முரசு கொட்டப்பட, போட்டி தொடங்கியது. அரசர் அரியணையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

சுற்றிலும் இருந்த வீரர்கள் ஆர்ப்பரிக்க, ருத்ராவிற்கும் அரசருக்கும் இடையில் வாள் சண்டை தொடங்கியது.

அரசரின் வாள் மிகுந்த பலத்துடன் தாக்க, ருத்ராவின் வாள் பின்வாங்கிக் கொண்டே சென்றது. அவளுக்குள் மீண்டும் ஏதோ புகுந்த உணர்வு ஏற்பட, வேகம் எடுத்துத் தன் வாளால் அரசரைத் தாக்க ஆரம்பித்தாள்.

ருத்ராவின் வாள் தொடர்ந்து வேகமாக வீசப்பட, அவளது தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அரசரின் வாள் பின்னோக்கிச் சென்றது. சுற்றிலும் இருந்த காவலர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அரசர் மட்டும், ருத்ராவின் வேகத்தை சமாளித்துக்கொண்டே சரியான தருணத்திற்காகக் காத்திருந்தார். அடுத்த நொடி, அரசரின் வாள் ஒருமுறை சுழன்று லாவகமாக ருத்ராவின் வாளைத் தூக்கி எறிந்தது.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ருத்ரா, தன் இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அரசரின் வாள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, அந்தச் சிறிய கத்தியால் அவரது வாளைத் தடுத்து பின்வாங்க வைத்தாள்.

“சிறிய கத்தியால் அரசரின் வாளைத் தடுக்கிறாளா?” என்று அங்கிருந்த காவலர்களில் ஒருவன் ஆச்சரியத்துடன் கூறினான்.

சிறிய கத்தியால் பெரிய வாளைத் தடுத்ததைத் தளபதி விஜயன் முதற்கொண்டு அங்கிருந்த காவலர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால் அரசரின் கண்களோ, அவள் கையில் இருந்த அந்தக் கத்தியிலேயே நிலைகுத்தி நின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ருத்ரா, தன் சிறிய கத்தியால் அரசரின் கரங்களைத் தாக்கினாள். அதில்  வாள் அவரது கைகளில் இருந்து நழுவிக் கீழே விழுந்தது.

எந்த ஆயுதமும் இல்லாமல் நின்ற அரசரைப் பார்த்து, “அரசே, என்னை மன்னிக்க வேண்டும். நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதி வேண்டும்” என்று ருத்ரா வேண்டிக்கேட்டுக்கொண்டாள்.

அப்போது சரியாக முன்னால் வந்த தளபதி விஜயன், “அரசே, இவர்கள் நம் விதிமுறைகளை மீறியுள்ளனர். வாள் கீழே விழுந்ததுமே அவர்கள் தோற்றுவிட்டார்கள். நம் விதிமுறைக்குப் புறம்பாகக் கத்தியை எடுத்துத் தங்களை காயப்படுத்தியுள்ளனர். இவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தார்.

அதற்குச் சற்று பயத்துடன் முன்னால் வந்த ருத்ரா, “மன்னா! நிராயுதபாணியாக இருந்த என் மீது தாங்கள் தாக்க முற்பட்டதால்தான் நான் என் கத்தியை உபயோகித்தேன். தங்களைக் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா” என்று தன் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொண்டாள்.

“அரசே, இவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். விதிமுறையை மீறியவர்கள் இவர்கள். இப்போது தங்கள்மீதே குற்றம் சுமத்துகிறார்கள்” என்று அறை அதிரக் கூறினான் விஜயன்.

“சற்று அமைதி அடையுங்கள், தளபதியாரே!” என்று விஜயனைச் சாந்தப்படுத்தினார் அரசர்.

ருத்ராவையும் மற்ற நண்பர்களையும் புருவம் உயர்த்தி ஒருமுறை பார்த்தவர், மன்னரின் ஆணைக்கு இணங்க அமைதியானார்.

“உங்களை இங்கிருந்து செல்ல அனுமதிக்கிறேன். ஆனால், அதற்கு ஈடாக இந்தக் கத்தி எனக்கு வேண்டும்” என்று விந்தையான கோரிக்கையை வைத்தார் அரசர் சம்பன்.

