அதற்குள் செடி கொடிகளை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த ருத்ராவின் கண்கள் வியப்பில் விரிந்தன.

பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே ஒரு பாதை செல்வதைக் கண்டவள், ஆச்சரியத்துடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அப்படி என்ன பார்த்துட்டு இருக்க? வா, கோவிலுக்குப் போகலாம்!” என்று பரமேஷ் அவளை அழைத்துக்கொண்டிருந்தபோது, மலைகளின் இடுக்குகளுக்கு இடையே செல்லும் அந்தப் பாதையை அவனும் வித்தியாசமாகப் பார்த்தான்.

ருத்ரா அந்தப் பாதைக்குள் முன்னேறி நடக்கத் தொடங்கினாள். அவளைத் தடுத்து நிறுத்திய பரமேஷ், “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு, ருத்ரா. உள்ளே என்ன இருக்குன்னு தெரியலை. ஏதாவது ஆபத்து இருந்தா என்ன பண்றது? முதல்ல என் பிரண்ட்ஸ் எல்லாரையும் வரச்சொல்றேன். எல்லாரும் சேர்ந்தே உள்ளே போகலாம்” என்றுவிட்டு, தன் அலைபேசியை எடுத்து அஜித்திற்கு அழைப்பு விடுத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

“டேய், நாங்க உலகநேஸ்வரர் கோவிலுக்குப் போற பாதையில, பின்பக்கம் மலைப் பக்கம் இருக்கோம். நீ உடனே எல்லாரையும் கூட்டிட்டு வா.”

“அங்க எதுக்குடா வரச்சொல்ற?”

“முதல்ல வா, டா! வந்ததும் சொல்றேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் பரமேஷ்.

சிறிது நேரத்திற்குள் அனைவரும் அந்தக் குகையின் முன்பாக வந்து நின்றனர். மலைகளுக்கு நடுவே பாதை செல்வதைப் பார்த்த மூவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“என்னடா இது? இப்படி மலைக்குள்ள ஒரு வழி போகுது?” என்று அஜித் யோசனையுடன் கேட்டான்.

“அதுதான் எனக்கும் தெரியலைடா! இப்படி ஒரு இடம் இருக்குன்னு எப்படி யாரும் பார்க்காம இருந்தாங்கன்னு புரியலை. உள்ளே ஏதாவது ஆபத்து இருக்கும்னு தோணுது” என்றான் பரமேஷ்.

“அப்புறம் எதுக்குடா எங்களை வரச்சொன்ன? கீழே இறங்கு. வேற இடத்தைச் சுத்திப் பார்க்கப் போகலாம்” என்று அஜித் அவசரப்படுத்தினான்.

“அது இல்லைடா… இதே மாதிரி புதுசு புதுசா இருக்கிற இடங்களை நம்ம சேனல்ல போட்டா நல்ல வியூஸ் போகும் இல்லையா? உள்ளே என்ன இருக்குன்னு போய்ப் பார்ப்போமே!” என்று ருத்ரா உள்ளே செல்ல ஆசைப்படுவதை மறைத்துக் கூறினான் பரமேஷ்.

அனைவருக்கும் அந்த இடத்தை வீடியோவாகப் பதிவிட்டால் நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று தோன்றியது. அலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டே அஜித் பின்னால் வர, முகிலும் ரோஸினியும் அவனுக்கு முன்னால் சென்றனர். அவர்களுக்கு முன்னால் பரமேஷ் செல்ல, எல்லோருக்கும் முன்னால் எந்தப் பயமும் இல்லாமல் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆர்வத்துடன் ருத்ரா நடந்து கொண்டிருந்தாள்.

குகைக்குள் சிறிது தூரம் சென்றதும், கூகுள் மேப்பில் அந்தப் பாதை எங்கு செல்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த முகிலின் கண்கள் விரிந்தன. உடனே அருகில் வந்த ரோஸினியிடம் அலைபேசியை நீட்டிக் காட்டினாள்.

“என்னடி இது? நாம போற பாதை கடலுக்குள்ள போற மாதிரி காட்டுது! மேப் சரியாத்தான் காட்டுதா? இல்லை, வழக்கம்போல ஏதாவது தப்பா காட்டுதா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் ரோஸினி.

முகிலுக்கும் அதே சந்தேகம் எழுந்தது. அவள் அலைபேசியை அஜித்திடம் காட்டினாள். அதைப் பார்த்த அஜித்தும் ஆச்சரியமடைந்தான். அப்போது திடீரென்று சிக்னல் துண்டிக்கப்பட்டது. அதைக் கவனிக்காமல் அவன் பேசத் தொடங்கினான்.

“இந்தக் குகை கடலுக்கு அடியில போகுதுன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம, இந்த மலை கூகுள் மேப்லேயே இல்லை. ஒருவேளை இதை இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்காம இருந்திருக்கலாம்.”

