“அப்படித்தான் பேசுவேன்.. என்ன நினைப்புல ஆல்ரெடி கல்யாணம் ஆன பொண்ணை என் தம்பிக்கு பேசி முடிப்பீங்க?? கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா?? உங்களால அவனுக்கு பொண்ணு பார்க்க முடியலைனா ஒதுங்கிக்கோங்க.. நான் அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுக்குறேன்”

“துர்கா!! உன்கிட்ட சொல்லாம செஞ்சது தப்பு தான்.. அதுக்காக அம்மாகிட்ட இப்படியா பேசுவாங்க.. தப்பு டா”

மகளின் பேச்சில் அதிருப்தி கொண்ட ஜெகதீசன் அதை சொல்லவும் செய்ய,

“நீங்க பேசாதீங்கப்பா!!! அம்மா இப்படி லூசுத்தனமா ஒரு பேச்சை எடுக்கிறப்போவே, இதெல்லாம் ஒத்துவராதுன்னு சொல்றதுக்கு என்ன உங்களுக்கு?? அட்லீஸ்ட் நீங்களாச்சும் என்கிட்ட சொல்லியிருந்தா நான் பேசிருப்பேனே!!” என இன்னும் நடந்ததை துர்காவால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

‘ என் தம்பிக்கு என்ன குறைன்னு, ஏற்கனவே கல்யாணம் ஆகி தாலி அறுத்துட்டு உட்கார்ந்திருக்கவளை கட்டி வைக்கணும்னு இந்த அம்மா இப்படி பண்ணுறாங்க ‘ என்பது அவளின் எண்ணமாக இருந்தது.

 மகளின் பேச்சை துளியும் ரசிக்காத மாலா,

“துர்கா!!  வார்த்தையை அளந்து பேசு.. கட்டிக்கப்போறவங்களுக்கே பிரச்சனை இல்லாதப்போ உனக்கு என்ன வந்தது??”

“நீங்க அவனை மிரட்டி உருட்டி ஏதாவது டிராமா பண்ணி சம்மதிக்க வச்சிருப்பீங்க.. நான் பேசிக்கிறேன் என் தம்பிக்கிட்ட.. அவனுக்கு கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சீங்களா???” என துர்காவும் கொஞ்சமும் இறங்கி வரவே இல்லை.

“அந்தப்பொண்ணு உனக்கு என்ன பண்ணுச்சு?? உன் பேச்சு ஒன்னும் சரியில்லை துர்கா.. அவ்ளோதான் சொல்லுவேன்” என மாலா மீண்டும் பொறுமையை இழுத்துப்பிடித்து எச்சரிக்க,

“உங்களுக்கு இன்னும் புரியலையா?? இல்லை புரியாத மாதிரி நடிக்குறீங்களா ம்மா??? உங்களுக்கு அந்தப்பொண்ணுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுனா நானே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்.. தயவு செஞ்சு என் தம்பியை விட்டுடுங்க”

“இந்தப்பேச்சை இத்தோட விட்டுடு துர்கா.. எல்லாம் பேசி முடிச்சாச்சு.. அந்தப்பொண்ணு தான் இந்த வீட்டு மருமக!!!”

மாலாவும் தன் பிடியில் உறுதியாகத் தான் நின்றார்.

“அம்மா!!! நானும் பேசக்கூடாதுன்னு பார்த்தா விட மாட்டேங்கிறீங்க??? அந்தப்பொண்ணு ராசியால தான் நம்ம ஜெய் இன்னைக்கு நம்ம கூட இல்லை.. இப்போ மறுபடியும் இப்படி ஒரு முட்டாள்தனமான வேலையைப் பண்ணி, என் இன்னொரு தம்பியையும் என்னால தூக்கிக் கொடுக்க முடியாது.. அதுனால இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்கவே முடியாது”  என்று துர்கா ஆவேசமாக சொல்ல,

அவளின் பேச்சைக் கேட்டு மாலாவும், ஜெகதீசனும் அதிர்ந்து போய் நின்றனர்.

‘ தங்கள் வளர்ப்பு சரியில்லையோ ‘ என்று அவர்கள் எண்ணும் வகையில் துர்காவின் மனதில் இத்தனை அழுக்கான எண்ணம் இருக்கும் என அவர்கள் கனவிலும் நினைத்ததில்லை.