இதில் பதறிய ருத்ரா, “மன்னா, என்னை மன்னிக்க வேண்டும். இது எனக்குச் சொந்தமான பொருள் இல்லை. இதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை என்னிடம் உள்ளது” என்று விளக்கமளித்தாள்.

“இதற்குச் சொந்தமான நபர் யார் என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்” என்று கூறிய அரசர், ருத்ராவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தார்.

அவரது அறைக்குள் சென்றதும், மரப்பெட்டி ஒன்றை எடுத்து வந்து அதனை மெல்லத் திறந்தார். அதற்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியம் ஒன்றை எடுத்து விரித்து ருத்ராவிடம் காட்டினார்.

அதனைப் பார்த்த ருத்ராவின் கண்கள் வியப்பில் விரிந்தன.

ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தவள், தன்னையே பார்ப்பது போல உணர்ந்தாள். அதைவிட அதிர்ச்சியாக, அந்தப் பெண்ணின் கையில் இருந்த கத்தி, இப்போது தன் கையில் இருந்த அதே கத்தியாக இருந்தது.

அந்த ஓவியத்தையே ருத்ரா அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, அரசர் சம்பனின் கண்கள் கலங்கின.

திடீரென்று என்ன நினைத்தாரோ, ருத்ராவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கக் கீழே குனிந்தார்.

சற்றும் எதிர்பாராத ருத்ரா பதறிப்போய், உடனே தன் கால்களைப் பின்நோக்கி எடுத்துக்கொண்டாள்.

“மன்னா, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டின் மன்னர். என் காலில் எப்படி விழலாம்?” என்றாள்.

“என் தாயின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டார் அரசர்.

இதைக் கேட்ட ருத்ரா அதிர்ச்சியுற்று, “நான் எப்படி உங்களுக்குத் தாயாவேன், மன்னா?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

ஓவியத்தை மீண்டும் அவளிடம் காட்டிய அரசர் சம்பன், “இந்த ஓவியத்தில் இருப்பவர் என் தாயார் காயத்திரி தேவி அவர்கள்” என்றார்.

“அவர்களைப் போல் நான் இருப்பதால் நான் உங்கள் தாய் இல்லை, மன்னா” என்று மறுத்தாள் ருத்ரா.

சில நொடிகள் ருத்ராவையே பார்த்துக்கொண்டிருந்த அரசர், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

“என் தாயின் வாள் திறமையை நான் அறிவேன். அதுமட்டுமின்றி, ‘நானே மறுஜென்மத்தில் வந்து உன்னைச் சந்திப்பேன்’ என்று என்னிடம் வாக்களித்திருந்தார். நீங்கள் என் தாய் தான்” என்று தன்னிலை விளக்கியவர், கண்ணீரோடு ருத்ராவை நோக்கினார்.

அரசர் சம்பனின் கண்ணீர்த் துளிகளைக் கண்ட ருத்ராவின் கண் முன் பல பழைய நினைவுகள் வந்து சென்றன. வாள் சுழலும் காட்சியும், அரண்மனை மண்டபமும், யாரோ தன்னை அழைக்கும் குரலும் என சில காட்சிகள் கண்முன்னே மின்னி மறைந்தன.

அதில் எதுவும் புரியாமல் ருத்ரா குழம்பிக்கொண்டிருக்கும்போதே, அவளுக்கு முன்னால் மெல்ல ஓர் உருவம் தோன்றியது.

அது ராணி காயத்திரி தேவி.

ருத்ராவைப் போன்றே தோற்றம் கொண்டிருந்த அவர், போர் செய்யும் வேளையில் அணியும் கவசகுண்டலங்களுடன், உறையில் வாளுடன் வீரமிக்க பெண்மணியாகக் காட்சியளித்தார்.

தன் தாயின் உருவத்தைக் கண்ட அரசர் சம்பன், கண்ணீர் மல்க அவரது காலில் பணிந்து வணங்கினார்.

