அனைவரும் காவலர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க, ருத்ரா மட்டும், ‘எப்படி அவர்களைத் தாக்கிவிட்டு வெளியில் செல்வது?’ என்று தீவிரமாக மனதில் யோசித்தாள்.
காவலர்களில் ஒருவன், இவர்கள் பேசிக்கொள்ளும் சத்தத்தைக் கேட்டுவிட்டு, அந்த இடத்தை நோக்கி ஈட்டியுடன் நடந்து வந்தான்.
இவர்கள் ஐவரையும் கண்ட காவலாளி, “நீங்கள் அனைவரும் யார்? எதற்காக கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள்?” என்று கேள்விகளை அடுக்கினான்.
அவனின் கேள்விகளுக்கு அனைவரும் மௌனம் காத்தனர்.
அதில் கோபம்கொண்ட காவலாளி, “உங்கள் அனைவரையும் கைது செய்து இப்போதே சிறையில் அடைக்கிறேன்!” என்றான்.
ஆபத்தை உணர்ந்த பரமேஷ் முன்னால் வந்து, “நாங்கள் வழிதவறி இந்த இடத்திற்குள் நுழைந்துவிட்டோம். எங்களை இங்கிருந்து போக விடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.
அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டு, சுற்றிலும் இருந்த அனைவரையும் கவனித்தான் காவலாளி. அவர்களின் உடையும், கைகளில் வைத்திருந்த பொருட்களும் அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின.
“உண்மையை கூறுங்கள். நீங்கள் அனைவரும் யார்? உங்கள் கைகளில் மின்னிக்கொண்டிருக்கும் இந்த ஆயுதம் என்ன செய்யும்?” என்று அலைபேசியை ஆயுதம் என்று நினைத்து கேட்டான் காவலாளி.
ஆயுதம் என்று எதைக் கூறுகிறான் என்று புரியாமல் அனைவரும் விழித்தனர். அதன் பின்னரே, அலைபேசியைத்தான் ஆயுதம் என்று நினைத்துக் கேட்டிருக்கிறான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
“இது ஆயுதம் இல்லை” என்று பரமேஷ் கூறிக்கொண்டு, காவலாளியிடம் அலைபேசியைக் காட்ட நெருங்கினான்.
அந்த ஆயுதத்தை வைத்துத் தாக்க வருகிறான் என்று தவறாக நினைத்த காவலாளி, ஈட்டியால் அவர்களைத் தாக்க முன்னேறினான்.
உடனே அனைவரின் கண்களும் கோட்டைச் சுவரைச் சுற்றிச் சுழன்றன. அருகிலேயே சுவரில் மாட்டப்பட்டிருந்த வாள் கத்திகளை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு, அவனைத் தடுக்கும் விதத்தில் நின்றனர்.
வாளை இறுக்கமாகப் பிடித்திருந்த முகிலின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த காவலன், சற்று தைரியத்துடன் அவர்களை நோக்கி மீண்டும் ஈட்டியைக் குத்தப் பாய்ந்தான்.
வேகமாக ருத்ராவின் மீது பாய்ந்து வந்த ஈட்டியைப் பரமேஷ் தன் வாளால் தடுத்து, அந்த வீரனை ஈட்டியுடன் சேர்த்து பின்னோக்கித் தள்ளினான். அதில் நிலைதடுமாறிய காவலாளி கீழே விழுந்தான். அவனிடம் இருந்த ஈட்டி கீழே விழுந்து, “டங்…” என்ற சத்தத்தை எழுப்பியது.
உள்ளே சென்ற காவலாளியைக் காணவில்லை என்றதும், அடுத்த காவலாளி அறைக்குள் நுழைந்தான்.
தன் கண்முன்னே அடிபட்டு கீழே விழுந்து கிடந்த காவலாளியைப் பார்த்துவிட்டு, கோபத்துடன் அனைவரையும் தாக்கப் பாய்ந்தான். அதில் ஈட்டியின் கூர்மையான நுனியைப் பார்த்து, பின்னால் நின்றிருந்த ரோஸினி ருத்ராவைத் தள்ளிவிட்டாள்.
