முழுதாய் அடித்து ஓய்ந்த கைபேசியை நிலா யோசனையாகப் பார்த்திருக்க, அடுத்த நொடியே அவளின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒன்று மின்னி மறைந்தது.
“ஹாய்!!! திஸ் இஸ் விஷ்வா!!! பிளீஸ் அட்டென்ட் தி கால்” என விஷ்வா அனுப்பியிருக்க,
“ஓஹ் இவங்க தான் கால் பண்ணாங்களா.?” என நினைத்துக்கொண்டவள், மீண்டுமொருமுறை அழைப்பு வரவும் அதை சிறு தயக்கத்துடனே ஏற்று காதிற்குக் கொடுத்தாள்.
“ஹலோ!!! நான் விஷ்வா பேசுறேன்!!”
“ம்ம்.. ஹான்.. சொல்லுங்க”
நிலாவின் குரலில் தெரிந்த தயக்கத்தை கண்டுகொண்டவன், பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
“நீங்க உங்க முடிவுல ஸ்ட்ராங்கா தான் இருக்கீங்களா??”
எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவன் கேட்டதை புரிந்து கொள்ள முடியாமல் அவள் குழம்ப,
அவளின் அமைதியில் அதை உணர்ந்து கொண்டவன்,
“ஃபர்ஸ்ட் உங்களுக்கு ஒண்ணு புரியலைனா என்னன்னு கேட்டு தெளிவு படுத்திக்கோங்க.. அதேமாதிரி பிடிக்கலனா தைரியமா அதை வெளிய சொல்லுங்க.. எல்லா நேரமும் மத்தவங்களுக்காகவே வாழ முடியாது இல்லையா???” என்று அவன் கேட்க,
“ம்ம்.. சரிங்க!!!!” உடனடியாக வந்து விழுந்தது ஒரு சம்மதமான பதில்.
‘ யார் என்ன சொன்னாலும் இப்படி இவங்க தலை ஆட்டுறதை என்னைக்கு விடப் போறாங்களோ ‘ என்று நொந்து கொண்ட விஷ்வா,
இப்போது எதற்கிந்த கேள்வி என நிலாவிற்குத் தோன்றினாலும்,
“ஆமாங்க!!!” என அவனுக்கு பதில் அளித்திருந்தாள்.
“கவுன்சிலிங் போக எல்லாம் ரெடியா இருக்கேன்னு சொன்னீங்களே???” என அவன் இழுக்க,
“ஆமாங்க.. ஆன்லைன்ல அதை தேடிட்டு தான் இருக்கேன்.. ஒருத்தவங்ககிட்ட பேசியிருக்கேன் .. வீக்லி டூ செஷன் ஆன்லைன்ல எடுப்பாங்களாம்” என அவள் தகவல் சொல்ல,
“சுத்தம்!!” என வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்ட விஷ்வா,
“அந்த வீட்டை விட்டு வெளிய வர ஐடியாவே இல்லையாங்க உங்களுக்கு??? தங்கச்சிறைனாலும், சிறை, சிறை தானங்க … சுதந்திரமா வெளிய வந்து நாலு பேரைப் பார்த்துப் பழகுங்க.. அதுவே உங்களுக்கு பெரிய மாற்றமா இருக்கும்” என்று விஷ்வா சொல்ல,
“ஹய்யோ!! எங்க வீட்டுல யாரும் என்னையை அடைச்சு எல்லாம் வைக்கலைங்க.. நான் வெளிய கடைக்கு, கோவிலுக்கு எல்லாம் நானே தான் போவேன்”
எங்கே தன் வீட்டினரை அவன் தவறாக புரிந்து கொள்வானோ என அவள் அவசரமாக பதிலளிக்க,
அவளின் முயற்சியை புரிந்து கொண்டவனிடத்தில் மென்முறுவல்.
“கோவில், கடை இதெல்லாம் எங்கங்க இருக்கு??”
“இங்க பக்கத்துல தான் ரெண்டு தெரு தள்ளி இருக்குங்க”
அவனின் எண்ணம் புரியாமல் சிரத்தையாக அவள் பதிலளிக்க, அவனின் சிரிப்பு இன்னும் சிறிதாய் விரிந்தது.
“குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டுறதுன்னு சொல்லுவாங்களே.. அது என்னன்னு உங்களைப் பார்த்து தாங்க தெரியுது!!!!”