நடப்பது எதுவும் நம்ப முடியாமல் ருத்ரா அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த காயத்திரி தேவி, “நீ செல்லும் இந்தப் பயணம் உன் கடந்தகால நினைவுகளை கண்முன்னே காட்டும். கூடிய விரைவில் அது நிகழும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

அவர் மறைந்ததும், மரப்பெட்டியில் இருந்த இன்னொரு வரைபடத்தையும் அரசர் எடுத்துக் காட்டினார்.

அதில் இருந்த உருவத்தைப் பார்த்ததும் ருத்ராவின் முகம் மாறியது. அவளது கண்கள் வியப்பில் ஆழ்ந்தன. ஒன்றும் புரியாமல் அந்த உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்தப் படத்தில் இருந்த நபரைப் பற்றி அரசர் ரகசியமாக அவளிடம் கூறியதும், ருத்ரா சற்று உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

“இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம். நேரம் வரும் வேளையில் அதுவே வெளிப்படும்” என்று மன்னர் கூற, ருத்ரா தலையாட்டி ஏற்றுக்கொண்டாள்.

பின்னர் மரப்பெட்டியில் இருந்த முக்கோண வடிவில் தங்க நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த பொருளை ருத்ராவின் கைகளில் கொடுத்தார்.

அதைப் பார்த்தவளின் கண்கள் மின்னின.

‘இதுதான் அந்தச் சாவியின் ஒரு பாகம்’ என்பதைப் புரிந்துகொண்ட ருத்ரா, அதைத் தன் கைகளில் வாங்கிக்கொண்டாள்.

தன் கையில் இருந்த அந்தக் கத்தியை அரசர் சம்பனிடம் கொடுத்தாள்.

அதனை வாங்கிய அரசர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைய ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த வீரர்கள், தளபதி என்று அனைவரும் அங்கிருந்து மறைந்தனர்.

இதுவரை ஜொலித்துக்கொண்டிருந்த அரண்மனை மெல்ல இருள ஆரம்பிக்க, கோட்டையை விட்டு வெளியேறினாள் ருத்ரா.

மற்ற அனைவரும் கோட்டையை விட்டு வெளியேறி வெளியில் நின்றுகொண்டிருந்தனர்.

வெளியில் ருத்ரா வருவதைப் பார்த்து ஆனந்தத்துடன் பரமேஷ் அவளருகில் சென்று, “நீ ஓகே தானே, ருத்ரா?” என்று அன்புடன் வினவினான்.

அதற்கு “ஆம்” என்று தலையாட்டினாள்.

அப்போதுதான் அவளது கைகளில் மின்னிக்கொண்டிருந்த  பாகத்தைக் கவனித்தான் பரமேஷ்.

அதனை உற்றுக் கவனித்தவனுக்கு அது என்னவென்று புரிய, மகிழ்ச்சியுடன், “சூப்பர் ருத்ரா! நீங்க கண்டுபிடிச்சிட்டேங்க!” என்று பாராட்டினான்.

பரமேஷ் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே போக, ருத்ராவின் முகத்தில் மட்டும் சோகமே தெரிந்தது.

ரோஸினியின் காதில் இது விழுந்ததும், அவள் ஓடி வந்து அந்தப் பொருளைப் பார்த்தாள். அவளைத் தொடர்ந்து அஜித்தும் முகிலும் வந்தனர்.

அனைவரும் அந்தச் சாவியின் ஒரு பாகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அருகிலிருந்த மரக்கிளை ஒன்று முறியும் சத்தம் கேட்டது.

அனைவரும் ஒரே நேரத்தில் அந்தத் திசையை நோக்கித் திரும்பினர்.

மரங்களுக்கு இடையே நின்றுகொண்டிருந்த உருவம், மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது.

கிட்டன் மரங்களுக்கு இடையே திடீரென வெளிவருவதைப் பார்த்த அஜித், கோபம் கொண்டு அவனை அடிக்கச் சென்றான். நடக்கப்போகும் தவறைத் தடுக்கப் பாய்ந்து வந்த பரமேஷ், அஜித்தின் கரங்களைப் பிடித்துத் தடுத்தான்.

“இந்தக் குள்ளனாலதான் எல்லாம் டா! நீ முதல்ல என் கையை விடு!” என்று கோபத்தில் கத்தினான் அஜித்.

