“அதான் ஏற்கனவே கெட்டுருச்சே? இன்னும் என்ன பாக்கி ?”, என்று வெறுப்பாக பதிலளித்தாள்.
“கீர்த்தி!”, என்று அதட்டிய அக்காவை நோக்கி சுட்டுவிரல் நீட்டியவள், “உன் வேலை முடிஞ்சுதில்ல? அதோட நிறுத்திக்கோ. நான் கிளம்பற அன்னிக்கு என்னைக் கொண்டு போய் மாமியா வீட்டுல விடறதா சொல்லிட்டு எல்லாரும் கிளம்புங்க. ப்ரீத்தியோட நீங்க இரண்டு பேரும் போங்கம்மா. நான் திருநெல்வேலிக்கு போயிக்கறேன்.”
“தனியா எப்படி போவ? தெரியாத ஊரு”, என்ற சரோஜினியை ஒரே பார்வையில் அடக்கினாள் கீர்த்தி.
நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்த போது, அவள் தந்தை உடன் வந்தார். ஓரிரவு தங்கி அதை முடித்துவிட்டு திரும்பியிருந்த ஒரே வாரத்தில் பள்ளியில் சேர ஆர்டர் வந்துவிட்டது. பிரமாதமான சம்பளமெல்லாம் இல்லை. ஆனால் இவர்கள் எல்லோரையும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவளுக்கு வேறு எதுவும் முக்கியமாகப் படவில்லை.
வைராக்கியமாக தனித்து இருந்தபடியே வேலைக்கும் சென்று, பி.எட் கரெஸ்சில் முடித்தாள். அதனோடே துபாயில் வேலையும் தேடினாள். வீட்டிற்கு அழைத்து இருப்பை அவ்வப்போது பகிர்ந்து கொண்டதோடு சரி. ஓரிரு முறை பெற்றவர்கள் வந்து சென்றனர். அப்போதும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டுமே.
சரோஜினி நடந்ததைப் பற்றி பேச ஆரம்பித்தாலே நடந்ததைப் பற்றி பேசி ஆகப்போவதில்லை என்று கத்தரித்துவிடுவாள். அவள் வாழ்க்கைப்பற்றி ஆரம்பித்தால் அதை நான் பார்த்துக்கறேன். முதல்ல பி.எட் முடிக்கணும் என்று நிறுத்துவாள். ப்ரீத்தி குடும்பம் பற்றி எதுவும் கூறினால் அமைதியாக இருப்பாள். அவராக நிறுத்தவில்லை என்றால் வேலை இருப்பதாக, தூக்கம் வருவதாக முடித்துவிடுவாள். நெல்லையப்பரை தரிசித்து துக்கத்தை அவரிடம் கொட்டிவிட்டு கிளம்பிவிடுவார்கள்.
அவள் கிளம்பும் அன்று வேணுகோபால், “கீர்த்திமா? நாங்க எல்லாரும் உன்னை கைவிட்டுட்டதா நினைக்கிறல்ல? அதுதான எங்க எல்லாரையும் விட்டு தூர போற?”, என்று கேட்க ஒரு வறண்ட புன்னகையை சிந்தியவள்,
“வேகமாக ஒரு ட்ரெயின் வருது. ஒரு பக்கம் நாலு குடிகாரங்க ட்ராக்ல உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் வேற ட்ராக்ல ஒரு ஆளு ரிப்பேர் பார்த்துகிட்டு இருக்கான். அந்த பக்கம் ட்ரெயின் வராதுன்னு சொல்லித்தான் ரிப்பேர் பார்க்க அவனை அனுப்பியிருக்காங்க. ட்ரெயின் ட்ராக் மாத்திவிட ஸ்விட்ச் உங்க கையில இருந்தா என்ன முடிவு எடுப்பீங்கன்னு ஒரு புதிர் போடுவாங்கப்பா. தப்பே செய்தாலும், நாலு பேர் உயிரைக் காப்பாத்த தப்பு செய்யாம அவன் வேலையை பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை சாகடிக்கறதா, இல்லை தப்பு செஞ்ச நாலு பேர்தான் தண்டனையை அனுபவிக்கணும்னு ட்ரெயின் ட்ராக் மாறாம இருக்க விடறதான்னு முடிவெடுக்கணும். இங்க ஒரு ட்ராக்ல உங்க பெரிய மக, அவ புருஷன், வாழ்க்கை. மறு பக்கம் உங்க சின்ன பொண்ணு. முடிவு எடுத்துட்டீங்க, ஏத்துகிட்டு முடிச்சும் குடுத்துட்டேன். இனி என் வாழ்க்கை, என் முடிவு. இதுக்கு மேல எனக்கு என்ன ஆகிடப் போகுதுன்னு பயப்படறீங்க? என்னை எதுக்கும் தொந்தரவு செய்யாம விட்டீங்கன்னா, போன்ல டச்ல இருக்கேன். இல்லைன்னா… எனக்கே தெரியலைப்பா.”
