அத்தியாயம் – 15 

மறுபடி ஒரு சங்கடமான அமைதி. துபாய் பள்ளியின் நேர்காணலுக்குக் கூட இலகுவாகத்தான் இருந்தாள். ஆனால் இது அவள் வாழ்க்கைக்கான நேர்காணல், இது போனால் வேறொன்று என்று கடந்துவிட முடியாத நேர்காணல். 

அறிமுக முகமன்கள் முடிந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். மடிக் கணிணி திரையை ஜூம் வாயிலாக நிறைத்திருந்தார் ஜெயராணி. அளவிடும் பார்வை. ஜோவின் சாயலை தழுவிய கண்கள். பார்வையை தவிர்க்காமல் முகம் மாறாமல் பார்த்திருந்தாள். 

“களையாக இருக்கிறாள். ஒப்பனை ஏதும் இல்லாத முகம். கண்ணை உறுத்தாத தோடு, மெல்லிய சங்கலி என்று பகட்டில்லாமல்தான் இருக்கிறாள்”, என்று சற்று சமாதானமாகியது ஜெயராணியின் மனம். கண்கள் அலைபாயவில்லை. பயமெதுவும் தென்படவில்லை. முதலில் இணைப்பில் வந்த பொழுது, கண்கள் சற்றே மேல் நோக்க, அங்கே மகன் இருப்பை உணர்ந்து கொண்ட ஜெயராணி, “என் மகன் அங்க இருக்கானா?” என்ற கேள்விக்கு பதற்றமில்லாமல் “ஆமா ஆன்ட்டி, வர சொல்லவா?”, என்று கேட்க,  

“வேணாம். அவங்கிட்ட பேசணும்னா நேரா பேசிப்பேன். உங்கிட்ட பேசத்தான் கூப்பிட்டேன்”, எனவும், அதன் பின் அவள் பார்வை அவரை மட்டுமே பார்த்திருந்தது. ஸ்டீஃபனை அறிமுகம் செய்த போதும், அளவான ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொண்டாள். அதுவும் ஜெயராணிக்கு நல்ல அபிப்ராயத்தை தந்திருந்தது. ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. 

ஜெயராணி அவள் குடும்பம் பற்றிக் கேட்டதும் சுருக்கமாக கூறியிருந்தாள். வீட்டில் வரன் பார்க்க கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவள்தான் மறுத்துக்கொண்டிருக்கிறாள் என்றும் கூறியிருந்தாள். 

“இப்பதான் ஜோ எங்கிட்ட சொல்லிட்டானே. நீ எப்ப சொல்லப் போற கீர்த்தி? உங்க வீட்டுல ஏத்துக்குவாங்களா?” 

“அது…. சொல்லணும் ஆன்ட்டி. அக்காக்கு இப்படி ஆனதுல வேற எந்த பேச்சும் இல்லை. கொஞ்ச மாசம் போகட்டும்னு…” 

“இப்பவே ஜோசஃபுக்கு முப்பத்தியொண்ணு முடியப்போது. தள்ளியெல்லாம் போட முடியாது. அதுவும் நீங்க இரண்டு பேரும் அங்க இருக்கீங்க. சரி வராது. வீட்ல சொல்லு. அவங்களுக்கும் இதை ஜீரணிக்க  நேரம் வேணுமே. அவங்க என்ன சொன்னாலும் என் பிள்ளையை கல்யாணம் செய்துக்க உறுதியாதானே இருக்க?”, ஊடுறுவும் கண்கள் அவளை கூர்ந்து நோக்க, கீர்த்தியின் தலை வேகமாக ஆடியது. 

“ஆமாம் ஆன்ட்டி.” 

“ஹ்ம்ம்… என் பிள்ளை கல்யாணம் பத்தி நிறைய கனவு கண்டிருந்தேன். திருச்சபையில எல்லா உறவுக்கும் முன்னாடி சிறப்பா நடக்கற மாதிரி…”, ஏக்கப் பெருமூச்சோடு அவளை நோக்கினார் ஜெயராணி. 