அவனுக்குத் துணையாக முன்னால் வந்த ரோஸினியும் முகிலும், “இந்தக் குள்ளனாலதான் நம்ம இந்தப் பேய்கள் கிட்ட மாட்டிக்கிட்டு இந்நேரம் செத்திருப்போம்!” என்று இருவரும் கத்தினர்.

நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கிட்டன் கோரமாகச் சிரித்தான். அவனின் சிரிப்பொலி அஜித்தின் கோபத்தை இன்னும் அதிகரிக்க, பரமேஷின் கைகளை உதறிவிட்டு மீண்டும் அவனை அடிக்கப் பாய்ந்தான்.

“நான் உங்கள் யாரையும் அழைக்கவில்லையே! நீங்களாக வந்து இதில் சிக்கிக்கொண்டு, பழி என் மீதா?” என்று கேட்டான் கிட்டன்.

அவன் கேட்டதில் இருந்த உண்மை புரிய, அனைவரும் மௌனம் காத்தனர்.

அவர்களுக்கு முன்னால் வந்த ருத்ரா, “சாவி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க,” என்று முகத்தில் புன்முறுவலுடன் கூறினாள்.

அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கிட்டன், “அடுத்து நீங்கள் போக வேண்டியது மகாபலிபுரம்,” என்று கூறியவன், அங்கிருந்த மரங்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

போகும் கிட்டனையே வெறியுடன் அஜித் முறைத்தான். பதிலுக்கு அவனைப் பார்த்துச் சிரித்த கிட்டன், அங்கிருந்து மறைந்தான்.

அனைவரும் மிகுந்த சோர்வுடன் மரநிழலில் அமர்ந்தனர். இரவு தூங்காததால் உறக்கத்தை மனம் நாட, அங்கே இயற்கை அழகை ரசித்தபடி அனைவரும் சிறிது நேரம் தரையில் உறங்கினார்கள்.

கதிரவன் மெல்ல மேலே வரத் தொடங்கிய நேரம் அது. முகத்தில் வெளிச்சம் படர, அனைவரும் எழுந்தனர்.

காட்டில் இருந்து இருள் விலகி, சூரிய வெளிச்சம் மரங்களுக்கு இடையே வீசி, அழகான பசுமையான மரங்களை அற்புதமாகக் காட்டிக்கொண்டிருந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு, கொட்டாவி விட்டபடி அனைவரும் காட்டை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினர். மலைப்பாதையில் கீழே இறங்கி, சிறிய கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

பெட்டிக்கடை ஒன்றில் சிறுவர்களுக்கு மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரைப் பார்த்ததும், அவரின் அருகில் சென்றான் பரமேஷ்.

சுற்றுலாப் பயணிகள் என்று புரிந்துகொண்ட முதியவர், “என்ன தம்பி வேணும்? சொல்லுங்க,” என்று கேட்டார்.

“தாத்தா, இங்க தங்க இடம் பக்கத்துல எதுவும் இருக்கா?” என்று பரமேஷ் கேட்க,

“அதோ அந்தப் பச்சைக் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கே, அதுதான் பா தங்குற இடம்,” என்று அவர் கூறினார்.

“நன்றி தாத்தா,” என்று கூறிய பரமேஷ், மற்றவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு அனைவரும் நடந்து சென்றனர்.

அந்தத் தங்கும் விடுதி சொல்லிக்கொள்ளும்படி வசதிகள் இல்லை என்றாலும், அடிப்படை வசதிகள் இருந்தன. இரவில் சண்டையிட்ட களைப்பு அனைவரின் உடல்களையும் பாதித்திருந்தது. வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் ,”ஐந்து பேருக்கு ரூம் இருக்கும்மா?” என்று பரமேஷ் கேட்க,

“இருக்கு தம்பி… இரண்டு ரூம் இருக்கு. போய் ஓய்வெடுங்க,” என்றாள் அந்தப் பெண். தங்களது விவரங்களைக் கொடுத்துவிட்டு, அனைவரும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

அதன்பிறகு இருந்த களைப்பில் அனைவரும் மதியம் வரை உறங்கினார்கள்.

