அதுவரை சற்று அடங்கியிருந்த சுமதியின் அழுகை, கணவரின் நிலையைக் கண்டதும் மீண்டும் ஆரம்பமாகிவிட, வெளிவரத் துடித்த பெரும் கேவலை புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அணை போட்டார்.
சுமதியை கண்டிப்புடன் நோக்கிய திவாகர்,
“ம்மா!!! நர்ஸ் தெளிவாத்தான சொன்னாங்க.. அழுகிற மாதிரி இருந்தா வெளியவே இருங்க… அப்பாகிட்ட வந்து பயமுறுத்துற மாதிரி நடந்துக்காதீங்க!!!”
எங்கே வாயைத் திறந்தால் அழுது விடுவோமோ என்று அஞ்சிய சுமதியும், எதுவும் பேசாமல் பார்வையாலே கணவனின் நலனை ஆராய்ந்து, ‘ அவருக்கு ஒன்றும் இல்லை!!!’ எனும் உண்மையை மனதில் பதித்துக் கொண்டார்.
கமலியின் வெளிநடப்பும், அதைத்தொடர்ந்த தந்தையின் உடல்நலக்குறைவும், அதைக்கொண்டு தாயின் குற்றச்சாட்டும் நிலன்யாவை வெகுவாய் பாதித்திருக்க, அவள் மொத்தமாக மௌனியாகிப் போனாள்.
அதிலும் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் வாடிய தளிராய் தளர்ந்து போய் படுத்திருக்கும் அவளின் தந்தையின் தோற்றம், பெண்ணவளின் மனதை மிகவும் பாதித்தது.
எங்கே சுமதியைப் போல், குணசீலனும் அவரின் நிலைக்கு தான்தான் காரணம் என்பதைப் போல் ஏதேனும் நினைத்துவிடுவாரோ என்று அஞ்சியே அவரின் அருகில் செல்ல பயந்து விலகியே அவள் நின்றிருக்க,
மகளின் கவலை அவசியமற்றது என்பதைப் போல்,
அந்த அரைமையக்க நிலையிலும் குணாவின் கைகள் மகளின் கரங்களை தனக்குள் எடுத்து மெலிதாக பற்றிக் கொண்டது.
வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆறுதலை, அவரின் ஒரு சிறு செயல் நிலன்யாவிற்கு வழங்கியிருக்க, அன்னையின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயம் கூட குணாவின் அன்பில் காணாமல் கரைந்து போனது.
‘ என் அப்பா என்னை அப்படி நினைக்க மாட்டாரு!!!!’ என அத்தனை நேரம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விடுபட்டதில், நிலன்யாவின் முகத்தில் சிறு ஆசுவாசம்.
“சார்!!! டைம் முடிஞ்சிடுச்சு!!! நீங்க கிளம்புங்க!!” அதற்குள் செவிலியர் வந்து அவர்களை வெளியேற்ற,
இன்னும் சில நொடிகள், குணாவிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளை மொழிந்துவிட்டே மூவரும் அந்த அறையைவிட்டு வெளியே வந்தனர்.
அதற்குள்ளாகவே குணசீலன் மற்றும் சுமதியின் உடன் பிறப்புகள் அங்கே வந்துவிட,
“விசிட்டிங் ஹவர் ஈவ்னிங் தான் சார்… அப்போ தான் யாரா இருந்தாலும் வரணும்.. ” என செவிலியர் முடிவாகக் கூறிவிட, வந்தவர்கள் அனைவரும் குணசீலனைப் பார்க்காமலே மாலை வருவதாகச் சொல்லி விடைபெற்றனர்.
“இங்க எப்படி இருந்தாலும் யாரையும் உள்ள விட மாட்டாங்க.. எதுக்கு எல்லாரும் இங்க இருக்கணும்?? அம்மா!! நீங்களும் நிலாவும் வீட்டுக்குப் போங்க.. நான் பார்த்துக்கிறேன் இங்க” என திவாகர் சொல்ல,
“இல்லை அண்ணா!! நான் இங்க இருக்கேன்.. நைட் எப்படி இருந்தாலும் நீ இங்க இருக்கணும்.. அதுனால நீ வீட்டுல போய் ரெஸ்ட் எடு.. நான் பார்த்துக்கிறேன்” என்றாள் நிலா.
நிலா சொல்வது ஏற்புடையதாக இருந்தாலும், எங்கே தான் வீட்டிற்குச் சென்ற நேரத்தில் கமலி இங்கே வந்தால் என்ன செய்வது என மனைவியைக் காணும் ஆவலில் அவன் யோசிக்க,
அவனின் மனநிலை புரியாத சுமதியும்,
“அவ சொல்றது தான் சரி திவா!!! பகல் நேரத்துல பொம்பளைங்க நாங்க பார்த்துக்குவோம்.. ராத்திரிக்கு கண்டிப்பா நீ இருக்கணும்.. பகலைக்கும் பார்த்து ராத்திரிக்கும் முழிச்சிருந்தா உன் உடம்பும் சேர்ந்து கெட்டுப்போகும்.. அதுனால நீ கிளம்பு.. நான் வீட்டுல போய் குளிச்சிட்டு, தேவையானது எல்லாம் எடுத்துட்டு வரேன்.. அப்பறம் நிலாவை மாத்தி விடலாம்” என்று பேசிப்பேசியே அவனைக் கிளப்பியிருந்தார்.