நக்கல் செய்கிறானோ என நிலா சந்தேகித்தாலும் அவனின் குரல் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தது.
இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மீண்டும் அவள் அமைதி காக்க,
“இங்க நாமக்கல்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காங்க.. ரொம்பவே எக்ஸ்பீரியன்சிட்.. நான் அவங்ககிட்ட பேசிட்டேன்.. உங்களை நாளைக்கு வர சொல்லியிருக்காங்க.. வர்றீங்களா???” என அவன் கேட்க,
‘ அவ்வளவு தூரமா???’ என்று அவள் தயங்க,
“நான் உள்ள எல்லாம் வர மாட்டேங்க.. நீங்க ஃப்ரீயா அந்த செஷனை அட்டன்ட் பண்ணலாம்.. அதுவும் நீங்க கவுன்சிலிங் போகணும்னு சொன்னதுனால தான் இதை அரேஞ்ச் பண்ணேன்.. அட்வான்டேஜ் எடுத்துக்கறதா நினைக்க வேண்டாம்.. “
அவளின் மௌனத்தில் அவன் முன்னெச்சரிக்கையாக தன்னிலை விளக்கம் கொடுக்க,
“அச்சோ அதெல்லாம் இல்லைங்க!!!” என்று பதறி மறுத்தவள்,
“நான்.. நான் இந்த மாதிரி கவுன்சிலிங் போறேன்னு வீட்டுக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சேன்.. அதான் ஆன்லைன்ல பார்த்திட்டு இருந்தேன்.. வேற ஒன்னும் இல்லை” என்று அவள் தயங்கியதற்கான காரணத்தைச் சொல்ல,
அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“சரிங்க!!! பட் உங்க கம்பர்ட் ஜோன் விட்டு நீங்க வெளிய வந்தா தான், உங்க மனப்போரட்டங்கள்ல இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.. அண்ட் மனநிலை சரியில்லாதவங்க தான் சைக்கியார்டிஸ்ட் கிட்ட போகணும்னு இல்லை.. சோ இதை வெளிய சொல்றது அவ்வளவு பெரிய தப்பு ஒன்னும் கிடையாது… அதுக்கு மேல உங்க இஷ்டம்”
ஆரம்பத்திலே அவளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் விஷ்வா.
“நாளைக்கு நாமக்கல் வந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று சொல்லியவன் அழைப்பைத் துண்டித்துவிட,
இங்கே நிலாவிற்குத் தான், இதை எப்படி வீட்டில் சொல்வது என்று பெரும் தவிப்பாக இருந்தது.
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல்,
நிலாவின் மனநிலையை புரிந்து கொண்ட விஷ்வா, அவனாகவே குணசீலனுக்கு அழைத்தவன்,
“ஹலோ அங்கிள்!!! நான் விஷ்வா பேசுறேன்!! எப்படி இருக்கீங்க???” என்று தொடங்கி பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின்,
“நிலா ரொம்பவே ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க.. இதே நிலைமையிலே மேரேஜ் பண்ணாலும் எங்களால சந்தோஷமா இருக்க முடியாது.. அதுனால என்னோட பிரெண்ட் ஒருத்தங்க இந்த மாதிரி இருக்கவங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவங்களோட மனப் போராட்டத்துல இருந்து அவங்களை வெளிய கொண்டு வர ரொம்பவே ஹெல்ப் பண்ணுவாங்க.. அதுனால நீங்க சம்மதிச்சா, நிலாவை நான் அவங்ககிட்ட கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்று விஷயத்தை மெதுவாகப் பகிர்ந்து அவரின் சம்மதம் வேண்டி நின்றான்.
‘ கவுன்சிலிங் ‘ எனும் வார்த்தையைக் கேட்டவுடனே மனிதருக்கு பயம் வந்துவிட்டது.
