அதை எதையும் காதில் வாங்காதவள், அந்த ஒற்றையடிப் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அடர்ந்த மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பாதையை ரசித்த வண்ணம் நடந்தாள். அவளின் பின்னால் பரமேஷ், அவள் எங்கு செல்கிறாள் என்று புரியாமல், ‘சரியான பைத்தியம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றான்.

“இந்த இடம் பார்க்க அழகா இருக்குல்ல?” என்று ருத்ரா கேட்டாள்.

“அழகாத்தான் இருக்கு. ஆனா, அழகு இருக்கும் இடத்துல ஆபத்தும் அதிகம்” என்று எச்சரித்தான் அவன்.

“எப்பவுமே நெகட்டிவ்வாத்தான் யோசிப்பீங்க! பாசிட்டிவ்வா யோசிக்கிற பழக்கமே உங்களுக்கு இல்லையா?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

“பயப்பட வேண்டியதுக்குப் பயப்படுறதுல ஒண்ணும் தப்பு இல்லை. ஏற்கனவே இந்தக் காட்டைப் பத்தி உங்க அண்ணனே சொன்னாரே… ‘எச்சரிக்கையா இருங்க, உங்க உயிருக்கே ஆபத்து வரும்’ன்னு. ஜாக்கிரதையா இருக்கிறதுல தப்பு இல்லையே!”

“தப்பு இல்லை, தப்பு இல்லை…” என்று நக்கல் தொனியில் கூறினாள்.

பேசிக்கொண்டே இருவரும் நேற்று இரவு பார்த்த அதே கோவிலுக்கு வந்திருந்தனர். பரமேஷ் அதனை வியப்புடன் பார்க்க, ருத்ராவோ எந்தவித வியப்பையும் காட்டாமல் கோவிலின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்.

என்னவொரு அழகிய சிறிய கோவில்! அதன் தோற்றமே மிகவும் பழமை வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில், கற்கள் உடைந்து, பராமரிக்கப்படாமல் கிடந்தன. இரவில் பயங்கரமாய்த் தோன்றிய கோவில், பகலில் அழகாய்க் காட்சியளித்தது.

“இந்தக் கோவிலை எப்படிங்க சரியாக வழிகண்டுபிடிச்சு வந்தேங்க?”

“ஊஞ்சல் ஆடிட்டு இருக்கும் போது இந்தக் கோவில் மரங்களுக்கு நடுவுல லைட்டா தெரிஞ்சது. நேத்து பார்த்த இடம் மாதிரி இருக்கேன்னு யோசிச்சுப் பார்க்க வந்தேன். கிட்ட வந்து பார்க்கத்தான் எனக்கே அந்த இடம்தான் கன்பார்மா தெரிஞ்சுச்சுங்க. அதுதான் உங்ககிட்ட எதுவும் சொல்லாம கூட்டிட்டு வந்தேன்”

“நேத்து பார்த்த கோவில் மாதிரி இருக்கு. நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டிருந்தா வந்திருக்கப் போறேன். அதுக்கு ஏதோ ரகசிய இடத்துக்குப் போற மாதிரி கூட்டிட்டு வரணுமாங்க?” என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.

“சரி சரி, விடுங்க ங்க… முதல்ல கோவில் உள்ள போய்ப் பார்ப்போம், வாங்க!” என்றவள், சிறிய கோவிலின் படிகளில் ஏறினாள்.

பின், திரும்பி நின்று பரமேஷைப் பார்த்து, “இன்னும் என்ன அங்கேயே யோசிச்சுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க!” என்று அழைத்தாள்.

கோவிலின் உள்ளே சென்று பார்ப்பதற்கு பரமேஷிற்கு பெரிதாக விருப்பமில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் அவளுக்காகச் சென்றான்.

உள்ளே சென்றதும், சூரிய வெளிச்சத்தில் கோவில் பளிச்சென்று தெரிந்தது. சுற்றிலும் ஆராயத் தொடங்கினான். சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய கோவில் இல்லையென்றாலும், தூண்களில் செதுக்கப்பட்டிருந்த அழகிய சிற்பங்கள் மனதிற்கு இன்பமாய்க் காட்சியளித்தன.

அதிலும் ஒரு சிலையை உற்றுநோக்கியபடி நின்றிருந்தாள் ருத்ரா. அப்படி எதைப் பார்க்கிறாள் என்று பரமேஷும் அருகில் சென்று பார்த்தான்.

