“மாலா!!! என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா???”
அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஜெகதீசன் மனைவியின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கேட்க,
” ரொம்ப நல்லா யோசிச்சு தாங்க பேசுறேன்” என்றார் மாலாவும் தன் முடிவில் உறுதியாக.
இத்தனை உறுதியுடன் கூறுகிறார் என்றால், நிச்சயம் அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே இந்த முடிவிற்கு வந்திருப்பார் என இத்தனை வருட வாழ்வில் மனைவியை நன்கு அறிந்து வைத்திருந்தார் ஜெகதீசன்.
ஆனாலும் இது ஏனோ அவரின் மனதிற்கு ஒப்பவே இல்லை.
“ஏன் இந்த முடிவு??” என்பதைப் போல் அவர் மாலாவைப் பார்க்க,
“அந்தப்பொண்ணை இதுக்கு சம்மதிக்க வைக்கிறது அவ்வளவு ஈசின்னு நினைக்குறியா??”
“கண்டிப்பா இல்லை!!!! ஆனா மருந்து கசக்கும்னு குழந்தை மருந்து குடிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா அப்படியே விட்டிடுவோமா??? பிடிக்கவே இல்லைனாலும் மருந்து குடிச்சா தான் உடம்பு நல்லாகும்னு அந்தக் குழந்தைக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம்.. ஆனா நமக்குத் தெரியும் தானே… அப்படித்தான் இதுவும்.. ஜெய்யோட சொந்தக்காரங்க அப்படின்னே அவ நிச்சயம் சம்மதிக்க மாட்டா.. கஷ்டத்தை மட்டுமே பார்த்தா காரியம் ஆகுமா?? அதுக்குப்பின்னாடி அவளுக்காக காத்திருக்க நல்ல வாழ்க்கையை நினைக்க வேண்டாமா??”
“உன் மகன் இதுக்கு சம்மதிப்பான்னு எந்த நம்பிக்கையில இந்த முடிவு எடுத்த???”
“என் மகன் கண்டிப்பா இப்படி ஒரு முடிவு எடுக்க யோசிப்பான்.. ஆனா உங்களோட ரத்தம்!!! ஒருநாளும் யோசிக்காது.. கண்டிப்பா என்னைப் புரிஞ்சுப்பான்” என அத்தனை ஆணித்தரமாக நம்பிய மாலாவை நினைத்து உள்ளுக்குள் பெருமிதமே.
இந்தக்காலத்தில் எத்தனை மாமியார் இதுபோல் யோசிக்கக் கூடும் என நினைத்து வியந்தவர்,
“திடீர்னு உனக்கு ஏன் நிலா மேல இவ்வளவு அக்கறை வந்ததுன்னு எனக்குப் புரியலை.. ஆனா, நீ நினைக்கிறது நடக்க நீ ரொம்பவே போராட வேண்டி வரும்.. பார்த்துக்கோ”
மறைமுகமாக தன் சம்மதத்தை ஜெகதீசன் வழங்க,
அதை உணர்ந்துகொண்ட மாலாவும் காதலுடன் கணவரின் தோள் சாய்ந்து கொண்டவர்,
“நீங்க கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை!?? நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்” என்றார் உறுதியாக.
மனைவியின் தலையை வாஞ்சையாக வருடிவிட்ட ஜெகதீசனுக்கு மனைவியின் முடிவு எதனால் என்ற ஒரு அனுமானம் இருந்தது!!!! எனவே அவரின் முடிவுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை அவர்.
மகனின் திருமணத்தைப் பற்றி பல கனவுகள் வைத்திருந்தவருக்கு இது சிறு ஏமாற்றம் தான் என்ற போதும், நிலாவின் வலிகளை ஒரு பெண்ணின் தகப்பனாய் அவராலும் உணர முடிய,
‘ எப்படியோ!!! என் பையனும் அந்த பொண்ணும் மனசு ஒத்து சந்தோஷமா வாழ்ந்தா போதும் ‘ எனும் வேண்டுதலுடன் கண்ணயர்ந்தார்.
