இதுவரை ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த உருவம், அவர்கள் இருவரும் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு சிவலிங்கத்தைத் திருப்பி, மண்பானையில் இருந்த தங்க நாணயங்களை ஆசையுடன் எடுத்துக்கொண்டது.

வெளியில் வந்த பரமேஷும் ருத்ராவும் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர்.

“நீங்க உங்க ரூமுக்குப் போங்க. மத்ததை காலையில பேசிக்கலாம். அப்புறம் இனி யாராவது உங்களைக் கூப்பிட்டா தனியா போயிடாதீங்க,” என்று எச்சரிக்கையாக இருக்குமாறு ருத்ராவிடம் கூறிவிட்டு, பரமேஷ் அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ருத்ரா, படுக்கையில் அமர்ந்து கையில் இருந்த கத்தியையே திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். இருட்டில் அந்த வாளில் பதிந்திருந்த வைரமும் தங்கமும் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இப்போதுதான் அதனை உன்னிப்பாகப் பார்த்தாள். அது பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது.

நெடுநேரமாக யோசித்துக்கொண்டிருந்தும் எதுவும் புரியாமல் போக, கத்தியைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு உறங்கினாள்.

மறுநாள் காலை ஏழு மணியளவில் கதவு தட்டப்பட, கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்தாள் ருத்ரா. எழுந்ததும் தன் அங்கங்கள் தெரியும்படி விலகியிருந்த ஆடையைச் சரிசெய்துகொண்டு கதவைத் திறந்தாள். அவளுக்கு முன்பாக பரமேஷும் மற்ற மூவரும் நின்றுகொண்டிருந்தனர்.

அவள் கொட்டாவி விட்டுக்கொண்டு கதவைத் திறப்பதைப் பார்த்த நால்வரும் சிரிக்க, ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்தாள்.

“நாங்க வெளில சுத்திப் பார்க்கப் போறோம். நீங்க கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகி வாங்க,” என்று பரமேஷ் கூற, அப்போதுதான் நேரம் ஆகிவிட்டது என்பது ருத்ராவிற்கு உறைத்தது.

அசட்டுச் சிரிப்புடன், “இதோ பத்து நிமிஷத்துல வந்திடுறேன்,” என்று கூறிவிட்டு கதவை அடைத்தாள்.

வேகவேகமாகப் பல் துலக்கிவிட்டு, குளித்து, உடையை மாற்றிக்கொண்டு வெளிவந்தாள்.

அலைபேசியில் ஏழரை மணி என்று காட்ட, ‘காலையிலேயே ஏழரையா… விளங்கிடும்!’ என்று மனதில் நினைத்தவள், தலையை வாரிவிட்டு அறைக்கு வெளியே வந்தாள்.

இவளின் வருகைக்காகக் காத்திருந்த நால்வரும் பெருமூச்சுவிட்டு, “எப்பா… இப்போதாவது வந்தியே! இதுதான் நீ சொன்ன பத்து நிமிஷமா?” என்று கைக்கடிகாரத்தில் மணி எட்டைத் தொட்டிருந்ததைக் காட்டினாள் ரோஸினி.

அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் ருத்ரா அமைதியாக இருக்க, “சரி சரி, வாங்க கிளம்பலாம். பேசிட்டே இருந்தா இன்னைக்கு சுத்திப் பார்த்த மாதிரிதான்,” என்று அஜித் கூற, அனைவரும் ஒன்றாக ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்.

இரவில் பார்த்தது போல் இல்லாமல், கடைகள் இன்னும் திறக்கப்படாமல் மூடியே காட்சியளித்துக்கொண்டிருந்தன. அதனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தபோது, ருத்ரா எதையோ வித்தியாசமாகப் பார்த்தபடி ஒரு திசையை நோக்கி நின்றுகொண்டிருந்தாள்.

அப்படி என்ன அவள் பார்க்கிறாள் என்று பரமேஷும் அந்தத் திசையைப் பார்க்க, நெற்கதிர்களை மொத்தமாகக் குவியலாக வைத்து அடித்து, அதிலிருந்து நெல்லைப் பிரித்தெடுத்துக்கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.