செல்லும் முன் நிலாவிற்காக பழரசத்தை வாங்கிக் கொடுத்த திவாகர்,
“இந்த நிலைமையில கண்டிப்பா நீ சாப்பிட மாட்டன்னு தெரியும்.. அட்லீஸ்ட் இதையாச்சும் குடி!! அலையவாச்சும் தெம்பு வேண்டும் உடம்புல” என்று அவளைக் கட்டாயப்படுத்தி ஒரு வழியாக குடிக்க வைத்த பின்பே அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்ததும், குளித்து முடித்து வெளியே வந்த சுமதியின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு தீவிரம் குடிகொண்டிருந்தது.
அதைக் கண்டுகொண்ட திவாகர்,
“என்னம்மா யோசனை???” என்க,
“இனியும் இப்படியே விடக்கூடாது டா திவா!!!”
“என்னம்மா சொல்றீங்க?? புரியலை எனக்கு!!”
“நிலா வாழ்க்கை தான் டா.. நாலு வருஷமா அவ மனசு மாறும் மாறும்னு நம்ம காத்துட்டே இருந்தாலும் அவ கரையிறதா இல்லை.. இனியும் இப்படியே போனா, இன்னைக்கு உங்க அப்பாவுக்கு நடந்த மாதிரி எனக்கும் கூடிய சீக்கிரமே ஏதாவது வந்துடும்”
“ப்ச் அம்மா!!!! என்ன பேசுறீங்க??” என அவன் கண்டிக்க,
“உண்மை தான் டா திவா!!! என் வயித்துல பிறந்த ரெண்டும் இப்படி வாழாம பட்ட மரமா நிக்கிறப்போ, பெத்த வயிறு பத்தி எரியுது டா.. அவளா மனசு மாறுவான்னு காத்துட்டு இருந்தா அவளோட சேர்த்து உன் வாழ்க்கையும் இப்படியே போயிடும்!!!” என அவர் ஆதங்கம் கொள்ள,
திவாகரிடம் மௌனம் மட்டுமே பதிலாய்.
“இந்த முறை அவளை அவ போக்குல விடுற மாதிரி இல்லை!!” என சுமதி தீவிரத்துடன் சொல்ல,
திவாகருக்கும் அதே எண்ணம் தான். அதில் இப்போது மிகச் சிறிதாய் சுயநலமும் கூட!!! நிலாவின் வாழ்க்கை நன்றாக அமைந்தால் தானே, கமலியுடன் அவன் சேர முடியும்.. எனவே அன்னையின் கூற்றுக்கு மறுப்பேதும் சொல்லாமல்,
“இப்போ என்னம்மா பண்ணப் போறீங்க???” என்று கேட்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்க,
“இத்தனை நாளும் நம்ம சொல்லித்தான் கேட்கலை.. அந்தப்பையனோட அப்பா அம்மாவே சொல்லட்டுமே!!!! அந்தக் கல்யாணத்தை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கைக்குள்ள அடியெடுத்து வைக்கிறது அவ்வளவு பெரிய பாவம் ஒன்னும் இல்லைன்னு அந்த கிறுக்கச்சிக்கு அப்போவாச்சும் புரியுதான்னு பார்ப்போம்!!!” என மெலிதான விசும்பலுடன் சுமதி சொல்ல, அவரின் தோள்களை ஆதரவாக அணைத்துக்கொண்ட திவாகரும்,
“கவலைப்படாதீங்க ம்மா!!! இந்த முறை கண்டிப்பா நிலா நல்ல முடிவா எடுப்பா!!!!” என்று உறுதியுடன் கூறியவனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என தீவிரமாக யோசிக்கலானான்.
இங்கே மருத்துவமனையில், அவர்கள் கிளம்பிய பின், காத்திருப்போர் அறையில் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்துவிட்ட நிலாவிற்குள் ஆயிரமாயிரம் சிந்தனைகள்.
கடந்த சில நாட்களாகவே மிகவும் மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு இப்போது நடந்த நிகழ்வுகள் மேலும் அழுத்தத்தைக் கூட்டியது.
அனைவரின் நிம்மதியும் தன்னால் தான் தொலைந்து போனதோ எனும் குற்ற உணர்வு அவளை பாடாய்ப்படுத்த, மிகவும் சோர்வாக கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
அந்த சமயம் அவள் தோளில் ஆதரவாய் ஒரு கரம் பட, பட்டென கண்களைத் திறந்த நிலாவின் முன் சற்றே பதற்றத்துடன் நின்றிருந்தாள் கமலி.
