துபாயின் எண்ணற்ற மாலில் ஒன்றில் அதிகக் கூட்டமில்லாத இடமாக அமர்ந்திருந்தார்கள் கீர்த்தி – ஜோசஃப் ஜோடி.
உணவருந்தும் நேரம் எதுவும் பேச வேண்டாம், அதற்குப் பின் சொல்கிறேன் என்று கீர்த்தி சொன்னதில், பெரிதான பேச்சுகளின்றி உண்டு முடித்து வெளியே வந்திருந்தார்கள். பில்லைக் கூட நீயே கட்டு. சம்பளம் வர வரை இருக்கற அட்வான்ஸ் வெச்சுதான் ஓட்டணும் என்றிருந்தான். இதோ அருகில் அமர்ந்திருந்தாலும், ஜோசஃபால் கீர்த்தியின் டென்ஷனை தெளிவாக உணரமுடிந்தது. மேலும் அழுத்தம் தராது அமைதியாக அமர்ந்திருந்தான்.
கீர்த்தியை எங்கேயோ அனுப்பி வைத்து, அவள் கைப்பேசியை எடுத்து பெற்றோர்களே அனுப்பி வைத்த செய்தி என்று நினைத்து வீட்டு முகவரியை தேடிப் பிடித்து சென்றது. அங்கே யாருமே இல்லை என்றதும் அறிந்தவர் தெரிந்தவர் என்று விசாரித்தது என்று மேலோட்டமாகக் கூறியிருந்தான்.
“உன்னைப் பத்தி சொன்னதும் வீட்ல ரொம்ப திட்டினாங்க ஜோ. நான் ஒன்னும் யாரோ உருப்படாதவனை விரும்பலைன்னு உன் படிப்பு, குடும்பம் எல்லாம் சொன்னேன். ஆனாலும் உன் மதம்தான் அவங்களுக்கு கண்ணுக்கு தெரிஞ்சது. என்னைவிட ஊர் உறவுக்கு எப்படி பதில் சொல்றதுன்றதுதான் முக்கியமாபட்டுது. என்னவோ கொஞ்சம் எடுத்தெறிஞ்சு பேசிட்டேன். இப்ப ஞாபகம் கூட இல்லை. அம்மாக்கு ரொம்ப கோவம் வந்து அடிச்சிட்டாங்க. சாப்பிட மாட்டேன்னு இதுல போராட்டம் வேற பண்ணேன்”, வருத்தப் புன்னகை வந்து சென்றது கீர்த்தியின் முகத்தில்.
“இரண்டு நாள்ல ஃபீவர் வந்துடுச்சு. என் அக்கா ப்ரீத்தி அவ புருஷனோட வீட்டுக்கு வந்தா. எனக்கு சமாதானம் சொல்லி, எங்கம்மாகிட்ட ‘நான் அழைச்சிட்டு போய் கொஞ்ச நாள் வெச்சிக்கறேன் மா. இது ஆறப்போடுங்கன்னு’ புத்தி சொல்லி என்னை கூட்டிட்டுப் போனா. அவளை நம்பி போனது உலக மகா தப்பு.”, தரையைப் பார்த்து மெதுவான குரலில் பேசினாள் கீர்த்தி. அவள் தோற்றமே ஜோவிற்கு மனசைப் பிசைந்தது. ஆனாலும் அமைதியாகவே இருந்தான்.
“ப்ரீத்திக்கு கல்யாணம் முடிச்சு இரண்டு வருஷம் தாண்டியும் குழந்தை இல்லை. அவ மாமியார் படுத்தி எடுத்திட்டு இருந்தாங்க. ஒரு வருஷம் ஆகியும் விசேஷம் இல்லைன்னு டாக்டர் கோவில்னு ஆரம்பிச்சிட்டாங்க. ஹார்மோன் மாத்திரையிலிருந்து, சத்து மாத்திரை வரை எல்லாம் சாப்பிட்டா.”
“ம்ம்..சொல்லியிருக்க.”, நினைவு கூர்ந்தான்.
