பச்சைபசேல் வயல்வெளியும், அடர்ந்த காடுகளையும் கொண்ட அழகிய கிராமம் சிவஞானபுரம்.
இப்பொழுதுதான் சிறிதாக வளர்ச்சி அடைந்து கொண்டு வருவதற்கான அறிகுறியாய் சில சிமெண்ட் வீடுகள் கண்களுக்குத் தென்பட ஆரம்பித்திருந்தன. மற்ற வீடுகள் எல்லாம் முக்கால் வாசி ஓட்டு வீடாகவும், மீதி மண் வீடாகவும் காட்சியளித்தன.
அந்த கிராமத்தில், கோவிலுக்கு அருகில் இருக்கும் ஓட்டு வீட்டில்தான் நம் கதையின் நாயகி வசிக்கிறாள்.
படுக்கையறை, சமையலறை, சாமான்கள் வைக்கும் அறை என்று மூன்று சிறிய அறைகளைக் கொண்ட வீடு அது. தரை தளத்தில் பூசெங்கல் பதித்திருக்க, மேல் பாகம் பனைமரத்தால் ஆன கட்டைகளுக்கு நடுவே ஓடு சொருகப்பட்டு, இயற்கை குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது.
அங்கிருந்த படுக்கையறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள், “ஆ!” என்று அலறியபடி கனவைக் கலைத்துக் கொண்டு திடீரென எழுந்தாள் ருத்ரா.
பயத்தில் சிறிது நேரம் மூச்சு வாங்கியவள், அருகில் இருந்த அறைக்குச் சென்று குடத்தில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்தாள்.
பின்னர் சகஜமான நிலைக்குத் திரும்பியவள், மீண்டும் படுக்கையறைக்குச் சென்று அலமாரியில் எதையோ தேடினாள். அவளது கண்கள் தேடியது அங்கு இல்லையென்றதும்,
“அம்மா! அம்மா!” என்று கத்த ஆரம்பித்தாள்.
வட்ட முகம், கண்ணில் கருநீல மை தீட்டியிருந்தாள், மாநிறம். கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி ‘சலசல’வென ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. அதற்குத் தாளம் போடுவதுபோல், அவள் அணிந்திருந்த கொலுசு ‘ஜல்ஜல்’ என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தது. சிவப்பு மற்றும் நீல நிறம் கலந்த தாவணி அணிந்து அழகு பதுமையாய் நின்றிருந்தாள்.
“என்னடி உனக்கு இப்போம் என்ன பிரச்சனை?” என்று கடுகடுப்புடன் கேட்டுக் கொண்டே சமையல் கரண்டியோடு வந்தார் அவளின் அம்மா கோகிலா.
“நா சாப்பிட ஆசையா வாங்கி வச்சிருந்த அல்வாவை எடுத்து அவன் தின்னுட்டான் மா,” என்று தன் அண்ணன் மீது குறை கூறினாள்.
அதைக் கேட்ட கோகிலாவோ கோபமடைந்து,
“அவன் தின்னா என்னடி உனக்கு? பாவம், அவனே வேகாத வெயில்ல பட்டணத்துக்குப் போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான். நீ வேற வாங்கித் தின்னுடி,” என்று சொல்லிவிட்டு, தான் பாதியில் விட்ட சமையலைச் செய்யச் சென்றுவிட்டார்.
வெறுமையாக இருந்த பிளாஸ்டிக் கவரைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டாள்.
‘இதுவும் போச்சா? கஷ்டப்பட்டு லைன்ல நின்னு இருட்டுக்கடை அல்வான்னு வாங்கிட்டு வந்து வைக்க, அவன் நோகாம தின்னுட்டுப் போறான். இருடா மவனே! உனக்கு ஒருநாள் இருக்கு!’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
இதற்கு மேலும் அறைக்குள் இருக்கப் பிடிக்காமல் அதைவிட்டு வெளியே வந்தாள்.
பயன்படுத்தப்படாத விறகு அடுப்பு ஒன்று யாரும் அற்ற அனாதையாய் கிடந்தது.
மசாலாவை அரைத்து விட்டு, பாதி கழுவியும் கழுவாமலும் காட்சியளித்துக் கொண்டிருந்தது உரல். மறுபுறம், இரவு பெய்த மழையால் ஓரமாய் இருந்த ஆட்டுக்கல் குழியில் மழைநீர் தேங்கி இருந்தது.
அதைப் பார்த்தவள், அதன் அருகில் இருந்த தேங்காய் சிரட்டை ஒன்றை எடுத்து தண்ணீரை வெளியேற்றினாள்.
அனைவரும் அமரும் திண்ணையைப் பார்த்தாள். தூசி படர்ந்து கிடந்தது. அதனைக் கூட்டி சுத்தம் செய்தாள்.
அவ்வளவுதான் இன்றைக்கான வேலை முடிந்தது என்பது போல்,
“அம்மா… நா அத்தையைப் பார்த்துட்டு வரேன்,” என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும், இதுவரை கோகிலா அடக்கி வைத்திருந்த வலி அனைத்தும் கண்ணீராய் கொட்ட ஆரம்பித்தது.
தன் மகளின் நிலையை நினைத்தவருக்கு இன்னுமே அழுகை முட்டியது.
‘உன்னைத்தான் தாயி நம்பியிருக்கேன்… என் பொண்ணை எப்படியாவது காப்பாத்திக் கொடு,’ என்று தன் இஷ்ட தெய்வத்தை வணங்கினாள்.