“இவ்வளவு பெரிய மலைக்குகை எப்படி அஜித், இதுவரைக்கும் யாருடைய கண்ணிலும் படாம இருக்கும்? கூகுள்லதான் ஏதோ பிரச்சினைன்னு தோணுது” என்றாள் முகில்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் எதுவும் தெரியாமல், பரமேஷும் ருத்ராவும் சாதாரணமாக உள்ளே நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும், பழங்காலத் தூண்கள் அவர்களின் கண்களுக்குத் தென்பட்டன. அவற்றைப் பார்த்ததும் வழக்கம்போல உற்சாகமடைந்த ருத்ரா, தூண்களை நோக்கி வேகமாக ஓடினாள். அவளுக்குப் பின்னால் பரமேஷும் ஓடினான்.

சிறிது தூரம் சென்றதும், ஏதோ சரியில்லை என்று பரமேஷின் மனம் எச்சரித்தது. அவன் ருத்ராவைப் பார்த்தான்.

தூணிற்கு அருகில் சென்றவள், திடீரென்று தடுமாறினாள். அடுத்த நொடியே மூச்சுவிட முடியாமல் திணறியவள், மயங்கிச் சரிந்தாள்.

“ருத்ரா!” என்று பதறிய பரமேஷ், அவளை நோக்கி ஓடினான்.

பின்னால் வந்த அஜித்தும் முகிலும் அவர்களை நோக்கி வர முயன்றனர். ஆனால் பரமேஷ் கையை உயர்த்தி, அவர்களை அங்கேயே நிற்கும்படி எச்சரித்தான். பிறகு மெதுவாக ருத்ராவிற்கு அருகில் சென்று அவளைத் தன் கைகளில் தாங்கிக்கொண்டான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் அஜித்தும் முகிலும் திகைத்துப் போய் நின்றனர். ரோஸினியின் முகத்தில் மட்டும் ஒரு கணம் நிம்மதி தெரிந்தது. ஆனால் பரமேஷ் ருத்ராவைத் தன் மடியில் தாங்கிக்கொண்டு பதற்றத்துடன் அவளது முகத்தைப் பார்ப்பதைக் கண்டதும், அவளுடைய முகம் மாறியது. தன் உணர்வுகளை மற்றவர்கள் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக, “அச்சோ! ருத்ராவுக்கு என்னாச்சு, பரமேஷ்?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

மயங்கிக் கிடந்த ருத்ராவை மெல்லத் தூக்கித் தன் கைகளில் ஏந்திய பரமேஷ், வந்த வழியே திரும்பிச் செல்லலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்கு நீண்ட நேரம் ஆகும். அதற்குள் ருத்ராவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனை ஆட்கொண்டது.

அப்போது அவனுடைய கண்களில் நீல நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்த சிவலிங்கம் தென்பட்டது.

ஒரு கணம் தயங்கியவன், ருத்ராவைத் தூக்கிக்கொண்டு சிவலிங்கத்தை நோக்கிச் சென்றான்.

அவனுடைய செயலைப் பார்த்த அஜித்,

“டேய்! இங்க அவளைத் தூக்கிட்டு வராம ஏன்டா அந்தப் பக்கம் தூக்கிட்டுப் போற?” என்று குகைக்குள் சத்தமாகக் கத்தினான்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத பரமேஷ், சிவலிங்கத்திற்கு முன்பாக அமர்ந்து தன் மடியில் ருத்ராவைப் படுக்க வைத்தான்.

அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

“ருத்ரா… எழுந்திரு, ருத்ரா!” என்று அவளது தோள்களை மெல்லக் குலுக்கினான்.

அவள் எந்த அசைவும் இல்லாமல் கிடக்கவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவளையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஒரு நிமிடத் தவிப்பில் அவனுடைய மூளை வேலை செய்ய மறுத்தது.

தூரத்தில் இருந்து நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அஜித், “டேய்! தண்ணி தெளிடா!” என்று கத்தினான்.

அப்போதுதான் பரமேஷுக்குத் தன்னிலை திரும்பியது.

ருத்ராவின் கையில் இருந்த பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து, அவளது முகத்தில் மெல்லத் தண்ணீரைத் தெளித்தான். கண் இமைகளை மெல்ல மெல்லத் திறந்த ருத்ராவைப் பார்த்ததும், அப்போதுதான் போன உயிர் திரும்பி வந்ததைப் போல உணர்ந்தான்.

அவளுக்குக் கொஞ்சம் தண்ணீர் அருந்தக் கொடுத்தான். அதை அருந்தியவள், அப்போதுதான் தன் தலை பரமேஷின் மடியில் இருப்பதை உணர்ந்தாள். பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

நடந்ததை எல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவரும், தொலைவிலிருந்தே,”என்னடா ஆச்சு?” என்று கேட்டனர்.

“இங்க காற்றோட்டம் குறைவா இருக்கு. அதனாலதான் அவளுக்கு மூச்சுவிட முடியாம போயிருக்கலாம்” என்றான் பரமேஷ்.