எல்லாவற்றிற்கும் இயந்திரமயம் என்றாகிவிட்ட பிறகு, இப்போது கையில் யாரும் அடிப்பதில்லை. ஏன், ருத்ராவின் கிராமத்தில்கூட இப்படி இல்லை. இதனைப் புதிதாகப் பார்ப்பதால்தான் ருத்ரா இவ்வளவு ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு அவள் அருகில் சென்றான்.

இவன் அவள் அருகில் செல்வதற்குள், ருத்ரா அந்த முதியவரின் அருகில் சென்றுவிட்டாள்.

அந்த வயதான முதியவரிடம் சென்றவள், “தாத்தா, இதை நா ஒரு தடவை அடிச்சிப் பார்க்கட்டுமா?” என்று ஆசையாகக் கேட்டாள்.

“இதைப் பாரு மா… நீ ஊருக்குப் புதுசுனு நினைக்கிறேன். இதெல்லாம் விளையாட்டுக் காரியம் இல்லை. உனக்கு அடிக்கத் தெரியாது மா. அதோட இதுல உள்ள உமி உன் உடம்புல எல்லாம் படும்,” என்று அவர் விளக்கிக் கூறினார்.

அவர் கூறுவது உண்மை என்பதை உணர்ந்தவள், “கொஞ்சம் நெல்லு மட்டும் கைல தர முடியுமா தாத்தா?” என்று மீண்டும் ஆசையுடன் கேட்டாள்.

அவள் கேட்பதைப் பார்த்தவர், அவள் கையில் சில நெல் மணிகளைக் கொடுத்தார்.

இதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பரமேஷ், அவளின் சிறுபிள்ளைத்தனத்தைக் கண்டு சிரித்தான்.

அவன் அருகில் வந்த ருத்ரா, “என்ன அப்படியே பார்த்துட்டு இருக்கீங்க? வாங்க போகலாம்,” என்றாள்.

“இந்த நெல்லை வச்சி என்னங்க பண்ணப் போறீங்க?” என்று கேட்டான் பரமேஷ்.

கையிலிருந்த நெற்குவியலில் இருந்து ஒரு நெல்மணியை எடுத்து, அதன் மேலிருந்த தோலை உரித்து, அதற்குள் இருந்த அரிசியை உண்ண ஆரம்பித்தாள்.

பதில் எதுவும் பேசாமலேயே செய்கையிலேயே பதில் கூறிவிட்டாள்.

“இப்படி அரிசிலா திங்கக் கூடாதுங்க”

“ஒரு அரிசியை ஒழுங்கா சாப்பிட விடுறீங்களா? கொஞ்சம் அரிசி சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது?” என்றுவிட்டு மீண்டும் நெல்மணியை உடைத்து அரிசியை வாயிற்குள் போட்டு மென்றாள்.

அதையே வித்தியாசமாகப் பார்த்த பரமேஷிடம், “இந்தாங்க, நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க,” என்று அவனது கைகளில் சில நெல் மணிகளைக் கொடுத்தாள்.

அவள் கொடுத்ததை வீணாக்க விரும்பாதவன், ஒன்றை எடுத்து உடைத்து மென்றான். கடுகடுக்கென்று வாயில் அரைப்பட்டாலும், அப்படியொன்றும் சுவையில் வித்தியாசம் தெரியாததால் ருத்ராவை நோக்கினான்.

அவளோ அது அமிர்தமென்று நினைத்து சுவித்து, மென்று விழுங்கினாள்.

ஒன்றும் புரியாமல் போக, “எனக்கு போதும். நீங்க சாப்பிடுங்க,” என்று அவளிடமே மீதமிருந்த நெல் மணிகளைக் கொடுத்துவிட்டான்.

வழிநெடுக நெல் மணிகளைக் கொரித்தபடி நடக்க ஆரம்பித்தாள். அவளின் செயல்கள் சிரிப்பை ஏற்படுத்த, அதனை அடக்கிக்கொள்ளப் பெரும்பாடு பட்டான்.

