அதை எதிர்பார்க்காத பரமேஷ், “உட்காரு, எந்திரிக்காத! படகு கவிழ்ந்திடும்!” என்று எச்சரித்தான்.
ஆனால்..அவன் எச்சரித்து முடிப்பதற்குள், ருத்ரா எழுந்ததால் படகு நிலைதடுமாறி, இருவரும் இருந்த படகு கவிழ்ந்தது.
இருவரும் தண்ணீருக்குள் ‘தொப்’ என்று விழுந்தனர். ருத்ராவின் மார்புப் பகுதி வரை தண்ணீரில் மூழ்கியிருக்க, கழுத்துக்கு மேல் முகம் மட்டும் வெளியே தெரிந்தது. அணிந்திருந்த தாவணி முழுவதும் நனைந்திருக்க, முகத்தில் அசட்டுச் சிரிப்புடன் பரமேஷைப் பார்த்தாள். அவனும் உடல் முழுவதும் நனைந்திருக்க, ருத்ராவைப் பார்த்தான்.
சரியாக அந்தச் சமயம், “சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா? நியாயமா? காதலன் கேள்விக்குக் கண்களுக்குப் பதில் என்ன மௌனமா? மௌனமா? அன்பே எந்தன் காதலைச் சொல்ல நொடி ஒன்று போதுமே; அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே!…” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
இருவரின் கண்களும் சந்தித்துக்கொள்ள, பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் பரமேஷ், ருத்ராவைப் பார்த்துக் கேட்பதுபோல் இருந்தன. மெய்மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, குறுக்கே இந்தக் கௌசிக் வந்தான் என்பதுபோல் விடுதி ஊழியர் ஒருவர் அருகில் வந்து, “சார், மேடம், உங்களுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே?” என்று கனிவாகக் கேட்டார்.
மெல்லிசையிலிருந்து விடுபட்ட இருவரும், அவருடைய குரல் கேட்டு அவரைப் பார்த்தனர்.
“ஓகேதான்!” என்று இருவரும் ஒரே சமயத்தில் கூற, அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சென்றார் ஊழியர்.
“இதுக்குத்தான் நீ துடுப்பு போட வேண்டாம்னு சொன்னேன்!” என்று அவளுடைய நிலையைப் பார்த்தபடி கூறினான்.
“இப்ப அதுல என்ன ஆயிடுச்சு? ஒண்ணும் ஆகலையே!” என்று எதுவும் நடக்காததுபோல் கூறினாள்.
அந்தப் பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க, “இந்தப் பாட்டு எங்கிருந்து கேட்குதுங்க?” என்ற யோசனையுடன் கேட்டாள் ருத்ரா.
“இங்க பக்கத்துல இசைக்கச்சேரி நடக்குது. அங்க போடுற பாட்டுதான் இங்க வரை கேட்குது.”
அதைக் கேட்டதும் புருவங்களை உயர்த்தி வியப்பைக் காட்டியவள், “இங்க இசை நிகழ்ச்சி வேற நடக்குமா?!” என்று ஆச்சரியத்துடன் வினவினாள். அவளுடைய கண்களிலேயே, அங்கு செல்ல வேண்டும் என்று அவள் ஆசைப்படுவதைப் புரிந்துகொண்டான் பரமேஷ்.
இருவரும் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்தனர். உடல் முழுவதும் நனைந்திருக்க, மெல்லிய காற்று அவளை வருடிச் செல்ல, குளிரில் லேசாக நடுங்கினாள் ருத்ரா.
ஊழியர் ஒருவர் அகலமான இரண்டு பெரிய துண்டுகளைப் பரமேஷிடம் நீட்டினார். அவற்றை வாங்கியவன் ஒன்றை ருத்ராவிடம் கொடுத்தான். அவள் குளிரில் உடலைச் சுற்றித் துண்டால் மூடிக்கொண்டாள். சிறிது நேரத்திலேயே, துண்டு உடலில் இருந்த ஈரத்தை உறிஞ்சியதால் ஓரளவுக்குச் சாதாரண நிலைக்கு வந்தாள்.
“வா, நம்ம ரூமுக்குப் போகலாம்!” என்று பரமேஷ் அழைக்க, தன் ஈரமான உடையை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டுப் பரமேஷை முறைத்தாள்.
அவளுடைய முறைப்பைப் பார்த்துக் குபீரென்று சிரித்தவன், “ரூமுக்குப் போகலாம்னு கூப்பிட்டதுக்கு எதுக்கு இவ்வளவு முறைப்பு? நீ டிரெஸ் மாத்த வேண்டாமா?” என்றான்.