அவன் சைகை காட்டிய திசையைப் பார்த்த முகில், அவர்களுக்குப் பின்னால் இருந்த பாறைகளில் பாசி படர்ந்திருப்பதையும், சில இடங்களில் செடிகள் வளர்ந்திருப்பதையும் கவனித்தாள். ஆனால் முன்னால் செல்லும் பாதையில் அத்தகைய பாசிகளோ செடிகளோ அதிகமாக இல்லை.

அவள் சுற்றிலும் பார்த்தபோது, சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த பாறைகளிலும் பாசி படர்ந்திருப்பதைக் கவனித்தாள்.

“என்னடா சொல்ற? ஒண்ணுமே புரியலை!” என்று அஜித் குழப்பத்துடன் கேட்டான்.

அவனுக்கு அருகில் நின்ற முகில், தான் கவனித்ததை விளக்கத் தொடங்கினாள்.

“அதோ அந்தப் பாறைகள்ல பாசி படர்ந்திருக்குல்ல? இங்க காற்றோட்டம் இருக்கிறதாலதான் இந்தப் பாசி உயிரோட வளர்ந்திருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா முன்னாடி இருக்கிற பாதையில பாசி எதுவுமே இல்லை. அங்க காற்றோட்டம் குறைவா இருக்கலாம். ருத்ரா வேகமா ஓடினதால மூச்சுவிட முடியாம மயங்கியிருக்கலாம். இந்தச் சிவலிங்கத்தைச் சுற்றி மட்டும் காற்று வர்றதுக்கான ஏதோ வழி இருக்கும்னு நினைக்கிறேன். அதனாலதான் பரமேஷ் அவளை இங்கே தூக்கிட்டு வந்திருக்கான் போல!”

முகிலின் விளக்கத்தைக் கேட்ட அஜித், ஓரளவு உண்மை புரிந்தவனாகத் தலையாட்டினான்.

ஆனால் ரோஸினியின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. ருத்ரா மயங்கியிருந்தபோது பரமேஷ் அவளுக்காகத் தவித்ததைப் பார்த்த அவளால் அந்த ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.

மெதுவாக நடந்து வந்த மூவரும் சிவலிங்கத்தை அடைந்தனர்.

எழுந்து நின்ற ருத்ரா, தன் முன்னால் இருந்த சிவலிங்கத்தைப் பார்த்ததும் இரு கரம் கூப்பி வணங்கினாள்.

அவளுடைய செயலைக் கண்ட முகில் சிரித்தாள்.

“நீ நன்றி சொல்ல வேண்டியது பரமேஷுக்கு, சிவபெருமானுக்கு இல்லை!” என்று கேலியாகக் கூறினாள்.

“என்னைக் காப்பாத்துன சிவபெருமானுக்கு முதல்ல நன்றி சொல்றதுல என்ன இருக்கு?” என்று ருத்ரா கேட்டாள்.

“உன்னைக் காப்பாத்துனது சிவபெருமான் இல்லை, ருத்ரா. இந்தப் பாசிதான்!” என்று சிவலிங்கத்தின் மீது படர்ந்திருந்த பாசியைக் காட்டினாள் முகில்.

“என்னைக் காப்பாத்துனது சிவபெருமான் தான்!” என்று விடாப்பிடியாகக் கூறினாள் ருத்ரா.

“இந்தப் பாசி வளர்றதுக்கு ஏதுவான சூழல் இங்க இருக்கு. ஒருவேளை காற்றோட்டமும் இங்க அதிகமா இருக்கலாம். அதனாலதான் உனக்கு இப்போ மூச்சுவிட முடிஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் சிவலிங்கம்தான் காரணம்னு சொல்ல முடியாது!” என்று வழக்கம்போலத் தன்னுடைய அறிவியல் விளக்கத்தை அளித்தாள் முகில்.

“சிவபெருமான் எந்த வடிவிலும் இருப்பார். செடி வடிவில் வந்து என்னைக் காப்பாத்தியிருக்கார். அதுல உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்ட ருத்ரா, அதற்கு மேல் வாதிட விரும்பாமல் மனமுருகச் சிவபெருமானை வேண்டினாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த பரமேஷின் மனம் இன்னும் அமைதியடையவில்லை. சில நிமிடங்களுக்கு முன்பு அவள் மயங்கிச் சரிந்த காட்சி அவனுடைய கண்களை விட்டு அகலவில்லை. அவளை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஏற்பட்ட தவிப்பிலிருந்து அவனால் இன்னும் மீள முடியவில்லை.

அப்போது திடீரென்று அவர்களுக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது.ஐந்து பேரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

இருளுக்குள் இருந்து நிழல்களைப் போல வந்த நான்கு பேர், எதுவும் பேசாமல் அவர்களைச் சுற்றி வளைத்து நின்றனர்.

“யாரு நீங்க?” என்று அஜித் கேட்க, அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.

என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் ஐந்து பேரும் திடுக்கிட்டு நின்றனர்.

தொடரும்…

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம், நண்பர்களே!

நிறைகளாக இருந்தாலும் குறைகளாக இருந்தாலும் உங்கள் விமர்சனத்தில் தெரிவிக்கவும், நண்பர்களே! 🤗🤗