ஜெயராணி வந்திருந்தார். வேணுகோபால் மாரடைப்பும், ப்ரீத்தியின் புற்று நோய் பற்றியும் விசாரிக்க. அதன் வீரியத்தைக் கூறவில்லை ஜோ. ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதோடு நிறுத்தியிருந்தான்.
“நீங்க மனச தளரவிடாதீங்க. இப்பல்லாம் முன்ன மாதிரி பயப்படவேண்டாம். எங்க பக்கத்து சொந்தம் இரண்டு பேருக்கு இப்படித்தான் புற்று நோய்னு சொன்னாங்க. ஆறு மாசம் ஒரு வருஷம்னு ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இப்ப நல்லா இருக்காங்க. என்ன உங்க இரண்டு பேருக்குமே பணக்கார வியாதி. இன்சூரன்ஸ் எதுவும்..?”, என்று நிறுத்த, கீர்த்தியின் இல்லை என்ற தலையசைப்பில்,
“ஜோசஃப் அப்பாக்கு முடக்கு வாதம் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தப்போ, பணம் தண்ணியா கரைஞ்சுது. கடன் வாங்கி, வீட்டை அடமானம் வெச்சுன்னு அப்படி செலவு செஞ்சும், அந்த கவலையிலேயே மாரடைப்பு வந்து போயிட்டார். இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. செலவு குடும்பத்தையே முடக்கிடுச்சு. ஜோசஃப் தலையெடுத்து, கஷ்டப்பட்டுதான் இப்ப தலை நிமிர்ந்தோம். இங்க நீங்க திடமா இருக்கணும் சம்மந்தி. பெரிய பொண்ணு உடம்பை பார்க்கணும், சின்னவ கல்யாணத்தையும் பார்க்கணும்.”
அறிவுரையை பொழிந்தார். வேணுகோபால் தலையாட்டி கேட்டுக்கொண்டார். அருகே அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தவர், “தைரியமா இருக்கணும் கீர்த்தி. குடும்பத்துக்கு ஒன்னுன்னா ஓடி வந்ததுலேயே உன் பாசம் தெரியுது. கல்யாணத்தை தள்ளிப்போடாம சீக்கிரமே நடத்திடலாம் கீர்த்தி. வீட்டுல ஒரு நல்லது நடந்தா எல்லாருக்குமே பாசிட்டிவ்வா நடக்கும்”, என்று அவளைப் பார்க்க, தந்தையை பார்த்த வண்ணம் மையமாக தலையாட்டி வைத்தாள்.
“ஏன்மா? ஹாஸ்பிட்டல் செலவு ஆகியிருக்கும்தான். உன் கல்யாணத்துக்கு தேவையானது இருக்குதில்லையா?”, என்று யோசனையாய் கேட்க,
“இருக்கு ஆன்ட்டி”, என்றாள் மெல்லிய குரலில்.
“ம்ம். பெத்தவங்களுக்கு பாரமா இல்லாம உன் செலவை நீயே பார்த்துக்கற, இதுல அவங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்னிலையில கை குடுத்து இருக்கற. இப்படி ஒரு பொண்ணு உங்களுக்கு நிஜமாவே வரம்தாங்க”, என்று சரோஜினியை பார்த்தார்.
‘குடும்பத்தை ஒரு முறை காப்பாற்றியது போக, இதோ மீண்டும் கைகொடுக்க வந்துவிட்டாளே’ என்ற நினைப்பில் சரோஜினி ஆமோதித்தார்.
அதிகம் சோதிக்காமல் ஜெயராணி கிளம்பிவிட்டார். உடல் நிலை சற்று தேறவும், சீக்கிரமாக திருமணம் வைக்கவேண்டும் என்று மீண்டும் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார். ஸ்டீஃபனால வரமுடியவில்லை என்ற போதும், தெரிந்தவர் சென்னைக்கு செல்வதாகக் கூறவும், கிளம்பி வந்துவிட்டிருந்தார்.
“இப்ப யார் இவங்களை உடனே வர சொன்னது?”, சரோஜினி முனக,
“அவங்க மருமகளை பார்த்து பேசிட்டு போகணும்னு வந்தாங்க”, ப்ரீத்தி பதில் கூறினாள்.
வாசல் வரை சென்று, ஓலா ஏற்பாடு செய்து ஏற்றி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த கீர்த்திக்கும் கேட்டது.
வேணுகோபால் ஓய்வெடுக்கச் செல்ல, ப்ரீத்தியும் ஹர்ஷிதாவை உறங்க வைக்கச் சென்று தானும் கண் அசந்தாள். ஜாடையாக சரோஜினி கீர்த்தியை கொல்லைபுறத்திற்கு அழைத்தார்.