கீர்த்தி பேச அங்கே ஒரு கனத்த அமைதி. அவளது அழுத்தம் புதிதாக இருந்தது சரோஜினிக்கு. வேணுகோபால் கண்ணில் நீர் பொங்கி வர, கைகூப்பியவர், “நீ இதுலர்ந்து மீண்டு வந்தா போறும்மா கீர்த்தி”, என்பதோடு சென்றுவிட்டார். ப்ரீத்தி விகித்துப்போய் பார்த்திருந்தாள்.
அப்போது கிளம்பியவள்தான். பி.எட் கரெஸ்சில் சேர்ந்து படித்துக்கொண்டே பள்ளியில் வேதியல் ஆசிரியையாக வேலைக்கு சென்றாள். பகுதி நேரமாக சனி ஞாயிறு ஒரு டுட்டோரியலிலும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகள் எடுத்து வருமானத்தையும், அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டாள். பி.எட் முடித்த கையோடு துபாயில் வேலைக்கு முயற்சி செய்துகொண்டே இருக்க, வேலையும் கிட்டியது.
பெற்றவர்களிடம் வேலை கிடைத்ததுபற்றி எதுவும் பகிரவில்லை. சென்னைக்கு விசா விஷயமாக செல்ல நேர்ந்தபோது கூட தெரிவிக்கவில்லை. அப்போது பெற்றவர்கள் தாம்பரத்திற்கு தந்தை அலுவலகம் பக்கமே குடிவந்திருந்தனர். எல்லாம் உறுதியாகி கிளம்ப ஒரு வாரம் இருக்கையில் தெரிவித்தாள்.
“இங்க காலி பண்ணிட்டு அங்க வரேன்மா. வந்த இரண்டு நாள்ல நான் துபாய் கிளம்பணும். ப்ரீத்தி அவ குடும்பம்னு யாரும் நான் இருக்கும்போது வரக்கூடாது. சம்மதம்னா வரேன். இல்லைன்னா கொச்சின்லர்ந்து கிளம்பிக்கறேன்.”
அதற்கு மேல் பெற்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். சற்று நெருக்கமான உறவுகளில் பெரியவர்களிடம் போனில் பேசி செல்வதாக கூறிவிட்டாள். அதுவும் பெற்றவர்களின் வேண்டுகோளுக்காக.
“நான் போய் எதாவது சேர்த்தாதான் என் கல்யாணம் பத்தி யோசிக்கவே முடியும் பெரியப்பா. அதுக்குத்தான் போறேன். ஒரு இரண்டு வருஷம் , சேர்த்துட்டு வந்துட்டா நீங்க பார்த்து வெக்கற வரனையே கட்டிக்கறேன்”, என்றவளையே சரோஜினி பார்த்திருந்தார்.
“நெஜமாவாடி?” என்றவரை ஏறெடுத்துப் பார்த்தவள், “பார்க்கலாம்”, என்று தோள் குலுக்கினாள்.
ப்ரீத்தி போன் செய்தாள். “நீதான் நான் வரக்கூடாதுன்னு சொல்லிட்டியாம்.“, என்றவளை,
“நீ மட்டும் வர முடியாது ப்ரீத்தி. எனக்கு வேற யாரையும் பார்க்க வேணாம். உன் வாழ்க்கை நல்லபடியா போனா போதும்.”
