“உங்க ப்ரெண்டோட அப்பா என்ன சொன்னார் ஜோ. உண்மையை சொல்லுங்க ப்ளீஸ்?”, என்று கெஞ்ச, மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “கொஞ்சம் சீரியசா தெரியுது ஜோ, உடனே கான்சர் ஸ்பெஷலிஸ்ட் பார்க்கறது பெட்டர்னு சொன்னார்டா”, எனவும் மளுக்கென்று கீர்த்தியின் கண்கள் நிறைந்தது. 

“ஹே… ரொம்ப யோசிக்காதே. போய் ஒரு அம்பதாயிரத்தை உங்க அப்பா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணு. எப்படியும் ஸ்கான் அது இதுன்னு எடுக்க சொல்லுவாங்க. கையோட பண்ண முடிஞ்சா பண்ணிடட்டும்”, என்று சொல்ல சரியென்று எழுந்துகொண்டாள். 

‘ஹ்ம்ம்… எடுத்ததெல்லாம் பத்தாதுன்னு அடுத்து உன் உழைப்பையும் உறியப்போறாங்க’, என்று ஓடியது ஜோவின் மனது. ஒரு வாய் வார்த்தைக்கு கூட அவள் தந்தை பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இத்தனைக்கும் ப்ரீத்திக்கு அவள் கணவனின் பணம் இருக்கிறது. அதில் வட்டியும் வருகிறது. ஆனாலும் இப்போது இதைப் பற்றி பேசுவது தப்பாகப் போகும் என்று மௌனமாக இருந்தான். 

மறு நாள் காலை பத்து மணி போல இடைவேளையின் போது அழைப்பு வந்துவிட்டது. அவசரமாக எடுத்தவளுக்கு அவள் தந்தையின் அழுகுரல்தான் கேட்டது. ஜோ நேற்று சொல்லி திடப்படுத்தியதில், கெட்ட செய்திக்கு தன்னை தயார் படுத்தியிருந்தவள், 

“அப்பா.. என்ன சொல்றாங்க டாக்டர்? எதுன்னாலும் பார்த்துக்கலாம்பா”, என்று சொல்ல, போன் கைமாறுவது தெரிந்தது. 

“ஹலோ மேடம்? நான் ட்யூட்டி டாக்டர் சர்வேஷ் பேசறேன். நீங்க பேஷண்ட் ப்ரீத்தியோட சிஸ்டரா?” 

“ஆமாம் டாக்டர், என்ன டயாக்னாசிஸ் டாக்டர்?”, என்றாள் சற்றே பயத்துடன். கண்களால் ஷீத்தலை அழைக்க, அவளும் அருகில் வந்துவிட்டாள். அவள் கையைப் பற்றியவள், ஆசிரியை அறையைவிட்டு தள்ளி காலியாக இருக்கும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து, போனை ஸ்பீக்கரில் போட்டாள். 

“சாரி மேடம். நேத்து MRI ஸ்கான் ரிப்போர்ட், யூரின் ப்ளட்னு எல்லாமே எடுத்தோம். உங்க சிஸ்டருக்கு பாங்க்ரியாடிக் கான்சர்.”, என்று வந்தது டாக்டரி குரல். 

“ஹான்? என்ன?” 

“ம்ம்.. கணையத்துல புற்று நோய் வந்திருக்கு. ஆனா பார்க்காம விட்டதுல பரவியிருக்கு”, டாக்டர் சொல்லவும் கைகள் சில்லிட்டது கீர்த்திக்கு. கையை பிடித்துக்கொண்டிருந்த ஷீத்தலுக்குமே உடல் நடுங்கியது. 

“என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? ஸ்டார்ட் பண்ணிடுங்க. சரி பண்ணிடலாம் இல்லையா?”, என்று மென்று முழுங்கிக் கேட்டாள் கீர்த்தி. 

“ம்ம்…அது கொஞ்சம் சிக்கல் மேடம்”, என்றவன் அடுத்து பேசிய பத்து நிமிடத்தில் அவளுக்குப் புரிந்ததெல்லாம், “கணையம் முழுதுமே பரவியிருப்பது போலத் தெரிகிறது. லேப்ரோஸ்கோப்பி என்று ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வயிற்றுக்குள் சிறு துளையிட்டு, அதில் காமெரா பதித்த நீள டூயூப்களை விட்டு மருத்துவர் பார்வையிடுவார். அதில்தான் துல்லியமாக எந்த நிலையில் இருக்கிறது, எங்கெல்லாம் பரவியிருக்கிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் கண்டுபிடிக்க முடியும். வேறு மருத்துவரிடம் காட்டி கருத்து கேட்டுவிட்டு வந்தாலும் சம்மதமே. ஆனால் சீக்கிரமே செய்யவேண்டும்”, என்று இடியை இறக்கினார். 