விரைவில் எழுந்த அஜித், “நான் போய் காரையும், நம்ம திங்ஸையும் எடுத்துட்டு வரேன் டா,” என்று பரமேஷிடம் கூறிவிட்டு பீமன் நீர்வீழ்ச்சிக்குச் சென்றான்.

களைப்பு நீங்க எழுந்த ருத்ரா, பலவித யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ராணி காயத்திரி தேவியின் உருவம் அவள் மனக்கண்ணில் தோன்றியது. ஏன்? எதற்கு? இந்தத் தொடர்பு என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்க, நீண்ட நேரம் யோசித்தாள்.

இப்படியே தனியாக இருந்தால் எதையாவது யோசித்து நம்மை நாமே குழப்பிக்கொள்வோம் என்று நினைத்த ருத்ரா, தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது சரியாக பரமேஷும் அறைக்குள் இருக்கப் பிடிக்காமல் வெளியே வந்தான். ருத்ராவைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

ருத்ராவிற்கு அது மேலும் பலவிதக் குழப்பத்தையே கொடுத்தது. பதிலுக்குச் சிரிக்காமல் அவனைக் கடந்து விடுதியை விட்டு வெளியேறினாள்.

அவளின் செயல்கள் எதுவும் புரியாததால், அவளின் பின்னால் சென்றான் பரமேஷ்.

தன்னைத் தொடர்வதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதவள், கிராமத்தின் இயற்கையைச் சுற்றி முற்றிலும் பார்த்து ரசித்தாள்.

‘என்ன ஒரு அழகிய சூழல்! இதனை விட்டுவிட்டு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதா?’ என்று தன் மனதில் நினைத்தவள், பரமேஷிற்கு முதலில் வழிகாட்டிய பெட்டிக்கடைக்குச் சென்றாள்.

அங்குள்ள குழந்தைகளுக்கான மிட்டாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதில் இருந்த உரல் மிட்டாயைப் பார்த்ததும் ஆசைப்பட்டு, காசு கொடுத்து வாங்கிக்கொண்டாள்.

சிறுவயதில் உரல் மிட்டாய் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். இப்பொழுது அது கிடைப்பது அரிதாகிவிட்டது. அந்த மிட்டாயை வாங்கியதும் ருத்ராவின் முகத்தில் சிறு குழந்தையைப் போன்ற மகிழ்ச்சி தோன்றியது.

வாயில் உரல் மிட்டாயைப் போட்டபடி, “தேங்க்ஸ் தாத்தா,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவளின் சேட்டைகளை ரசித்தபடி பரமேஷ் பின்னால் சென்றான்.

கடைகளையும் வீடுகளையும் கடந்து, மரங்களை ரசித்துக்கொண்டு, இயற்கைக் காற்றை ஆனந்தமாகச் சுவாசித்தபடி, முகத்தில் புன்முறுவலுடன் கைகளை ஆட்டி குதித்துச் சிறுபிள்ளைபோல் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அழகிய புள்ளிமான் ஒன்று குதித்துச் செல்வது போல பரமேஷின் கண்களுக்குத் தெரிய, அவனின் மனம் அவளின் அருகாமையை நாடியது.

விரைந்து அவள் அருகில் செல்ல பரமேஷ் நினைக்கும் போது, திடீரென்று காட்டுப்பாதையை விட்டு வெளியே வர ஆரம்பித்தது ஒரு காட்டுயானை.

அதனைப் பார்த்துப் பதறியவன், ருத்ராவை எச்சரிக்க முன்னால் ஓடினான்.

“ருத்ரா… பின்னாடி வா!” என்று பதற்றத்துடன் கத்தினான்.

தன் முன்னால் யானையைப் பார்த்த ருத்ரா சற்று பயந்து, தன் கால்களைப் பின்னோக்கி வைத்து நடந்தாள்.

அவளைக் கண்டுகொள்ளாத யானை, சாலையைக் கடந்து அந்தப் பக்கம் இருக்கும் கோவிலுக்குச் சென்றது.

