மாலை அவள் தந்தை வரும் வரையிலுமே ப்ரீத்தி அங்கேதான் இருந்தாள். சரோஜினியை பேசிப் பேசியே கரைத்திருப்பாள் போல. கீர்த்திக்கு தெரியவில்லை. அவள் தந்தை வந்தும் ஹாலில் பேச்சுக்குரல்கள் கேட்ட வண்ணமிருந்தது. என் உடல் பற்றி நான் எடுக்கவேண்டிய முடிவை இவர்கள் எல்லோரும் ஏன் விவாதிக்கிறார்கள் என்று யோசித்திருந்தாள் கீர்த்தி. 

முடியவே முடியாது என்று சொல்லி அனுப்பிட நினைத்து கதவை திறந்தவளுக்குக் கேட்டது அவனின் குரல். “மாமா. என்னை தப்பா நினைக்காதீங்க. குழந்தைக்கான எதிர்பார்ப்பும், இல்லைங்கற வலியும் எல்லாரோட பரிதாபமும் கேலிப்பார்வையும் சந்திக்கற பிள்ளை வரம் இல்லாத எங்களுக்குத்தான் மாமா தெரியும். நடக்கவே நடக்காதோன்னு நினைச்சது எதிர்பார்க்கவேமுடியாத விதத்துல கிடைச்சிருக்கு. கீர்த்திக்கு வேண்டாங்கறது எங்களுக்கு பொக்கிஷம் மாமா”, என்றவன் பேச்சை அதற்கு மேலும் கேட்கமுடியாது நடுங்கும் குரலில், 

“முடியவே முடியாதுப்பா. இதுக்கு மேல என்னை ஃபோர்ஸ் பண்ணா அப்பறம் எனக்கு நீங்க கொள்ளிதான் போடணும்” என்றாள் கீர்த்தி அங்கிருந்தபடியே. ஹாலில் இரகுராமன் இருக்கிறான் என்று தெரியவும் பசைபோட்டு ஒட்டியது போல கால்கள் நகர மறுத்தது. 

“அம்மா.. கீர்த்தி” 

“கீர்த்தி.. என்ன பேசற?” 

என்று ஆளாளுக்கு குரல் தர, ப்ரீத்தி அவளிடம் ஓடிவந்தாள். 

வந்த வேகத்தில் அவள்முன் மண்டியிட்டு முந்தானைக்கு பதில் அவள் போட்டிருந்த ஷாலை விரித்து, “கீர்த்தி… ப்ளீஸ்… மடிப்பிச்சையா குழந்தை பிச்சை கேட்கறேன். பெத்து குடுத்துடு, அப்பறம் உன் கண்ணிலேயே காட்டலை. நாங்க வேற எங்கேயாவது வேலை மாத்திகிட்டு போயிடறோம். அழிச்சிடாதடி.”, என்று கதறினாள். 

சரோஜினி வேகமாக வந்தவர், “ப்ரீத்தி… எழுந்திருடி. அவ பட்டதெல்லாம் போறாதா”, என்று எழுப்ப முயன்றார். 

“அம்மா… நான் கேட்கறது நியாயமே இல்லைன்னாலும், இந்தக் குழந்தையை அழிச்சிட்டா மட்டும் நடந்தது இல்லாம போயிடுமா? நடந்ததுக்கு வேதனை படறதோட ஒரு குழந்தையை அழிச்ச பாவமும் கூட சேரணுமா? ஏற்கனவே எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ பிள்ளை வரம் அமையலை. இவ இப்படி செஞ்சா, அந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்தா அவர் மொத்தமா எங்கிட்டருந்து விலகிடுவாரும்மா. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.” என்றவள் அடுத்து கூறியது மாஸ்டர் ப்ளான். 

“அம்மா ஐ.வி.எஃப்ல தோத்துப்போனதும் டாக்டர் வாடகைத்தாய் மூலமா பிள்ளை பெத்துக்கறது பத்தி பேசினாங்க. ஆனா பத்து பதினைஞ்சு லட்ச ரூபாயாகும்னவும் என்ன பண்றதுன்னு வந்துட்டோம்”, என்று அன்னையிடம் கூறியவள், 

“கீர்த்தி, வாடகைதாயா நினைச்சு எனக்கு இந்த பிள்ளையை பெத்துக்குடுடி. ப்ளீஸ். ஒரு  ஒன்பது மாசம் பல்லைக் கடிச்சிட்டு ஓட்டினா போதும். யாருக்கும் தெரியாம எங்கேயாவது வேற ஊர்ல போய் அப்பா அம்மா கூட இரு. நான் வந்து பார்த்துக்கறேன். குழந்தை பிறந்ததும் எங்கிட்ட குடுத்துடு.” 

“திடீர்னு குழந்தையோட நீ வந்து நின்னா உன் மாமியார் கேள்வி கேட்கமாட்டாங்களா ப்ரீத்தி?” 

