அடுத்த அரை மணி நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ப்ரீத்தி, “என் வாழ்க்கையை அழிச்சிடாதடி, எல்லாமே எங்க தப்புதான். மன்னிச்சுடு, அவர் தெரிஞ்சு வேணும்னு எதுவும் செய்யலையடி. கல்யாணம் ஆன இத்தனை நாள்ல அவர் ஒரு வாட்டியாவது உன்னை தப்பா பார்த்திருக்காரா? உன்னைன்னு இல்லை வேற எந்தப் பொண்ணையுமே மரியாதையாத்தான் பார்த்திருக்காருடி. நம்புடி.”, என்று காலில் விழுந்தாள். 

இரகுராமன் கையெடுத்துக் கும்பிட்டவன், “மன்னிப்பு கேட்கற விஷயமில்லை இது. ஆனா இது வெளிய தெரியவந்து எதிர்கொள்ற சக்தி எனக்கில்லை மாமா. நான் செத்துடறேன். நீங்க அப்பறம் போங்க போலீசுக்கு”, என்று மாமனாரின் காலில் விழுந்தான். 

“அம்மா நீ சொல்லுமா அவகிட்ட. அவர் போயிட்டா நான் மட்டும் இருப்பேன்னு நினைச்சீங்களா? இது மொத்த குடும்பத்துக்கே அவமானம்மா….”, என்று சரோஜினியை பிடிக்க, அதிர்ச்சியும் குழப்பமுமாக இரு மகள்களையும் பார்த்தார். 

கை முஷ்டிகள் இறுக மடக்கியிருந்த ஜோசஃப், “அவனை களிதிங்க அனுப்பினியா இல்லையா?” என்று பொறுக்கமுடியாமல் கேட்க, விரக்திப் புன்னகையோடு இல்லை என்று தலையசைத்தாள். 

“போலீசுக்கு போய் ஆவப்போறது என்னன்னு என் மண்டையை கழுவினாங்க. அம்மாக்கு பயம். வெளிய தெரிஞ்சா இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் வீணாகிடும். அவங்களுமே, வேணாம் கீர்த்தி, கோவப்பட்டு போலீசுக்கு போனாலும், அவரை ஜெயில்ல போட்டாலும் நடந்தது எதுவும் மாறப்போறதில்லை. ஊர் உறவுக்குத்தான் அவலாகும். நாளைக்கு உனக்கு ஒரு வாழ்க்கை அமையணும்னு அழுகை”, கீர்த்தி தரையைப் பார்த்தே பேச, 

“அதுக்கு?”, ஜோவின் முகம் இறுகியிருந்தது, அவன் குரலைப் போலவே. அவனை நிமிர்ந்து பார்த்தாள். உடலில் ஒரு அசைவும் இல்லாது விறைத்தபடி கல்லாய் அமர்ந்திருந்தான். அவனை அந்தக்கோலத்தில பார்க்க முடியாதவள், தன் தலையை இரு கைகளாலும் தாங்கியபடியே முழங்கையை கால் முட்டிகளில் பதித்து தரையை பார்த்தபடி, “அம்மாவே எனக்கு பதிலா முடிவெடுத்து ஒன்னும் செய்யமாட்டேன்னு சொல்லிட்டாங்க” என்றாள். 

முனகலா உறுமலா என்று தெரியாத வகையில் ஒலி எழுந்தது அவனிடம். 

“அப்பா எதோ சொல்ல வர, வெளிய தெரிஞ்சா என் இரண்டு பொண்ணோட வாழ்க்கையுமே பாழாபோயிரும்னு அவரை அடக்கிட்டு. ப்ரீத்தி, நீ போன்னு அனுப்பிட்டாங்க.” 

“அதுக்கப்பறமும் ஏன் கீத்து அவங்களோட இருந்த, ஒரு வார்த்தை எனக்கு சொல்லியிருந்தா நான் வந்து உன்னை கூட்டிட்டு வந்திருப்பேனேடா. என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?”, வலியோடே வந்தது ஜோவிடமிருந்து கேள்வி. 

