அவனுக்கான அவளுடைய நேசம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்முன்னே இறந்து போவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஐந்து வருடங்கள் காதலித்து மிகவும் ஆசையுடன் அவனின் கரம் பற்றிக்கொண்டு கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு கிடைத்தென்னவோ ஏமாற்றமும், வலிகளும் தான்.
நல்ல பசியில் இருக்கும் போது, விருந்துண்ண அழைத்து வந்து இலையைப் போட்டு தண்ணீரை மட்டும் வைத்துவிட்டு, உணவிற்காக காத்திருக்கச் சொல்வதைப் போல் கமலியின் நிலையானது அவளின் கல்யாண வாழ்வில்.
நிலாவின் கஷ்டம் ஒரு பெண்ணாக கமலிக்கும் புரியாமல் இல்லை. ஆனால் அவளுக்காக இத்தனை யோசிக்கும் அவளின் கணவன், தன்னைப்பற்றி ஒரு நொடியேனும் யோசிக்கவில்லையே என்பது தான் அவளின் ஆற்றாமை.
அந்த அளவிற்கா நான் முக்கியமில்லாமல் போனேன் என்று கழிவிரக்கத்தில் கரைந்தவளுக்கு, இன்றைய திவாகரின் பேச்சு, மேலும் அவனிடம் இருந்து அவளை மனதளவில் விலக்கி வைத்தது.
சில மணி நேர அழுகைக்குப் பின்,
‘இனி இவனை எண்ணி ஒருநாளும் வருந்தக்கூடாது!!! என்னை மதிக்காதவர்களை நானும் மதிக்கத் தேவையில்லை!!’ எனும் தெளிவிற்கு வந்த பின்பே சற்று தெளிந்தாள்.
ஆனால் அங்கிருந்து கோபமாகக் கிளம்பிய திவாகருக்கு, சற்று நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் மட்டுப்படவும், தான் செய்து வைத்த முட்டாள்தனம் விளங்க, வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டான்.
“இடியட்!!!! கொஞ்சம் கூட பொறுமையே இல்லை டா உனக்கு!!!” என தன்னைக்குறித்தே கோபம் கொண்டவன்,
மீண்டும் மனைவியிடம் சென்று மன்னிப்பு வேண்ட தைரியம் அற்றவனாக, கனத்த மனதுடன் தன் வீட்டிற்கே கிளம்பினான்.
கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க, அவர்களின் காதலோ கேட்பாரற்று கதறித் தவித்தது தனியாக…
***
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது..
அன்று குணசீலனுக்கு மாதாந்திர பரிசோதனை தினம்.
திவாகருக்கு அன்று வங்கியில் முக்கியமான வேலை இருந்ததனால், சுமதியும் நிலாவுமே குணசீலனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்திருந்தனர்.
விஷ்வாவினுடைய தந்தையின் அண்ணனையும் சிறுநீரகத்தில் கல் இருப்பதால் அதை அறுவை சிகிச்சை செய்ய அந்த மருத்துவமனையில் தான் சேர்த்திருந்தனர்.
அப்போது எதேச்சையாக சுமதியைக் கண்டுவிட்ட மாலா,
“சுமதி தானே நீங்க???” என்று தானாகவே சென்று பேச,
மாலாவைக் கண்டுகொண்ட சுமதியும்,
“ஆமாங்க.. நல்லா இருக்கீங்களா??” என்று விசாரிக்க,
“நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. அண்ணனுக்கு தான் முடியலைன்னு கனகா அக்கா சொன்னா.. நானும் பார்க்க வரணும் வரணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள என் வீட்டுக்காரருக்கு வைரல் பீவர் வந்து கொஞ்சம் பிசி ஆயிட்டேன்.. அதான் வர முடியலை.. தப்பா எடுத்துக்காதீங்க.. ” என படபடவென பேசிய மாலாவின் பேச்சில் தெரிந்த தோழமையில் சுமதியும் புன்னகையுடனே அவரிடம் இயல்பாய் பேசிக் கொண்டிருந்தார்.
“என் வீட்டுக்காரரோட அண்ணனுக்கு, கரூர் பக்கம் அரவக்குறிச்சி தான்.. அவருக்கு கிட்னில ஸ்டோன் போல.. அவரை இங்க தான் சேர்த்திருக்காங்க.. நானும் விஷ்வாவும் வந்தோம்.. அவன் ஏதோ போன் வந்திருக்குன்னு வெளிய போயிட்டான்.. நீங்க அண்ணனுக்கு இங்க தான் காமிக்கிறீங்களா???”