“என்னம்மா?”
“கீர்த்தி, அப்பா இது வரைக்கும் ஆன செலவுக்கும், இன்னும் ஆகப் போற செலவுக்கும் கணக்கு பார்த்தே கவலைப் படறார்டி. நேத்தெல்லாம் இதே புலம்பல் தான். இப்ப உன் மாமியா வேற கல்யாணத்துக்கு காசு இருக்கா, சீக்கிரம் வெச்சிடலாம்னு சொல்றாங்க.”, கிசுகிசுப்பாகப் பேசனாலும் முகத்தில் கவலை அப்பிக் கிடந்தது.
“கெட்டுப் போன உன் பொண்ணை கட்டிக்க ஒருத்தன் வரதே பெரிய விஷயம். இதுல அவனுக்கு பவுன் போடறது உறுத்துதா?”, என்று கடிந்தாள்.
அதில் முகம் வாடியவர், “ஏய்…அதுக்கு சொல்லலைடி. அப்பா, பி.எஃப் லோன் போட்டு ஒரு இரண்டு லட்சம் வரைக்கும் எடுத்துடலாம்னு சொன்னார். ஆனா ரிட்டையராகி வரும்போது பெருசா ஒன்னும் நிக்காது. இல்லைன்னா உன்னைத்தான் நம்பி இருக்கற மாதிரி ஆகிடும்னு பயப்படறார். உடம்பு இருக்கற இருப்புக்கு இவர் வேலைக்கே போகக்கூடாது. அதைச் சொன்னா கைக்கும் வாய்க்கும் இருக்கறவங்க அதெல்லாம் பார்க்க முடியாது. அடுத்த வாரத்துலர்ந்து வேலைக்கு போகணும்னு நிக்கறார்டி”
“…”, அமைதியாக பார்த்திருந்தாள்.
“அவர் பலமே அந்தப் பணம்தான். அதெல்லாம் எடுக்க வேணாம்னு சொல்லுடி.”, சரோஜினி வாய்விட்டே கேட்டார்.
“ம்மா… அப்பாக்கு நான் செய்யறேன்னு வெச்சிக்குவோம். ப்ரீத்திக்கு?”
தந்தையின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக சொன்னதும் சற்றே மலர்ந்த சரோஜினியின் முகம், “கண்ணு…. அவளையும் விட்டுட முடியாதே. முடிஞ்ச மட்டும் பார்க்கத்தான வேணும்?”
“அம்மா… இரண்டு டாக்டர் கிட்ட ஒப்பீனியன் கேட்டாச்சு. எல்லாரும் ஒரே மாதிரிதான் சொல்றாங்க. 4 சைக்கிள் கீமோதெரபி, அப்பறம் ரேடியேஷன், எல்லாம் சேர்த்து 5-6 லட்சம் வந்து நிக்கும். எங்கிட்ட இல்லை. அவ புருஷன் காசு இருக்கில்ல? எடுத்து செலவு செய்யச் சொல்லு. இருக்கறதை இவளுக்கு நான் குடுத்தா, கல்யாணத்துக்கு ஒன்னும் இல்லை”, தெளிவாகக் கூறினாள்.
அவஸ்தையாகப் பார்த்த சரோஜினி, “இல்லைடி… நானே போயிட்டாலும், அந்த காசு ஹர்ஷிக்கு வேணும்மா. அதை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாடி. நான் ஏற்கனவே கேட்டுட்டேன்.”
பற்றிக்கொண்டு வந்தது கீர்த்திக்கு. “தன் பொண்ணுக்கு அவ்வளவு பார்க்கறா ப்ரீத்தி. உனக்கு மட்டும் ஏம்மா என்னைப் பத்தின அக்கறையே இல்லை?”, என்று அவள் கேட்டதுதான் தாமதம், முந்தானையைக் கொண்டு வாயை முடியபடியே அழத் தொடங்கிவிட்டார் சரோஜினி.
சற்று விக்கியபடியே, “கண்ணு.. அக்கறை இல்லாம இல்லைடி. இருக்கற நிலைமையில எதைன்னு பார்க்கறது? கல்யாணம் வேணா கொஞ்சம் தள்ளி போட முடியுமான்னு சம்மந்தியம்மாகிட்ட பேசிப் பார்க்கலாமா”, என்று கேட்கும் அன்னையை கசப்புடன் நோக்கினாள்.