அவளின் உடலைக் குத்திக் கிழிக்க வந்த ஈட்டியை கூர்மையாகக் கண்ட ருத்ராவிற்குள், நொடிப்பொழுதில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. அவளின் கைகள் தன்னிச்சையாக வாளைப் பிடித்து வெகு லாவகமாகச் சுழற்ற ஆரம்பித்தன.
என்ன நடக்கிறது என்று புரியாமல் ருத்ரா திகைப்பில் தன் கைகளைக் கவனித்தாள். அவளுக்கு முன்பாக இருந்த காவலாளியுடன் சரிக்கு சமமாக வாளைச் சுழற்றி, அவனது ஈட்டியைத் தூக்கி எறிந்தாள்.
அதைக் கண்ட ரோஸினியின் முகம் அஷ்டகோணலாக மாறியது. மற்றவர்களின் முகத்தில் அதுகுறித்து யோசிக்க நேரமிருக்கவில்லை.
“ருத்ரா… நீங்க இப்ப என்ன பண்ணினேங்க?” என்று பரமேஷ் திகைப்புடன் கேட்டான்.
ருத்ராவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவள் தன் கைகளையே பார்த்தபடி, “எனக்கே தெரியல…” என்றாள்.
அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும், இதுதான் சமயம் என்று நினைத்து அந்த அறையை விட்டு ஓடினர். எப்படி இப்படி நடந்தது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்த ருத்ராவின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான் பரமேஷ்.
இவர்கள் ஓடுவதைப் பார்த்த காவலாளிகளில் ஒருவன், “அவர்களைப் பிடியுங்கள்!” என்று சத்தமாகக் கத்திக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.
அதைக் கேட்டு மற்ற காவலர்கள் இவர்களைப் பிடிக்கப் பின்னால் ஓடினர். பல அறைகள் கொண்ட அரண்மனையில் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிய அனைவரும், இறுதியில் ஒரிடத்தில் நின்று மூச்சு வாங்கத் தொடங்கினர்.
அந்த நேரம் சரியாக, எங்கிருந்தோ வந்த காவலாளிகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
சுற்றிலும் காவலாளிகள் வட்டவடிவமாக நிற்க, நடுவில் அனைவரும் மாட்டிக்கொண்டனர். சுற்றியிருந்த காவலாளிகள் அனைவரும் தாக்கத் தொடங்கினர்.
அஜித், முகில், ரோஸினி எவ்வளவு முயன்றும் அவர்களைத் தடுக்க முடியாமல் திணறினர். அவர்களுக்குப் பின்னால் ருத்ரா, சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று புரியாமல் அசைவற்று நின்றுகொண்டிருந்தாள்.
அதனைக் கவனித்த ரோஸினி, காவலாளி ஒருவன் ருத்ராவைத் தாக்க வருவதைப் பார்த்தும் அவனைத் தடுக்காமல் அந்த இடத்தைவிட்டு விலகிக்கொண்டாள். காவலாளியின் வாள் ருத்ராவின் மார்பைக் குறிவைத்து பாய்ந்தது.
‘அவ்வளவுதான்… உன் கதை முடிந்தது’ என்று ரோஸினியின் முகத்தில் குரூரப் புன்னகை மலர்ந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாளைத் தடுத்து, வீரனை வீழ்த்தியிருந்தாள் ருத்ரா.
அதைக் கண்ட ரோஸினியின் முகம் ஏமாற்றத்தில் இருளடைந்தது.
முகத்தில் கம்பீரத்துடன் ருத்ரா வாளைச் சுழற்றத் தொடங்கினாள். அவளுக்குப் பக்கபலமாகப் பரமேஷும் இணைந்துகொள்ள, இருவருக்கும் முன்னால் எதிர்த்து நிற்க முடியாமல் அனைத்து வீரர்களுமே பின்வாங்கினர்.
ருத்ராவின் வாளின் சுழற்சியைக் கண்ட அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிவடைந்தன. பரமேஷுக்கும் நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும், அவளுக்குப் பக்கபலமாக நின்று, அவளின் பின்னால் தாக்க வந்த வீரர்களிடம் சண்டையிட்டான்.
ருத்ராவின் சண்டை நேரம் அதிகரிக்க, அவள் மிக ஆக்ரோஷமாக மாறிக்கொண்டிருந்தாள். ஒரே நேரத்தில் நாலுபேர் தாக்க முற்பட, அதனைத் தன் வாளால் தடுத்து, பின்னால் வேகமாக அனைவரையும் தள்ளினாள். அதில் சில வீரர்கள் தரையில் விழுந்தனர்.