கீர்த்தி யோசிக்கவே இல்லை. “சரி டாக்டர். நீங்க அரேஞ்ச் பண்ணிடுங்க”, என்றுவிட்டாள். அதற்கான கட்டணம் கேட்டறிந்து, கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினாள். 

கைப்பேசி அவள் தந்தையிடம் வர, “அப்பா, அவங்க அந்த ஆப்ரேஷன் செய்யட்டும், நான் பணம் அனுப்பறேன். உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும்பா. ஏற்கனவே ரொம்ப தள்ளி போட்டுட்டோம். தைரியமா இருங்க. சரி பண்ணிடலாம்”, அவளிடம் இல்லாத தைரியத்தையெல்லாம் திரட்டி தந்தையிடம் பேசினாள். 

ஷீத்தல் அதற்குள் குறுஞ்செய்தி வாயிலாக ஜோவிற்கு செய்தியை கடத்திவிட்டிருந்தாள். அன்று மாலை ஜோவும் ஷீத்தலும் கீர்த்தியின் வீட்டில் இருந்தார்கள். ப்ரீத்திக்கு சென்னையில் லாப்ரோஸ்கோப்பி  நடந்து கொண்டிருந்தது. 

மாலை அவளை அழைத்துப் பேச, ப்ரீத்தி மிகவும் பயந்திருந்தாள். சரோஜினி அவர் பங்குக்கு அழுது கரைந்திருந்தார். 

“ஒரு  நாள் ஒரு பொழுது கொஞ்சம் சந்தோஷமா இருந்திரக்கூடாதுன்னே ஆண்டவன் சோதிக்கறானே. இப்பதான் உனக்கு ஒரு வாழ்க்கை அமையுதேன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஒரு குண்டு தலை மேல வந்து விழுது”, என்று அரற்றியவரிடம்,  

“ம்மா…கொஞ்சம் சும்மா இருக்கியா? அவளே பயந்துபோயிருக்கா. நீ இப்படி புலம்பினா என்ன அர்த்தம். இல்லை இப்படி புலம்பிட்டா உடனே எதுவும் மாறிடப்போகுதா? அவகிட்ட நம்பிக்கையா பேசு. என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுட்டா, சரி பண்ற வேலையை தொடங்கிடலாம். இப்ப நிறைய மெடிசின் வந்தாச்சு. புரியுதா?”, என்று அதட்டியிருந்தாள். 

“நிறைய பணம் ஆகும்னு சொல்றாங்களேடி. அதுவும் இங்க அப்பல்லோல…”, குரலை அடக்கி கேட்டார். 

“ஆமா, பணக்கார வியாதி வந்தா என்ன செய்ய? பார்க்காம விட முடியுமா இல்லை கவர்ண்மென்ட் ஆஸ்பிட்டலுக்கு போயிட முடியுமா? இப்ப இது பத்தி யோசிக்க வேணாம். முதல்ல இந்த டெஸ்ட் முடியட்டும்”, என்று கடிந்துவிட்டு வைத்தாள். 

“என்ன கீர்த்தி. அவங்கதான் எதோ சொல்றாங்கன்னா,  நீயும் திட்டினா எப்படி?”, ஷீத்தல் கேட்கவும்,  

“வேற என்ன செய்ய சொல்ற ஷீத்து? பணம் செலவாகும்னா, ஆகத்தானே செய்யும்?”, என்றாள் நெற்றியை  நீவியபடி. 

“ப்ரீத்திக்கு அவ புருஷன் காசு இருக்குதானே?”, ஷீத்தல் கேட்கவும் அவளைப் பார்த்தவள், “ஹ்ம்ம். டெப்பாசிட்ல இருக்கு ஜோ. அது ஹர்ஷிக்குன்னு வெச்சிருக்கா.” 

சொல்வதற்கு கருத்துகள் இருப்பினும் ஜோ எதுவும் கூறவில்லை. 