எத்தனை கோபம் இருந்தபோதும், இந்தக் கடினமான சூழ்நிலையில் கமலி வந்ததே நிலாவிற்கு சிறு நிம்மதியைத் தோற்றுவிக்க,
“வாங்கண்ணி!!!!” என எழுந்துகொண்டாள்.
“மாமாக்கு என்னாச்சு???”
“ஹார்ட் அட்டாக் அண்ணி!!! ஸ்டென்ட் வச்சிருக்காங்க.. இப்போ கொஞ்சம் ஓகே தான்.. கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க” என்றாள் பெருமூச்சுடன்.
“ஓஹ் பார்க்கலாமா???”
“இல்லை அண்ணி!!! விசிட்டிங் ஹவர் ஈவ்னிங் தான்.. அப்போ தான் அலோவ் பண்ணுவாங்களாம்”
அதற்குள் கமலியின் பெற்றோரும் அங்கு வந்துவிட, அவர்களிடமும் தந்தையின் தற்போதைய உடல்நிலையை விளக்கியவள்,
“காஃபி சாப்பிடுறீங்களா??? இங்க பக்கத்துல தான் கேண்டீன் இருக்கு.. வாங்க போகலாம்” என உபசரிக்க,
“அவங்க ரெஃப்ரஷ் ஆகிட்டு, தேவையான திங்க்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்துட்டு வரப் போயிடுக்காங்க.. இதோ இப்போ கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க அத்தை!!”
“சரி சரிம்மா!!!” என்றவரும் அதற்கு மேல் நிலாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனியாகிவிட,
தன்னைக்கொண்டு கமலியின் வாழ்க்கை இப்படி ஊசலாடிக் கொண்டிருந்த போதிலும், தன்னுடன் பகைமை பாராட்டாமல், இந்தளவிற்கேனும் நன்முறையில் பழகிய அவரை எண்ணி சிறிதாய் வியந்து தான் போனாள் பெண்ணவள்.
கமலியின் வீட்டார் வந்த பொழுதே திவாகருக்கு அழைத்து தகவல் சொல்லிவிட்ட நிலா, அண்ணனின் வருகைக்காக காத்துக்கிடக்க,
அதற்குள்ளாகவே இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட கமலி,
“அப்போ நாங்க ஈவ்னிங் விசிட்டிங் ஹவர்ஸ்ல வரோம்.. இப்போ கிளம்புறோம்..” என்று சொல்ல,
திவாகர் வந்ததும், இருவரும் மனம்விட்டுப் பேசி அவர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கக் கூடும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலாவோ,
“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே அண்ணி!!! அண்ணா வந்துட்டு இருக்காங்க” என தயக்கமாக உரைக்க,
அவளின் எண்ணத்தைப் படித்த கமலியிடம் ஒரு வெற்றுப் புன்னகை.
“தெரியாம உடைக்கிறதைக் கூட எப்படியோ மன்னிச்சு விட்டுடலாம் நிலா… ஆனா உங்க அண்ணன் தெரிஞ்சே தான் என் மனசையும் அதுல எங்களுக்காக இருந்த சின்னச்சின்ன எதிர்பார்ப்புகளையும் சுக்குநூறா உடைச்சுப் போட்டாரு.. அதை ஒட்ட வைக்கிறது!!! ம்ஹூம்.. ரொம்பவே கஷ்டம்… “
“நான் அவர்மேல வச்ச அன்பு உண்மை.. அது என்னைக்கும் தோத்துப் போயிடக்கூடாதுன்னு தான் இன்னொரு வாய்ப்பு கூட உங்க அண்ணனுக்கு கொடுத்திருக்கேன்… உன் வாழ்க்கைக்கும் எங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லைன்னு என்னைக்கு உன் அண்ணனுக்கு புரியுதோ அன்னைக்கு நாங்க பேசிக்கிறோம்.. அதுவரைக்கும் இப்படி இருக்கதுதான் ரெண்டுபேருக்குமே நல்லது!!!” என்று உறுதியாகக் கூறியவள், நிலா ஏதும் மறுத்துப் பேசும் முன் தன் பெற்றவர்களை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியே சென்றிருந்தாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்த நிலாவிற்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான்!!!!
தான் இப்படியே தனிமரமாய் இருந்தால் நிச்சயம் இவர்களின் வாழ்க்கை சீராகப்போவதில்லை எனும் உண்மை அவளின் மனதைச் சுட,
கடந்தகாலங்கள் கொடுத்த காயங்களும், கணவனாய் வந்தவன் காட்டிய காதலும் அவள் மனதை அடுத்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்க விடாமல் இறுக்கிப் பிடிக்க, நிதர்சனமும் நெருங்கியவர்களின் அன்புப் போராட்டமும் அவளின் முடிவை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தித்தது!!!!
கடந்தகாலத்தை நினைத்து தனக்கெனக் காத்திருக்கும் எதிர்காலத்தைத் தவறவிடுவாளா நிலா???