‘ நம்ம பொண்ணை பைத்தியம்னு நினைச்சுட்டாரோ’ என்று பயந்தவர்,
“நிலா வருத்தத்துல தான் இருக்கா தம்பி.. அது நீங்க நினைக்கிற மாதிரி மன நோய் எல்லாம் கிடையாது” என்று அவர் பேசத் துவங்கும் போதே,
இங்கே போனை தலையில் தட்டிக் கொண்டவன்,
“ஹய்யோ அங்கிள்!!! இது நோய் அப்படின்னு நானும் எங்க சொன்னேன்??” என்றவன், அடுத்த பத்து நிமிடம் கவுன்சிலிங் என்றால் என்ன?? எதற்காக அது வழங்கப்படுகிறது, இதனால் என்ன நன்மை என பொறுமையாக அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தவன்,
“உண்மையை சொல்லணும்னா, நான் கூட கவுன்சிலிங் எடுத்திருக்கேன்.. சின்ன வயசுல இருந்து ஜெய் கூடவே வளர்ந்தவன் நான்.. என்னால அவ்வளவு சீக்கிரம் அவனோட லாஸை ஓவர்கம் பண்ணி வர முடியலை.. ஆனா நான் அப்படியே தேங்கி நின்னுட முடியாதே!!! எனக்கான பெரிய பொறுப்புகள் இருந்தது.. என்னை நம்பி நிறைய மாணவர்களோட எதிர்காலம் இருந்தது.. சோ என் காலேஜை ஒழுங்கா ரன் பண்ண, என் மனசும் தெளிவா இருக்கணும், அப்போதான் என் உடம்பும் எனக்கு ஒத்துழைக்கும்.. அதுனால நானுமே அந்த சமயத்துல கவுன்சிலிங் எல்லாம் அட்டென்ட் பண்ணிருக்கேன்.. எனக்கு அது ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருந்தது.. அதுனால தைரியமா நிலாவை அனுப்பி வைங்க.. உங்க பொண்ணு சீக்கிரமே நீங்க எல்லாரும் ஆசைப்படுற மாதிரி சந்தோஷமா இருப்பாங்க” என்று பாதி உண்மையை மட்டும் கூறியவன், அவ்வளவு பொறுமையாக அவருக்கு விளக்க,
மனிதருக்கு கவுன்சிலிங் மேல் நம்பிக்கை வந்ததோ இல்லையோ, விஷ்வாவின் மேல் அதிகத்திற்கும் அதிகமாய் நம்பிக்கை உண்டானது.
‘ சரியான ஒருத்தன் கையில தான் என் பொண்ணோட வாழ்க்கையைக் கொடுக்கப்போறேன்!!!’ என நினைத்து நிம்மதி அடைந்தவர்,
“நான் திவாகர் கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா தம்பி??? என்னால அவ்வளவு தூரம் இப்போ இருக்க நிலைமையில வர முடியாது.. அதுனால திவாகர் கிட்ட கேட்டுப் பார்க்குறேன்.. நாளைக்கு அவனுக்கு தோதுபடுமான்னு” என்று அவர் தன் சம்மதத்தைத் தெரிவிக்க,
“எப்போதான் அங்கிள் நிலா கையை விடப் போறீங்க???” என்று கேள்வியாக நிறுத்தினான் நாயகன்.
“புரியலை தம்பி என்ன சொல்றீங்க???”
“கீழ விழுந்துடும்னு பயத்துல, குழந்தை கையை பிடிச்சிட்டு நடக்கிறது தப்பில்லை அங்கிள்.. ஆனா இத்தனை வயசுக்கு அப்புறமும் பிடிச்ச கையை விடமாட்டேன்னு பிடிவாதமா இருக்கது ரொம்பத் தப்பில்லையா???” என்று அவரின் புத்தியில் உரைப்பது போல் கேட்டவன்,
“அவங்களை தன்னிச்சையா செயல்பட விடுங்க அங்கிள்.. தனியா நடக்க பழகுறப்போ கண்டிப்பா அது கீழ விழும், அடி படும்.. ஆனா ஒரு நாள் யாரோட துணையும் இல்லாம அந்தக் குழந்தையா நடக்குறப்போ, அதுக்குக் கிடைக்குற சந்தோஷத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் அளவே இல்லை அங்கிள்.. என் மேல நம்பிக்கை இருந்தா, நிலாவை தனியா பஸ் ஏறி வர சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்.. இனி அவங்க என் பொறுப்பு!!!!” என்று அவன் உறுதியுடன் கூற, குணசீலனுக்கு அவனை மறுத்துப் பேசும் எண்ணம் வரவே இல்லை.
‘ இனி நிலாவை அவன் பார்த்துக்கொள்வான் ‘ எனும் நம்பிக்கையே அவருக்கு தனி பலத்தைக் கொடுக்க,
“சரிங்க தம்பி!!!” என அவனின் பேச்சை ஏற்றுக்கொண்டவர், அதை செயல்படுத்தியும் இருந்தார்.