ருத்ரா மெதுவாக ஒவ்வொன்றையும் ரசித்துக்கொண்டு வருவதற்குள், மற்ற நண்பர்கள் மூவரும் இவர்களைத் தாண்டி எப்போதோ சென்றுவிட்டனர்.

சிறிது தூரம் நடந்ததும், தூரத்தில் எதையோ பார்த்த ருத்ரா துள்ளிக்குதித்து அந்தத் திசையை நோக்கி ஓடினாள்.

‘ஓடுறதே ஓடுற… கொஞ்சம் சொல்லிட்டு ஓடக்கூடாதா?’ என்று மனதில் நினைத்தபடி அவளின் பின்னால் ஓடினான் பரமேஷ்.

அப்படி எதைப் பார்த்து ஓடிவந்தாள் என்று பரமேஷும் மூச்சு வாங்க அந்த இடத்தைப் பார்க்க, கட்டிப்போடப்பட்டிருந்த ஆடு, மாடுகள் மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிந்தன.

“இதைப் பார்க்கத்தான் இப்படி ஓடி வந்தியா?” என்பது போல் பரமேஷ் ருத்ராவைப் பார்க்க, அவள் தன் விரலை மேல்நோக்கி நீட்டிக் காண்பித்தாள்.

அப்படி என்ன மேலே இருக்கிறது என்று பரமேஷ் தலையை மேல்நோக்கிப் பார்த்தான்.

வைக்கோலால் அழகிய கூரை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது அந்த இடம்.

இதற்குத்தான் இப்படி ஓடிவந்து இருக்கிறாள் என்று நினைத்த பரமேஷ் தலையில் அடித்துக்கொண்டான்.

அவனின் செயலைக் கண்ட ருத்ரா, “இப்ப எதுக்கு தலையில அடிக்கிறீங்க?”

“அது… அது வந்து… பூச்சி இருந்த மாதிரி இருந்தது. அதான் அடிச்சேன்,” என்று அவளிடம் கூறிச் சமாளித்தான்.

அதனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த இருவரும், அருகில் மலைபோல் வைக்கோல் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.

ருத்ராவும் சிறுவயதில் வைக்கோலைக் குவியலாக இப்படி அவளது கிராமத்திலும் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது எல்லாவற்றையும் இயந்திரமே செய்துவிடுவதால், பழங்காலத்தைப் போல் வைக்கோல் குவியல்கள் இல்லாமல் போயிருந்தன.

இந்த வைக்கோல் குவியல்கள் தன் சிறுவயதை நினைவுபடுத்த, மகிழ்ச்சியாகத் துள்ளிக்குதித்து சுற்றி வந்தாள் ருத்ரா. அவளோடு சேர்ந்து சுற்றினான் பரமேஷ்.

சிறு கல் தடுக்கி ருத்ரா வைக்கோலில் விழப்போக, அவளைத் தாங்கிப் பிடிக்கப் போன பரமேஷும் அவளோடு சேர்ந்து வைக்கோல் குவியலில் விழுந்தான்.

பஞ்சுபோல் வைக்கோல் அமைந்திருக்க, அதில் ருத்ராவின் மேல் பரமேஷ் விழுந்திருந்தான். தன் நிலையை உணர்ந்து முதலில் எழுந்துகொண்டான் பரமேஷ். பின் மெதுவாகத் தன் தாவணியைச் சரிசெய்தபடி எழுந்தாள் ருத்ரா.

எழுந்ததும் பரமேஷைப் பார்த்தவள், “ஹீஹீ… ஹாஹா…” என்று சிரிக்கத் தொடங்கினாள்.

அதில் புரியாதவன், “இப்ப எதுக்கு நீங்க சிரிக்கிறீங்க?” என்று கேட்டான்.

“உங்க தலைக்கு மேல பாருங்க,” என்றுவிட்டு மீண்டும் வாய்விட்டுச் சிரித்தாள்.

