“போலீஸ் வந்து விஷயம் எங்களுக்கு தெரிய வந்ததே பன்னெண்டாயிருச்சு மா. குழந்தை எங்க வீட்டுல இருக்கா. ப்ரீத்தி, உங்க அப்பா, அம்மா நான்  எல்லாம் இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுதான் பாடி தருவாங்களாம். அடையாளம் காட்ற அந்த ஃபார்மாலிட்டிக்காக இருக்கோம். ப்ரீத்தி, அவங்கம்மா எல்லாம் அழுதுட்டேதான் இருக்காங்க. இரகு அம்மாக்கும் தகவல் போயிருக்கு.”, தகவல்களை அடுக்கினார். அந்த வேகத்தில் அவளால் உள்வாங்கிக்கொள்ளத்தான் முடியவில்லை. 

“அப்பா….?” 

“ம்ம்.. தரேன் மா. இரு”, என்று தந்துவிட, 

“அப்பா, பணம் இருக்கா,  நான் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிடறேன். அங்க செலவுக்கு வெச்சிக்கோங்க. கூட யார் இருக்கா துணைக்கு? ராஜன் மாமாக்கு சொல்லி வரசொல்லுங்க. இதெல்லாம் தனியா நீங்க பார்க்காதீங்க”, அவசரமாகக் கூறினாள். 

“நீ… நீ வரலையா கீர்த்தி?” 

ஒரு கணம் அமைதி காத்தாள். சென்றால் அவள் குடும்பத்துக்கு உதவியாக நிற்க முடியும்.  

“நான் இங்க பேசி லீவ் வாங்க பார்க்கறேன் பா. நீங்க தைரியமா இருங்க. ப்ரீத்தி, அம்மாவை பார்துக்கங்க”, என்று அழைப்பை துண்டித்தாள். 

மதியம் மூன்று மணியளவில் சென்னை விமானத்திற்காக கேட்டில் அமர்ந்திருந்தாள். விஷயம் தெரிந்ததுமே ஜோவும் ஷீத்தலும் அவளுக்கான விமான டிக்கெட் போடுவதிலிருந்து, எடுத்துச் செல்ல வேண்டிய துணிகளை பெட்டியில் அடுக்கியது வரை பார்த்துக்கொண்டார்கள். ஜோ அவளுடன் விமான நிலையம் வரை வந்து அனுப்பிவைத்தான். 

இரகுவரன் இப்படி அகால மரணமடைந்தது ஒரு புறம் அதிர்ச்சி என்றால், ஷீத்தல் புலம்பலாக, “வருஷக்கணக்கா காத்திருந்து ஒரு குழந்தைன்னு வந்து, அது வளர்ந்து பார்க்க குடுத்து வெக்கலையே அவருக்கு”, என்று கூறிய போது விலுக்கென்று ஜோவைத்தான் பார்த்தாள். 

“உன் அக்காக்கு ஆறுதலா இப்ப குழந்தை இருக்கும். அதுவும் இல்லைன்னா இன்னுமே நொடிச்சிபோயிருப்பாங்க கீத்துமா”, என்று ஷீத்தல் உள் அறைக்கு சென்ற இடைவெளியில் கீர்த்தியின் கைபிடித்து ஆறுதல் கூறினான். 

“இல்ல செஞ்ச காரியத்துக்கு தண்டனையா குழந்தையை அனுபவிக்கவிடாம அழைச்சிகிட்டாரா கடவுள்? எத்தனையோ இராத்திரி இவர் குடிச்சிட்டு  வண்டி ஓட்டிட்டு வந்தபோல்லாம் ஒன்னும் ஆகலை. இப்ப குடிக்காம வந்தப்போ ஒரு குடிகாரன் கார் ஏத்தி கொன்னுருக்கான். என்ன சொல்ல ஜோ? தெய்வம் இப்பல்லாம் அடுத்த ஜென்மம் வரைக்கும் காத்திருக்காம உடனே உடனே தண்டனையை குடுத்து முடிச்சிடுது போல. ஆனா ப்ரீத்திக்கு இப்ப ஹர்ஷித்தாதான் ஆறுதல்.”, விரக்தியோடுதான் கூறினாள். 

“ம்ப்ச்.. “ என்று அவள் கையை தட்டிக்கொடுத்தவன், “ஓஹ்… குழந்தை பேரு ஹர்ஷிதாவா?”, என்று பேச்சை மாற்ற ஷீத்தலும் வந்து இணைந்து கொண்டாள். 