“அடுத்து ஐ.வி.எஃப் ட்ரை பண்ணா. முதல் முறை தங்கலை. இரண்டாவது அடெம்ப்ட் ஒரு மாசம் இருந்து கலைஞ்சுடுச்சு. அதுல ரொம்பவே டிப்ரெஸ்டா இருந்தா. அவளும் அவ வீட்டுகாரரும் தனிக்குடித்தனம். இதுல அவர் ஆஃபீஸ் போயிட்டா தனியா உட்கார்ந்து யோசிச்சு, அழுது உடம்பை கெடுத்துக்கிட்டா. அதனால என் வீட்டுல வந்து இரு, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு மாற்றமா இருக்கும்னு சொல்லவும்தான் நானும் கிளம்பினேன். போய் நாலு நாள் கிட்ட நல்லாத்தான் போச்சு. ஃபீவர்லர்ந்து சரியாகிட்டு இருந்தேன்.”
சனிக்கிழமை இரவு அழைப்பு மணி சத்தம் கேட்டு கடிகாரத்தைப் பார்த்தாள் கீர்த்தி. நேரம் நள்ளிரவைக் காட்டியது. மீண்டும் தட்டப்பட, லைட்டை போட்டு ஹாலுக்கு சென்றாள்.
“ப்ரீத்தி…கதவை திறடி. சாவியைக் காணலை”, என்று வாசலில் மாமா அழைப்பது கேட்டது, அடுத்து மீண்டும் பெல் அடித்தது. கதவும் தட்டப்பட, வேகமாக சென்று கதவை திறந்தாள்.
“ப்ரீத்தி? எவ்ளோ நேரம்?”, என்று உரசி உள்ளே வந்த இரகுராமனிடமிருந்து குப்பென்று மது வாசனை. ‘ஒஹ்…மாமா குடிப்பாரா’ என்று அதிர்ந்தவள், வாயிலை தாளிட்டு உள்ளே வர, சோஃபாவில் தளர்ந்திருந்தவன், “வா செல்லம்”, என்று கையை பிடித்து இழுக்க அவன் மீதே ஏடா கூடமாக விழுந்தாள் கீர்த்தி.
“மாமா… நான் கீர்த்தி”, என்று அடித்துபிடித்து எழுந்து கொள்ளப் பார்த்தவளின் இடுப்பில் கையைச் சுற்றி, கழுத்து கன்னம் என்று வாசம் பிடித்தவன்,
“ப்ரீத்திமா…இன்னும் பட்டினி போடாதடி என்னை. எந்த டாக்டரும் வேணாம். நானே தரேண்டி உனக்கு குழந்தை”, என்று பேசவும் திமிறினாள் கீர்த்தி.
“அய்யோ… மாமா … நான் கீர்த்தி… உங்க பொண்டாட்டி இல்லை… ப்ரீத்தி… இங்க வாடி..”, கத்தி, அவன் கையை கடித்து எழுந்து அவள் அறைக்கு ஓட முயன்றாள்.
அந்த வலி உறைத்ததால் வந்த கோவமா அல்லது அவள் திமிறி ஓடியதால் வந்த கோவமோ தெரியவில்லை, “அடிங்க… போனாபோவுதுன்னு விட்டா ரொம்ப பண்ற?”, என்று இரண்டே எட்டில் வந்தவன், அவள் கதவை சாத்த முயன்றதை எளிதாகத் தடுத்தவன் உள்ளே நுழைய விதிர்விதிர்த்துப் போனாள் கீர்த்தி.
அவன் முகமே தீவிரமாக இருக்க, கண்கள் வித்தியாசமாக இருந்தது. என்ன ஏது என்று உணரும் முன்னரே அவளை படுக்கையில் தள்ளி மேலே விழுந்திருந்தான்.
“கீர்த்தி… ஏய்… கீத்துமா..”, ஜோ அவளை உலுக்க, சட்டென்று நிகழ்வுக்கு வந்திருந்தாள், நெற்றி கழுத்தெல்லாம் வியர்வை. அவளின் புஜத்திலிருந்த அவன் கைகளைப் பார்த்தவள் உதறி ஓரம் ஒடுங்கினாள்.