அது வரையிலும் வறண்டிருந்த கண்களில் கண்ணீர் நிரம்பியது. உதட்டைக் கடித்தவள், “நடந்த அதிர்ச்சி ஒரு பக்கம், அந்தப் பொறுக்கியை ஒன்னுமே செய்ய முடியாததுல என் மேலேயே இருந்த கோவம் ஒருப்பக்கம்னு நான் என் நிலையிலயே இல்லை ஜோ. விதியை பாரு, அவ எடுத்துகிட்ட அதே தூக்க மாத்திரையை எனக்கு குடுத்துதான் தூங்க வெச்சாங்க. 

“டாக்டரைக் கூடவா பார்க்கலை?”, அதிர்ச்சியாய் ஜோ கேட்க, “டாக்டர் பார்த்துட்டு போலீஸ் கேஸ்னு சொல்லிட்டா?”, நக்கலாக வந்தது கீர்த்தியின் பதில். 

கீர்த்தி வீட்டு ஆட்களை கண்டம் துண்டமாக வெட்டிப்போடுமளவு கண்ணையும் கருத்தையும் நிறைத்தது ஆத்திரம். எப்படி இவளால் இப்படி ஒரு வலியை கடந்து வர முடிந்தது? அதுதான் வெளி நாட்டில் வந்து இருக்கிறாளா? என்று சென்ற சிந்தனையை நிறுத்தி, “அதுதான் செல்ஃப் டிஃபென்ஸ் கிளாசா கீர்த்தி?” என்றான். 

“ம்ம்.. கொஞ்சம் கண்கெட்ட அப்பறம் சூரிய நமஸ்காரம் மாதிரிதான். ஆனாலும் அப்படியான ஒரு சூழல்ல இப்ப என்னால தப்பிக்க முடியுங்கற நம்பிக்கை கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுது. அப்ப இந்த டெக்னீக்ஸ் எதுவும் தெரியாது,  ஜுரம் வந்து போனதுல வீக்கா வேற இருந்தேன்.  மொத்தமா தொலைச்சிட்டேன்.” 

“கவுன்சலிங் எதாவது போனியா கீத்து?” 

கண்கள் மூடித் திறந்தவள், “ம்ம். கொஞ்சம். என்னதான் தலையில தண்ணியை ஊத்தி மறந்துடு மறந்துடுன்னு சொன்னாலும் மறக்க முடியலை ஜோ. ஒரு வாரம் கிட்ட தூக்கமில்ல, அப்படியே தூங்கிட்டாலும் பயத்துல கத்தி, நடுராத்திரியில அலறி எழுந்து, அழுதுன்னு ரொம்ப பட்டுட்டேன். ப்ரீத்தியும் அவ புருஷனும் வீட்டுக்கு வந்தாங்க. அவனை பார்த்ததும் பானிக் அட்டாக் மாதிரி வந்திருச்சு. அதுக்கப்பறம் ஒரு லேடி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போனேன்.  ப்ரீத்தி குழந்தையில்லாம டிப்ரஷன்ல இருக்கா கவுன்சலிங் கூட்டிட்டு போகணும்னு சொல்லி அப்பா தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சு, என்னை கூட்டிட்டு போனார்”, வறண்ட புன்னகையே வந்து சென்றது. 

“அவங்களும் பானிக் அட்டாக் வராம இருக்க என்ன செய்யணும் சொல்லிக்குடுத்தாங்க. நடந்தது என் தப்பில்லைன்னு கொஞ்சம் புரிய வெச்சாங்க” என்றவளை 

“கண்டிப்பா உன் தப்பில்லை” என்று வேகமாகக் கூறினான். 

“ம்ம்..வா ஜோ போகலாம். நீயுமே ஷாக்லதான் இருக்க. விடு. இது நடந்து வருஷக்கணக்காயிடுச்சு. வருத்தப்படாதே”, என்று ஆறுதல்படுத்திய அடுத்த கணமே, “நீ உன் வாழ்க்கையை பாரு” என்று கூறி அவன் கோபத்தை மீண்டும் கிளறினாள். ஒன்றுமே பேசாது அவளுடன் எழுந்து நடந்தான். 