***
மாலாவின் கூற்றைக் கேட்டத்திலிருந்து விஷ்வாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.
ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதை அலைக்கழிக்க, தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
“அம்மாக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்???” என வெகுவாய் குழம்பியவன்,
“என்னால… என்னால எப்படி இது முடியும்????” என தன்னைக்குறித்தே பயம் கொண்டான்.
“நாளைக்கு அம்மா கேட்டா என்ன பதில் சொல்றது???” என யோசித்த மறு கணமே,
மணக்கோலத்தில் இருந்த ஜெய்யும் நிலாவுமே அவன் கண் முன் தோன்றி இம்சிக்க,
“நோஓஓஓ!!!!!!” எனத் தலையைப் பிடித்துக்கொண்டு தன்னை மீறி கத்தியிருந்தான்.
“இல்லை!!! இது தப்பு!!! ஒத்து வரவே வராது!!!!” என ஒரு மனம் உள்ளே கூப்பாடு போட,
இன்னொரு மனமோ,
இன்று மருத்துவமனையில் பார்த்த நிலாவின் ஒளியிழந்த தோற்றமும் அதைத்தொடர்ந்து அவளுக்கு வரும் மாப்பிள்ளைகளின் விவரம் பற்றி மாலா புலம்பிக்கொண்டு வந்ததுமே மனக்கண்ணில் தோன்றி இம்சை செய்தது.
நிலாவின் முகம் அவனின் மனதை இளகச் செய்ய,
“என்ன டா பாவம் பார்த்து வாழ்க்கை கொடுக்கப் போறியா???” என அவனின் மனமே அவனை எள்ளி நகையாடியது!!!!
“பாவம் பார்த்தா??? ம்ஹூம்” என தலையை இடவலமாக அசைத்துக்கொண்டவன்,
தன் நிலைமை தான் அவளை விட பாவப்பட்ட வேண்டியதாக உள்ளது என்பதை அறிந்தோர் தன்னைத் தவிர யாருமில்லை என்றுணர்ந்து விரக்தியாய் புன்னகைத்தான்.
அவனின் மனமே இரண்டாய் பிரிந்து, இது சரிவரும், வராது எனப் போராடியதில் வெகுவாய் தளர்ந்து விட்டவனுக்கு, உறக்கம் என்பது எட்டாக்கனியாகி விட்டது.
இரவு முழுவதும் ஏதேதோ சிந்தித்தவன், விடியும் தருவாயில் தெளிவான ஒரு முடிவை எடுத்த பின்பே நிம்மதியாய் சில நிமிடங்கள் கண்ணயர்ந்தான்.
***
காலை உணவிற்கு வரும் போதே விஷ்வாவிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்த மாலா, வேலைக்கு வருபவர்களைக் கூட அன்று வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு மகனின் வருகைக்காக காத்திருந்தார்.
இரவெல்லாம் உறங்கவில்லை என்றாலும் எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு சரியாக வந்த விஷ்வா, தனக்காக மாலா காத்திருப்பதை கண்டுகொண்டவன் அவராக ஆரம்பிக்கட்டும் எனும் முடிவுடன் உணவுண்ண அமர்ந்தான்.
“சாப்பாடு வைங்க ம்மா!!! லேட் ஆச்சு எனக்கு”
“இதோ வைக்கிறேன் டா” என அவனுக்குப் பார்த்து பார்த்து பரிமாறியவர்,
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் விஷ்வா!!!” என்று ஆரம்பித்தார்.
‘ இதோ வந்தேவிட்டது!!!’ என நினைத்து பெருமூச்சு விட்டவன்,
தன் கைக்கடிகாரத்தில் பார்வையைப் பதித்து பிறகு மாலாவைப் பார்த்தவன்,
“இப்போவே பேசுற அளவுக்கு ரொம்ப முக்கியமான விஷயமா??”