மறுபுறம் அமைதி. ஒரு வகையில் ஹர்ஷிதாவைப் பார்க்க கீர்த்தி விரும்பாதது ப்ரீத்திக்கும் ஏற்புடையதாகவே இருந்தது. என்னவோ குழந்தையைப் பார்த்தால் கீர்த்தி மனது மாறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒரு ஓரம் இருந்தது. அப்படியெல்லாம் இருக்காது என்று அறிவிற்கு புரிந்தாலும் எதற்கு தேவையில்லாத ரிஸ்க் என்று பார்க்காமலேயே இருந்துவிட்டாள்.
குழந்தையிடம் நிறைய அம்மா ஜாடை. ஆனாலும் கீர்த்தியும் ப்ரீத்தியும் ஒரே சாயலில் இருந்ததால் ப்ரீத்தியின் சாயல் என்றே பார்ப்பவர்கள் கூறினர். பெண் குழந்தை என்பதில் இரகுராமனின் அன்னைக்கு வருத்தமென்றாலும், மகன் கடிந்துகொண்டதில், குழந்தை வரம் வந்ததே பெரிது என்று இருந்துகொண்டார்.
வேணுகோபால் அவள் செல்லும் நேரம், “நீ பேச்சுக்கு சொன்னியோ, நிஜமாவே சொன்னியோ தெரியாது கீர்த்திமா, ஆனா வாங்கற சம்பளத்தை உன் கல்யாணத்துக்கு சேர்த்து வை. நகை கொஞ்சம் வாங்கு. இங்க எங்களுக்கு அனுப்பணும், செய்யணும்னு எதுவும் இல்லை”, என்றதில் மறுப்பு தெரிவிக்காது சரியென்று முடித்துவிட்டாள்.
கூறி முடிக்க அங்கே கனத்த அமைதி நிலவியது.
“உன்னை பலி குடுத்து உன் அக்காவை மீட்டாங்களா? எப்படி கீர்த்தி? நீயும் அவங்க பொண்ணுதானே?”, நம்ப முடியாது கைகளை தலையில் தாங்கினான் ஜோ.
லேசாக முறுவலித்தவள், “ம்ம்…நானும் எமோஷனலா அப்படித்தான் நினைச்சிருந்தேன். பேசாமக் கூட இருந்தேன். அப்படி ஒரு ஆத்திரமும் அழுகையும் வரும். ஏன் பேசலைன்னு கேட்கும் போது, அதான் ப்ரீத்தி பேசறா பார்க்கறா இல்ல? நான் பேசலைன்னா என்னன்னு அவங்களை கடிச்சு துப்பியிருக்கேன்.”
“அதுக்கு என்ன சொல்வாங்க? அப்படியெல்லாம் இல்லை, நீயா எதாவது நினைச்சுக்காதேன்னு அழுவாங்க. அதுதானே?”, அவன் கேட்ட தொனியில் அவள் புன்னகை பெரிதாகியது.
“ம்ம்.. அம்மாவோட ரியாக்ஷன் அப்படியே சொல்ற”, என்றதில் முறைத்தான்.
“கொஞ்சம் நிதானமா யோசி ஜோ. இருக்கற ஆப்ஷன்ல கம்மி சேதாரம் அப்படிங்கற தேர்வுல ஒவ்வொரு தரமும் நானே சிக்கினேன். குழந்தை உண்டாகலைன்னா ப்ரீத்தி என்ன பண்ணியிருப்பா? அதையே பண்ண வேண்டியதுதானேன்னு சில நேரம் ஆத்திரம் வரும். ஆனா அன்னிக்கு இராத்திரி வயித்துல இருக்க குழந்தைகிட்ட பேசும்போது அவ குரல்ல அத்தனை வலி, ஏக்கம். ஒன்னாவே வளர்ந்த வரைக்கும் எல்லா அக்கா தங்கை மாதிரிதான் அடிச்சிக்குவோம் ஆனாலும் விட்டுகுடுக்கமாட்டோம். அவ கல்யாணம் முடிஞ்சு சில மாசம் வரைக்குமே தனியா இருக்க கஷ்டமாயிருந்துச்சு. “
“குழந்தைக்காக அவ பட்ட கஷ்டம், ஏக்கம், எதிர்பார்ப்பு , அதுவும் கடைசி அட்டெம்ட்ல ஒரு மாசம் வர பிள்ளை தங்கினப்ப இருந்த சந்தோஷமும், அது போனதும் அவ அழுது கரைஞ்சதெல்லாம் கூடவே இருந்து பார்த்து, அவளுக்காக வருத்தப்பட்டது எல்லாத்தையும் ஒதுக்கிட்டு முடியவே முடியாதுன்னு கலைச்சிட சொல்ல முடியலை ஜோ.”
ஜோசஃபிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எத்தனை கடந்து வந்திருக்கிறாள்? எது சரி தவறு என்று கூட அனுமானிக்க முடியவில்லை.
“நீ கிளம்பு ஜோ. யாரும் பார்த்தா எதாவது பேச்சு வரும். இதுக்கப்பறமாவது, நீ தெளிஞ்சு உன் வாழ்க்கையை பாரு. என்னைப் பத்தி எதுவும் யோசிக்காத. நான் நல்லாருக்கேன். கிளம்பு”, என்றவளை நோக்கியவன், மறு நொடி அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
கதவினை தாழிட்டு வந்து தளர்ந்து அமர்ந்தாள் கீர்த்தி. அவன் அமர்ந்திருந்த அதே நீள்விருக்கை. அவன் உடல் சூடு இருந்தது. அவன் வாசம் இருந்தது. அப்படியே படுத்துக்கொண்டாள். மனது ஒரு வகையில் சற்று சமன்பட்டது. ஒரு குறுஞ்செய்தியில் காதலுக்கு சமாதி கட்டிவிட்ட துரோகத்தின் காரணத்தை அவனுக்கு புரிய வைத்துவிட்டோம். இனி தேறிக்கொள்வான் என்று தோன்றியது.
அவளிடம் எதுவும் பேசாது சென்றது குறித்து கீர்த்தி வருத்தப்படவில்லை. என்ன பேச முடியும்? ஆறுதல் அர்த்தமில்லாதது. கண்டிப்பாக அவள் மீதும், அவள் குடும்பத்தின் மீது கோபம் இருக்கும். வாழ்க்கை இழுத்துச் செல்லும் போக்கிற்கு போக வேண்டியதன் அவசியம் உடனே இல்லாவிட்டாலும், யோசிக்க யோசிக்க புரிந்துகொள்வான். அவளாகவே சொல்லிக்கொண்டாள்.
அடுத்து வந்த வார நாட்களில் ஜோ அவளிடம் பேச முனையவில்லை. எதிரில் பார்த்தால் ஒரு அறிமுகப் புன்னகையோடு கடந்தான்.
“கணக்கு வாத்தி அவ்வளவா கலகலப்பு இல்லை போல கீர்த்தி. என்னன்னா என்னன்றதோட நின்னுக்கறார்”, என்று ஷீத்தல் கூட முனகினாள்.
பள்ளி வார விடுமுறையில் தனி ட்யூஷன் சில இந்தியக் குடும்பங்களின் வீடுகளுக்கே சென்று எடுப்பாள் ஷீத்தல். அதற்காக அவர்கள் தரும் பணம் மட்டுமே அவளது மாதாந்திர செலவுக்கென்று உபயோகிப்பாள். சம்பளம் முழுவதுமே வீட்டிற்கும் கல்யாண சேமிப்பிற்கும் செல்லும். பள்ளி விதிமுறைப்படி அப்படி வெளியில் ட்யூஷன் எடுக்கக் கூடாது. ஆனாலும் பணத் தேவை. அவர்கள் பள்ளியல்லாத பிற பள்ளி மாணவர்களுக்கு எடுக்கிறாள். அதனால்தான் சனிக்கிழமை ஜோவுடன் இருந்தது தெரியவில்லை. கீர்த்தியும் அவளுக்கு எதுவும் சொல்லவில்லை.