“எனக்கு ஒரு கல்யாணம் ஆகணும்னு இரண்டு வருஷமா சண்டை போட்டுட்டு இருந்த. என் வாழ்க்கையில் நான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு நினைக்கக் கூட இல்லை. நடந்திருக்கு. இப்ப உன் தேவைக்கு தள்ளி போட சொல்லுவியா? ஜோ அம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிய விஷயம். ஏற்கனவே நமக்கு பெருசா வசதியில்லைன்னு நினைச்சிருப்பாங்க. இதுல கல்யாண செலவு கம்மி பண்றேன், தள்ளி வெக்கறேன்னா, பொண்ணே வேணாம்னு சொல்லிடுவாங்க”
மகள் சொல்லும் நியாயம் புரிந்ததுதான். “கீர்த்திமா… எனக்கு புரியுதுடி. அவ உயிர முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த வேணாமாடி? இல்லைன்னா இப்படி அம்மா சொல்வேனா?”, கெஞ்ச ஆரம்பித்தார்.
“இங்க பார் முதல் சைக்கிள் கீமோக்கு நான் கட்டறேன். அதுவும் அப்பாக்கு ஆப்ரேஷன் பண்ண ஆறுமாசம் ஆகும்னு சொன்னதால. அதுக்கு மேல முடியாது. வேணும்னா உன் கைல கழுத்துல இருக்க தங்கத்தை வித்து உன் பெரிய பொண்ணுக்கு செலவு செய். எனக்கு குழந்தைன்னு ஒன்னு பொறந்து அதுக்கு சீர் செய்யற நேரம் வரும்போது பார்த்துக்கலாம்.”
“…”
அவள் பங்கு என்று சொல்லியிருந்த பத்து சவரன் என்பது சரோஜினி தாலிக்கொடி, கை வளையல் எல்லாம் சேர்த்து. அதை ஏற்கனவே “என் தாலிகொடி இருக்கட்டும்டி நாளபின்ன சீமந்தம் , தொட்டில்னு வரும்போது செய்ய வெச்சிக்கலாம் கீர்த்தி. கல்யாணத்துக்கு என் வளையல் செயின் கூட நீ சேர்த்தது போட்டுக்கலாமில்லையா?”, என்று கேட்டிருந்தார்.
“என்ன பார்க்கற? அந்த நகையும் என் கல்யாணத்துக்குத்தான வெச்சிருந்த? நீ அதை வித்துக் குடுத்தாலும் நான் குடுத்த மாதிரிதானே ஆகுது?”
கீர்த்தியின் பார்வை வீச்சைை சந்திக்க முடியாது, “சரிடி. இந்த தரம் நீ பாரு. அடுத்து, நான் நகை வித்து ஏற்பாடு பண்றேன்”, என்று முடித்துக்கொண்டார்.
கீர்த்தி நெகிழும் மனதை இறுக்கிப் பிடித்தாள். அம்மா தாலிக் கொடியை விக்கச் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், தன் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. அதுவும் தனக்காக யாரும் பார்க்கவில்லை. அவரவர் வரைதான் பார்த்துக்கொள்கிறார்கள். தனக்காக ஒன்றும் செய்யவும் இல்லை, இதில் தான் இத்தனை செய்வதே அதிகம் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். எதைக்கொண்டும் கல்யாணத்திற்காக ஒதுக்கி வைத்துள்ள பணத்தை எடுக்கப்போவதில்லை என்று உருப்போட்டுக்கொண்டே சென்றாள்.
மாலை சரோஜினி கேட்டதை ஜோவிடம் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டிருந்தாள்.
“அதுதான் அவங்க கேட்டது மாதிரி ஏதோ ஒரு வகையில் நீதான கீத்து குடுக்கற. அப்பறம் ஏன் கஷ்டப்படற? ப்ரீத்தி நிலைமையில இப்ப என்னன்னு பேச முடியும்?”
“ஆனாலும் கொஞ்சம் முகத்தை தூக்கி வெச்சிட்டுதான் இருக்காங்க. என்னை என்ன தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தாங்க? நானும் அவங்க பொண்ணுதானே?”, கீர்த்தியின் குரலே சற்று தழுதழுத்தது.
அதே கேள்விதான் ஜோ மனதிலும். ஆனாலும் இருக்கும் சூழலில் சரோஜினி கீர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் குறை சொல்லிவிட முடியாது. அவரும் என்னதான் செய்வார்?
“அவங்க என்ன வேணா செய்யட்டும் கீர்த்தி. நீ ஆக வேண்டியதை பாரு.”
“ஹ்ம்ம்… நாளைக்கு மதியம் போல ஹாஸ்பிட்டல் வந்து ப்ரீத்தியை அட்மிட் ஆகிட சொல்லிட்டாங்க. நானும் அவளும்தான் போகணும். அப்பாக்கு முடியாது. அம்மா குழந்தையோட இருக்கணும். அடுத்த இரண்டு நாள், நான் இருக்கற வரை நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன்.”, சற்று மீண்டு கொண்டு பேசினாள்.