“நிலாம்மா!!! விஷ்வா தம்பி பேசுனாங்க.. நாளைக்கு உன்னை நாமக்கல் வர சொன்னாங்க.. போயிட்டு வந்துடுறியா??”
மகளிடம் அவராகவே சென்று குணசீலன் பேச, நிலாவிற்கு பெரும் ஆச்சர்யம்.
“என்ன டா அப்படிப் பார்க்குற?? தம்பி எல்லாமே சொன்னாரு.. இதெல்லாம் நாங்களே பண்ணிருக்கணும்.. ப்ச்.. எங்களுக்கு தோணவே இல்லை.. தம்பி சொன்ன பின்னாடி தான் புரிஞ்சது.. ” என வெகுவாய் வருத்தம் கொண்ட குணா,
“நாளைக்கு நீயே போயிட்டு வந்துடுவியா?? இல்லை அண்ணனை வர சொல்லவா டா??”
விஷ்வா அத்தனை தூரம் எடுத்துச் சொல்லியும், மகள் இதுவரை தனியாக எங்கும் சென்றதில்லையே என தந்தைக்கே உரிய பயத்தில் அவர் மீண்டும் அப்படிக் கேட்க,
தனக்காக விஷ்வா இவ்வளவு மெனக்கெடுவதில் ஆச்சரியத்தில் இருந்த நிலாவோ, தந்தையின் கேள்வியில் தெளிந்து,
“இல்லைப்பா நானே பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்தவள்,
“ரொம்ப தேங்க்ஸ்!!!!” என விஷ்வாவின் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துவிட்டு அமர்ந்தவளுக்கு, விஷ்வாவின் மேல் இருந்த நன் மதிப்பு கூடியது.
நிலாவின் குறுஞ்செய்தியைக் கண்டவனின் இதயத்தில் பல வருடங்கள் கழித்து இதமாய் ஒரு பனிச்சாரல்!!!!
“அதான் நேத்தே சொன்னேன் தானம்மா?? *** ஹாஸ்பிடல்ல ரிசப்ஷனிஸ்டா வேலைக்கு சேர்ந்திருக்கேன்னு.. திரும்பியும் கிளம்புற நேரத்துல என்ன விசாரணை?? எனக்கு லேட் ஆச்சு.. தள்ளுங்க” என்று அவள் நகரப் பார்க்க,
“நான் நேத்தே உன்கிட்ட மாப்பிள்ளைக்கிட்ட பேச சொன்னேன்ல… வேலைக்கு போறதைப் பத்தி அவர்கிட்ட சொன்னியா??” என்று அவர் விசாரணை செய்தார்.
“ப்ச்!!! ஏன் சொல்லணும்???”
முதல்நாள் வேலைக்குக் கிளம்பும் நேரத்தில், இந்த வாக்குவாதம் தேவையா?? எனும் எரிச்சலில் கமலி இருக்க, அது புரியாத அவளின் தாயோ,
“என்னதான்டி மனசுல நினைச்சுட்டு இருக்க?? ஏதோ சின்ன சண்டை கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும்னு பார்த்தா, நீ வேலைக்கு போறேன்னு கிளம்பிட்ட.. அதுவும் அங்க இருக்கவங்க யார்கிட்டயும் சொல்லவும் சொல்லாம?? இதெல்லாம் நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுல தெரிஞ்சா என்ன பேசுவாங்க எங்களை?? குடும்பம்னா சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்.. எல்லாத்தையும் பொறுத்து, பொம்பளைங்க வளைஞ்சு கொடுத்து போனத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும்.. நீ இப்படி வாழாவெட்டியா வந்து உட்காரத்தான், எங்க கூட அம்புட்டு போராடி அந்த மனுஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டியா???”