“என் தலைக்கு மேல என்ன?” என்று கேட்டுக்கொண்டே தலையில் கைவைத்தான். அவனது தலைமேல் வைக்கோல் துண்டுகள் சிக்கியிருந்தது கைகளில் தட்டுப்பட, அதனை உதறிவிட்டான்.

பின் ருத்ராவைப் பார்த்து, “ஈஈ… இஈ…” என்று சிரிக்கத் தொடங்கினான் பரமேஷ்.

அப்போதுதான் நடந்ததை உணர்ந்தவள், தன் தலையின் மீது தடவிப் பார்த்தாள். அங்கங்கே வைக்கோல் துகள்கள் கொம்பு முளைத்தது போல் நின்றுகொண்டிருந்தன.

இருவரும் தாங்கள் இருக்கும் நிலையை ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

வைக்கோல் குவியலில் அவர்கள் விழுந்ததால் உருவாகியிருந்த குழியைச் சுட்டிக்காட்டிய பரமேஷ், “இப்படியே சிரிச்சிட்டு இருந்தா வசமா மாட்டிக்க வேண்டிதான். முதல்ல இங்க இருந்து கிளம்புவோம், வாங்க,” என்று கூறினான்.

உடனே ருத்ராவும் அவன் பின்னால் சென்றாள்.

சிறிது தூரம் சென்றதும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் எதையோ பார்த்துவிட்டு ஓடினாள். அவளின் பின்னே வேதாளத்தைப் பிடிக்க விக்கிரமாதித்தன் ஓடுவது போல் ஓடினான் பரமேஷ்.

அவள் வந்தடைந்த இடம் ஒரு பூங்கா.

மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்துக்கொண்டிருந்த அந்தப் பூங்காவில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு இருந்த ஊஞ்சல் ஒன்றில் சென்று ஏறி அமர்ந்துகொண்டு சிறுபிள்ளையைப் போல ஆட ஆரம்பித்தாள்.

அதைக் கண்ட பரமேஷ், “மனசுல இன்னும் சின்ன பிள்ளைன்னு நினைப்பு போல?” என்று நக்கலாகக் கேட்டான்.

“நா சின்ன பிள்ளை தாங்க. அப்படி என்ன எனக்கு வயசாகிட்டு?” என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டே கேட்டாள்.

“நீங்க பத்து வயசு பாப்பாதாங்க. போதுமா?”

“அது அப்படிச் சொல்லுங்க… நா எப்பவும் பாப்பாதான்”

அவளின் பதிலில், ‘இவளைப் பெத்தாங்களா, இல்லை செஞ்சாங்களா?’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

வேறு எதாவது பேசினால் எடக்கு மடக்காக ஏதாவது பேசுவாள் என்று நினைத்தவன், சிறிது நேரம் அமைதி காத்தான்.

ஊஞ்சல் மேலே சென்று கீழே வருவதை ரசித்து ஆடிக்கொண்டிருந்தவள், அப்போதுதான் ஒன்றைக் கவனித்தாள்.

அடர்ந்த மரங்களுக்கு நடுவில் சென்ற அந்த ஒற்றையடிப் பாதையைப் பார்த்தவளின் மூளையில் மின்னல் பளிச்சிட, ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்போதே அதிலிருந்து குதித்தாள்.

காற்றில் பறந்து தரையை நோக்கி அவள்  வருவதை கவனித்த பரமேஷ், தவறித்தான் ஊஞ்சலில் இருந்து விழுகிறாள் போல் என்று நினைத்து அவளைப் பிடிக்கச் செல்ல, தரையில் காலை ஊன்றி புன்னகையுடன் நின்றாள் ருத்ரா.

“இப்படி ஊஞ்சல் ஆடிட்டு இருக்கும் போது குதிக்கியே… உனக்கு ஏதாவது அறிவு இருக்கா?” என்று ருத்ராவை உரிமையுடன் கடிந்துகொண்டான் பரமேஷ்.

அதையெல்லாம் காதில் வாங்காதவள், அந்த ஒற்றையடிப் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.