அதைக் கேட்டதாலேயே சற்று பயத்துடன், ஆடுகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
வரிசையாக ஆடுகள் செல்ல, அவற்றை மேய்த்துக் கொண்டு கையில் கம்புடன் ஒருவன் பின்னால் சென்றான்.
புது முகமாக இருக்க, ‘யார் இது? புதுசா இருக்கு?’ என்று யோசித்தவள், ‘பக்கத்து ஊர்க்காரன் போல’ என்று நினைத்துக் கொண்டு கடந்து சென்றாள்.
ஒரு இடத்தில் சாலை இரண்டு வழியாகப் பிரிந்தது.
அதில் தன் வலதுபக்கச் சாலையைப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் இனம் புரியாத ஒருவித பயம் தோன்றி மறைந்தது.
அவளது மனதிற்குள் எண்ணற்ற எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறைந்தன.
வலதுபக்கம் அவளது கால்கள் தன்னிச்சையாகச் செல்லத் துடித்தன.
அதனை கட்டுப்படுத்தியவள், இடதுபக்கமாக உள்ள சாலையில் நடக்க ஆரம்பித்தாள்.
வழியில் இருந்த ஒரு சிறு கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.
ஒருபக்கம் டீ பார்லரில் ஒருவர் டீ போட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் விறகு அடுப்பில் கடாயை வைத்து சூடான வடை மற்றும் பஜ்ஜியை அவரது மனைவி போட்டுக் கொண்டிருந்தார்.
“அண்ணா… ஏழு காபி, ஏழு வடை,” என்றாள்.
அதைக் கேட்டவர் உடனே அவள் கையில் பேப்பரில் பொதிந்த வடையையும், சிறிய கவரில் காபியையும் பார்சல் கட்டிக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
வாய்க்காலில் தண்ணீர் திரண்டு ஓடிக் கொண்டிருக்க, அதன் படிகளில் இருந்து இரண்டு மூன்று பெண்மணிகள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருத்தி இவளைப் பார்த்ததும்,
“என்னடி, காலையிலேயே எங்க போற?” என்றாள்.
“சித்தி, இன்னைக்கு வயல்ல நாத்து நட ஆட்கள் வந்திருக்காங்க. அவங்களுக்கு காபியும் வடையும் வாங்கிட்டு போறேன்,” என்று கையில் இருந்த கவரை சிறுபிள்ளை போல் ஆட்டிக் கொண்டு கூறினாள்.
“சரி டி, வயல்ல உன் சித்தப்பா இருந்தா களைக்கு மருந்தடிக்க மருந்து வாங்கிட்டு வரச் சொல்லிடு.”
“ம்ம்ம்…” என்று தலையாட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரத்தில், சாலையின் இரண்டு புறங்களிலும் வயல்வெளி பச்சை பசேல் என்று காட்சியளித்துக் கொண்டிருந்தது.
தக்காளி, மிளகாய், பூக்கள், நெல் என்று ரம்மியமாய் காட்சியளித்தது. அதையெல்லாம் ரசித்துக் கொண்டு வந்தவள், சாலையை விட்டு குழிபோன்று இருந்த இடத்தில் இறங்கினாள்.
அத்தை வயலுக்குப் போகும் வரப்பில் கால் வைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
வழியில் உள்ள வயலில் தக்காளி பழுத்துத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், ஒன்றைப் பறித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே நடந்து சென்றாள்.
நான்கு, ஐந்து கிடுகுகளைக் கொண்டு கூடாரம் போன்ற அமைப்பு கண்களுக்குத் தென்பட்டதும், அதற்குள் சென்றாள்.
அவளது அத்தை அங்கு சேலையை கட்டிக்கொண்டு, அதன் மேல் ஆண்கள் போடும் சட்டை அணிந்து தரையில் அமர்ந்திருந்தார்.
நரைமுடி, சற்று தடித்த உடம்பு, கருப்பு நிறம், நெற்றியில் பெரிய பொட்டு ஒன்று வைத்திருந்தார் அன்னம்.
இவளைப் பார்த்ததும், ஒரு பாக்கெட்டில் இருந்த காபியைத் தனியாக எடுத்துவைத்துக் கொண்டு, மீதம் உள்ளதை அங்கு நாற்று நட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கொடுக்கச் சொன்னாள்.
ருத்ராவும் அனைவருக்கும் காபியும் வடையும் கொடுத்துவிட்டு மீண்டும் குடிலுக்குத் திரும்ப முயன்றாள்.
அப்போது அவளது காதுகளில் விழுந்தது அந்த வார்த்தை.
“அந்தா போறாளே கோகிலா மக. அந்தப் பிள்ளையைப் பார்க்கும் போது பாவமா இருக்கு டி,” என்று பரிதாபத்துடன் ருத்ராவைப் பார்த்துக் கூறினாள் கோமதி.
“ஏன்டி கோமு, அந்தப் புள்ளைக்கு என்ன?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் செண்பகம்.
“அந்தப் புள்ளைக்கு புத்தி சரியில்லை டி,” என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள் கோமதி.
‘அழகாக மூக்கும் முழியுமா இருக்குற இந்தப் பொண்ணுக்கா புத்தி சரியில்லை? பார்க்கும் போது அப்படி தெரியலையே?’ என்று யோசித்தாள் செண்பகம்.
செண்பகம் யோசிக்கிற மாதிரி நீங்களும் யோசிங்க…
கதாநாயகிக்கு மனநிலை சரியில்லையா?
ஏன் வலதுபக்கச் சாலையைப் பார்த்து பயந்தாள்?
ஏன் ருத்ராவை நினைத்து கோகிலா, அவளைக் காப்பாற்றக் கூறி அழுகிறாள்?