சிங்கத்தின் மேல் அமர்ந்து, சங்கிலியால் குதிரையைப்போல சிங்கத்தை அடக்கிக்கொண்டிருந்த வீரன் ஒருவனின் உருவம் அங்கே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நிஜ சிங்கமே முன்னால் நின்றுகொண்டிருப்பது போன்ற பிரமிப்பை அந்தச் சிற்பம் உருவாக்கியது. அந்தச் சிலை ஒரு நிமிடம் பரமேஷைப் புல்லரிக்க வைத்தது.

ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு விதமாக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அக்காலத்துச் சிற்பக் கலையைக் கண்டு பெரிதும் வியந்தான்.

அவனை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்தவள், அந்த வீரனின் ஒரு பக்கக் காதிற்குள் செருகினாள். மறுபக்கம் வழியாக அந்தக் குச்சி வெளிவந்ததைப் பார்த்தவனால், அந்தச் சிற்பியின் திறமையைப் புகழாமல் இருக்க முடியவில்லை.

“வாவ்!” என்று வாயைப் பிளந்து கூறினான்.

ருத்ராவும் சிற்பத்தின் அழகில் மெய்மறந்து நின்றாள்.

“இப்படிப்பட்ட சிலையெல்லாம் அந்தக் காலத்துலேயே எப்படி செஞ்சிருப்பாங்க? அதுவும் எந்த டெக்னாலஜியும் இல்லாத காலக்கட்டத்துல…” என்றவள், தன் தாடையில் கைவைத்து யோசித்தாள்.

“ரொம்ப யோசிக்காதீங்க… அதெல்லாம் நம்ம அறிவுக்கு அப்பாற்பட்டது. எவ்வளவு யோசித்தாலும் பதில் கிடைக்காது. வேணும்னா டைம் டிராவல் பண்ணிப் பார்த்துட்டு வாங்க!” என்று கூறிவிட்டு புன்னகைத்தான்.

“டைம் டிராவல் தானே… பண்ணிடலாம்!” என்ற ருத்ரா, கன்னத்தில் குழிவிழப் புன்னகைத்தாள்.

அதன் பின், ஒவ்வொரு சிலையாகச் சுற்றிப் பார்த்தவள், கடைசியாகச் சிவலிங்கத்திடம் வந்து கைகூப்பி வணங்கினாள்.

அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் இந்தக் கோவில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவளால், இப்படி பாழடைந்து கிடப்பதைக் காண முடியவில்லை.

பரமேஷைப் பார்த்தவள், “இந்தக் கோவிலைப் புதுப்பிக்க ஏதாவது வழி இருக்கா? இப்படி அழகான கோவிலை நாம அழிய விடக்கூடாது” என்றவளின் முகத்தில் கவலை நிறைந்திருந்தது.

அதனைக் கேட்ட பரமேஷ் சிறிது யோசித்தான். தன் அலைபேசியை எடுத்து, கோவிலைச் சுற்றி வீடியோவாக எடுக்க ஆரம்பித்தான்.

“வணக்கம் நண்பர்களே… அந்தக் காலத்துல எவ்வளவு கலைநுட்பத்தோட இந்தக் கோவிலைக் கட்டியிருக்காங்கன்னு பாருங்க. ஆனா, இப்ப இந்தக் கோவில் பாழடைஞ்சு கிடக்கு. தமிழ்நாட்டு அறநிலையத்துறை இந்தக் கோவிலைப் புதுப்பிக்கணும்னு நான் கேட்டுக்கிறேன்…” என்று தன் கோரிக்கையை முன்வைத்துத் தன் சேனலில் பதிவிட்டான்.

அவர்கள் இருந்தது காட்டுப்பகுதி என்பதால், சரியாக வீடியோ பதிவேற்றம் ஆகாமல் சுற்றிக்கொண்டிருந்தது. நேரம் ஆனதை உணர்ந்த பரமேஷ், “இப்பவாவது லாட்ஜுக்குத் திரும்பிப் போகலாமா?” என்று கேட்டான்.

“சரி” என்று தலையசைத்தவள், அவனுடன் காட்டுப்பாதையில் நடந்து தங்கியிருந்த விடுதியை அடைந்தனர்.

இவர்கள் இருவரும் ஜோடியாக நுழைவதைப் பார்த்த ரோஸினி, “என்ன டா, புது பிரண்ட் கிடைச்சதும் எங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியலை போல…” என்று உள்நோக்கத்துடன் கேட்டாள்.

“அப்படியில்ல ரோஸினி… நாங்க இரண்டு பேரும் வர்றதுக்குள்ள நீங்க மூணு பேரும் ரொம்ப தூரம் போயிட்டீங்க. அதுதான் நாங்க மெதுவா பின்னாடி வந்தோம். ருத்ராவுக்கு வேற இந்த ஊர் புதுசு… அதுதான்” என்று தன் பக்க விளக்கத்தை அளித்தான்.