“இவங்க நல்லா இருந்தாதானே பொண்ணை பார்த்துக்க? உங்க அப்பாக்கு செய்யற சரி. ப்ரீத்திகிட்ட எதுவும் இல்லைன்னா கூட சரின்னலாம். அவ வீட்டுக்காரர் சாவுக்கும் காரியத்துக்கும் கூட நீதான் செலவு பண்ண, ஆஃபீஸ்லர்ந்து பணம் வந்தும் திருப்பி தரலை. உன் கல்யாண செலவுக்கு நீதான பார்க்கணும்? வெளினாட்ல வேலை பண்ணா, காசை மரத்துலர்ந்தா பறிக்கறோம்? ”, ஜோவின் மனதில் இருந்த ஆதங்கத்தை ஷீத்தல் கேட்டுவிட்டாள். 

வருத்தமான ஒரு புன்னகையை சிந்திய கீர்த்தி, “இந்த நேரத்துல நான் வேற என்ன செய்ய முடியும் ஷீத்து? அவங்களுக்கே தெரியணும். ம்ப்ச்..”, என்று புறம் தள்ளினாள். 

ஒரு மணி நேரம் சென்று ப்ரீத்தி ப்ரோசீஜர் முடிந்து வந்துவிட்டாள் என்றும், மயக்கம் தெளிவதற்காக காத்திருக்கிறார்கள்.  நாளை காலை எட்டு மணி போல் மருத்துவர் சந்தித்து முடிவுகள் பற்றி கூறுவார் என்று போன் செய்திருந்தார் வேணுகோபால். 

மறு நாள் நல்லவிதமாக விடியவில்லை. மருத்துவர் அவளது கான்சர் முற்றிவிட்டது. கணையம் தாண்டி அருகிலுள்ள இரத்த நாளங்களிலும் பரவியிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு வழியில்லை. கீமோ தெரபி, ரேடியேஷன் என்று குடுத்தால் சற்று மட்டுப்படும். ஆனால் இந்த வகை புற்று நோய் சீக்கிரமாக கண்டுபிடிக்கவில்லை என்றால் பிழைப்பது வெகு அரிது என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி கைவிரித்துவிட்டார். 

மகளின் வாழ்க்கை இன்னும் மாதக் கணக்கில்தான் என்ற செய்தி கேட்க, வேணுகோபாலுக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையிலேயே ஏற்பட்டதால், உடனே காப்பாற்றப்பட்டார். ப்ரீத்தியின் டெஸ்ட் முடிவுகள் பற்றி கேட்க காத்திருந்தவளுக்கு  வேணுகோபாலின் மாரடைப்பு செய்திதான் வந்தது. ப்ரீத்தி அவளை உடனே கிளம்பி வருமாறு அழைத்தாள். 

விஷயம் தெரிந்து ஓடி வந்த ஜோ, ஸ்தம்பித்து நிற்பவளை மெல்ல அணைக்க, அதற்குத்தான் காத்திருந்தது போல கதறிவிட்டாள் கீர்த்தி. 

மெல்ல அவளை தேற்றி, மேடம் டெய்லரிடம் விஷயத்தை கூறி, விடுப்பு கேட்டு, விமான டிக்கெட் எடுத்து என்று ஜோ நடக்கவேண்டியதை பார்க்க, முதல் வகுப்பு இல்லாததில், ஷீத்தல் வேகமாக வந்து அவளுக்கு எடுத்துச் செல்ல உடைகளை அடுக்கி, வீட்டை சரி செய்து, கீர்த்திக்கு உணவளித்து, விமான நிலையத்திற்கு கிளப்பினாள். 

ஜோதான் ஹாஸ்பிட்டல் நிலவரத்தைக் கேட்டு, அவள் வரும் விமானத்தின் நேரத்தை தெரிவித்து என்று ப்ரீத்தியிடம் பேசினான். சரோஜினி அழுது கொண்டிருக்க, ப்ரீத்தியும் ஷர்ஷியும் கூட ஐ.சி.யு வாசலில் காத்திருந்தார்கள். வேணுகோபாலை மயக்கத்தில் வைத்திருந்தார்கள். 

“கீத்துமா. போனதும் எல்லாமும் உன் தலையில வந்து விழும். சமாளிப்பியா? ப்ரீத்தி ரிப்போர்ட் எல்லாம் எடுத்து செகண்ட் ஒப்பீனியன் வாங்கலாம். உங்க அப்பாக்கு அடுத்து என்னன்னு பார்க்கணும்” , கவலையாகக் கேட்டான். 

