“என்னம்மா நிலா பேசிட்டியா??? உனக்கு எல்லாம் ஓகே தான??” என்று நிலாவின் கைகளைப் பிடித்து தன்னருகில் அமர்த்திக்கொண்ட மாலா பரிவுடன் கேட்க,
அவருக்கு சங்கடமாய் தலையசைத்தாள் நிலா.
“என்கிட்ட இவளோ தயக்கம் வேண்டாம் நிலா.. உங்க அம்மா மாதிரி தான் நானும்.. இங்க எப்படி ஃப்ரீயா இருக்கியா அதே மாதிரி நீ அங்கயும் இருக்கலாம்.”
அதற்கும் ‘ம்ம்’ எனும் தலையசைப்பு மட்டுமே.
அவளின் மனநிலையை உணர்ந்த மாலாவும், அவளிடம் எதையும் போட்டு திணிக்க முயலவில்லை. அவளுக்கான அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்தவர், அவளின் போக்கிலே விட்டுவிட்டார்.
“நிலா!!! இந்தக் கல்யாணம் உன் இஷ்டம் தான்.. எப்போ எப்படி பண்ணலாம்னு நீ சொல்றியா, அதான் முடிவு.. அதுனால உனக்கு எப்போ தோதுபடும்னு சொன்னா, நான் விஷ்வா அப்பாகிட்ட பேசி முறையா அவங்களையும் இங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லுவேன்.. அவங்களும் இன்னும் இங்க வந்ததில்லை தானே??”
என அனைத்திற்கும் நிலாவையே மாலா முன்னிறுத்த, பெண்ணைப் பெற்றவர்களுக்கு பரம திருப்தி.
‘ தனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் ‘ என்று சொன்னால் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்று அஞ்சியவளின் பார்வை தன்னாலே விஷ்வாவை நோக்கி நிமிர,
உதவிக்குத் தன்னை அழைக்கிறாள் என அவளின் பார்வை கொண்டே பொருள் அறிந்தவனின் மனதிற்குள் சிறிதாய் ஒரு உற்சாகம்!!!
“மேரேஜ் கொஞ்ச நாள் ஆகட்டும் மா.. சடன்னா எல்லாத்தையும் அவங்க பிராசஸ் பண்ணி ஏத்துக்க முடியாது இல்லையா??? ஒரு த்ரீ மந்த்ஸ் போகட்டும்” என்று அவளுக்காக விஷ்வா பேச, நிலவின் முகத்தில் பெரும் நிம்மதி.
ஆனால் இது நிலாவின் வேலையாகத் தான் இருக்கும் என்றுணர்ந்த சுமதி, எங்கே காலம் தாழ்த்தினால் மீண்டும் நிலாவின் மனது மாறிவிடுமோ என்று பயந்துகொண்டு,
“இல்லைங்கண்ணி!!!! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வச்சுக்கலாம்.. ” என்று மறுக்க,
அன்னையின் பேச்சில் மீண்டும் நிலா தன் கூட்டுக்குள் சுருண்டு கொள்ள, அவளின் வதனம் அணிச்ச மலராக வாடிப்போனது.
விஷ்வாவிற்கு அதைக்கண்டு அவளின் பெற்றோர் மீது கட்டுக்கடங்காத ஒரு கோபம் ஊற்றெடுக்க, இருக்கும் சூழ்நிலை கருதி அதைக் கட்டுப்படுத்தியவன்,
தன் மகளுக்காக யோசிக்கும் விஷ்வாவை எண்ணி குணசீலனின் மனம் நிறைந்து போக, ‘ என் பொண்ணு சந்தோஷமா இருப்பா ‘ என அவருள் ஒரு நம்பிக்கை பிறந்தது.
தனக்காகப் பேசிய விஷ்வாவை நன்றியுடன் நிலா நோக்க,
தான் பார்த்துக் கொள்வதாகக் கண்களை மூடித் திறந்து அவளுக்கு ஆறுதல் அளித்தான் விஷ்வா.