விஷயம் என்னவென அறிந்தும், அவரின் வாயாலே அதை வரவைக்க காத்திருந்தான் அந்த விடாக்கண்டன்.
“ஆமா!!! ரொம்பவே முக்கியம் தான்.. உன் வாழ்க்கை சம்பந்தப்பட்டது!!” என்றார் மாலாவும்.
“சரி சொல்லுங்க!!!”
“உனக்கு பொண்ணு பார்த்துட்டேன்… கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கணும் நீ!!!”
“தகவல் சொல்றீங்களா?? இல்லை என் விருப்பத்தைக் கேட்குறீங்களா???” என்று அவன் புருவம் உயர்த்த,
“ரெண்டும் தான்!!!!” என்றார் மாலா.
“இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பொண்ணு பாருங்கன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா??”
“நீ சொல்லி சொல்லி தான் உனக்கு எல்லாம் நாங்க பண்ணோமா?? பெத்தவங்களுக்குத் தெரியும் எப்போ என்ன பண்ணனும்னு.. நானும் உன் போக்குல இத்தனை வருஷம் விட்டுட்டேன்.. இனியும் முடியாது… ஒழுங்கா நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ”
கிட்டத்தட்ட மிரட்டவே செய்தார்.
தாயின் அதிரடியில் அதுவரை அவனிடமிருந்த இறுக்கம் சற்று குறைய,
“பொண்ணு யாரு????” என்று அடுத்த கட்டத்திற்குத் தாவினான்.
அதுவரை சற்று துடுக்குத்தனமாக பேசிக்கொண்டிருந்த மாலாவிற்கு தற்போது சிறிதான பதற்றம்.
தான் சொல்வதை மகன் சரியான விதத்தில் புரிந்து கொள்ளவேண்டுமே என வேண்டுதல் வைத்தவர்,
“நிலா!!!!” என்றார் வரவழைத்த தைரியத்துடன்.
அவளின் பெயர் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தனக்குள் உண்டுபண்ணும் மாற்றத்தை உணர்ந்தவனிடம் ஒரு கசங்கிய முறுவல்.
“நேத்து பார்த்தோமே ஹாஸ்பிடல்ல.. அந்தப்பொண்ணு தான்” என்றார் கூடுதல் தகவலாக,
ஜெய்யின் மனைவி என்று கூறுவதை அவர் சாமர்த்தியமாக தவிர்த்ததை எண்ணியவனுக்கு இதயத்தில் ஏதோ வலி.
அவர் சொல்லாவிட்டாலும் அதுதானே உண்மை!!!! அவள் ஜெய்யின் உடமையானவள் தானே??? என அவனின் மனமே கேள்வி கேட்க, தலையை உலுக்கி அந்த நினைவைத் துரத்தியவன் தன் அன்னையைத் தான் கேள்வியாகப் பார்த்தான்.
இத்தனை நேரத்தில் மீண்டும் தெளிந்திருந்த மாலா,
“என்னடா பார்வை???” என்றார் அதட்டலாக.
“என்ன சிம்பதியா??? நேத்து அந்தப்பொண்ணோட சோகக்கதையைக் கேட்டதும் பாவம் பார்த்து இந்த முடிவா???” என்று தாயின் மனதை அறிந்துகொள்ள வேண்டி அவன் சீண்டிவிட,
“பாவம் பார்க்குற அளவுக்கு அப்படி என்ன மோசமா இருக்கு அவ நிலைமை??? இந்த மாதிரி நினைப்பு இருந்தா அதை இப்போவே அழிச்சிடு விஷ்வா!!! பொண்டாட்டி செத்த உடனே ஆம்பளைங்க மட்டும் உடனே புது மாப்பிள்ளை ஆகுறீங்க.. உங்க மேல பாவப்பட்டா பொண்ணுங்க கழுத்தை நீட்டுறாங்க??? ஆனா இந்த ஆம்பளைங்க புத்தி மட்டும் ஏன் டா இப்படி இருக்கு??? பரிதாப்பட்டு என்ன வாழ்க்கை பிச்சையா போடுறீங்க??? ஆம்பளைத் துணை இல்லாம ஒரு பொண்ணால கடைசி வரைக்கும் வாழ்ந்திட முடியும்.. ஆனா உங்களால தான் பொம்பளை இல்லாம வாழவே முடியாது!!!” என்று அவர் கோபம் கொண்டு பேசிக்கொண்டே போக,
“அம்மா!!! எதுக்கு இப்போ இப்படி டென்ஷன் ஆகுறீங்க??? உட்காருங்க ஃபர்ஸ்ட்” என்று அவரை அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன்,
“ஏன் மா இவ்வளவு கோபம்??” என்றான் மென்புன்னகையுடன்.