முரசொலி கொட்டப்பட, “அரசர் வருகிறார்… அரசர் வருகிறார்…” என்று அறிவிப்பு அந்தப் பகுதியை ஆக்கிரமித்தது.
விறுவிறுப்பான சண்டைக்கு நடுவில், தொலைதூரத்தில் நடந்து வரும் உருவத்தைப் பார்த்த அனைத்து வீரர்களும் சண்டையை நிறுத்திவிட்டு, தங்கள் ஈட்டிகளைத் தாழ்த்தி தலை வணங்கினர்.
அவர்களின் செய்கைகளிலேயே வருவது மன்னர் என்பதைப் புரிந்துகொண்ட நண்பர்கள் அனைவரும், என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.
பிரகாசமான முகம், நீண்ட அடர்த்தியான மீசை, கட்டுமஸ்தான உடலமைப்பு என அனைத்தும் அவரின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. இளம்வயது மன்னர் ஒருவர், அவர்கள் முன்னால் கம்பீரத் தோற்றத்துடன் அருகில் வந்து நின்றார்.
“இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது தளபதியாரே?” என்று உரத்த சத்தத்துடன் அங்கிருந்த தளபதியைப் பார்த்துக் கேட்டார்.
அரசருக்கு முன்பாக வந்து நின்ற தளபதி விஜயன், “வணங்குகிறேன் அரசே. இவர்கள் நம் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள்” என்று நண்பர் கூட்டத்தைக் கைக்காட்டிக் கூறினார்.
கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு வந்த மன்னரின் கண்கள், ருத்ராவைக் கண்டதும் சுருங்கி விரிந்தன. அருகில் நின்றிருந்த பரமேஷைக் கண்டதும், அவரது மனம் கோபத்தில் கொந்தளித்தது. இருப்பினும் அதனை மறைத்துக்கொண்டு, “நீங்கள் யார்? எதற்காக என் அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?” என்று அரசர் கேள்வி எழுப்பினார்.
முன்னால் வந்து பரமேஷ் பதில் சொல்ல முயல, அரசர், “நீ வேண்டாம். அந்தப் பெண் பதில் சொல்லட்டும்” என்று ருத்ராவைக் கைநீட்டி காட்டிக் கூறினார்.
இதில் சற்று பரமேஷ் குழம்பினாலும், “ருத்ரா, நீயே சொல்லு” என்று கூறிவிட்டு அமைதி காத்தான்.
ஆபத்தை உணர்ந்த ருத்ரா, வாளைக் கீழே இறக்கி, “அரசரே! தங்களை வணங்குகிறேன். காட்டிற்குள் நாங்கள் தொலைந்துவிட்டோம். குள்ளன் ஒருவனது உதவியால் இந்த இடத்திற்கு வழிதவறி வந்து சேர்ந்துவிட்டோம். எங்களை மன்னித்து இங்கிருந்து செல்ல அனுமதியுங்கள்” என்று பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.
அவளின் சாதுரியப் பேச்சை ரசித்த மன்னர் புன்னகைத்தார்.
அவர்களுக்கு முன்பாக வந்த விஜயன், “அரசே! இவர்களை நம்பாதீர்கள். எதிரி நாட்டு ஒற்றர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது” என்றான்.
“ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் தளபதி அவர்களே?” என்று மன்னர் கேள்வி எழுப்பினார்.
“அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளைச் சற்று கவனியுங்கள் அரசே. இது எதுவும் நம் நாட்டவர் ஆடைகள் போல் தோற்றமளிக்கவில்லை. அதனாலே அயல்நாட்டு ஒற்றர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது அரசே” என்று விஜயன் பதிலளித்தார்.
இதனைக் கேட்டு என்ன கூறுவதென்று அனைவரும் நிற்க, ருத்ராவின் முகத்தை அரசர் கூர்ந்து நோக்கினார்.
“மன்னா, நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை. ஆனாலும் நான் உண்மையைக் கூறுகிறேன். இந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் கிடையாது. எங்கள் காலக்கட்டத்தில் மன்னர் ஆட்சி எல்லாம் முடிவுற்று, மக்கள் ஆட்சி தொடங்கிவிட்டது” என்றாள் ருத்ரா.