மீண்டும் ப்ரீத்தியின் கணவனைக் காண வேண்டுமே என்று யோசித்துக்கொண்டிருந்தாள். சடலமாக பார்க்கும்போது என்ன உணர்வாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எது எப்படியாகினும், அவள் குடும்பத்தாருக்காக சென்றுதான் ஆக வேண்டும். 

ஓரே ஆறுதல், அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறிவிட்டிருந்தார்கள். கண்டிப்பாக அவளால் அந்த வீட்டிற்குள் திரும்ப சென்றிருக்க முடியாது. 

சென்னை விமான நிலையத்திலிருந்து  தந்தையின் நெருங்கிய நண்பரான இராஜன் வந்திருந்தார். 

“அப்பா, அம்மா எப்படி இருக்காங்க மாமா? ப்ரீத்தி எதாவது சாப்பிட்டாளா?”, என்று கேள்விகளோடுதான் அவரை சந்தித்தாள். 

“கொஞ்சமா சாப்பிட்டா மா அதுவும் உன் மாமியும் பக்கத்துவீட்டு பொண்ணும் அதட்டி உருட்டி சாப்பிட வெச்சாங்க. உங்க அம்மாக்கு அழுது அழுது குரலே கட்டி போச்சு. என்னத்த சொல்ல? மனசே ஆறலை”, என்று வருத்தப்பட்டுக்கொண்டே வாடகை காரில் ஏறி அமர்ந்தார். 

நேரே இரகுராமன் இருந்த வாடகை வீட்டிற்குத்தான் சென்றது வண்டி. உடல் நடு ஹாலில் கண்ணாடிப் பேழையில் கிடத்தப்பட்டிருக்க, தலைமாட்டில் ப்ரீத்தி அவள் மடியில் ஹர்ஷிதா அழகு பூச்செண்டாக உறங்கிக்கொண்டிருந்தாள்.  

“அக்கா” என்ற அழைப்பில் கண்கள் திறந்த ப்ரீத்தி, அவளைக் கண்டு விம்மினாள்.  

“அக்கா …. “, என்று மீண்டும் சொல்லி ப்ரீத்தியை அணைத்துக்கொண்டாள். 

“உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு ஆசைப் பட்ட மனுஷன் அதை பார்க்காமலேயே போயிட்டாரேடி”, என்று அழுபவளை மெல்ல தட்டிக் கொடுத்தாள்.  மனது வெறிச்சோடியிிருந்தது. கண்ணாடிப் பேழையினுள் இருப்பவனை உற்று கூட நோக்கவில்லை. சடலமாகக் கூட அவனை மீண்டும் பார்க்கப் பிடிக்கவில்லை. 

குழந்தை சிணுங்கவும், “குடு, நான் அவளை உள்ள படுக்கப் போடறேன். அப்பாம்மா எங்க?”, என்று ஹர்ஷிதாவை தூக்கப்போக, ப்ரீத்தியோ, “இல்ல நானே கொண்டுபோய் போடறேன். திடீர்னு முழிச்சிட்டா, தெரியாத முகம் பார்த்தா அழ ஆரம்பிச்சிடுவா”, என்று குழந்தையை தோளில் போட்டு, தள்ளாடி எழுந்தாள். 

அதற்குள் அவள் அன்னை சரோஜினி உள் அறையிலிருந்து எழுந்து வந்தார். கீர்த்தியை கண்டதும் அழுகை. பேச முடியாது, ப்ரீத்தியைக் காட்டி தலையில் அடித்துக்கொண்டார். 

“இரும்மா.. நீயும் உடம்பை கெடுத்துக்காதே. ப்ரீத்திக்கு தைரியம் சொல்லணும். அதை விட்டுட்டு நீயே இப்படி இருந்தா எப்படி? அப்பா எங்க?”, அணைத்து ஆறுதல் கூறினாள். 

கண்டிப்பாக இறந்தவனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வரப் போவதில்லை. அங்கே இருப்பதை விட தந்தைக்கு உதவியாக இருப்போம் என்று இராஜனுடன் சென்றுவிட்டாள்.  

அடுத்த ஒரு மணி நேரத்தில்  இடுகாட்டில் ஏற்பாடு, மறு நாள் இறுதி ஊர்வலத்திற்கு தேவையானவை, பூ முதல் உணவு வரை, என்று ஏற்பாடு, பணப்பட்டுவாடா முதல் எல்லா பொறுப்புகளையும் தான் எடுத்துக்கொண்டாள். 