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் கீர்த்தி. ‘இந்துங்கறதால சர்ச்ல கல்யாணம் செய்ய மாட்டாங்களா?’  கண்கள் எதிர் புறம் அமைதியாக அமர்ந்திருந்த ஜோவை நாடின. அவனிடமிருந்து ஒரு லேசான தலையசைப்பு மட்டுமே வந்தது. 

“ஃபாதர்கிட்ட பேசினேன். நீ இந்துன்னா கூட சர்ச்ல வெச்சு கல்யாணம் செய்யலாம்…ஆனா அதுக்கு நீ ஒரு வாக்குறுதி கொடுக்கணும். ஜோ மேல இவ்வளவு விருப்பம் இருக்கறவ…” 

“அம்மா… நோ… ஸ்டீஃபன் திருச்சபையில நீங்க ஆசைப்பட்டபடி கல்யாணம் பண்ணுவான். நான் செய்ய முடியாது. மதச் சார்பில்லாம ரெஜிஸ்டர் ஆஃபீஸ்லதான் எங்க கல்யாணம் நடக்கும்”, ஜோ எழுந்து அவள் பின்புறம் வந்து லேப்டாப்பின் கேமராவைப் பார்த்து பேசினான். 

கீர்த்திக்கு எதுவும் புரியவில்லை. ஒரு வேளை தன்னை மதம் மாறக் கேட்கிறார்களா? என்று யோசித்தாள். 

“என் பேரக் குழந்தைங்க ஞானஸ்தானம் வாங்கி நல்ல முறையில வளரணும்னு நான் எதிர்பார்க்கக் கூடாதா தம்பி? நான் என்ன கீர்த்தியையா மதம் மாறணும்னு சொல்றேன்?”, விரைப்பாகக் கேட்டார் ஜெயராணி. 

‘கல்யாணத்துலர்ந்து திடீர்ன்னு பேரக்குழந்தைக்கு போயிட்டாங்க?’, கீர்த்தி புரியாது ஜோவை நோக்கினாள். 

“அம்மா, கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிப்பா எந்த வாக்குறுதியும் கிடையாது. வீட்டாளுங்க முன்னாடி ரெஜிஸ்ட்டர் ஆஃபீஸ்ல கல்யாணம், அப்பறம் ஒரு ரிசெப்ஷன். அதுக்கு எல்லாரையும் அழைக்கலாம். இங்க ஒன்னு, சென்னையில் ஒன்னுன்னு கூட வெச்சிக்கலாம்.” 

முகம் கடுகடுக்க, “ஆக நீ எல்லாம் பேசி முடிவெடுத்துட்ட. அப்பறம் எதுக்கு எங்கிட்ட கேட்டுகிட்டு? நேரா கல்யாணம் முடிச்சே கூட்டிட்டு வரலாம், இல்லை அதுகூட எதுக்கு, சும்மா தகவல் சொன்னா போறாது?”, ஜெயராணி பொரிந்தார். 

மெல்ல நெற்றியை தேய்த்தவன், “எதுவும் முடிவெடுக்கலைமா.  சர்ச்லையும் வேணாம் கோவில்லையும் வேணாம், நடு நிலையா கல்யாணம் செய்துக்கலாம்னு நீங்க கேட்டதும் தோணினது. இன்னும் கீர்த்திகிட்ட கூட பேசலை.” 

நம்பாது கீர்த்தியைப் பார்த்தவர், “அப்படியா? உனக்கு இதுல சம்மதமா? உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?” 

உதட்டைக் கடித்தவள், “ஹானஸ்ட்டா சொல்லணும்னா எனக்கு ஜோவை கல்யாணம் செய்துக்கணும். அது சட்டபூர்வமா இருக்கணும். அதை தாண்டி நான் வேற யோசிக்கலை ஆன்ட்டி. இரண்டு வீட்டு எதிர்பார்ப்பும் சமாளிக்க இனிதான் நாங்க கத்துக்கணும். கொஞ்சம் டைம் குடுங்க ஆன்ட்டி.”, மனதை மறையாது கூறினாள். 