துர்காவை கண்டிக்கக் கூட மறந்து இருவரும் சமைந்து போய் ஒரு நொடி நின்றிருக்க,

வெளியே ஜாக்கிங் சென்று முடித்து வந்த விஷ்வாவின் காதில் துர்கா பேசிய அனைத்தும் வந்து விழுக, அவன் உடல் தன்னாலே இறுகியது.

கை முஷ்டிகளை மடக்கி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவன், அழுத்தமான காலடிகளுடன் வீட்டிற்குள் பிரவேசித்தான்.

தம்பியைக் கண்டதும் வேகமாக அவனை நெருங்கிய துர்கா,

“விஷ்வா!!! வந்துட்டியா?? வா வா!!! இவங்கதான் உன்னைக் கம்பெல் பண்ணா நீயும் ஏன்டா தலையை ஆட்டுன??? அக்கான்னு ஒருத்தி இருக்கான்னு உனக்கு ஞாபகமே வரலையா?? நான் பேசமாட்டேனா உனக்காக???” என ஆதங்கம் கொண்டவள்,

“சரி.. ஒன்னும் கவலைப்படாத.. அதான் அக்கா வந்துட்டேன்ல.. இனி நான் பார்த்துக்குறேன்.. உனக்கு பிடிக்காத எதுவும் இனி நடக்கவே நடக்காது.. அந்தப்பொண்ணு வீட்டுல நானே போய் பேசிக்கிறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை”

அவள் அத்தனை பேசியும் விஷ்வா அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமாய் தன் தமக்கையின் முகத்தைத்தான் பார்த்திருந்தான்.

“என்ன விஷ்வா?? எதுவும் பேச மாட்டேங்குற??? என்னாச்சு??” என மீண்டும் அவளே கேட்க,

தாடையைத் தடவி யோசித்தவன்,

“ஏன் க்கா!!! உனக்கு கல்யாணம் ஆன புதுசுல, உங்க ஜவுளிக்கடையில ஃபயர் ஆக்சிடென்ட் ஆச்சுல??? ப்ச்!!! ரொம்ப சேதாரம்ல.. லாஸ் ஆனதை ஈடுகட்டவே மூணு வருஷத்துக்கு மேல ஆச்சுன்னு கூட மாமா புலம்பிட்டு இருந்தாரே இப்போக்கூட!!!!” என்று அவன் பொடி வைத்துப் பேச,

சட்டென அவன் கூற வருவது துர்காவிற்குப் புரியவில்லை என்றாலும், அவர்களின் பெற்றோருக்கு நன்றாகவே புரிந்தது.

“அது நடந்து ஆறு வருஷம் ஆச்சு!!! இப்போ அது ரொம்ப முக்கியமா டா?? நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன சம்பந்தமில்லாம பேசுற??” துர்கா சலித்துக்கொள்ள,

“பேச வேண்டிய நேரம் வந்திருக்கும் போது பேசி தான ஆகணும் க்கா!!!” என்று  சூசகமாக சொன்னவன்,

“உன் கல்யாணத்தன்னைக்கு உன் மாமியார் வேற கீழ விழுந்து, அவங்களுக்கு சுளுக்கு பிடிச்சுகிச்சு தான??” என்று அடுத்து ஒவ்வொன்றாய் நினைவுபடுத்தி அவன் கேட்க,

துர்காவிற்கு அப்போது தான் அவனின் எண்ணம் புரிந்தது.

புரிந்ததும் சட்டென கோபம் மூள,

“என்ன விஷ்வா?? பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. உன் வாழ்க்கைக்காக யோசிச்சு நான் பேசினா?? என்னையே தப்பா பேசுவியா நீ??” என்று எகிறிக்கொண்டு வர,

அவன் சற்றும் அசைந்து கொடுத்தானில்லை.

தன் அழுத்தமான பார்வையை சிறிதும் மாற்றிக்கொள்ளாதவன்,

“இதுதான் நடக்கணும்னு விதி இருந்தா, யார் தடுத்தாலும் எந்த ரூபத்துலயாவது அது நடந்து தான் தீரும்.. இவ்வளவு படிச்சிருக்க, இன்னும் ராசி அது இதுன்னு ஒரு பொண்ணை இப்படி பேச உனக்கு எப்படிக்கா மனசு வந்தது??? நீயும் ஒரு பொண்ணு தான?? உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பிஹேவியரை நான் எதிர்பார்க்கவே இல்லை.. ” முகத்தைச் சுழித்தபடி விஷ்வா கூற, துர்காவின் கோபம் உச்சிக்குச் சென்றது.