“மாத்தணும்!” என்று வெட்கமும் தயக்கமும் கலந்த குரலில் கூறினாள்.
“அப்புறம் என்ன, வா!” என்று பரமேஷ் முன்னால் செல்ல, அவனுக்குப் பின்னால் துண்டை உடலைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு சென்றாள்.
இருவரும் அறைக்குள் சென்றதும், ருத்ரா வேகமாகத் தன் மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். நீச்சல் குளத்தில் கலந்திருந்த குளோரின் தண்ணீரினால் உடலில் ஒருவித வித்தியாசமான உணர்வு ஏற்பட, ஷவரைத் திறந்து குளிக்க நினைத்தாள்.
அங்கு இருந்த குளியல் தொட்டியைப் பார்த்தவள், ‘எப்படி இப்படியெல்லாம் பணக்காரங்க குளிக்கிறாங்களோ?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
பிறகு, ஷவரை எப்படி இயக்குவது என்று தெரியாமல் தேடினாள். அப்போதுதான் ஷவரின் படத்துடன் சிறியதாக ஒரு பட்டன் இருப்பதைப் பார்த்தவள், அதைத் தொட்டாள். உடனே அருவிபோல் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்க, மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, குளியலறைக்குள்ளேயே உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.
அப்போது பரமேஷும் உடை மாற்றித் தயாராக அவளுக்காகக் காத்திருந்தான்.
“டிரெஸ் மாத்திட்டியா? இசைக்கச்சேரிக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அதைக் கேட்டதும் அவளுடைய முகத்தில் புன்னகை பூத்தது. ஆனால், அதை உடனே மறைத்துக்கொண்டு, “இசைக்கச்சேரி எல்லாம் எதுக்கு? அதெல்லாம் வேண்டாங்க!” என்று மறுத்தாள்.
“சும்மா எவ்வளவு நேரம் ரூம்ல இருப்ப? சும்மா வா!” என்று அழைத்தான்.
“ஒரு நிமிஷம், தலை மட்டும் வாரிட்டு வந்திடுறேன்!” என்றவள் சீப்பை எடுத்து, கண்ணாடி முன் நின்று தலை வாரினாள்.
கண்ணாடியில் தெரிந்த அவளுடைய பிம்பத்தைப் பின்னால் நின்று கண் இமைக்காமல் ரசித்துப் பார்த்தான் பரமேஷ். அதில் தெரிந்த அவளுடைய கண்கள் அவனை வெகுவாகக் கவர்ந்திழுத்தன.
‘என்ன பண்ற பரமேஷ் நீ? உன்னை நம்பி அனுப்பி வச்ச பொண்ணை இப்படியா பார்ப்ப?’ என்று அவன் மனம் கேள்வி எழுப்பியது.
‘நா ஒண்ணும் தப்பா பார்க்கலையே… ஜஸ்ட் பார்க்கத்தானே செஞ்சேன்!’ என்று மனதிற்குப் பதில் கூறினான்.
‘நடிக்காத… நீ அவளைக் காதலிக்கத்தானே?’ என்று மனம் மீண்டும் கேட்க,
‘அதெல்லாம் இல்லையே!’ என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.
கண்ணாடியில் தெரிந்த பரமேஷின் உதடுகள் முணுமுணுப்பதைக் கவனித்த ருத்ரா, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
ருத்ரா தயாரானதும், இருவரும் இசைக்கச்சேரி நடக்கும் அரங்கத்திற்குச் சென்றனர். அது ஒரு திறந்தவெளி அரங்கமாக இருந்தது. உயர்ரக மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருக்க, பலர் ஏற்கெனவே அமர்ந்து இசையை ரசித்துக்கொண்டிருந்தனர். அங்கே காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர்.
முதலில் டிரம்ஸின் தாளத்தோடு தொடங்கிய இசை, பின்னர் பியானோவின் இசையில் தொடர்ந்தது. நடுவில் புல்லாங்குழல் இசைக்கப்பட, இறுதியாகக் கிட்டாரின் இசையோடு அந்தப் பாடல் முடிந்தது.
அவர்கள் இசையை ரசித்துக்கொண்டிருக்கும்போதே, ஊழியர் ஒருவர் தட்டில் குளிர்பானங்களைக் கொண்டுவந்து நீட்டினார். அதிலிருந்து இரண்டு ஜூஸ்களை எடுத்தவன், ஒன்றை ருத்ராவின் கையில் கொடுத்துவிட்டு, மற்றொன்றைக் குடிக்கத் தொடங்கினான்.