மெல்ல மெட்ரோ ஏறி ஷட்டில் பஸ்  நிலையம் வர, “இரு காஃபி சாப்பிட்டு போலாம்” என்று துரித விடுதிக்கு அழைத்துச் சென்றான். 

“என் கதை போதும். நீ சொல்லு ஜோ. உன் வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?”, அவன் மனம் மாற்ற வேண்டி கேட்டாள். 

“ம்ம்… உன் மெசேஜ் வந்து நம்பாம உன்னை திரும்ப திரும்ப கூப்பிட்டு நீ நிஜமாவே ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டன்னு புரிஞ்சு அதிர்ச்சி, ஒரு வேளை உன் வீட்டுல போனை பிடுங்கிட்டாங்களான்னு நினைச்சு, திரும்ப சென்னை வர கிளம்பினப்போ, அப்பாக்கு ஸ்ட்ரோக்.” 

“அச்சோ…. உடனே ஹாஸ்பிட்டல் போயிட்டீங்கல்ல?” 

“ஹ்ம்ம்..போறதுக்குள்ள ஒரு ஹார்ட் அட்டாக் வேற. ஒரு வாரம்கிட்ட கோமாலதான் இருந்தார். அப்பறம் கண்முழிச்சார். வலது பக்கம் முழுசா பராலிசிஸ்”, காஃபியை வெறித்திருந்தான் ஜோ. 

“பிழைச்சாரா ஜோ”, என்று கேட்டவள் குரலே வலியோடிருந்தது. தானும் அப்படி ஒரு செய்தியை அனுப்பி, அவன் தந்தைக்கு இப்படி ஆகியிருக்க, அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான் என்று புரிந்தது. 

உதடு பிதுக்கியவன், “கிட்டதட்ட ஒரு மாசம், ஐ.சி.யூல என்னனென்னவோ ட்ரீட்மென்ட். வீட்டுமேல கடனெல்லாம் கூட வாங்கி செஞ்சோம். எல்லாம் வேஸ்ட், நிறைய வலியோடவும், இப்படி குடும்பத்தை விட்டுட்டு போறமேங்கற வேதனையோடவும் அடுத்து வந்த ஹார்ட் அட்டாக்ல போயிட்டார்.” 

கண்கள் கலங்க அவனைப் பார்த்தவளைக் கண்டு  மெலிதாக முறுவலித்தவன், “இது நடந்து வருஷக் கணக்காகிடுச்சு கீத்து. விடு”, என்றான் அவளைப்போலவே. “ஏகப்பட்ட கடன், அம்மாவோட துக்கம்,  தம்பி படிப்புன்னு எங்கேயுமே நகர முடியலை. எழெட்டு மாசம் கழிச்சுதான் திரும்ப சென்னைக்கே வர முடிஞ்சுது.  காலேஜ்க்கு போய்  உன் அட்ரெஸ் வாங்கி, ப்ரொஃபசர்கிட்ட பேசி அடுத்த ஆறு மாசம் கழிச்சு பி.எச்.டி முடிக்க அவகாசம் கேட்டுன்னு  நான் உன் வீடு தேடி வரதுக்குள்ள, நீங்க யாருமே அங்க இல்லை.” பெருமூச்சோடு சொல்லி நிமிர்ந்தவன், 

“ஏன் கீர்த்தி, என்னை நம்பவே இல்லையா? இதுனால நான் உன்னை வெறுத்துடுவேன்னு நினைச்சிட்டியா? அப்ப இல்லைன்னாலும் ஒரு வருஷம் இரண்டு வருஷம் கழிச்சிகூட? நான் வேணவே வேணாம்னு நீயே முடிவு பண்ணிட்டல்ல? “ அவனின் ஏமாற்றம் அப்பட்டமாக முகத்தில் தெரிய, 

பொங்கி வரும் அழுகையை முயன்று கட்டுப்படுத்தி, காஃபியை ஒரு மிடறு விழுங்கினாள். கண்கள் மூடி சில கணங்கள் யோசித்தவள், 

“தெரியலை ஜோ. மே பீ கவுன்சலிங் எல்லாம் முடிஞ்சு ஒரு அளவுல என் வாழ்க்கைக்கு திரும்பியிருந்தா, நீ சொன்ன மாதிரி உன்கிட்ட நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சிருப்பேன். உன்னை நம்ப வெச்சு உனக்கு துரோகம் பண்ணிட்டேன்னு எப்பவுமே எனக்குள்ள வலியும் உறுத்தலும் இருந்துட்டே தான் இருந்தது. இருக்கும். ஆனா நான் உனக்கு வேணாம் ஜோ.” 