அதில் பெரிதாக சமாதானம் ஆகவில்லை என்றாலும், “இப்ப வீடு கட்டி முடிச்சதுல ஜோவுக்கு கொஞ்சம் கடன் இருக்கு தெரியுமில்லையா? வீட்டுல பாதி அவன் தம்பியும் லோன் வாங்கி கட்டினது.” 

எங்கே வருகிறார் என்று புரியவில்லை என்றாலும், “ம்ம், தெரியும் ஆன்ட்டி”, என்றாள். 

“ஓஹ்… அப்ப அவன் வாங்கற சம்பளம், சேமிப்பு எல்லாம் சொல்லியிருக்கான்? ம்ம்.. இந்த கடன் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து அடைச்சா சீக்கிரமே முடிச்சிடலாம். என்ன நீயும் அவனுக்கு ஹெல்ப் பண்ணுவதானே?”, எங்கே முடியாதென்று சொல்லு பார்ப்போம் என்பது போலத்தான் வந்தது ஜெயராணியின் குரல். 

“ம்மா…”, ஜோ இடையிட, கை உயர்த்தி அவனை நிறுத்தியவர், “நீங்க என்ன பேசினீங்கன்னு எனக்கு தெரியாது ஜோ. ஆனா, இவ சொல்றது வெச்சு அவங்க குடும்பமும் பெரிசா வசதி வாய்ப்புகளோட இல்லைனு புரியுது. உனக்கு மாமனார் வீட்டுலர்ந்து பெருசா உதவின்னு கிடைக்காது. அப்ப  நான் கேட்டுகறது தப்பில்லையே?”, என்றவர் அவன் பதிலுக்கு காத்திராமல், கீர்த்தியைப் பார்த்து, “நீ சொல்லுமா”, என்றார். 

“கண்டிப்பா செய்வேன் ஆன்ட்டி. ஜோக்கு என் சம்பாத்தியம், சேமிப்பு எல்லாமே தெரியும்”, என்றாள். 

ஒரு புருவம் உயர்த்தியவர், “உங்க வீட்டுல தெரியுமா?” என்ற கேள்வியில், கீர்த்தியின் பார்வைதான் தழைந்தது. 

“ஓரளவுக்கு”, என்றாள் அமைதியாக. 

“ஹ்ம்ம்… ஜோசஃப்பும்் அப்படித்தான். எனக்கு தெரியலைன்னா பரவாயில்லை. உனக்கு தெரியணும். எவ்வளவு சீக்கிரம் கடனை அடைக்க முடியுமோ அடைச்சிட்டு இங்க வந்திருங்க. அதுதானே உங்க ப்ளானும்? இல்லை அங்கேயே இருந்துடலாம்னு எதுவும்….?”, என்று இழுக்கவும், 

“ம்மா…எதுக்குமா இப்பவே இதெல்லாம்? முதல்ல கல்யாணம் முடியட்டும்.”, ஜோ இடைபுகுந்தான். 

“இல்லை தம்பி,  ஸ்டீஃபன் இருக்கானேன்னு ஒரு வேளை நீ அப்படியே கடல் கடந்து அங்கேயே தங்கிடலாம்னு எதுவும் முடிவு பண்ணிருந்தா தெரிஞ்சக்கலாமேன்னுதான். மறுபடியும் நான் எதாவது கனவு கண்டு அது நிராசையா போயிடக்கூடாதில்லையா?” 

அப்படியும் ஒரு எண்ணம் இருக்கிறது என்பதை சொல்ல முடியாமல், “ரொம்ப ப்ளான் பண்ணலைமா. நீங்களும் பண்ணாதீங்க. அது அது நடக்கறபடி நடக்கட்டும்.”, என்று பொதுவாக சொல்லி வைத்தான். 

“அன்னிய தேசத்துல குழந்தையை வளர்க்கறதெல்லாம் சரி வராது ஜோசஃப். கீர்த்தி உனக்கும் 29 ஆகப்போகுது. முப்பதுக்கு முதல் குழந்தை பெத்துட்டா சுலபம். தள்ளிப் போடாம நேரத்துக்கு பெத்துக்கங்க. இங்க வந்துட்டா வளர்க்கறதுக்கும் வசதி.” 