இசை அவ்வளவாகச் சுவாரசியமாக இல்லாததால், ருத்ரா அருகில் இருந்த கடற்கரையை நோக்கினாள். இசையில் பரமேஷுக்கும் துளியும் ஆர்வம் கிடையாது. அவளுக்காகத்தான் இத்தனை நேரம் வேறு வழியில்லாமல் அங்கு அமர்ந்திருந்தான்.
“பாட்டுக்கச்சேரி போர் அடிக்குது. அங்க போவோமா?” என்று கடற்கரையைச் சுட்டிக்காட்டினாள் ருத்ரா.
“அதுக்கென்ன, போகலாமே!” என்றவனின் இதழில் புன்னகை மலர்ந்தது.
‘நல்லவேளை, தப்பிச்சேன்!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
இருவரும் கடற்கரை மணலில் ஒன்றாக நடக்கத் தொடங்கினர். சிறிது தூரம் சென்றதும், ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து இருவரும் அமர்ந்தனர்.
அந்த இரவில் பௌர்ணமி நிலவு வானத்தை முழுவதும் ஆக்கிரமித்து, தன் ஒளியை வீசிக்கொண்டிருந்தது. விண்மீன்கள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. கடல் அலைகள் இருவரின் கால்களையும் தொட்டுத் தழுவிச் சென்றன. அந்த அழகிய, அமைதியான, ரம்மியமான சூழல் இருவருக்கும் ஒருவித இன்பத்தை அளித்தது.
‘இப்படியே காலம் சுழலாமல் நின்றுவிடக் கூடாதா? இப்படியே என் காலம் செல்லக்கூடாதா? இந்த நிலை என் ஆயுள் முழுவதும் தொடரக்கூடாதா?’ என்று ருத்ராவின் அருகாமையில் பரமேஷின் மனம் பித்தானது.
பரமேஷ், ருத்ராவை ரசித்துக்கொண்டிருக்க, அவளோ கன்னத்தில் கை வைத்தபடி கடலை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆனால், பரமேஷின் கண்களோ அவளுடைய அழகிலேயே மெய்மறந்து திளைத்திருந்தன.
நிமிடங்கள் நொடிகளாகக் கரைந்து ஓடின.
“கடல் அழகா இருக்குல்ல?” என்று கொந்தளித்து மேலெழும் கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டே கேட்டாள் ருத்ரா.
ஆனால், பரமேஷின் கண்களோ அவளுடைய அழகில் மெய்மறந்து திளைத்திருந்தன. அவனுடைய செவிகளில் ருத்ரா பேசியது விழவில்லை.
எந்தப் பதிலும் வராததால், ருத்ரா திரும்பிப் பரமேஷைப் பார்த்தாள். அவனுடைய கண்கள் அவளையே நோக்கியிருந்தன. அதைக் கண்டவள், அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.
சில நிமிடங்கள் அவனுடைய கண்களில் தெரிந்த உணர்வுகளை ரசித்தவளின் நினைவில், அரசர் சம்பன் கூறியது சட்டென்று தோன்றியது. உடனே சுயநினைவுக்கு வந்தவள், முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் மணலிலிருந்து எழுந்தவள், “போலாமா?” என்றாள்.
அப்போதும் பதில் வரவில்லை.
“உங்களைத் தான்! கிளம்பலாம், வாங்க!” என்று சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டாள்.
அதில்தான் தன் சுயநினைவுக்கு வந்தவன், “போலாமே!” என்று கூறியபடி எழுந்தான்.
இருவரும் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினர். இருவரின் உடலையும் மெல்லிய காற்று தீண்டிச் செல்ல, அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி மெல்லக் குறைந்தது. அப்போது பரமேஷின் கரங்கள் ருத்ராவின் கரங்களை உரசின.
அவனுடைய கரங்களின் தொடுகையை உணர்ந்த ருத்ராவின் உதட்டில் புன்னகை பூத்தது. ஆனால், அதை அவனுக்குத் தெரியாதவாறு மறைத்துக்கொண்டு, அவனை விட்டு சிறிது விலகி நடந்தாள்.
அவளுடைய விலகல் பரமேஷின் மனதைச் சற்றே நெருடியது. அவனும் அவளிடமிருந்து சிறிது இடைவெளி விட்டு நடக்கத் தொடங்கினான்.