காலையில் வீடு நிரம்பிவிட்டது. இரகுராமனின் அலுவலகத்திலிருந்தும், அவன் நண்பர்கள், ஊரிலிருந்த உறவுகள் என்று அனைவரும் வந்து இரங்கல் தெரிவித்தனர்.  இரகுராமனின் அன்னையும் அழுது கரைந்தார். ப்ரீத்தி ஓய்ந்த தோற்றத்தில் கண்ணீர் வற்றி அமர்ந்திருந்தாள். குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டிருந்தாள். 

கீர்த்தி வெளி வாசலிலேயே இருந்துவிட்டாள். இரகுராமனின் அருமை பெருமைகளை கேட்க ஒப்பவில்லை. இறந்து போனவனை பற்றி இழிவாக பேசக் கூடாதுதான். அவன் இப்படி இறந்து போனதும் துயரம்தான் அதுவும் ப்ரீத்தி, பெற்றவர்களையும் அவர்கள் வேதனையும் எண்ணி கீர்த்திக்கும் வருத்தம்தான். ஆனாலும், ரொம்ப நல்ல மனுஷன், நல்ல குணம் என்று மற்றவர் பேசக் கேட்க, ஓவென்று கத்த வேண்டும்போல ஆத்திரம் வந்தது. 

கைப்பேசி அதிரவும், போட்டிம் செயலி மூலமாக அழைப்பு. ஜோதான் அழைத்திருந்தான். துபாயில் வாட்சப் கால் வேலை செய்யாது.  

“ஹலோ?” 

“கீத்துமா? எப்படி இருக்க?” 

“ஹ்ம்ம்… ஒகேதான். இன்னும் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க. அப்பாக்கு ரெஸ்ட் குடுத்துட்டு நான் பாத்துக்கறேன்.”, மெல்லிய குரலில் பேசினாள்.  

“ம்ம்… கீத்துமா… ஒரு விஷயம் சொல்லணும். தப்பா எடுத்துக்காத….வந்து.. டாக்டர்…சைக்யாட்ரிஸ்ட் சந்திரன் சொன்னார். எடுக்கற வேளைக்கு ஒரு முறை அவன் முகத்தை நல்லா பாரு. அவன் இறந்துட்டான்,  அவனால எப்பவும் இனி உனக்கு ஆபத்தில்லைன்னு மைண்ட்ல, மனசுல பதிய வை.”, முதலில் தயங்கினாலும் அடுத்து வேகமாக கூறி முடித்தான் ஜோ. 

“எனக்கு கிட்டவே போக பிடிக்கலை. பார்க்கவே இல்லை ஜோ.”  

“அதுதான். அந்த தயக்கத்தை உடை. கெட்டதுல ஒரு நல்லதா நினைச்சு அவன் மேல இருக்க கோவம், பயம் எல்லாத்தையும் எரிச்சுடு.” 

“ஹ்ம்ம்”, என்னும்போதே யாரோ அவளை தேடி வர, 

“சரி… நீ பாரு. எதுனாலும் மெசேஜ் பண்ணு இல்லை வாய்ஸ் நோட் அனுப்பு”, என்றதோடு வைத்துவிட்டான். 

எடுக்கும் நேரம் வரையிலும் கூட அருகில் செல்லவில்லை கீர்த்தி. ஜோ சொன்னது மனதில் ஓடிக்கொண்டிருந்த போதும் செல்லாமல் இருந்தாள். பேழையிலிருந்து எடுத்து, கேட் அருகில் நீளமான மர பெஞ்ச்சில் படுக்க வைத்தார்கள் இறுதி சாங்கியம் செய்ய. 

மருமகனுக்கு வேணுகோபாலே கொள்ளி வைப்பதாக முடிவானது. அவன் உறவு வகையில்  நெருக்கம் என்றால் ஒரு சித்தப்பா தான். அவர் வயோதிகம் என்று வரவில்லை. அவர் மகனோ நாசூக்காக மறுத்துவிட்டிருந்தான். 

ஹர்ஷிதாவுடன் ப்ரீத்தி கண்ணீர் மல்க சாங்கியங்களை செய்ய, குழந்தை மிரண்டு “அப்பா… “, என்று அழைத்து அழுதது. 

வாய்க்கரிசி போட பெண்களை அழைக்க, சரோஜினி சற்று தள்ளியிருந்தவளை அழைத்தார். கையில் அரிசியை வாங்கியவள் அருகில் வந்து  அப்போதுதான் முகம் பார்த்தாள். 