“ஆமாங்க.. இன்னைக்கு அவருக்கு செக்கப்.. நிலாவும் அவரும் உள்ள டாக்டரை பார்க்கப் போயிருக்காங்க”
“ஓஹ்!! நிலாவும் வந்திருக்காளா?? அவளைப் பார்த்தே வருஷமாச்சு!! எப்படி இருக்கா ?? அவளுக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறதா அக்கா சொன்னா.. ஏதும் நல்ல இடம் தகைஞ்சுதா??” என அவள் மேல் உள்ள அக்கறையில் மாலா கேட்க,
மகளைப் பற்றி கேட்டதும் அதுவரை இருந்த சிரிப்பு, சுமதியின் முகத்தில் இருந்து மறைந்து போக,
“எங்கங்க?? இத்தனை வருஷமா இவ கல்யாணத்துக்கு ஒத்துக்கலையேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தோம்.. ஏதோ இருந்திருந்து இவ சம்மதம் சொன்னான்னு பார்த்தா, மாப்பிள்ளை யாரும் கிடைக்க மாட்டேங்குறாங்க.. இருபத்தி ஆறு வயசு தான் ஆகுது.. ஆனாலும் ரெண்டாவது கல்யாணம் தானன்னு மனசாட்சியே இல்லாம பேசுறாங்க” என்று அவர் வெகுவாய் கலங்கிப் போக,
“ஏங்க?? என்னாச்சு?? ஏன் இவளோ கவலைப்படுறீங்க??” என்று புரியாமல் வினவினார் மாலா.
“அதை ஏன் கேட்கிறீங்க.. இவளுக்கு வர வரன் ஒண்ணு கூட சரியே இல்லைங்க.. போன வாரம், ஐம்பது வயசு இருக்க ஒரு ஆளு வீட்டுக்கே தைரியமா பொண்ணு கேட்டு வர்றாரு.. அவருக்கு நிலா வயசுல ஒரு பொண்ணே இருக்குங்க… என் பையனுக்கும் அந்தாளுக்கும் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு.. அதுல அந்தாளு ரொம்ப வார்த்தையை விட்டுட்டாரு.. செகண்ட் ஹேன்ட்!! இன்னொருத்தன் கூட இருந்தவ தான?? அப்படி இப்படின்னு.. அதுவும் நீ என்ன தேடினாலும் என்னைய மாதிரி ரெண்டாந்தாராமா தான் உன் தங்கச்சியை எவனும் கட்டிப்பான்.. இல்லை ரெண்டாந்தாரமா என் தங்கச்சியை கட்டிக்கொடுக்கவே மாட்டேன்னு அடம் பண்ணிட்டே இருந்தா கடைசியில எவனுக்கும் வப்பாட்டியாத் தான் போகணும் அப்படி இப்படின்னு பேசிட்டான்.. அவன் பேசுனது அத்தனையும் என் பொண்ணு கேட்டுட்டாங்க.. பிள்ளை மனசு என்ன பாடு பட்டிருக்கும்.. எல்லாத்தையும் கேட்டுட்டு இதுக்குத் தான் நான் கல்யாணம் வேண்டவே வேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களான்ற மாதிரி ஒரு பார்வை பார்த்திட்டு போனா பாருங்க.. சத்தியமா மனசளவுல செத்துட்டேன்.. இப்போதான் என் பொண்ணோட எதிர்காலத்தை நினைச்சு ரொம்பவே பயமா இருக்குங்க”
ஆதரவாகப்பேச ஒரு ஆள் கிடைத்ததும் தன்னை மறந்து அனைத்தையும் ஒப்பித்துவிட்ட சுமதி, மகளின் வாழ்வை எண்ணி கண்ணீர் விட, மாலாவிற்கு இதயத்தில் ஏதோ பிசைந்தது.
“அட!!! எவனோ என்னமோ பேசினானு நீங்க பயப்படுவீங்களா??? அதெல்லாம் ஒன்னுமே இல்லை.. நான் சொல்றேன் கேட்டுக்கோங்க.. நிலாவுக்கு ஏத்தமாதிரி ஒரு பையன் கிடைச்சு அவன் கூட கண்டிப்பா நிறைவான ஒரு வாழ்க்கையை அவ வாழுவா!!! அதைப்பார்த்து நீங்க சந்தோஷப்படத்தான் போறீங்க.. இது கண்டிப்பா நடக்கும்!!!” என்று உறுதியாக மாலா சொல்ல,
அந்த நேரத்தில் அவரின் நேர்மறை ஆற்றல், சுமதிக்கும் மிகவும் தேவையாக இருத்தது.
“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்!!!” என்று வேண்டுதலுடன் அவர் சொல்ல,
“ஒரு நிமிஷம் அத்தை.. அப்பாக்கு டேப்லெட் வாங்கனும்.. லஞ்ச் டைம் நெருங்கிருச்சு.. அப்பறம் ஆள் இல்லைனா பார்மசியில கொஞ்சம் கூட்டமா இருக்கும்.. அதுனால போய் டேப்லெட் மட்டும் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்லும் அவளைத் தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார் மாலா.
முன்பே நிலா என்றால் பிடித்தம் தான் என்றாலும், இன்று ஏனோ அவளை ஊன்றி கவனிக்க வைத்தது ஏதோ ஒன்று.
அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என அவளின் பெற்றவர்களுக்கு நிகராக மாலாவும் அந்த நொடி வேண்டிக்கொண்டார்.
அதன்பின்பு குணசீலனிடம் சில நிமிடங்கள் பேசியவர், இன்னும் விஷ்வாவைக் காணவில்லையே என அவனுக்கு அழைப்பு விடுத்தார்.
“விஷ்வா!!! எங்க போன??” என்று மாலா கேட்க,
“இதோ ம்மா!! உள்ள வந்துட்டேன்.. வரேன்” என்று சொல்லிக்கொண்டே வேகமாய் நடந்தவன், முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது லேசாய் மோதிவிட,
“ஷ்!!! சாரி சாரி!!!!” என பதறி அவன் மன்னிப்பு வேண்டுவதற்கும்,
“இட்ஸ் ஓகே” என்று சொல்லிக்கொண்டு நிலா அவனைத் திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாக இருக்க,
இன்று நிலாவை, அதுவும் அத்தனை அருகில் கண்டதும் விஷ்வாவிற்கு இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது!!!!
யாரை இனி சந்திக்கவே கூடாது என அவன் தினம் தினம் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவளின் முன்னாலே தன்னைக் கொண்டு நிறுத்திய விதியை நிந்தித்துக் கொண்டவனின் கண்கள் நொடிநேரத்தில் அவளை ஆராய்ந்திருந்தது.
பொலிவிழந்த முகத்துடன், எதையோ பறிகொடுத்தபடி இருந்த அவளின் தோற்றம் அவனுக்குள் பெரும் ஆற்றாமையைத் தோற்றுவிக்க, முயன்று அதை வெளியில் காட்டாமல் மறைத்தவன், அவளிடம் பேசுவதா இல்லையா என்று தெரியாமல் தடுமாறி நிற்க,
அவளுக்கு அந்த யோசனை எல்லாம் இல்லை போலும்.
“விஷ்வா தான நீங்க??” என்று அவனைக் கண்டுகொண்டு அவள் கேட்டுவிட,
மௌனமாய் ஒரு தலையசைப்பு அவனிடம்.
“நல்லா இருக்கீங்களா??”
சம்பிரதாயமான விசாரிப்பு!!!
“ம்ம்!!! நீங்க எங்க இங்க??” கேட்க வேண்டுமே எனும் கடமையுடன் வெளிவந்த அவனின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டவளும்,
“அப்பாக்கு ஜஸ்ட் மந்த்லி செக்கப்”
ரத்தினச்சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டவள், வருகிறேன் என ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து முன்னே நடக்க,
அவனும் பெருமூச்சுடன் அவளைப் பின் தொடர்ந்து வந்தான்.
அவனின் வருகையை உணர்ந்தாலும், அதைக்கண்டுகொள்ளாமல் அவள் முன்னேறி முதலாம் தளம் வர,
அவளுக்கு சிறு இடைவெளி விட்டு விஷ்வாவும் அவளைப் பின்தொடர்ந்து தன் அன்னையைத் தேடி வந்தான்.
“இதோ விஷ்வா வந்துட்டான்!!!” என சொல்லிய மாலாவின் கண்கள், சிறிது இடைவெளிவிட்டு நடந்துவரும் நிலா மற்றும் விஷ்வாவிடமே சில நொடிகள் நிலைபெற்றது.
இருவரையும் ஒன்றாகக் கண்டதும் மின்னலாய் அவரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றி மறைய,
‘ ப்ச்!! இது என்ன இப்படி ஒரு யோசனை!!!’ என தலையைக் குலுக்கி அந்த எண்ணத்தில் இருந்து விடுபெற்றவர், விஷ்வா வந்ததும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு தாங்கள் வந்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டனர்.
இருந்தும் மனதின் ஓரம் நெருஞ்சி முள்ளாய் அந்த எண்ணம் மட்டும் அவரைக் குத்திக்கொண்டே இருக்க,
அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல், இரவு கணவர் வந்ததும்,
“நம்ம விஷ்வாவுக்கு நிலாவை கல்யாணம் பண்ணி வச்சிருவோம்ங்க” என தேங்காய் உடைத்ததைப் போல் பட்டென கூறியே விட்டார்.
ஆனால் அவரின் கூற்றைக் கேட்ட ஜெகதீசன் தான் அதிர்ச்சியில் பேச மறந்த சிலையானார்!!!
அவர் மட்டுமல்ல!!! எதேச்சையாக இந்த பேச்சுவார்த்தையைக் கேட்க நேர்ந்த விஷ்வாவும், தாயின் கூற்றில் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்தவன், அதற்கு மேல் இதைப்பற்றி யோசிக்க பயந்து அங்கிருந்து விருட்டென கிளம்பிவிட்டான்.. நெஞ்சை அமிழ்த்தும் நினைவுகளோடு!!!!