“எவளோ ஒருத்திக்காக சொந்த அக்காவையே இப்படி பேசுவியா நீ?? என்ன டா அவ அழகுல நீயும் மயங்கித் தொலைச்சிட்டியா?? அந்த ஜெய்யும் இப்படித்தான் அவளைப் பார்த்துட்டு வந்து தலைகால் புரியாம சுத்திட்டு இருந்தான்.. கடைசில இப்படி அல்ப ஆயுசுல போய் சேர்ந்துட்டான்.. நீயும் இப்படி அவ அழகுல மயங்கி புதைகுழியில விழுந்துடாத…”

“சரியான வித்தைக்காரியா இருப்பா போல.. என் தம்பியவே இப்படி மயக்கி வச்சிருக்கா!!! நிறையா சொத்து கிடைக்குதுன்னு வளைச்சுப் போட பார்த்திரு…” துர்கா அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னே அங்கே அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூஜாடி உடைந்து  அவள் காலடியில் விழுந்து சிதறியது.

அந்த சப்தத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மிரண்டு அழத் துவங்க, மாலா தான் பேத்தியைத் தூக்கி சமாதானம் செய்தார்.

ஜெகதீசனுக்கும் மகளின் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும், மகனின் இந்த அதீதக் கோபம் அவரை யோசிக்க வைத்தது.

புஜங்கள் எல்லாம் விடைத்துக்கொண்டு, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவனின் செவ்வேறிய விழிகளே அவனின் கோபத்தின் அளவை பரைசாற்ற, துர்கா பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

“வார்த்தையை பார்த்து விடணும் க்கா!!!! நீயும் ஒரு பெண்ணைப் பெத்து வச்சிருக்க, அதை மனசுல வச்சிட்டு பேசு!!!!” என எச்சரிக்கை போல் சொன்னவன், தன்னறைக்குப் போக மாடியேறுவதற்கு முன் துர்காவை நின்று ஒரு நொடி பார்த்து,

“உன் மனசுல இப்படி ஒரு கேவலமான எண்ணம் இருக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை… ” என்றவன்,

‘  ஏன் கா இப்படி??’ என்பதைப் போல் பார்த்துவிட்டுச் செல்ல,

விஷ்வாவின் பார்வை துர்காவை மிகவும் கீழிறங்கச் செய்தது.

நேற்று இரவு தான் கனகா மூலம் விஷயத்தை அறிந்த துர்கா, அதை அவளின் கணவரிடம் பகிர்ந்து கொண்ட போது அதை கேட்டுவிட்ட, அவளின் மாமியார், தன் சொந்தத்தில் பெண்ணெடுக்க மறுத்துவிட்டு,  மறுமணம் செய்யும் நிலாவை மருமகள் ஆக்கிக் கொள்ளப் பார்க்கிறார்களே எனும் பொறாமையில், துர்காவிடம் ஒன்றுக்கு இரண்டாகக் கூறி அவள் மனதை நன்றாக கலைத்து விட்டிருந்தார்.

தன்னிடம் கலந்தாலோசிக்காமல் பெற்றவர்களே தம்பியின் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுத்ததில், தன் வீட்டில் தன்னுடைய முக்கியத்துவம் குறைந்து போனதோ எனும் குழப்பத்தில் இருந்த அவளின் மனம், மாமியாரின்  போதனையில், தவறான பாதையில் சிந்திக்கத் துவங்கிவிட்டதன் பயனாய், இன்று தன் குடும்பத்தின் முன்னே அந்நியப்பட்டு நிற்கிறாள்.

தான் பேசியது அதிகப்படி என துர்கா உணர்ந்திருந்தாலும், விஷ்வாவின் கோபத்தை அவ்வளவு எளிதாகக் கடக்க முடியவில்லை அவளால்.