ஒன்றும் புரியாமல் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ராவிடம், “நீ என்ன அசையாம நிக்க? அதான் யானை வருதுன்னு தெரியுதுல்ல, பின்னாடி ஓடி வர வேண்டியதுதானே!” என்று அவளின் மேல் உள்ள அன்பினால் கோபத்தில் கத்தினான்.

அதனைப் பொருட்படுத்தாத ருத்ரா, “உஷ்…” என்று வாயின் மேல் தன் விரலை வைத்துக்காட்டி அவனை அமைதிப்படுத்திவிட்டு, யானை செய்யும் செயலைக் கவனித்தாள்.

கோவிலுக்குள் இருந்த சிவபெருமானைத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய யானை, மீண்டும் காட்டிற்குள் சென்றுவிட்டது.

இதனை அற்புதக் காட்சியாகப் பார்த்த ருத்ராவின் ரோமங்கள் சிலிர்த்தன. உடனே அந்தக் கோவிலை நோக்கி விரைந்தாள்.

சிவபெருமான் அழகாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தார். மனம் உருகச் சிவபெருமானை வேண்டிக்கொண்டாள்.

பரமேஷும் தன் இரு கைகளைக் கூப்பி வணங்கினான். அருகில் இருந்த திருநீற்றை எடுத்து, படங்களில் வருவது போல் ருத்ராவிற்குப் பூசிவிட அவனுக்குள் ஆசை எழுந்தது.

‘இதெல்லாம் கனவிலும் நடக்காது,’ என்று தன்னைத்தானே அவன் திருப்திப்படுத்திக்கொண்டிருக்கும் போதே, திருநீற்றை எடுத்து தன் நெற்றியில் பூசிக்கொண்டவள், பரமேஷைத் திரும்பிப் பார்க்காமல் விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அவளின் செய்கை ஒன்றும் புரியாமல் விழித்தான் பரமேஷ்.

இதுவரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவள், ஏன் இப்பொழுது கண்டும் காணாமல் பேசாமல் செல்கிறாள் என்று புரியாமல் குழம்பினான்.

‘பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள முடியாது என்று கூறுவார்கள்… அது இதுதான் போல,’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, ருத்ரா பேசாததால் சோகமாக நடந்து விடுதிக்கு வந்தான்.

அஜித்தும் சரியாக காரைப் பீமன் நீர்வீழ்ச்சியில் இருந்து ஓட்டிக்கொண்டு வந்திருந்தவன், விடுதிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தான்.

பரமேஷைப் பார்த்தவன், “இங்கிருந்து கிளம்புவோமா டா?” என்று கேட்டான்.

அவனுக்குப் பதிலாக, “சரி,” என்று தலையசைத்தான் பரமேஷ்.

இருவரும் சேர்ந்து விடுதிக்குள் சென்று, மற்றவர்களைக் காருக்கு வர அழைத்தனர். அனைவரும் காரில் ஏறிக்கொள்ள, பரமேஷ், “டேய், மகாபலிபுரத்துக்கு வண்டியை விடு,” என்று அஜித்திடம் கூறினான்.

முன்பக்க டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அஜித் சற்று கடுப்புடன், “அந்தக் குள்ளன் சொல்றதை எல்லாம் நம்பி நாம மகாபலிபுரம் போகணுமா டா? ஏற்கனவே அவனை நம்பிப் போய்தான் அந்தப் பேய்கள் கிட்ட மாட்டிக்கிட்டோம்,” என்றான்.

“ஆனா அங்கதான ஒரு பாகம் கிடைச்சது டா. எனக்கு என்னவோ அந்தக் குள்ளன் சொல்ற இடத்துல இரண்டாவது பாகம் கிடைக்கும்னு தோணுது. நீ மகாபலிபுரம் போ,” என்றான் பரமேஷ்.

சற்று கோபத்துடனே மகாபலிபுரத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான் அஜித்.

‘இந்தத் தடவை வேணா நீ தப்பிச்சிருக்கலாம் ருத்ரா… அடுத்த தடவை கண்டிப்பா தப்பிக்க மாட்ட. எனக்கும் பரமேஷ்க்கும் நடுவுல யாரும் வரக்கூடாது,’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, ரோஸினி ருத்ராவை முறைத்துப் பார்த்தாள்.

தொடரும்…