“என்னடி சொல்ற? பார்க்க அழகா, இலட்சணமா இருக்கிற இந்தப் பொண்ணுக்கு போய் புத்தி சரியில்லைன்னு சொல்ற?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் செண்பகம்.
“அவ அண்ணன் அந்தக் காட்டுக்குள்ள காணாம போய் ஒரு மாசம் ஆச்சு. இன்னும் அவன் உயிரோட இருக்கிறதாகவும், அவன்கிட்ட பேசுறதாகவும் இந்தப் பிள்ளை சொல்லிக்கிட்டு அலையுது.”
காடு என்றதும் செண்பகத்தின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
“எந்தப் புத்திகெட்ட பிள்ளையாவது அந்தப் பக்கம் போவானா? இவன் ஏண்டி அந்தப் பக்கம் போனான்?”
“இதுவரை இறந்தவங்களைப் பத்தின உண்மையைக் கண்டுபிடிக்கப் போறேன்னு போனவன், காணாமலேயே போயிட்டான். சொன்னா கேட்கணும். சொல்லச் சொல்ல கேட்காம போனா இதுதான் நிலைமை” என்றாள் கோமதி.
இவற்றையெல்லாம் தன் காதுபடவே கேட்ட ருத்ராவின் கண்களில் நீர் துளிர்க்க, அங்கிருந்து தன் அத்தையிடம் கூட சொல்லாமல், கொள்ளாமல் ஓடினாள்.
வயலைவிட்டு தள்ளி வந்து நடக்க ஆரம்பித்தாள். அப்பொழுது சாலையில் அவளைத் தாண்டி ஊருக்குள் ஒரு கார் சென்றது. அதனைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. தன் மனதில் பலவித யோசனைகளுடன், சாலையில் கால் போன போக்கில் நடந்து கொண்டு வந்தவள், திடீரென்று நான்கு பேரை ஊருக்குள் புதிதாகப் பார்த்ததும் நின்றாள்.
‘இவர்கள் யார்? ஏன் வந்திருக்கிறார்கள்?’ என்று மனதில் யோசிக்க ஆரம்பித்தாள்.
அந்த நான்கு பேருக்கு நடுவில் நின்றுகொண்டிருந்த ஆடவனைப் பார்த்ததும், அவளுக்குள் இனம்புரியாத பந்தம் ஏற்பட்டது. இதற்கு முன்னால் அவனைச் சந்தித்தது போன்ற பிரமை உண்டாகியது.
‘இதுதான் தேஜாவு போல’ என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டு அவர்களை கடந்து சென்றாள். சில நிமிடங்களில் தன் வீடு இருக்கும் தெருவுக்குள் செல்ல பார்த்தவள், என்றுமில்லாமல் முருகன் அண்ணனின் பெட்டி கடைக்கு அருகில் டொயோட்டா கார் ஒன்று நின்றிருப்பதையும், காரில் வந்தவர்கள் எதையோ அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பதையும் பார்த்தாள்.
என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரிக்கவே, இதுவரை இருந்த மனநிலை மாற அருகில் சென்றாள்.
இவள் பார்த்த அந்த அழகிய ஆடவன், “அண்ணா, இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் வீடு எங்க இருக்கு?” என்று கேட்டுக்கொண்டிருந்தான்.
அதற்கு பதிலாக முருகன் அண்ணன், “தம்பி, இப்படி நேரா போய் வலது பக்கம் திரும்பு, மூணாவது பெருசா இருக்கிற வீடு அவங்க வீடுதான்” என்றார்.
அதனைக் கேட்டவர்கள் மீண்டும் தங்கள் காரில் ஏறிக்கொண்டு பஞ்சாயத்து தலைவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.
ருத்ராவின் மனம் அந்த ஆடவனின் பின்னால் போகச் சொல்வது போல் இருக்க, அவர்களின் காரைப் பின்தொடர்ந்தாள்.
வலது பக்கம் திரும்பிய கார், பஞ்சாயத்து தலைவர் வீட்டின் முன்பு நின்றது. அதிலிருந்து இறங்கி உள்ளுக்குள் சென்ற நால்வரும், சிறிது நேரத்தில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.
அவர்களின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று நினைத்த ருத்ரா, அவர்களின் காருக்கு அருகில் சென்றாள்.
தங்கள் காருக்கு அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த நால்வரும் அவளருகில் வந்தனர்.
இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் கொண்ட குழு அது. இவள் தாவணியில் இருக்க…அவர்களோ ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஷர்ட் அணிந்து, நாகரீக உடையில் தோற்றமளித்தனர்.
அவர்களுள் ருத்ரா ரசித்த ஆடவன் முன்னால் வந்து, “ஹாய், என் பேரு பரமேஸ்வரன்” என்றான்.
ஒருபக்கம் முடி குறைவாக இருக்க, மறுபக்கம் அடர்த்தியாக இருந்த முடியை முன்னால் ஸ்டைலாகத் தூக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவன் அணிந்திருந்த பிளாக் ஷர்ட், வைட் பேண்ட், பழுப்பு நிற ஷூ ஆகியவற்றை ஆராய்ந்தவளுக்கு, அவன் பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாததை கவனித்தாள்.
இவ்வளவு அருகில் ஒரு ஆடவனுடன் உரையாடுவது முதன்முறை. அதுவும் வேறு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அவளை அறியாமலேயே ஏதோ ஒன்று அவன் பக்கம் ருத்ராவை இழுத்தது.