அன்று அவள் கண்ட உக்கிரம் இல்லை.  நெற்றியில் பட்டை விபூதி, குங்கும பொட்டு, உணர்வற்ற முகம், உறங்கும் பாவனை, மூக்கில் பஞ்சு என்று வினோதமாக இருக்க, போடு என்று யாரோ சொல்ல, வாய்க்கரிசி இட்டு சுற்றி  மறு புறம் வந்து நின்றாள். 

அரற்றும் அம்மாவை தாங்கிப் பிடித்தபடி கீர்த்தி இரகுராமன் உடலை வண்டியில் ஏற்றிச் செல்வதை பார்க்க, பின்னால் யாரோ, “ஆச்சு, அவன் வேலை முடிஞ்சுது. பொம்பளை பிள்ளையை வெச்சிக்கிட்டு இந்த பொண்ணுதான் பாவம். வயசும் சின்ன வயசுதான்”, பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தார்கள். 

“ஆம் போய்விட்டான். இனி வாழ்க்கையில் சந்திக்கப்போவதில்லை”, என்று தோன்ற ஏதோ மனதில் ஒரு சிறு அமைதி. அதில் லேசாய் ஒரு குற்ற உணர்வு தோன்ற, தலையை உலுக்கியவள், தாயை கைத்தாங்கலாக அழைத்து வந்தாள். திரும்பி ப்ரீத்தி எங்கே என்று பார்க்க, பக்கத்து வீட்டுப் பெண் அவளை அணைத்து அழைத்து வந்து கொண்டிருந்தாள். குழந்தை அவளிடம் இல்லை.  மீண்டும் யாரிடமோ அனுப்பிவிட்டார்கள் போல. 

“கண்ணுக்கு கண்ணா வளர்த்த என் பிள்ளையை வாரி குடுத்துட்டேனே! என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டானே! அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாம போச்சே…”, என்று மறுனாள் பால் தெளி முடிந்தபின் நடுவீட்டில் அமர்ந்து அரற்றிக்கொண்டிருந்தார் இரகுராமனின் அன்னை தேவகி. 

“அப்படில்லாம் உங்களை விட்டுடமாட்டோம் தங்கச்சி. மருமகன் இடத்துலர்ந்து என் மக உங்களுக்கு எல்லாமா இருப்பா”, வேணுகோப்பால் சொல்லவும், 

“உங்க மகன்னு நீங்க சொல்லும்போதே தெரியுதே. என் பிள்ளைன்னா நான் எதுவும் உரிமையோட கேட்டு வாங்குவேன்.  இனி நீங்க போடறத நான் வாங்கிக்கணுமா?“ 

‘அஹா…பூனைகுட்டி வெளிய வருதா’, என்று நினைத்தபடியே  உள் அறையில் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. ஹாலில் அந்த சோஃபா, அவளை இழுத்து இரகுராமன் மடியில் சாய்த்த அதே சோஃபா போட்டிருக்க, கீர்த்திக்கு அதன் அருகில் செல்லக்கூட பிடிக்கவில்லை.  வீட்டை மாற்றியிருந்தாலும், சாமான்களை எடுத்து வந்திருந்தனர். நல்ல வேளையாக ஒரே படுக்கயறையாக இருந்ததால் அவள் சிதைக்கப்பட்டிருந்த கட்டில் வரவில்லை போல. 

“என் மகன் ஆபீஸ்ல பணம் தருவாங்களாமே? அதை என் பேர்ல போடுங்க. நான் யாரையும் எதுக்கும் கேட்கவேணாம். என் புள்ளையை இடிச்ச அந்த சண்டாளனும் நஷ்ட ஈடு தருவானாமே. இது இரண்டும் என் ஆயுசுக்கும் போதும்”, தெளிவாக வந்தது தேவகியின் குரல். 

“எல்லாத்தையும் நீங்க வாங்கிக்கிட்டா, பொண்ணை பெத்து வெச்சிருக்க என் பொண்ணு என்னாவறதுமா?” 

“அவளுக்கென்ன? வேலைக்கு போவட்டும். பெத்தவங்க நீங்க இருக்கீங்க. வெளினாட்ல வேலை பார்க்கற தங்கச்சி இருக்கா. பணத்துக்கு பஞ்சமா என்ன? யாருக்கு தெரியும், அடுத்த வருஷம் வேற கல்யாணம் கூட பண்ணிவெப்பீங்க. இப்பல்லாம் பொண்ணுக்குக் கூட இரண்டாம் கல்யாணம் சாதாரணமா போச்சே”, என்று நொடிக்க, ப்ரீத்தி காதுகளை பொத்திக்கொண்டாள். 

