அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், “இல்லை நானே பேசறேன். ஆனாலும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகட்டும்னுதான் சொல்லுவாங்க ஜோ.” என்றாள் சங்கடமாக.
“வீட்டுல சொல்லி அவங்க சரின்னு, அப்பறம் அம்மா பார்த்து பேச அது இதுன்னு கொஞ்சம் டைம் எடுக்கும். நமக்கும் லீவ்ல வர ஜூன் ஆகிடும்னு சொல்லிக்கலாம் கீத்துமா. அது ஒன்னும் பிரச்சனையில்லை. பார்த்துக்கலாம். ரிஜிஸ்டர் கல்யாண ஐடியாக்கு உங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க?”, ஜோவின் கைகள் மெல்ல அவள் சிகையை அளைந்தது.
“தெரியலை. யோசிக்க முடியலை”, ஒரு பெருமூச்சை விட்டவள், “அவங்களுக்கு சாய்ஸ் தராம, இதுதான் இப்படித்தான்னு சொல்லப் போறேன். எல்லாத்துக்குமா சேர்த்து மனசை ரெடி பண்ணிக்கட்டும்”, என்றாள் முடிவாக.
மறு வாரம், ஞாயிறு காலை நேரமாகப் பார்த்து, கீர்த்தியே தன் வீட்டிற்கு அழைத்தாள்.
“கீர்த்திமா? என்னடா எல்லாம் ஓகே தானே?”, என்று தந்தையின் குரலில், “ஒன்னுமில்லைபா. உங்க இரண்டு பேர்கிட்டயும் சொல்ல ஒரு விஷயம். அதுதான் போன் பண்ணேன். அம்மா இருந்தா கூப்பிட்டு ஸ்பீக்கர்ல போடுங்கப்பா.”
வியர்க்கும் உள்ளங்கையை குர்த்தியில் தேய்த்து, ஆழ்ந்த ஒரு மூச்செடுத்தாள்.
“என்ன கீர்த்தி? சொல்லு. நல்லாயிருக்கியா?”, அம்மாவின் குரல் சற்று அசிரத்தையாக வந்தது. வேலையாக இருந்திருப்பார் போல.
மறுபுறம் ஒரு நொடி அமைதி. அடுத்து வந்தது ப்ரீத்தியின் குரல், “ஏய்… நல்ல விஷயம் கீர்த்தி. இப்படி ஒன்னு சொல்ல மாட்டியான்னு காத்துகிட்டு இருந்தோம்.”
நிஜமான மகிழ்ச்சியோடு பேசினாள். “ஹ்ம்… யாருடி பையன்? எப்படி? எத்தனை நாளா தெரியும்?”, அம்மாவின் குரல் அடுத்து விசாரணையாக வந்தது.
ஜோ பற்றி முன்பொரு சமயம் பேசியதைக் கூறி அவனே தேடி வந்த வரை சொல்லி முடிக்க, மறுபுறம் அமைதி.
“கிரிஸ்டியனா?”, அம்மா குரல் சுருதி இறங்கியிருந்தது.
“இத்தனை வருஷம் கழிச்சும் உன்னை தேடி வந்திருக்கார். நீ ..சொல்லிட்டியாமா?”, வேணுகோபால் சற்று தடுமாறிக் கேட்டார்.
“ஹ்ம்ம்…எல்லாமே. என்னால ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ முடியுமான்னு எனக்குத் தெரியலைபா. ஆனா அவர் ரொம்ப ஸ்திரமா இருக்கார். கவுன்சலிங் எல்லாம் போறார். எனக்கும் கொஞ்சம் இப்ப இப்ப நம்பிக்கை வருது.”
“அந்த பிள்ளை வீட்டுக்கெல்லாம் தெரியுமாடி?”, சரோஜினி கேட்க,
“காலேஜ்லர்ந்து விரும்பறோம், ப்ரேக்-அப் ஆகி இப்ப திரும்ப விரும்பறோம்னு சொல்லியிருக்கேன். அவர் அம்மா கூட பேசினேன். மத்த எதுவும் தெரியாதுமா. தெரியவும் வேணாம்”, கடினப்பட்டே வந்தது கீர்த்தியின் குரல்.
“கரெக்ட்தான் கீர்த்தி. அவங்களுக்கு சம்மதமா?”, ப்ரீத்தி அடுத்து கேட்டாள்.
“இல்லைங்க… கேட்கறவங்களுக்கு எப்படி பதில் சொல்றது? “
“சொல்லாதம்மா! என் பொண்ணு மதம் மாறி அவ இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்டா அதனால தலை முழுகிட்டேன். பேசறதில்லைன்னு சொல்லிடு. உனக்கு எப்பவும் அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்றதுதான ரொம்ப முக்கியம்?”, கீர்த்தி பொரிந்தாள்.
அதில் கீர்த்திக்கு இன்னும் இயலாமை கூடியது. பிறகு பேசுவதாக இணைப்பை துண்டித்தாள்.