அவன் அளிக்கும் விளக்கங்கள் எதுவும் ரோஸினியின் காதில் விழவில்லை. அதற்குப் பதிலாக அவளுக்கு இன்னும் எரிச்சலையே ஏற்படுத்தியது.

பரமேஷைப் பார்த்ததும் முன்னால் வந்த அஜித், “எங்கடா ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் போனீங்க? மலைக்கு மேலே போக வேண்டாமா?” என்று சற்று கோபமாகக் கத்தினான்.

“சரி விடுடா, இதோ வந்துட்டோம்ல! ஒண்ணும் நேரம் ஆகிடலையே… இப்ப போக ஆரம்பிச்சாலும் மலைக்கு மேல போயிடலாம்” என்று கூறி அஜித்தை அமைதிப்படுத்தினான் பரமேஷ்.

“இன்னும் பேசிட்டு இருக்க வேணாம். ரெண்டு பேரும் உங்களோட திங்ஸை எடுத்துட்டு வாங்க, கிளம்பலாம்”

ருத்ராவும் பரமேஷும் தங்கள் அறைக்குள் நுழைந்து பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். காரில் அனைவரும் ஏறிக்கொள்ள, பரமேஷ் வண்டியை இயக்கினான். மெதுவாகச் சாலையில் சீராகப் பயணிக்கத் தொடங்கியது கார்.

பரமேஷ் எடுத்த வீடியோ யூடியூப்பில் அப்லோட் ஆகிவிட்டது. அந்தக் கோவில் வீடியோவைப் பார்த்த பலரும்,

“வாவ்… செம!”

“கோவில் அழகா இருக்கு!”

“இந்தக் கோவிலை அறநிலையத்துறை சீரமைக்கணும்!” என்று பலவாறு கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர்.

காரில் இருந்த நண்பர்கள் அனைவரும் அப்போதுதான் அந்த வீடியோவைப் பார்த்தனர்.

முகில் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, “டேய், என்னையும் அந்தக் கோவிலுக்குக் கூட்டிட்டு போயிருக்கலாம் தானே… நீங்க இரண்டு பேரு மட்டும் போய்ப் பார்த்திருக்கீங்க!” என்று பரமேஷை விளையாட்டாய் முறைத்தபடி கேட்டாள்.

அஜித்தோ, பரமேஷைப் பார்த்து மர்மமாகச் சிரித்துக்கொண்டு, “நீ நடத்து டா மச்சா…” என்று அவனின் காதிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

ரோஸினியின் கண்கள் மட்டும் வீடியோவைப் பார்க்கப் பார்க்க சிவந்தன. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, ஜன்னலின் வெளிப்புறம் வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள்.

வீடியோவைப் பார்த்த ருத்ராவின் முகத்தில் மகிழ்ச்சி உண்டானது. எப்படியும் கோவில் சீரமைக்கப்பட்டுவிடும் என்ற திருப்தி அவளிடம் தெரிந்தது.

கண்ணாடி வழியாக அவளின் முகத்தில் தெரிந்த புன்னகையைப் பார்த்த பரமேஷின் முகமும் புன்னகையால் நிறைந்தது.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த அஜித் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

பின், சிறிது நேரம் அனைவரிடத்திலும் அமைதி நிலவ, மரங்களுக்கு இடையே கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.

“சரி டா, இப்ப எங்க போறோம்?” என்று அமைதியைக் கலைத்து முகில் கேட்டாள்.

“முதல்ல பீமன் நீர்வீழ்ச்சி போய் ஜாலியா ஒரு குளியல் போட்டுட்டு, அப்புறம் எங்க வேணா போகலாம்” என்றாள் ரோஸினி.

“அதுதான் நானும் நினைச்சேன் ரோஸினி” என்றாள் முகில்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்லாட்டியும் அங்கதான் நம்ம போறோம்” என்றான் அஜித்.

இப்பொழுதுதான் அனைவரையும் பார்த்தாள் ருத்ரா. காலையிலிருந்தே யாரும் குளிக்கவில்லை. தான் மட்டும் ‘முந்திரிக்கொட்டை’ போலக் குளித்தது நினைவுக்கு வர, அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

அவள் சிரிப்பதைப் பார்த்த முகில், “என்ன ருத்ரா, சிரிக்கிற? நீ ஏற்கனவே இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்திருக்கியா?” என்று கேட்டாள்.

“இல்லை முகில்… இதுவரை நா என் வீட்டை விட்டே வெளியே வந்தது இல்லை… அப்புறம் எப்படி இங்க வர?” என்றவளின் பேச்சில் ஆதங்கம் தெரிந்தது.