“அப்போ சரிங்க அண்ணா!! நான் அடுத்த வாரம் அவரைக் கூட்டிட்டு வரேன்.. நம்ம மேற்கொண்டு பேசலாம்.. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.. வரேன் அண்ணி!!! வரோம் பா திவாகர்!!” என்று அனைவரிடமும் விடைபெற்ற மாலா,
இறுதியாக நிலாவின் கரங்களில் அழுத்தம் கொடுத்தவர்,
“எனக்குத் தெரியும், உனக்கு இப்போ இது எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கும்னு.. ஆனா என்னை நம்பு!!!! எல்லாமே உன் நல்லதுக்குத் தான்.. கண்டிப்பா நீ நல்லா இருப்ப!!!” என்று அவளின் தலையில் கைவைத்து வாழ்த்தியவர்,
“என்கிட்ட எதுனாலும் தயக்கம் இல்லாம நீ பேசலாம்.. இது தான் என் நம்பர்..” என்று தன் கைபேசி இலக்கத்தைப் பகிர்ந்து கொண்டு,
“வரேன் டா நிலா!!!” என அவளின் கன்னம் தொட்டு விடைபெற்றார்.
விஷ்வாவும் மற்றவர்களிடம் பொதுவாய் சொல்லிக்கொண்டு, நிலாவிடம் தலையசைக்க, அவளின் தலையும் தன்னைப்போல் அசைந்து கொடுத்து அவனுக்கு விடைகொடுத்தது!!!!!
அவர்கள் வருவதற்கு முன்பு இருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் மனநிலைக்கும் உள்ள வித்தியாசத்தை நிலாவால் நன்கு உணர முடிய, இந்த வாழ்க்கையைக் குறித்து அவள் கொண்டிருந்த பயம், கொஞ்சமே கொஞ்சம் அகன்றது போல் மாயை அவளிடம்!!!
நிலாவின் குடும்பத்தினரும், “ரொம்ப நல்ல மனுஷங்கல்ல, எனக்கு இப்போ தான் திருப்தியா இருக்கு!!!” என்று நினைத்து மகிழ்ந்து கொண்டனர்.
இங்கே மாலாவும், நிலாவுடன் என்ன பேசினாய் என்று மகனிடம் கேட்டுக்கொள்ளவில்லை, அவனும் அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை.
ஆனால் அனைத்தையும் இனி மகன் பார்த்துக்கொள்வான் என ஒரு அசாத்திய நம்பிக்கை அந்தத்தாயிடம்.
மாலாவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு விஷ்வா கல்லூரி கிளம்பிவிட்டான்.
இரவு ஜெகதீசனிடமும் திருமண விஷயம் பகிரப்பட, புருவம் உயர்த்தி வியந்தவர்,
“இவளோ சீக்கிரம் உன் மகன் ஓகே சொன்னதையே என்னால நம்ப முடியலை!!! இதுல அந்தப்பொண்ணும் சரின்னு சொல்லிடுச்சா??? அதிசயம் தான்” என்று கேலி செய்த கணவரை முறைத்த மாலா,
“ரெண்டு நாளா, என்ன சொல்லுவாங்களோ, இது நடக்குமா நடக்காதான்னு நான் எவ்ளோ டென்ஷன்ல இருந்தா, உங்களுக்கு கிண்டலா இருக்கா??”
“ஹாஹா!!! கோவப்படுறப்போ கூட அழகா கோவப்பட உன்னால மட்டும் தான் மாலா முடியும்!!!”
“உடனே, இப்படி எதையாவது சொல்லி என் வாயை அடைச்சிருங்க… ” என செல்லமாய் நொடித்துக்கொண்ட மாலாவும்,
“உங்களுக்கு எப்போ தோதுபடும்னு சொல்லுங்க!!! நிலாவோட வீட்டுக்கு போய் முறையா பேசிட்டு வந்துடலாம்” என்று விசாரிக்க,
“வெள்ளிக்கிழமை போலாம் மா!! ஆமா துர்காகிட்ட இன்னும் சொல்லவே இல்லையே.. அவகிட்ட மாப்பிள்ளைக்கிட்ட எல்லாம் முறையா சொல்லணுமே மாலா.. எப்போ சொல்லப்போற?? நீ அவகிட்ட சொல்லாம கல்யாணம் வரைக்கும் பேசிட்டு வந்தது தெரிஞ்சாலே, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போறா.. அதெல்லாம் நீ தான் சமாளிக்கணும் சொல்லிட்டேன்”
மகளைப் பற்றி அறிந்தவராக, முன்பே ஜெகதீசன் ஜகா வாங்கிவிட,
“நாளைக்கு தான் சொல்லணும்!! நிச்சயம் சண்டை போடுவா.. பார்த்துக்கலாம்” என்ற மாலாவும் அன்று நிம்மதியாக உறங்கிவிட, மறுநாள் அவரின் நிம்மதியைப் பறிக்கவென்றே அங்கே கோபத்துடன் வந்துவிட்டாள் துர்கா.