மாலை நேரம் வேணுகோபால் அழைத்து மாப்பிள்ளையோடு பேச வேண்டும் என்றார்.
“ஜோசஃப்னு பேர் சொல்லியே கூப்பிடுங்கப்பா. நான் அவரை உங்களுக்கு போன் பண்ணச் சொல்றேன்” , என்றதோடு ஜோவையும் அழைத்து விஷயத்தை கூறினாள்.
ஜோ இதனை எதிர்பார்த்திருக்கவும், பேசி முடித்துவிட்டு அவள் வீடு தேடி வந்துவிட்டான்.
“என்ன ஜோ. அப்பா என்ன பேசினாங்க?”
“வேற எதுவும் வேணாம், உன்னை நல்லா பார்த்துக்கணும்னு எல்லா பொண்ணை பெத்த அப்பாங்க மாதிரியே கேட்டுகிட்டார்.”
அவன் பேச்சில் முறைத்தவளை பார்த்து சிரித்தவன், கை விரிக்க, முறைப்பு மாறாது அவன் அருகே வந்து அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்.
“கீத்துமா… உண்மையா, உங்க அப்பா அம்மா, அக்கா மேல எனக்கு இருக்கற கோவம் மாறாது. உன்னோட பேரண்ட்ஸ் அப்படிங்கறதாலதான் பேசினேன். என்னோட விலகல் உங்கப்பா உணர்ந்திருப்பார். கேட்டா நான் அப்படித்தான்னு நீ சமாளிச்சுக்கோ. எங்க அம்மா பேசுவாங்க. எதுவும் கேட்டாலும் கீர்த்திகிட்ட சொல்லுங்க, நாங்க பேசி சரி பண்ணிக்கறோம். அம்மாகிட்ட நேரடியா எதுவும் மறுக்க வேணாம்னு சொல்லியிருக்கேன்.”
“…”
“ஏய்… என்ன?”, லேசாய் அவள் தோளை உலுக்கினான்.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், “அவங்க என்னை விட்டுட்டாங்கன்ற கோவமா?”
“ம்ம்… ம்ப்ச்… நான் எப்பவும் விடமாட்டேன். நான் போறும் உனக்கு”, என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவன் சட்டையைப் பிடித்தவள், “ஹ்ம்ம்…” என்று இன்னும் தலையை பின்னால் சாய்க்க, அவள் கண்களோடு கலந்தவன், “கீ…கீத்துமா?”, என்று வினவி நின்றான்.
நெஞ்சம் படபடக்க, லேசாய், மிக லேசாய் ஆம் என்று தலையசைத்தாள் கீர்த்தி. மிக மிக லேசாய் ஒரு இதழொற்றல்.
விலக முயன்றவனை இழுத்தது அவள் கரங்கள். ஜோ விலக கீர்த்தியின் முகம் அவனை தொடர்ந்தது. “ம்ம்ம்…. கீத்துமா…. “என்றவனின் மன்றாடல் அவள் இதழ்களில் முடிந்தது. முற்றுகையாய் இல்லாது, புதிதாய் அறிந்து கொள்ளும் ஒரு தேடல்.
அவள் தோளை சுற்றியிருந்த ஒரு கையின் அழுத்தம் கூடியது. மற்றபடி இதழ்கள் சாவதானமாக அவள் இதழோடு உறவாடி, அனுமதி வாங்கி இன்னும் முன்னேறியது. கீர்த்தி அவன் வாசத்திலும் சுவாசத்திலும் தொலைந்திருந்தாள். மேலும் மேலும் நெருங்கத்தான் தோன்றியது. அவள் கைகள் மாலையாய் கோர்த்து அவன் கேசத்தை அளைந்தது.
ஜோவையும் மீறி அவனது வலது கை கீர்த்தியின் இடையை பிடிக்க, சற்றே உணர்வு மீண்டு, விலகினாள்.
“சாரி…சாரிமா…”, அவசரமாய் அவளை விடுத்து தள்ளி அமர்ந்தான் ஜோ.
“ஹே….ஜோ! எதுக்கு சாரி?”, அவன் புஜம் பற்றினாள். இருவருக்குமே சற்று மூச்சு வாங்கியது.
அவள் முகத்தை தீவிரமாக ஆராய்ந்தவன், “உனக்கு ஓகேதான கீர்த்தி? நான் கொஞ்சம் கன்ட்ரோல் தாண்டி…”, என்றவனின் வாயை பொத்தினாள் கீர்த்தி.
“கேட்டது நான். குடுத்தது நீ. இதுல எதுக்கு சாரி, இவ்வளவு கில்ட்? அவ..அவனை யோசிக்கறியா?”, எனும் போதே கீர்த்தியின் முகம் கசங்கியது.
“ஹேய்…உன்னை சங்கடப்படுத்திட்டேனோங்கற எண்ணம்தான். நீ சொல்ற மாதிரி நினைப்பு இருந்திருந்தா, நான் ஏன் உன் இடுப்பை..” அதற்கு மேல் பேச விடாது அவன் வாய் பொத்தியிருந்தாள்.