“அதுதான் இப்ப வந்துட்டியே, அப்புறம் என்ன… நீர்வீழ்ச்சி செமையா இருக்கும். என்ஜாய் பண்ணலாம்” என்று குளிக்கப் போகும் குதூகலத்தில் கூறினாள் முகில்.

அதற்கு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தாள் ருத்ரா. அவளின் சிரிப்பைப் பார்க்கப் பார்க்க ரோஸினிக்கு உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது. அதை மறைத்துக்கொண்டு உதட்டில் செயற்கைப் புன்னகையை வரவழைத்தாள்.

சிறிது நேரத்தில் நீர்வீழ்ச்சி வர, காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கினர். நீர்வீழ்ச்சியைப் பார்க்க ருத்ராவிற்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவரை வீட்டிலேயே அடைந்து கிடந்தவளுக்கு, இதெல்லாம் புதுவித அனுபவமாக இருந்தது.

ஒன்றன்பின் ஒன்றாக அனைவரும் நடக்கத் தொடங்க, ருத்ராவைப் பற்றி அறிந்த பரமேஷ் அவளுக்குப் பின்னால் சென்றான். ஐந்து நிமிட நடைப்பயணத்திற்குப் பின், ரம்மியமாகத் தெரிந்த பீமன் நீர்வீழ்ச்சியைச் சமூக வலைதளத்தில் நேரலையாகக் காட்டினர்.

நீர்வீழ்ச்சியைப் பார்த்ததும் ருத்ரா நீராட ஓடினாள். அவளைத் தடுத்த பரமேஷ், “நம்ம இங்க குளிக்கப் போறது இல்லை” என்றான்.

இதைக் கேட்ட ருத்ரா புரியாமல் பார்க்க, அவளது கையைப் பிடித்து நீர்வீழ்ச்சியைத் தாண்டி உள்ள காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கினான். அவனது பின்னால் மற்ற மூவரும் வந்தனர்.

அடர்ந்த மரங்களுக்கு நடுவே செல்லச் செல்ல, காட்டின் அடர்த்தி அதிகமாகிக்கொண்டிருந்தது. பாறைகளுக்கு இடையே விழுந்துகொண்டிருந்த அந்தச் சிறிய நீர்வீழ்ச்சி, யாருமில்லாமல் அமைதியாகக் காட்சியளித்தது.

அதனைப் பார்த்த ருத்ராவிற்கு ஏற்கனவே அந்த இடம் பரிச்சயமானது போல் தோன்றியது. ஏன் அப்படி தோன்றுகிறது என்று புரியாமல் குழம்பி நின்றாள்.

இதுவரை குளிக்க அவசரப்பட்டுக்கொண்டிருந்த ருத்ரா, எதையோ யோசித்துக்கொண்டு ஒரே இடத்தில் நிற்பதைப் பார்த்த பரமேஷ், “குளிக்க இடம் வந்துட்டு, ருத்ரா… நீங்க குளிக்கலையா?” என்று கேட்டான்.

அதில் தன்னிலைக்கு திரும்பியவள், “குளிக்கத்தான் போறேன்” என்று ஓடிச்சென்று, சிறுபிள்ளையாய் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீரைத் தன் கைகளில் பிடித்து விளையாட ஆரம்பித்தாள்.

அவளின் செயல்களை ரசித்துக்கொண்டிருந்தான் பரமேஷ். நடப்பவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள் ரோஸினி.

ருத்ரா எதையும் கவனிக்காமல் அந்த நிமிடத்தை முழுமையாக ரசித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அதே நேரத்தில் மரங்களின் மறைவிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் அவளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன.

நீராடி முடித்துவிட்டு, சிறிது நேரம் அமரலாம் என்று பாறையில் அமர்ந்திருந்த பரமேஷ், மரங்களுக்குப் பின்னால் யாரோ ஒளிந்து நின்று பார்ப்பதைக் கவனித்தான்.

அவன் மெதுவாக அந்த இடத்தை நோக்கிச் செல்ல, தன்னை நோக்கி அவன் வருவதைக் கவனித்த அந்த உருவம் அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.

பரமேஷ் அவனைத் துரத்த, “தனியா போகாத டா… நாங்களும் வரோம்!” என்று அஜித் அவனின் பின்னால் ஓட, மற்ற மூவரும் அஜித்தைப் பின்தொடர்ந்து ஓடினர்.

உள்ளே இருக்கும் ஆபத்து தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள்… உயிர் பிழைப்பார்களா?