“எனக்குத் தெரியலை ஜோ. ராஜன் அங்கிள்கிட்ட பேசிட்டேன். அவர் நான் போய் பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கார். நான் நேரா ஒரு ஓலா எடுத்து அப்பல்லோ போயிடறேன். டாக்டர்கிட்ட பேசிட்டு போன் பண்றேன்”, என்றவள் தோற்றமே ஓய்ந்து போயிருந்தது. 

அவள் கைகளை இறுக்கமாகப் பிடித்தவன், “கீத்துமா… நிமிர்ந்து என்னைப் பாரு. எதுன்னாலும் நீ தனியில்லை. நான் இருக்கேன். அதை நினைப்புல எப்பவும் வை. எல்லாமும் நீயே சமாளிக்கணும்னு இல்லை. புரியுதா? உன் ஹெல்த் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். எனக்காக அதை நீ பார்த்துக்கணும். செய்வியா?” 

பரிவும் தவிப்புமாக கேட்பவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்தது. மெல்ல புன்னகைத்தவள், “கண்டிப்பா ஜோ. உனக்காக பார்த்துக்கறேன். வொர்ரி பண்ணிக்காத”, என்றாள். 

சென்னை வந்து இறங்கியதிலிருந்து தைரியத்தை முன்னிருத்தி நிலைமையை கையில் எடுத்துக்கொண்டாள். மாலையில் அவள் தந்தை கண்விழிக்கும் போது பார்த்தது கீர்த்தியைதான். அவள் வந்துவிட்டாள் என்பதே அவருக்கு தெம்பைத் தந்தது.  

ப்ரீத்தியின் நிலையைப் பற்றி அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தனியே பேச, “உங்க கஷ்டம் புரியுதுமா. ஆப்பிள் போன் கம்பனி முதலாளி ஸ்டீவ் ஜாப்ஸ் கேள்விபட்டிருப்பீங்க. அவருக்கு வந்ததும் இதே கான்சர்தான். அத்தனை பணம், செல்வாக்கு, எந்த புது கண்டுபிடிப்பா இருந்தாலும் அவருக்கு போயிடும். 24 மணி நேரமும் டாக்டர்ஸ். அப்படிப் பட்டவருக்கே பத்து வருஷம்தான் உயிரை பிடிச்சு வெக்க முடிஞ்சுது. முதல்லயே கண்டுபிடிச்சு, ஆப்ரேஷன் மூலமா வெட்டி எடுத்துட்டா நூத்துல பத்து பேரு அஞ்சு வருஷம் வாழ சான்ஸ் இருக்கு. இங்க ப்ரீத்திக்கு கணையத்தை தாண்டி பரவிடுச்சு. கீமோ, ரேடியேஷன்னு குடுத்து கொஞ்சம் மட்டுப்படுத்தலாம். திரும்ப பரவும். அந்த வியாதியோட தன்மை. உடம்பு தாங்கற வரை இதை பண்ணலாம். ஆனா ஒரு கட்டத்துல உடம்பு தாங்காது. அடுத்த இரண்டு மூணு மாசத்துக்குள்ள பாங்க் வேலை, சொத்துன்னு எது இருந்தாலும் வாரிசுக்கு மாத்தறதை முடிச்சுடுங்க”, என்று சொல்ல கீர்த்திக்கு நெஞ்சு படபடத்தது. 

இரண்டு நாட்களில் வீடு வந்தார்கள். தந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், ஆனால் அவர் உடல் நிலை அதை தற்போதைக்கு தாங்காது. ஓய்வு வேண்டும் என்று அறிவுரையோடு அனுப்பி வைத்தார்கள். 

“இருக்கற செலவோட உனக்கு இன்னும் செலவு வெச்சிட்டேன் மா. ஒரேடியா போய் தொலைஞ்சிருக்கலாம்”, என்று வேணுகோபால் விரக்தியில் கூற,  

“என் கல்யாணம் பார்க்க இஷ்டமில்லையாப்பா?”, என்று கேட்டு அவர் வாயை அடைத்தாள் மகள். 

ப்ரீத்தி பெரிதாக எதுவும் பேசவில்லை.  தன் நிலை அவளுக்கும் தெரியும். முதல் நாள் பயந்தது கூட இப்போது இல்லை. யோசனையாகவே இருந்தாள். குழந்தையை தன் கைக்குள்ளேயே வைத்திருந்தாள். 

கீர்த்திதான் அவள் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு  வேறு இரண்டு மருத்துவர்களை சென்று பார்த்து வந்தாள். எல்லோருமே ஒரே மாதிரிதான் கூறினார்கள். கடவுள் அருள் இருந்தால் ஆறு மாதம் கிடைக்கலாம்.