இன்னும் அவனை முறைத்துக்கொண்டிருந்தவர்,
“உன்கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு பேச்சை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை விஷ்வா!!! உன்னை அப்படியா நாங்க வளர்த்தோம்.. அந்தப்பொண்ணு இந்த வயசுலயே படக்கூடாத கஷ்டம் எல்லாம் பட்டிருச்சு.. எனக்கு அந்தப்பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தோணுச்சு.. அதுவும் நேத்து உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்குறப்போ, சட்டுன்னு இது நடந்தா நல்லாயிருக்குமேன்னு மனசுல தோணுச்சு… என் வளர்ப்பு சரியா இருந்தா, உன் கூட நிச்சயம் அவ சந்தோஷமா இருப்பான்னு நான் நம்பினேன் விஷ்வா… இப்போவும் நம்புறேன்.. என் நம்பிக்கையை நீ காப்பாத்துவியா???” என்று அவனின் முடிவிற்காக மாலா அவனைப் பார்த்திருக்க,
“ஒருவேளை எனக்கு வேறொரு பொண்ணைப் பிடிச்சிருந்தா???” என்று அவன் கேள்வியுடன் நிறுத்த,
“பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ விஷ்வா!!! எனக்குத் தெரிஞ்சு நீ யாரையும் விரும்பலை.. அந்த நம்பிக்கையில தான் இந்த முடிவை எடுத்தேன்.. எனக்கு உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் நல்லா இருக்கணும்.. வேறொரு பொண்ணை விரும்புறவனை வற்புறுத்தி நிலாவை கல்யாணம் பண்ண வச்சு ரெண்டு பேரு வாழ்க்கையும் கெடுக்க நான் விரும்பலை.. அதுனால உனக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டு நீ நிம்மதியா இரு”
மகன் தன்னுடன் விளையாடுகிறான் என்று புரிந்தாலும், மனதாரத்தான் அந்த வார்த்தையைக் கூறியிருந்தார் மாலா.
தாயின் கூற்றில் சிறிதாய் புன்னகைத்துக் கொண்டவன்,
‘ பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணனுமா???’ என தாடையைத் தடவி யோசித்தவன்,
“அந்தப்பொண்ணுக்கு சம்மதம்னா எனக்கும் ஓகே ம்மா!!!!” என ஒரே வரியில் தன் முடிவைக் கூறியவன் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள,
எப்படியும் விஷ்வா புரிந்து கொள்வான் என்று ஆணித்தரமாக நம்பிய மாலாவும் முகம் கொள்ளா புன்னகையுடன்,
“உனக்கு ஓகே தான??? அது போதும்.. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றார் சந்தோஷத்துடன்.
“ம்மா!!! அந்தப்பொண்ணை எக்காரணம் கொண்டும் வற்புறுத்தக் கூடாது!!!!” என மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொன்னவன், அதற்குமேல் அங்கு நிற்காமல் கிளம்பியேவிட்டான், மனம் எங்கும் உண்டான புதுவித உணர்வோடு!!!!