“என்னம்மா?? அவன் இவ்வளவு பேசிட்டு போறான்.. கொஞ்சம் விட்டா அந்த ஜாடி என் கால்ல வந்து உடைஞ்சிருக்கும்.. நீங்க ரெண்டு பேரும் இப்படி கண்டுக்காம இருக்கீங்க.. உடனே அவனைக் கூப்பிட்டு என்னன்னு கேளுங்க.. அக்கான்னு ஒரு மரியாதை வேணாமா??” என்று துர்கா மீண்டும் துவங்க,

“அவன் சரியாத்தான் பேசிருக்கான்.. சொல்லப்போனா நீ பேசுனதுக்கு அவன் கோவம் ரொம்ப கம்மி தான்.. ஏண்டி துர்கா நீ இப்படி மாறிப்போன?? நான் உன்னை அப்படியா வளர்த்தேன்??” என்று மாலா ஆதங்கப்பட,

ஜெகதீசனும்,

“என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணைப்பத்தி இப்படிப் பேசுனது ரொம்பவே தப்பு டா!!!” என்றார் மெதுவாக.

தவறு தன் மீது தான் என்று துர்காவிற்கு நன்றாகத் தெரிந்த போதிலும்,

‘ அதென்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணி, என்னையவே பேசுவாங்களா?? என்னை விட அவ உசத்தியா போயிட்டாளோ??’ எனும் உரிமை எண்ணம் தலைதூக்க,

“கட்டிக்கொடுத்ததும் என் கடமை உங்களுக்கு முடிஞ்சிருச்சு.. நான் யாரோ ஆயிட்டேன் உங்களுக்கு.. அதான் அவளுக்காக என்னையவே இப்படி பேசுறீங்க.. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்பறம் அவ வந்த பின்னாடி, பிறந்த வீடுன்னு ஒண்ணு இருக்கதையே நான் மறந்துடனும் போல.. எல்லாம் என் விதி!!!” என்று புலம்பியவள், மாலாவின் கைகளில் இருந்த தன்னுடைய மகளை வெடுக்கென்று கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பியேவிட்டாள்.

வாசல் வரை சென்று அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்ற ஜெகதீசன் சோர்வுடன் உள்ளே வர, மாலாவும் கவலையாகத் தான் கணவனைப் பார்த்திருந்தார்.

“என்ன மாலா இது?? துர்கா இப்படி பேசுவான்னு நான் நினைச்சே பார்க்கலை”

“அவ மாமியார் வீட்டு சொந்தத்துல ஒரு பொண்ணை சொன்னா.. நான் வேணாம்னு சொல்லிட்டேன்.. எனக்குத் தெரிஞ்சு அதை வச்சு அவ மாமியார் ஏதோ பேசிருக்காங்க.. அதை இவ இப்படி வந்து பேசிட்டு போறா.. ஆனாலும் எனக்குமே ஷாக்கா தான் இருக்கு.. நம்ம பொண்ணு மனசுல இவ்வளவு அழுக்கான எண்ணங்களான்னு??” என மாலாவும் வருத்தம் கொள்ள,

“இந்தக் கல்யாணம் நடக்கிறது அவ்வளவு ஈசி இல்லைன்னு இப்போவாவது உனக்குப் புரியுதா?? துர்கா மட்டும் இல்லை அவளை மாதிரி நிறைய சொந்தங்களை சமாளிக்கணும்.. அதுவும் இந்த மாதிரி பேச்செல்லாம் அந்தப்பொண்ணு நிலா காதுல விழுந்தா என்னாகும்???” நிலாவை யோசித்து ஜெகதீசன் வருந்த,

“எனக்கும் அந்தக்கவலை இருந்ததுங்க.. ஆனா இப்போ இல்லை!!!! விஷ்வா கண்டிப்பா அவளை யார்கிட்டயும் விட்டுக்கொடுத்துட மாட்டான்.. என் பையன் எதுனாலும் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்கு எனக்கு!!!” மகனை எண்ணி பெருமிதத்துடன் மாலா கூற,

சற்றுமுன் விஷ்வாவின் முகத்தில் தெரிந்த கோபத்தின் அளவைக் கண்கூடாகக் கண்ட ஜெகதீசனும், மனைவியின் பேச்சை மௌனமாய் தலையசைத்து ஏற்றுக்கொண்டார்.

இவர்களின் பேச்சை மாடியில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த விஷ்வாவிற்கும் நிலாவைப் பற்றிய சிந்தனை தான்.

நிச்சயம் இதைப்போல பேச்சுக்களை ஒரு நாள் அவள் சந்திக்க நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அவளுக்கு மனதிடத்தை உண்டுசெய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டவன், அடுத்துவந்த நாட்களில் அதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டான்.