“சம்மந்திம்மா! என்ன பேசறீங்க? புருஷணை பறிகொடுத்துட்டு உட்கார்ந்திருக்கா என் பொண்ணு. இன்னும் உங்க பேச்சால நோகடிக்காதீங்க.”, சரோஜினி கோபமாகவே கூறினார். 

“ஊர் உலகத்துல நடக்கற நடப்பை சொன்னேன். அவ கல்யாணம் பண்ணலைன்னாலுமே என் புள்ளை போனதுமே உறவும் போயிடுச்சுமா.  தள்ளாத வயசுல நான் பிச்சை எடுக்கவா முடியும்? என் பிள்ளை காசை குடுத்துடுங்க. நான் போறேன்.” 

மாமியாரின் பேச்சில் ஆத்திரம் கிளம்ப, மடியில் இருந்த குழந்தையை காட்டிய ப்ரீத்தி, “என் புள்ளை வாரிசுன்னு பூரிச்சு போய் நின்னீங்களே, அது உறவில்லையா? பேத்தி வேணாமா?”, சீறினாள். 

“என்னமோ நீ பத்து மாசம் சுமந்து பெத்தா மாதிரி சீறிகிட்டு வர? ஆம்பள புள்ளைன்னா கூட நாளைக்கு சம்பாதிச்சு சோறு போடும்னு சொல்லலாம். இதை வளர்த்து கட்டிகுடுத்து யார் பாடெடுக்கறது?”, வெட்டிவிடும்படியாகவே பேசினார். 

உள்ளிருந்து எழுந்து வந்த கீர்த்தி, “எங்க உறவு வேணாம்னா கிளம்புங்கமா? உங்க பிள்ளைக்கு வர பணத்துக்கு முதல் உரிமை பெண்டாட்டி பிள்ளைக்குத்தான். உங்க காலத்துக்கும் செய்யணும்னுதான் நினைக்கறா. இப்படி பேசி நீங்களே மண்ணள்ளி போட்டுகிட்டா ஒன்னும் செய்யறதுக்கு இல்லை. வக்கீலு, கோர்ட்டுன்னு போய் பார்த்துக்கலாம்.” அழுத்தம் திருத்தமாக கூறவும், தேவகி முழித்தார். அடுத்து பெருங்குரலெடுத்து, அழ ஆரம்பித்தார். 

“பார்த்தியாடா மகனே, நீ போன ஈரம் காயலை, என்னை விரட்டுறாங்களே. என்னை  நட்டாத்துல விட்டுட்டு நீ மட்டும் போயிட்டியேடா…” என்று துவங்க, 

“அட இரும்மா. பணம் வர நாளாகும். ஊர்ல இருக்க பெரிய மனுஷங்க முன்னாடி பேசிக்கலாம். எல்லாத்தையும் தர முடியாது. அதுக்குன்னு ஒன்னுமே குடுக்காம ஏமாத்தவும் மாட்டோம். காரியத்துக்கு இரகுவோட சித்தப்பா, வேற சொந்தம்னு ஊர்ல இருக்கவங்க வரட்டும். காரியம் முடிச்சிட்டு பேசலாம். யாரும் எங்கேயும் ஓடிர மாட்டோம்.”, வேணுகோபால் முற்றுப்புள்ளி வைத்தார். 

ஒரு வழியாக மதியம் தேவகியை ஊருக்கு தெரிந்தவருடன் அனுப்பி வைத்து விரக்தியோடு அமர்ந்திருந்தார் வேணுகோபால்.  

“அப்பா, காரியம் வரைக்கும் என்னால லீவு போட முடியாதுப்பா. நான் நாளைக்கு கிளம்பணும். நீங்க பார்த்துக்குவீங்களா?”, என்று ஹாலில் வந்து நின்றாள் கீர்த்தி. 

“என்னடி. அதுக்குள்ள கிளம்பற?”, சரோஜினிதான் முதலில் கேட்டார். 

“திடீர்னு வந்தேன்மா. ஆனா பரீட்சை ஆரம்பிக்கற நேரம், போர்ஷன் முடிக்கணும். இன்னும் ஒரு வாரம் எல்லாம் லீவ் தர மாட்டாங்கம்மா.” 

“அவ கிளம்பட்டும்மா. அவ வந்ததே பெருசு. தடுக்காதீங்க”, சொன்னது ப்ரீத்தியேதான்.