வேக மூச்சுகள் மட்டுமே வந்துகொண்டிருந்தது. ஜோவிற்குள்ளும் நடுக்கம். அடி வயிறு கலங்கியது. முயன்று குரலை சமன்படுத்தியவன், “இரு தண்ணி வாங்கிட்டு வரேன்”, என்று எழுந்திருக்க முயல, “இருக்கு”, என்று தன் பையிலிருந்து ஒரு சிறு பாட்டிலை எடுத்து ஒரு மிடறு குடித்தாள். கண்ணை ஒரு நொடி மூடி வாய்க்குள் எதோ முணுமுணுத்தவாறே மூச்சுகளை நிதானமாக உள்ளிழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
அவள் முயற்சிகளைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் கேட்க வாய்வரவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.
சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், ஒரு சோபையான சிரிப்பை சிந்தி, “நான் வேணாம் ஜோ உனக்கு”, என்றாள்.
தன் நெற்றிப்பொட்டை ஒற்றை விரல் கொண்டு அழுத்தியவன், மெதுவே கைகளை விலக்கி அவள் கண்களைப் பார்த்து, “உன் அக்கா இதுக்கு உடந்தையா?”, என்றவன் குரலில் அத்தனை அடக்கப்பட்ட கோபம்.
இல்லை என்பதாக தலையசைத்தவள், “தூக்க மாத்திரை எடுத்து படுத்திருந்தா. டிப்ரெஷனுக்காக போடறதாம். காலையிலதான் எழுந்தா.”
“அதுவரைக்கும் என்ன பண்ண?”, சற்று திகிலுடனே கேட்டான்.
உதட்டைக் கடித்தவள், “நடந்ததுல மயக்கமாகிட்டேன் போல. அவன் நான் கடிக்க ட்ரை பண்ணவும் கை வெச்சு அழுத்த, மூச்சு விட திணறினதுலயா இல்லை பயத்துலயான்னு தெரியலை. ம்ப்ச்… வலியிலதான் முழிப்பு வந்துச்சு, ஆனாலும்…” கைகளை காற்றில் அளையவிட்டவள்…. அழுகையையும் ஆத்திரத்தையும் சேர்த்தே முழுங்கினாள். அவனை ஒரு வழியா தள்ளிவிட்டு ப்ரீத்தி படுத்திருந்த ரூமுக்கு ஓடினேன்.”
கிழிக்கப்பட்ட நைட்டியுடனே தள்ளாடியபடி ஓடி வந்தவள், கதவை தாளிட்டு, அழுகை கண்ணை மறைத்து குரலை அடைத்தபோதும், ப்ரீத்தியின் தோளை பிடித்து உலுக்கினாள். அவளிடம் லேசான முனகல் மட்டுமே வந்தது. அதில் கோபம் தலைக்கேற, “ப்ரீத்தி… எழுந்திருடீ”, என்று கன்னத்தில் அறைந்தபோதும் நெற்றி சுருங்கி கண்கள் திறக்க முயன்றவளால் முடியவில்லை.
இயலாமையில் தன் முகத்தை அறைந்துகொண்டு, தரையிலேயே சுருண்டு படுத்தாள் கீர்த்தி. மனம் ‘ஐயோ..ஜோ ஜோ’ என்றே அரற்றியது. “ஐயோ..அம்மா அப்பா”, என்று தோன்றிட தடுமாறி எழுந்தவள், கைப்பேசி அவள் அறையில் இருப்பது புரிந்து மடங்கி அமர்ந்தாள். சற்று நேரம் கழித்து ப்ரீத்தியின் கைப்பேசி இருக்குமே என்று உணர்ந்து தேட, சார்ஜில் இருந்தது. எட்டி எடுத்தவள் அதில் நம்பர் லாக் இருக்கவும், ப்ரீத்தியின் பிறந்த நாளை முயன்று பார்த்தாள். தவறு என்று வரவும் கீழே போட்டு மீண்டும் சுருண்டுவிட்டாள். தன் உடலையோ அதன் வலியையோ உணரக் கூட பிடிக்கவில்லை.
