிச்சு பேட்டி கொடுத்து பின்னிட்ட ரத்தினம். உன் அப்பாவுக்கு இருப்பு கொள்ளல. என் மகன்னு பெருமை பாட்டு பாடிட்டு இருக்காரு.” மகிழ்வாய் பகிர்ந்து கொண்ட அபிராமி அவன் நலன் விசாரித்தார்.

நலம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டவன், “ரெண்டு நாள் முன்னாடி போன் போட்டிருந்த என்ன விஷயம்?” என்று கேட்கவும்தான் எதற்கு அழைத்தோம் என்றே நினைவு வந்தது அபிராமிக்கு.

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயம்தான் ரத்தினம். செண்பா சென்னைக்கு வருதுல்ல அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

“பால் காய்ச்ச எல்லாரும்தான வர்றீங்க?” இவன் புரியாமல் கேட்க,

“பால் காய்ச்ச மட்டுமில்லை உன்னோட இருக்கவும் வர்றா. அவளுக்கு அங்க வேலை மாத்திட்டாங்களாமே உனக்குத் தெரியாதா?” 

தெரியாது. யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று சொல்ல அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை.

“ஹான் தெரியும் தெரியும் மறந்துட்டேன். எனக்கு இன்னொரு போன் வருது அப்புறம் கூப்பிடுறேன்.” என வைத்துவிட்டவன் தாடை இறுக எதிர் இருந்த சுவரை வெறித்தான்.

மனைவிக்கு மாற்றல் ஆனது பற்றி தகவல் சொல்ல வேண்டியவள் சொல்லவில்லையே என்று கருவியவன் எப்படியும் இங்குதானே வரவேண்டும் அப்போது பார்த்துக்கொள்கிறேன். போனால் போகிறது என்று விட்டால் ரொம்பத்தான் பண்றா… என கருவிக்கொண்டவன் அவள் வரவை எதிர்நோக்க, மூக்கறுத்தது போல் அவன் எதிர்பார்ப்பை சுட்டுப் பொசுக்கி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாள் செண்பகா. ஆத்திரத்தில் இவன் விட்ட வார்த்தையில் இன்னுமே அவளது கோபத்தை சம்பாரித்துக்கொண்டான்.