அவளின் கூற்றைக் கேட்டு நம்பாத பார்வை பார்த்தார் அரசர். அங்கு நின்றுகொண்டிருந்த காவலாளிகளோ, இவர்களின் பேச்சைக் கேட்டு அரசருக்கு முன்பாக புன்னகைக்க முடியாமல் அடக்கிக்கொண்டு நின்றிருந்தனர்.
அரசரின் முகத்தை வைத்தே அவர் அதனை நம்பவில்லை என்று உணர்ந்துகொண்ட ருத்ரா, “நாங்கள் கூறுவது உண்மைதான் மன்னரே. அதற்கான ஆதாரம் இதோ, எங்கள் கைகளில் இருக்கும் அலைபேசிதான்” என்று தன் அலைபேசியை எடுத்து, அதில் வெளிச்சத்தை அடித்துக் காட்டினாள்.
இதுவரை இப்படி ஒரு பொருளைக் கண்டிராத அனைவரும், அலைபேசியை விநோதமாகப் பார்த்தனர்.
“அதனை என்னிடம் தாருங்கள்” என்று கூறி, ருத்ராவிடம் இருந்து அலைபேசியை வாங்கினார்.
விஜயனோ, “அரசே, அதனைத் தொடாதீர்கள். எதுவும் தீங்கு விளைவிக்கும் பொருளாக இருக்கக்கூடும்” என்று எச்சரித்தார்.
அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அலைபேசியை முன்னும் பின்னும் பார்த்து அதனை ஆராய்ந்தார். அந்தப் பொருளின் தொழில்நுட்பம் அவருக்குப் புலப்படாததால், மீண்டும் ருத்ராவின் கைகளிலேயே கொடுத்தார்.
“இதனை எதற்காக உபயோகப்படுத்துவீர்கள்?” என்று அந்தப் பொருளைப் பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கில் அரசர் கேட்டார்.
“இந்தப் பொருளை நாங்கள் பலவிதமாக உபயோகிப்போம் மன்னா. ஆனால் முக்கியமாக, தூரத்தில் இருப்பவர்களிடம் பேசுவதற்காகவே பயன்படுத்துகிறோம்.”
அதைக் கேட்ட மன்னரின் கண்கள் ஆச்சரியத்தில் மின்னின.
“இந்தப் பொருளை வைத்து தூரத்தில் இருப்பவர்களிடம் பேச முடியுமா?!”
“ஆமாம் மன்னா. இந்த உலகத்தில் அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் பேசலாம்.”
“எந்த மூலையில் இருந்தாலுமா?!”
“ஆமாம் மன்னா” என்றாள் ருத்ரா.
மன்னர் சில நொடிகள் ருத்ராவையே கூர்ந்து பார்த்தார். பின்னர், “நீங்கள் கூறுவதை நான் உண்மை என்று ஏற்கிறேன். ஆனால்…” என்று சிறிது இடைவெளிவிட்டு, “நீங்கள் இந்தக் கோட்டையைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால், உங்களில் ஒருவர் என்னை வாள் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும்” என்ற நிபந்தனையை விதித்தார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் பேச்சற்று நின்றனர்.
பரமேஷ் மட்டும் ஆபத்தை உணர்ந்து முன்னால் வந்து, “அரசே, தங்களுக்கு எதிராக நாங்கள் எவ்வாறு ஆயுதம் ஏந்தி வெற்றி பெறுவது? வேறு ஏதாவது வழியிருந்தால் கூறுங்கள். உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த எங்களால் முடியாது. அதுவும் இல்லாமல், எங்களில் யாருக்கும் வாள் சண்டை தெரியாது” என்று மிகுந்த மரியாதையுடன், தன் வார்த்தைகளில் கவனத்தைக் கூட்டிக் கூறினான்.
ருத்ராவின் பக்கம் பார்வையைத் திருப்பிய அரசர், “இந்தப் பெண்ணுடன் நான் வாள் சண்டை புரிய விரும்புகிறேன்” என்று தன் விபரீத ஆசையைக் கூறினார்.
அதைக் கேட்ட பரமேஷின் மனம், ஏதாவது விபரீதம் ருத்ராவிற்கு நடந்து விடுமோ என்றெண்ணிப் படபடக்கத் தொடங்கியது.
அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “மன்னிக்க வேண்டும் அரசே! ருத்ராவிற்கும் வாள் சண்டை போடத் தெரியாது. தயவு கூர்ந்து எங்களை கோட்டையைவிட்டு செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மீண்டும் பணிவுடன் கேட்டான்.
அதில் புன்னகைத்த அரசர், “இந்தப் பெண்ணிற்கு வாள் சண்டை தெரியாதா? நான் தான் அந்தப் பெண்ணின் வாளின் சுழற்சியை என் கண்களாலேயே பார்த்தேனே! என்னிடம் பொய் உரைக்காதீர்கள்” என்ற எச்சரிக்கைத் தோரணையுடன் கூறினார்.
இதற்கு மேலும் வாதம் நீளுவதை விரும்பாத ருத்ரா, “உங்கள் கோரிக்கைக்கு நான் ஒப்புக்கொள்கிறேன் மன்னா” என்றாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட ரோஸினியின் இதழ்கள் புன்னகையை உதிர்க்க, பரமேஷின் உள்ளமோ ஆபத்தை உணர்ந்து ருத்ராவைக் காப்பாற்ற வழி தேடியது.
“சரி, வாருங்கள். சண்டை நடக்கும் இடத்திற்குச் செல்லலாம்” என்று அரசர் கூற, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“இந்த இரவில் எதற்கு அரசரே போட்டி? நாளை காலையில் போட்டியை வைத்துக்கொள்வோம்” என்று, விடிந்தால் கோட்டையில் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் கூறினான் பரமேஷ்.
“போட்டி என்று முடிவாகிவிட்டால் அதை உடனே நடத்திவிட வேண்டும்” என்று அரசர் புன்முறுவலுடன் கூறினார்.
வேறு வழியில்லாமல் அனைவரும் தலையாட்டி ஒப்புக்கொள்ள, போட்டிக்குத் தேவையான ஆயத்தப் பணிகளைச் செய்யச் சொல்லிவிட்டு அரசர் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
போட்டிக்குத் தேவையான ஆயத்தப் பணிகள் முடிவடைய, காவலாளிகள் கூட்டம் கூடி நிற்க, அரசர் தன் அரியணையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
சற்று பயத்துடன், கைகள் நடுங்க வாளைப் பிடித்தபடி நின்றாள் ருத்ரா. அவளருகில் சென்ற பரமேஷ், “பயப்படாதேங்க. உங்களை நீங்க முதலில்ல நம்புங்க. கண்டிப்பாக நீங்க தான் ஜெயிப்பிங்க ருத்ரா” என்று அவளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகப் பேசினான்.
‘இப்பதான் இந்த மோட்டிவேஷன் பேச்செல்லாம் பேசணுமா? நானே பயத்துல என்ன செய்றதுனு தெரியாம நடுங்கிட்டு இருக்கேன்… இதுல இவன் வேற!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ருத்ரா.
நெடுநேரமாக யோசனையில் நிற்பவளைப் பார்த்தவன், “உங்களுக்கு வாள் சண்டை தெரியும் தானே?” என்று அவளின் விழிகளில் வேகமாக அலைபாய்வதைக் கவனித்து, சந்தேகத்துடன் கேட்டான்.
உண்மையை கூறிவிடுவோம் என்று முதலில் நினைத்த ருத்ரா, “தெரியாது…” என்று தலையை ஆட்டுவதற்குள், முரசொலி “டமார்…” என்று அடிக்கத் தொடங்கியது.
அதில் பரமேஷின் கவனம் கலைந்தது.
“எனக்கு நம்பிக்கை இருக்கு ருத்ரா. நீங்க தான் ஜெயிப்பிங்க” என்று மீண்டும் நம்பிக்கை அளித்துவிட்டு, நண்பர்கள் அனைவரும் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டான்.
ருத்ராவின் அழிவைக் காண ரோஸினியின் கண்கள் ஆர்வமாயின. நடக்கப்போகும் போட்டியை ஆர்வத்துடன் காணத் தொடங்கினாள்.
முரசு கொட்டப்பட, போட்டி தொடங்கியது. அரசர் அரியணையிலிருந்து கம்பீரமாகக் கீழே இறங்கி நடந்து வந்தார்.