சரோஜினியின் கேள்விக்கு, “வாடகைதாய் மூலமா பிள்ளை பெத்துக்க ஏற்பாடு பண்ணிட்டதா இப்பவே சொல்லிடுவேன். அவங்க உனக்கு போன் பண்ணி பேசினதும், அப்பாவே பணத்தை குடுத்தாரு. அது மூலமா ஏற்பாடாகுதுன்னு சொல்லிடுவேன். நான் மட்டும் பிரசவ  நேரம் கூட இருந்து குழந்தையை வாங்கிட்டு வந்துட்டேன்னு சொல்லிடறேன். எல்லாருக்குமே அப்படியே சொல்லிடலாம்மா. பெத்தது கீர்த்தின்னு யாருக்கும் தெரிய வேணாம்.” 

அதற்குமேல் கேட்க முடியாது, “கண்டவனும் வந்து வக்ரத்தை கக்கிட்டுப் போக என் உடம்பும், கருப்பையும் குப்பைதொட்டி கிடையாது”, கத்திவிட்டு உள்ளே சென்று தாளிட்டுக்கொண்டாள் கீர்த்தி. ஹாலில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த இரு ஆண்களுக்குமே அவமானத்தில் உடல் குறுகியது. இரகுராமன் எழுந்து வாசலுக்கு நடந்துவிட்டான். 

வெகு நேரம் கழித்து சரோஜினி கதவை தட்டினார். கீர்த்தி வந்து திறக்கவும், 

“வந்து சாப்பிடு கீர்த்தி. பட்டினியாவே இருந்தா இன்னும் உமட்டும்.” 

“நாளைக்காவது டாக்டர்கிட்ட போலாம்மா. எவ்வளவு சீக்கிரம் கலைக்கறோமோ  நல்லது“, கீர்த்தி சொல்லவும் மறுக்கவும் இல்லாமல் ஆமோதிக்கவும் இல்லாது, “சாப்பிடு முதல்ல”, என்று அழைத்துச் சென்றார் சரோஜினி. 

இருண்ட முகத்துடன் அமர்ந்திருந்தார் வேணுகோபாலன். பெரிய மகளும் அவள் கணவனின் மன்றாடல் ஒரு புறம், வாடிய மலராய் இருக்கும் சிறிய மகள் மறுபுறம். ‘பெருமாளே! ஏன் இப்படி ஒரு சோதனை’ என்று நெஞ்சுக்குள் அரற்றிக்கொண்டிருந்தார். 

“அப்பா? நாளைக்கு டாக்டர்கிட்ட போய் கலைச்சிடலாம்தானப்பா? அவ…ப்ரீத்தி சொன்னதுனால நீங்க….”, என்று நிறுத்தி பயத்தோடு தன்னை நோக்கும் இளைய மகளைக் கண்டவருக்கு கண்ணில் நீர் பொங்கியது. 

“இல்லைமா. நாளைக்கு போகலாம். அவ விதிப்படி அவ வாழ்க்கை நடக்கட்டும்”, என்று கூறவும் சற்று ஆசுவாசப்பட்ட கீர்த்தி உணவருந்த அமர்ந்தாள். 

உள்ளுக்குள் ஒருவித குழப்பம் ஓடிக்கொண்டிருந்தது, “அப்பா… நான் செய்யறது சரிதானப்பா?  செய்யாத தப்புக்கு நான் எப்படிப்பா பொறுப்பாக முடியும்? குழந்தையை அழிக்கறது பாவம்னா எனக்கு நடந்ததும் பாவம்தானேப்பா? வேணும்னா வாடகை தாய் மூலமா பெத்துக்க அக்காக்கு என் நகை, அம்மாது எல்லாம் வித்து காசை குடுத்துடலாம்ப்பா. “ 

“கீர்த்தி. எதுவும் யோசிக்காம சாப்பிடு. அப்பாவை கொஞ்ச நேரம் விடு. நீங்க இரண்டு பேரும் குடுக்கற நெருக்கடியில அவருக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப்போகுதேன்னு எனக்குத்தான் பயமா இருக்கு”, அதட்டினார் சரோஜினி. 

மறு நாள் மகப்பேறு மருத்துவரைக் காணச் சென்றனர். அவர்களுக்கு பழக்கமேயில்லாத சென்னையின் விளிம்புப் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சென்று பார்த்தனர். 

பெற்றோருடன் சென்று, திருமணமாகவில்லை, வயிற்றில் குழந்தை என்பது வரை கூறிவிட்டு, அழிக்க வேண்டும் என்று சொல்லவும் மருத்துவரின் பார்வையில் குன்றிப்போனாள் கீர்த்தி.  ரேப் என்று சொன்னால் மருத்துவர் போலீஸ் கேஸ் என்று ஆரம்பித்துவிடுவார், அதற்கு இப்படியே சொல்லிவிடலாம் என்று சரோஜினி அடமாய் இருந்தார். 