அவள் உள்ளங்கையில் ஒரு முத்தம் வைக்க, “ச்சோ..”, என்று கையை எடுத்தாள், செல்ல முறைப்போடு. அதில் ஜோவின் முகமும் மகிழ்ச்சியைப் பூசிக்கொண்டது.
“நம்ம முதல் கிஸ் ஜோ”, என்றாள் சற்றே வெட்கத்துடன்.
“ஹ்ம்ம்…எதிர்பாராத ட்ரீட். நீ கேட்டதும் நான் குடுத்தேன். அப்போ நான் கேட்டா….”
“நான் ஒன்னும் குடுத்துட்டு சாரி சொல்ல மாட்டேன்”, நெற்றியை அவன் தோளில் முட்டினாள்.
இம்முறை அவளை முழுதாக திருப்பி, கைகள் இரண்டும் அவன் கன்னம் பற்ற, “ம்ம்?”, என்று கேட்டவனின் மையலுற்ற கண்களைப் பார்த்தபடியே எக்கி அவன் இதழ் சேர்ந்தாள் கீர்த்தி.
ஒரு வாரம் போல கழிந்திருக்க, ஸ்டீஃபன் அழைத்திருந்தான்.
“சொல்லுடா. அங்க என்ன நிலவரம்?”
“ம்…புயல் சென்னை நோக்கி பயணப்படலாமான்ற யோசனையில் இருக்கு”, என்றான் இடக்காக.
“டேய்…”, என்று அதட்டினாலும், ஜோவின் புன்னகை அவன் குரலிலும் தெரிந்தது.
“ம்ம்… உன் மாமனாரோட பேசினாங்க அம்மா. ஓகேவாதான் போச்சு. அவரே என் பொண்ணு துபாய்ல அவ கல்யாணத்துக்காகத்தான் சேர்த்துகிட்டு இருக்காங்க. நகையும் கொஞ்சம் வாங்கியிருக்கா. அவ சேமிப்பு மொத்தமே அவளுக்குத்தான்ற மாதிரி சொல்லியிருக்கார். அம்மா அப்ப ஒன்னும் சொல்லலை. ஆனா போனை வெச்ச அப்பறம், அப்ப இவர்கிட்ட எதுவும் இல்லை. அந்த பொண்ணு சம்பாதிச்சது கல்யாணத்துக்கு செலவு பண்ண இவர் பெர்மிஷன் குடுக்கறார் பாருடான்னு கமெண்ட் அடிக்கறாங்க!”
“ம்ப்ச்… அம்மா ஏண்டா இப்படி மாறிட்டாங்க. இருதயம் மாமா அவர் மகனுக்கு வரதட்சணையா கார் வாங்கினதுக்கே கோவப்பட்டாங்க. இப்ப இப்படி?”, யோசனையாகக் கேட்டான் ஜோ.
“ம்ம்… கேட்டேனே! எனக்கு பொண்டாட்டியா வரப்போறவ அண்ணி விட அதிகமா போட்டுட்டு வந்துட்டா, குடும்பத்துல சிக்கல் வருமாம். வசதி வாய்ப்பும் ரொம்ப இருக்கக்கூடாதாம். அதுவே நீ பணக்கார வீட்டு பொண்ணா பார்த்திருந்தா, எனக்கும் அப்படி வரன் பார்த்திருப்பாங்களாம். என்னவோ லாஜிக் பேசினாங்க. நான் எது சொன்னாலும் எனக்கே ரிவிட் அடிப்பாங்கன்னு எதுவுமே பேசிக்கலை.”
“டேய்… ஷீத்தலும் மிடில் கிளாஸ் தாண்டா. அவ சம்பாத்தியத்துல தம்பி தங்கைன்னு கரையேத்திருக்கா. உனக்கு வசதியான மாமனார் வீடு வேணும்னு நினைச்சா, அது மாதிரி பார்த்துக்கலாம்டா”, எங்கே தம்பியின் விருப்பம் கேளாமல் வரன் பார்த்துவிட்டோமோ என்று சங்கடப்பட்டுவிட்டான்.
“அதெல்லாம் இல்லை ஜோ. ஷீத்தல்கிட்ட பேசினது பிடிச்சிருந்தது. என் குணம் தெரிஞ்சுதான் நீயும் செலக்ட் பண்ணிருப்ப. உன் ரூட்டை கிளியர் பண்ணிட்டு, என் கல்யாணப் பேச்சை சீக்கிரமே ஆரம்பி ராஜா!” தம்பியின் அவசரத்தில் சிரித்தவன், “அடுத்த வருஷம் எங்க கல்யாணம் முடிஞ்ச மறுமாசமே உனக்கும் பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணிடுவோம். ஒரு மாசம் பொறு, இது ஒரு நிலைக்கு வந்ததும் அம்மாகிட்ட பேசிடறேன்.”, வாக்குறுதி அளித்தான்.