இவ்வளவு நேரம் தன் முன்னால் பதில் பேசாமல் நின்றுகொண்டிருந்த மங்கையைப் பார்த்தும், அவனுக்கே புரிந்திருந்தது. இது கிராமம் என்பதால் தன்னிடம் பேச கூச்சப்படுகிறாள் என்று.
உடனே, “ரோஸினி, நீ இந்தப் பொண்ணுகிட்ட பேசு” என்றான்.
ருத்ராவின் அருகில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்ணொருத்தி, தன் கைகளை நீட்டி, “ஹாய், என் பேரு ரோஸினி” என்றாள்.
அதனைக் கேட்டதும், “என் பெயர் ருத்ரா. நீங்க எல்லாரும் இந்த ஊருக்கு ஏன் வந்திருக்கீங்க?” என்று கேட்க வந்ததை ஒரு வழியாகக் கேட்டாள்.
“இந்தக் காட்டுக்குள்ள இருக்குற மர்மத்தைக் கண்டுபிடிக்க வந்திருக்கோம்.”
அதனைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ருத்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அதனைக் கவனித்த ரோஸினி, “எல்லாரும் காடுனு சொன்னாலே பயப்படுறாங்க. நீ என்னனா சிரிக்கிற?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் கட்டுக்கதைங்க… இந்த ஊரோட மூடநம்பிக்கை.” என்ற ருத்ராவின் பதிலைக் கேட்ட அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
“வொவ்! சூப்பர் ருத்ரா. நாங்களும் அது வெறும் வதந்தினு தான் ப்ரூஃப் பண்ண வந்திருக்கோம்.”
“அப்போ காட்டுக்குள்ள போகாம, இங்கே பஞ்சாயத்து தலைவரை ஏன் பார்க்க வந்தீங்க?” என்று யோசனையுடன் கேட்டாள் ருத்ரா.
“எங்களுக்கு காட்டுக்குள்ள போகத் துணைக்கு ஒரு ஆள் வேணும். அதுக்காகத்தான் உங்க கிராமத்துல யாராவது காட்டுக்குள்ள எங்க கூட வருவாங்களானு கேட்க, பஞ்சாயத்து தலைவர்கிட்ட கேட்க வந்தோம். ஆனா அவரு யாரும் இந்த ஊர்ல காட்டுக்குள்ள வரமாட்டாங்கனு சொல்லிட்டாரு “
அதனைக் கேட்டு உற்சாகமான ருத்ரா, “உங்க கூட காட்டுக்கு நான் வரேங்க” என்றாள்.
இதனைக் கேட்டு அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
அதன்பிறகு தன் அருகில் இருந்தவர்களில் கழுத்து வரை ஆண்போல் வெட்டியிருந்த பெண்ணைக் கைகாட்டி, “இது முகில்” என்றாள். அவளுக்கு அருகில் நெற்றியில் சிறு வெட்டுக்காயத் தழும்புடன் நின்றிருந்த இளைஞனைப் பார்த்து, “இது அஜித்” என்றாள்.
அதனைக் கேட்ட ருத்ரா தலையாட்டினாள்.
“உன் வீடு எங்க இருக்கு? எங்க கூட வர உன் வீட்டுல விடுவாங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் முகில்.
“அவங்க என்ன என்னை விடுறது நா கண்டிப்பா வருவேன். நீங்க ஒரு கடை பார்த்தீங்களா? அதுக்குப் பக்கத்துலதான் என் வீடு இருக்கு. சரி, நீங்க எப்போ காட்டுக்குள்ள போறீங்க?”
“இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு, நாளைக்குக் காலையில்தான் போறோம். நீ கரெக்ட்டா பத்து மணிக்குக் கடை பக்கத்துல வந்திடு. ஒண்ணா சேர்ந்து காட்டுக்குள்ள போகலாம்” என்றாள் ரோஸினி.
முகமலர்ச்சியுடன், “நா நிற்பேன். நீங்க கரெக்ட்டா வந்திடுங்க. இப்போ அம்மா தேடுவாங்க. நா போறேன்” என்று விட்டுத் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வழிநெடுக அவள் பார்த்த ஆடவனின் முகமே வந்து சென்றது. ஏன் இந்த இளைஞனைப் பார்த்ததும் மனம் தடுமாறுகிறது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தாள்.
மறுபுறம், பரமேஸ்வரனின் மனதிலும் அதே யோசனைகள். எங்கோ ருத்ராவைப் பார்த்தது போலவும், மிகவும் பழக்கப்பட்டவள் போன்றும் தோன்றியது.
எப்போதும் இல்லாமல் சீக்கிரமாக வீட்டிற்கு வந்த ருத்ராவைப் பார்த்த கோகிலா, “என்னடி, அதுக்குள்ள வயலுக்குப் போயிட்டு வந்துட்டியா? உன் அத்தைக்கு கொஞ்சநேரம் ஒத்தாசையா இருந்துட்டு வரவேண்டியது தான்டி” என்று கடுகடுத்தார்.
அதனைப் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் சென்றவள், அலமாரி மீது இருந்த ஒரு டையரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
“தொடரும் மர்மங்கள்… 30 பேரின் மர்ம மரணங்கள்” என்று எழுதியிருக்க, இதுவரை இறந்தவர்களின் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய விவரங்களும் அதில் இருந்தன.
அதையெல்லாம் பார்த்தவள் ஆழ்ந்த பெருமூச்சுடன் அதனை மூடினாள்.
இதன் பின்னால் இருக்கும் மர்மத்தையும், தன் அண்ணனையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதில் உறுதிமொழி எடுத்துக்கொண்டாள்.
தன் அண்ணனுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பாளா?