“இன்னும் அம்பது நாள் கூட ஆகலை. டி & சி பண்ணி அபார்ஷன் பண்றதுதான் பெஸ்ட். பின்னாடி பிரச்சனை இல்லாம இருக்கும். பத்துலர்ந்து பன்னிரண்டு வாரத்துக்குள்ள பண்றதுதான் நல்லது. நீங்க எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சிட்டு வாங்க. குழந்தையோட அப்பா மனசு மாறினா சேர்த்து வைக்கப் பாருங்க”, என்று அறிவுரையைப் பொழிய,  

“எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஒன்னுதான் டாக்டர். எனக்கு இந்த குழந்தை வேணாம். இதோட அப்பனும் வேணாம்”, என்று வெளியேறினாள் கீர்த்தி. 

“அடுத்த வாரம் வாங்க. அப்பவும் இதே முடிவுன்னா, அபார்ஷனுக்கு நாள் குறிச்சிடலாம்”, என்று விடைகொடுத்து அனுப்பிவிட்டார் மருத்துவர். 

இரண்டு நாட்கள் சென்றிருக்கும். திடீரென்று இரகுராமன் மாமனாருக்கு அழைத்தான். “மாமா, கொஞ்சம் அத்தையோட வீட்டுக்கு வாங்க. ப்ரீத்தி தூக்கு மாட்டிக்க போயிட்டா”, என்று சொல்ல பெற்றவர் பதறிவிட்டார். 

கீர்த்தியை தனியேவும் விட முடியாது, அழைத்தும் செல்ல முடியாத தர்ம சங்கட சூழ் நிலையில், சரோஜினியிடம் எதுவும் சொல்லாமல் வேணுகோபால் பெரிய மகள் வீட்டிற்கு ஓடினார். 

ஊரிலிருந்து இரகுராமனின் அன்னை காலையில் வந்து இறங்கியதிலிருந்து திட்ட ஆரம்பித்திருக்கிறார். விவாகரத்து கொடுத்துவிடு, என் மகனுக்கு வேறு பெண் பார்த்துவிட்டேன் என்று ஆரம்பித்து பேச்சு மேலும் மேலும் வளர்ந்திருக்கிறது. 

இரு பெண்கள் மத்தியில் மாட்டிக்கொண்ட இரகுராமனின் பேச்சு எடுபடவில்லை. மனது வெறுத்தவள், “நான் இருக்கறதுதான உங்களுக்குப் பிரச்சனை என்று அறைக் கதவை தாளிட்டு ஃபேனில் புடவையை கட்டி தொங்கியே விட்டாள், இரகுராமன் கதவின் தாளை உடைத்து உள்ளே செல்லும் வேளை.” 

அழுது முகம் வீங்கிப்போய் படுத்திருந்தவளைப் பார்க்க உயிர் போனது வேணுகோபாலனுக்கு. 

“ஏன் ப்ரீத்தி அவசரம்?”, என்று கேட்க, 

“என் நிலைமை உங்களுக்கு இப்பவாவது புரியுதாப்பா? இவங்க இருக்கும்போதே முயற்சி பண்ணது என் தப்பு. எல்லாரும் போகட்டும்னு நாளைக்கு இந்த முடிவுக்கு நான் போயிருக்கணும். என் பிரச்சனைக்கெல்லாம் வழியிருந்தும் உங்களுக்கு மனசில்லை. அதுதான் அவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனீங்க. என் மாமியாருக்கு அவ சொந்தத்துல இருக்கற பொண்ணை கட்டணுமாம். இவரு முடியாதுன்னதுக்கு அவருக்கும் அத்தனை பேச்சு. எவளோ தனக்கு குழந்தை பிறக்காதுன்னதும் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சு வாழறாளாம்.  நான் சுய நலமா இருக்கேனாம்.” விரக்தியாக சிரித்தவள், “கீர்த்திகிட்ட குழந்தையை கேட்டதுக்கு நீங்க சொன்னதும் நான் சுய நலமா இருக்கேன்னுதான். இப்ப என் மாமியாரும் அதே பட்டம்தான் தராங்க. அதுதான் ஒரேடியா போய் சேர்ந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லையில்லையா? அதைக்கூட ஒழுங்கா யோசிச்சி செய்ய எனக்கு துப்பில்லை.” 

முகத்தை மூடி கேவிக்கொண்டிருக்கும் மகளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாது தவித்தான்  தகப்பன்.  

“மாமா. அம்மாவை என்னால சமாளிக்க முடியலை. இவ இப்படி யோசிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. கொஞ்ச நாள் அவ உங்களோட இருக்கட்டும் மாமா. நான் வேலைக்கு போயிட்டா மறுபடி இப்படி எதாவது விபரீதமா இவ யோசிச்சா வேற விதமா முடிஞ்சுருமோன்னு பயமா இருக்கு”, என்று தனிமையில் இரகுராமன் புலம்ப, மகளை தன்னோடு அழைத்து வந்துவிட்டார் வேணுகோபாலன்.