மீண்டும் அப்படிக் கூறியவளைக் கண்டு பல்லைக் கடித்தான் ஜோசஃப். “கீர்த்தி… அதை முடிவு செய்ய வேண்டியது நான். இந்த ஒரு விபத்துனால நீ தேங்கி நிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் இருக்கேன்மா.”, என்றவன் அவள் கைபிடித்த பொழுது குரலில் மன்றாடல் மட்டுமே இருந்தது. 

ஜோசஃபின் கண்கள் எப்போதும் அவளை வசீகரிக்கும். அவன் பிரவுன் நிற கருவிழிக்குள் மூன்று வித ப்ரவுன் நிறம் இருக்கும். கருவிழியின்  நடுவில் சிறு வட்டம் சாக்லேட் ப்ரவுன், அதை சுற்றி லேசான ப்ரவுனும் மஞ்சளுமான ஒரு நிறம், முடிவில் கொஞ்சம் டார்க் பரவுன் கலரில் கருவிழியின் வெளிவட்டம். பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்த விழிகள் இதோ அவள் எதிரில், மீண்டும் அதே காதலும் கனிவுமாக பார்த்திருந்தது. 

அவள் பார்வையிலேயே ஜோவிற்கு புரிந்தது, தன் கருவிழிகளை பிரித்து மேய்கிறாள் பெண் என்று. லேசான ஒரு புன்னகை தவழ்ந்தது உதட்டில், அது அவனது கண்ணோரச் சுருக்கத்திலும் வெளிப்பட, தலையை லேசாக உதறி பின்னுக்கு வந்தாள். 

அவன் கைகளின் சூடு உணரவும், அவசரமாய் இழுத்துக்கொண்டாள். “எங்கிட்ட வந்துடுடி. நீ எப்பவும் பார்த்துகிட்டே இருக்கலாம்”, என்றவன் குரல் கனத்து கனிந்திருந்தது. 

கீர்த்தியின் கண்கள் குளமாக, அவளை மீறி ஒரு விசும்பல் வெளிப்பட்டது.. அவசரமாக வாய்பொத்தி அடக்கியவள், அவன் நீட்டிய டிஷ்யூவை வாங்கி முகம் துடைத்தாள். 

“ஜோ…வேணாம் ஜோ…”,மெலிந்து வந்தது கீர்த்தியின் குரல். ஜோசஃபிற்கு சத்தியமாகப் புரியவில்லை. மனதில் அவன் மீதிருந்த காதல் அப்படியேதான் இருக்கிறது அவளுக்கு. பின் ஏன்? 

நெற்றியை தேய்த்தவன், “கீத்துமா. ப்ளீஸ். இதல்லாம் தடை இல்லைடா. இதுக்காக நம்ம சந்தோஷத்தையெல்லாம் தூக்கிப்போடவேண்டாம்மா. என்ன யோசிக்கற நீ? ஏன் வேணாம்னு உருப்படியா ஒரு காரணம் சொல்லு.” 

அவள் வாயை கைகொண்டு மூடியவள், அவன் கண்கள் நோக்க, “கதை அதோட முடியலை ஜோ….”, என்றாள் வலியோடு. 

ஒரு நிமிடம் அவள் சொன்னது புரியவில்லை. அதோடு முடியவில்லை என்றால்? 

சற்றே திகிலுடன், “கீர்த்தி… என்ன? எதுவும் மறைக்காம சொல்லு? திரும்ப உன்னை எதுவும்?” என்றவனுக்கு நினைக்கும்போதே பதறியது. 

கீர்த்தியோ காலி காஃபி கோப்பையையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.