தலைமாட்டில் அலாரம் அடிக்கவும், பட்டென்று எழுந்து அமர்ந்தாள். ப்ரீத்தியின் கைப்பேசி அலாரம் விடியற்காலை ஐந்தரை என்று காட்டியது. ப்ரீத்தி படுக்கையில் புரள்வது பார்த்ததும் கீர்த்தி மீண்டும் எழுந்தாள்.
“ப்ரீத்தி… எழுந்திருடி….” அன்று அப்படி ஒரு விடியலை ப்ரீத்தி எதிர்கொண்டிருக்கமாட்டாள்.
கீர்த்தியின் கோலம், அவள் அழுகையினூடே கூறியது புரிந்ததும், திகைத்தவள் கதவைத் திறந்து கீர்த்தியின் அறைக்கு ஓடினாள். அரைகுறை ஆடையில் கணவன் தன்னை மறந்து உறக்கத்தில் இருந்தான். அருகில் செல்லும்போதே அவன் மதுவின் அளவு புரிந்தது.
அடுத்து ஒரு மணி நேரத்தில் வந்திறங்கிய பெற்றோர் தலையிலும் இடி இறங்கியது. “ஐயோ…” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார். அவள் தந்தை வேணுகோபாலனோ கோவமாக இரகுராமன் படுத்திருந்த அறைக்கு செல்ல, “அப்பா, இருங்க… அவர் கொஞ்சம் போதை தெளியட்டும்”, ப்ரீத்தி தடுத்தாள்.
முறைத்தவர், “ஒரு பக்கெட்ல தண்ணி கொண்டுவா, தெளிய வெக்கறேன்”, என்று உறுமி உள்ளே நுழைய, அங்கே கீர்த்தி அம்மா மடியில் படுத்து கேவிக்கொண்டிருந்தாள்.
அந்த அறையில் சத்தம் கேட்டது. சற்று நேரம் கழித்து, ப்ரீத்தி, அவள் தந்தை, இரகுராமன் எல்லாரும் வர போர்த்திக்கொண்டிருந்த பெட்ஷீட்டோடு அன்னையிடம் ஒட்டிக்கொண்டாள்.
“ஐயோ கீர்த்தி… சத்தியமா எனக்கு தெரியலை. நான் ப்ரீத்தின்னுதான்… “, என்றவன் முகத்தில் நிஜமான கலக்கம். “என்ன நம்பறியா ப்ரீத்தி… நான் தெரிஞ்சு துரோகம் பண்ணலைடி. குடிச்சதோட, முரளி அவன் போடற மாத்திரை ஒன்னை குடுத்தான். அதுதான் போல. இல்லைன்னா இப்படி நிதானம் தப்பி…மாமா…அத்தை நான் அப்படிபட்டவன் இல்லை. “, என்று கதற காதை பொத்திக்கொண்டாள் கீர்த்தி.
ப்ரீத்தி மட்டுமே பதிலுரைத்தாள். “தெரியுங்க. கீர்த்தி சொன்னா, என் பேரைத்தான் சொல்லிட்டிருந்தீங்கன்னு”, என்றவள் சட்டென்று திரும்பி, “ஏண்டி ஓடினவ,நான் இருக்க ரூமுக்கு இங்க வரவேண்டியதுதான? எதுக்குடீ உன் ரூமுக்கு ஓடின? இங்க என்னையும் சேர்த்து பார்த்திருந்தாவாவது அவருக்கு கொஞ்சம் விளங்கியிருக்குமே”, என்று தலையில் அடித்துக்கொள்ள, அப்படி ஒரு கோவம் வந்தது கீர்த்திக்கு.
“நான் இங்க வரேன்னு சொன்னேனா? நீதான் கூட்டிட்டு வந்த? அப்ப நான் இங்க இருக்கும்போது நீ தூக்க மாத்திரைய போட்டு எதுக்கு படுத்த, நான் இங்க இருக்கும்போது உன் புருஷன் ஓவரா குடிச்சதுமில்லாம, ட்ரக்ஸ் வேற எடுத்துகிட்டு எப்படி வீட்டுக்கு வரலாம்?, வெகுண்டமர்ந்து கேட்டவள்,
“அப்பா போலீசுக்கு போகலாம்”, என்று போர்வையை போர்த்திக்கொண்டே எழுந்து நின்றாள்.