அவள் வந்த நேரம் ஜெகதீசனும் வீட்டில் தான் இருக்க,
“அடடே!!! வாடா!!! வாடா!! வரேன்னு சொல்லவே இல்லை.. எல்லாரும் அங்க நல்லா இருக்காங்களா???” என முகம் முழுக்க புன்னகையுடன் மகளை வரவேற்று பேத்தியைத் தூக்கப் போனார் அந்த அன்புத்தந்தை.
பதிலுக்கு அவருக்கு ஒரு வெட்டும் பார்வையை பரிசளித்த துர்கா,
“ஏன் இந்த வீட்டுக்கு வரதுக்கு கூட உங்க எல்லார்கிட்டயும் உத்தரவு வாங்கிட்டு தான் வரணுமோ???” என்று இடக்காக கேட்டுவிட்டு, குழந்தையைத் தராமலே உள்ளே தூக்கி சென்றுவிட்ட துர்காவை பெருமூச்சுடன் பார்த்திருந்த ஜெகதீசனுக்குப் புரிந்துவிட்டது, இன்று ஒரு சம்பவம் அவர்களுக்கு காத்திருக்கிறதென்று.
மகளின் குரல் கேட்டு வெளியே வந்த மாலாவும்,
“என்ன டி?? காலங்காத்தால சொல்லாம கொள்ளாம வந்திருக்க??? ஏதும் பிரச்சனையா??”
அவளின் முகம் கண்டு தாயாய் அவர் பதற,
“ஏன் நான் வரேன், நான் வரேன்னு தம்பட்டம் அடிச்சிட்டே வந்தா தான் உள்ள விடுவீங்களா???” என அவரிடமும் எரிந்து விழுந்தவள், மகளுக்கு தரையில் பிளே மேட்டை விரித்துவிட்டு, அதில் அவளுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் போட்டு, மகளுக்கு விளையாட ஏற்பாடு செய்தவள், இப்போது நேராக தந்தையிடம் சென்றாள்.
‘ என்ன புயல் நம்ம பக்கம் திரும்புது’ என்று அவர் ஜெர்க்காக,
“என்னப்பா நினைச்சிட்டு இருக்கீங்க??? கல்யாணம் பண்ணிக்கொடுத்தா அப்படியே என்னைத் தலை முழுகிருவீங்களா?? என் வீட்டுல நடக்குறதைக் கூட பெரியம்மா மூலமா தான் நான் தெரிஞ்சுக்கணுமா???” என்று அவள் கோபத்துடன் கேட்க,
ஜெகதீசன் தம்பதிக்கு மகளின் கோபத்திற்கான காரணம் இப்போது தான் விளங்கியது.
‘ இந்தக் கனகா அக்காவை யாரு அவசரப்பட்டு இவக்கிட்ட சொல்லச் சொன்னா??’ என்று மனதில் தன் தமக்கையை திட்டிக்கொண்டவர்,
“துர்கா!!! உன்கிட்ட சொல்லாம என்ன??? எதுவுமே முடிவாக முன்னாடி எதுக்கு சொல்லி உன்னையும் டென்ஷன் பண்ணன்னு தான் சொல்லலை டா” என்று ஜெகதீசன் பொறுமையாகச் சொல்ல,
அந்தப் பொறுமை அவரின் மகளிடத்தில் துளியும் இல்லை போலும்.
“சொல்லிருக்கணும்!! சொல்லியிருந்தா இந்தத் தேவையில்லாத எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருப்பேன்” என்று அவள் ஆவேசப்பட,
மாலாவின் புருவங்கள் இடுங்கியது!!
“என்ன சொல்ற நீ???” என்று அவர் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டி கேட்க,
“இன்னும் என்ன சொல்லணும்?? உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ம்மா?? விஷ்வா ரேஞ்ச் என்ன??? அவனுக்குப் போய் போயும் போயும் அந்தப் பொண்ணை பேசி முடிச்சிட்டு வந்திருக்கீங்க??” என்று தன் திருப்தியின்மையை துர்கா வெளிப்படுத்த,
“அதென்ன போயும் போயும்?? வார்த்தையை பார்த்துவிடு துர்கா.. உன் பேச்சு சரியில்லை..” என்று மகளைக் கண்டிக்கவே செய்தார் மாலா.