மகளின் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ எனும் பயம் அவரை அப்படி பேச வைக்க,
நேரமாவதை உணர்ந்து எரிச்சலில் இருந்த கமலியோ,
“ப்ச்!! இதை பேச இதுதான் நேரமா?? ஏம்மா நீங்களும் படுத்துறீங்க?? எதுவா இருந்தாலும் ஈவ்னிங் வந்து பேசலாம்” என்று அவள் வெளியே வந்து செருப்பை அணியப் போக,
“நீ வேலைக்குப் போ!!! ஆனா சாயங்காலம் வேலை முடிச்சிட்டு நேரா உன் புருஷன் வீட்டுக்கு போயிடு.. ஒரே ஒரு பொம்பளை பிள்ளையைப் பெத்துட்டு, நீ வாழாவெட்டியா இங்க வந்து உட்கார்ந்திருக்கதை பார்க்க எங்களுக்குத் தெம்பில்லை.. அதுனால என்ன சண்டையா இருந்தாலும் அங்க இருந்தே உன் புருஷன் கூட போடு.. அடிச்சாலும் புடிச்சாலும் அது உங்களுக்குள்ள.. அதான் அந்த நிலா பொண்ணுக்கும் மாப்பிள்ளை கூட பார்த்து முடிவு பண்ணிட்டாங்களாம்ல.. இன்னும் என்ன வீம்பு உனக்கு?? ஒழுங்கா போய் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கப்பாரு..” என்று அவர் சொன்னதைக் கேட்டு, உள்ளே கமலிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
‘ என்னைய யாருமே புரிஞ்சுக்கவே மாட்டாங்களா????’ என்று ஓவென்று கத்தவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
ஆனாலும் தன்னைப் புரிந்து கொள்ள முயலாதவர்களுக்கு, தன் மன உணர்வுகளை விளக்குவது வீண் என்று நினைத்தவள், தன் அன்னைக்கு பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியே சென்றுவிட்டாள், நெஞ்சம் எங்கும் நிறைந்த பாரத்தோடு.
****
“வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா??
விளையாட ஜோடி தேவை!!!”
அந்தப் பிரபல தனியார் பேருந்தில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை ரசிக்கும் மனநிலையில் நிலன்யா இல்லவே இல்லை.
நேற்று தந்தையிடம் தைரியமாகத் தானே சென்று வருகிறேன் என்று சொல்லிய பெண்ணிடம் இன்று ஏனோ சற்று படபடப்பு.
நினைவு தெரிந்து அவள் முதன்முதலாக தனியாக மேற்கொள்ளும் ஒரு பயணம்.
பள்ளி, கல்லூரிக்கு கூட தந்தை அல்லது தமையன் என யாராவது ஒருவருடன் சென்றே பழக்கப்பட்டவளுக்கு, இன்று தனியாக பயணிப்பது சற்று பதற்றமாக இருந்தாலும், மனதின் ஓரத்தில் அடைபட்டிருந்த ஏதோ ஒன்று விடுபட்டதில் சிறிதாய் ஒரு ஆசுவாசம்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவளுக்கு வசதியாய் ஜன்னலோர இருக்கையே கிடைத்துவிட,
சீராக செல்லும் பேருந்தின் வேகத்தில், காலை நேரத் தென்றல் காற்று முகத்தில் வந்து மோதியதில் நிலாவின் பதற்றம் கூட கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, அவளையும் அறியாமல் அந்தப் பயணத்தை ரசிக்கத் துவங்கிவிட்டாள் பெண்ணவள்.
ஜன்னல் கம்பிகளில் தலையை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் முகத்தைத் தான் பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்வேஸ்வரன்.
ஆம், விஷ்வாவே தான்.
நிலாவிற்கு தன்னம்பிக்கையை வளர்க்க விரும்பியே அவளைத் தனித்து வர பணித்திருந்தாலும், தன்னை நம்பி வருபவளின் பாதுகாப்பிற்கு தான் தான் பொறுப்பு என்று நினைத்தவன், அதிகாலையிலே நாமக்கல்லில் இருந்து கிளம்பி கரூர் வந்தவன், நிலன்யா ஏறிய பேருந்திலே அவளுக்குத் தெரியாமல் பின்னால் ஏறியவன், நிலாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
நிலாவின் கண்களில் பயம் நீங்கியதை உணர்ந்தவனும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயலாமல் அமைதியாய் அவளைப் பார்த்தபடியே பயணத்தைத் தொடர்ந்தான்.
இயற்கையை ரசித்தபடி அவள்!!! தன் இணையை ரசித்தபடி அவன்!!
அந்த ஒரு மணி நேர பேருந்துப் பயணம், இருவரின் மனதிலும் சொல்லலான நிம்மதியைக் கொடுத்ததென்றால் மிகையல்ல!!!!