மகனின் சம்மதம் கிடைத்தபின் மாலா துளியும் தாமதிக்கவில்லே, அன்றே தன்னுடைய தமக்கை வீட்டிற்கு ஜெகதீசனையும் கூட்டிக்கொண்டு சென்றவர், தங்களின் முடிவைக் கூற, சாமிநாதன் – கனகா தம்பதியருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சி.
“மாலா!!! நல்லா யோசிச்சிட்டியா??? இது விளையாட்டுக் காரியம் இல்லை.. எனக்கு விஷ்வா வாழ்க்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு நிலாவோட வாழ்க்கையும் ரொம்ப முக்கியம்.. இந்தக்கல்யாணம் நடந்தா எங்களை அடிக்கடி அவ பார்க்க வேண்டி வரும்.. அது எந்த அளவு சரியா வரும்?? ஜெய்யை எப்படி அவ மறப்பா அப்பறம்?? இது ரொம்ப சிக்கல் தான் மாலா” என சாமிநாதன் அனைத்து பக்கமும் இருந்து யோசித்து, தன்னுடைய திருப்தியின்மையை வெளிப்படுத்தினார்.
“பின்ன இதுக்கு வேற என்ன தான் மாமா வழி??? வேற யாராவது நல்ல பையனா பார்த்து வச்சிருக்கீங்களா??? இல்லை கண்டிப்பா அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்க என்னால முடியும்னு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா??? சின்னபொண்ணு மாமா அவ!!! போன வாரம் அவ வீட்டுக்கு ஒரு கிழவன் வந்து பொண்ணு கொடுன்னு சண்டை போட்டுட்டு போன மாதிரி இன்னும் நாலு பேர் வர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?? இந்த மாதிரி பேச்செல்லாம் தாங்குற அளவுக்கு அவளுக்கு திடமான மனசே இல்லை.. இத்தனை நாள் அந்தப்பொண்ணை கவனிக்காம இருந்துட்டேனேன்னு எனக்கு ஆத்தாமையா இருக்கு மாமா.. தெரியாம இருந்துட்டா பரவாயில்லை.. தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்க்கை இப்படி வீணா போறதை என்னால பார்க்க முடியலை.. அதுனால நீங்க கண்டதையும் யோசிக்காதீங்க.. நீங்க சொன்ன எல்லாத்தையும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கேன்.. என்னை நம்புங்க.. நிலா என் பையனோட நல்லா வாழ்வா!!! அதுக்கு நான் பொறுப்பு… விஷ்வாவைப் பத்தி நான் சொல்ல வேண்டியது இல்லை.. கண்டிப்பா அவ மனசை மாத்தி நல்லாப் பார்த்துப்பான்” என்று பேசிப்பேசியே ஜெய்யின் பெற்றோரை, அவரின் முடிவுக்கு சம்மதிக்க வைத்தவர் அவர்களைக்கொண்டே நிலாவின் பெற்றோர்களிடம் பேசினார்.
முதலில் அவர்கள் சொன்ன செய்தியில் அதிர்ந்தாலும், பின் இதைவிட ஒரு நல்ல வாழ்க்கை தன் பெண்ணிற்கு அமையாது என்று புரிந்துகொண்டு, நிலாவை இதற்கு எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டவர்கள், இன்னும் இரண்டு நாட்களில் முடிவு சொல்வதாக அவர்களிடம் அவகாசம் கேட்டுக்கொண்டு நிலாவை எப்படி சம்மதிக்க வைப்பது என்று தீவிர யோசனையில் இருந்தனர் குணா – சுமதி தம்பதியினர்.
ஆனால், தன்னைச்சுற்றி நடப்பது எதுவும் தெரியாத நிலாவோ, மன அமைதி வேண்டி தெய்வத்தின் சன்னதிக்கு சென்றிருக்க, அங்கே அவள் கேட்டது மட்டுமல்ல கேட்காததையும் அள்ளிக் கொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் தெய்வீகப் புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தார் முருகப்பெருமாள்.