அவர் மேலும் பேசிக்கொண்டே இருந்தார், முகம் மாறாமல் இருக்க கீர்த்திதான் பிரயத்தனப் படவேண்டியிருந்தது. அவள் கைகள் இரண்டும் மடியில் ஒன்றோடு ஒன்று இறுக்கியிருந்தது. கணினியின் கேமரா விழாத இடமாகினும், அவள் பின்னே நின்றிருந்த ஜோவின் பார்வையில் படத்தான் செய்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. 

இந்த நேரம் இணைப்பை துண்டித்தாலும் ஜெயராணி கோபம் கொள்ளக்கூடும், எனவே, “ஆகட்டும்மா. ஒரு ஒரு படியா ஏறலாம். எதுவும் இன்னும் முடிவு செய்யலை. அவங்க வீட்டுல முதல்ல பேசிட்டு வரட்டும்”, என்றான் சமாதானமாக.  

மேலும் பத்து நிமிடம் கழித்து, ஒரு வழியாக இணைப்பை துண்டித்தபின் ஒரு பெருமூச்சோடு ஜோவை நோக்கினாள் கீர்த்தி. 

“ஜோ… உங்க அம்மா இவ்வளவு டெரர்னு சொல்லவே இல்லையே. போட்டோல அவங்க சிரிச்ச முகம் பார்த்து நாந்தான் ஏமாந்துட்டேனா?”, சற்று கலவரமாகவே கேட்டாள். 

“எங்க அம்மாவை இப்பதான் மாமியார் அவதாரத்துல பார்க்கறேன் கீர்த்தி. கொஞ்சம் டெரராத்தான் இருக்காங்க. சமாளிப்போம்”, அவள் கைபிடித்து ஆறுதலாக தட்டிக்கொடுத்தான். 

“சர்ச்ல கல்யாணம் பண்ண முடிஞ்சா, பண்ணிக்கலாம் ஜோ. நான் மதம் மாறணுமா என்ன?” 

“ம்ப்ச்… அது தேவையில்லை. ஆனா நமக்கு பிறக்கற குழந்தைங்களை ஞானஸ்தானம் செஞ்சு, கிறிஸ்துவர்களா வளர்ப்போம்னு வாக்குறுதி குடுக்கணும். அதுக்குத்தான் கேட்க வந்தாங்க. அதைத்தான் நான் முடியாதுன்னு சொன்னேன்.” 

ஜோவின் விளக்கத்தில், “ஓஹ்… உனக்கு முழுசா பொண்டாட்டியா இருப்பேனாங்கறதே டவுட்டா இருக்கு எனக்கு. இதுல குழந்தை பெத்து, அது எந்த மதத்துல வளர்க்கறதுங்கறதை பத்தியெல்லாம் எங்க யோசிக்க?“ 

“அங்க வந்து வளர்க்கணும்னு சொல்றது,அவங்க பார்வையில கத்தோலிக்கா வளர்க்கணும்னு அடி போடறாங்க. எங்க வெளினாட்டுலேயே தங்கிட்டா இந்துவா வளர்த்துடுவியோன்னு ஒரு பயம்”, ஜோ கூறவும், ஓ இதில் இப்படி வேறு ஒரு கோணம் இருக்கிறதா என்று அதிர்ந்து பார்த்தாள். 

“விடு பார்த்துக்கலாம். எல்லாம் நடக்கும்போது முடிவு எடுக்கலாம். முதல்ல கல்யாணத்துக்கு சம்மதிக்கட்டும்.” 

“ஆனா வீட்ல உடனே சொல்லுங்கறாங்களே ஜோ. இப்ப எப்படி நான் இந்த டாப்பிக் பேச முடியும்?”, கவலையாகக் கேட்டாள். 

“ஹ்ம்…ஆனா உன் கல்யாணம் கூடி வந்தா அதுவும் அவங்களுக்கு ஒரு பாரம் நீங்கனா மாதிரிதானே கீர்த்தி? விஷயம் தெரிஞ்சு அவங்களும் அதிர்ச்சியாகலாம். கொஞ்ச நேரம் எடுக்கும். அடுத்த இரண்டு வாரத்துல பேச ட்ரை பண்ணு, இல்லை நான் பேசட்டுமா?”