அந்த வார விடுமுறையின் போது வெளியே சுற்றிவிட்டு கீர்த்தியின் வீடு வந்திருந்தார்கள். வாங்கி வந்திருந்த பொருட்களை மேசையில் வைத்து, அவனுடையதை தனியாக ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான்.
தேநீர் போட்டு எடுத்து வந்தாள் கீர்த்தி. எப்படியோ ஆரம்பித்த விவாதம் கடந்த அரை மணி நேரமாக ஓடிக்கொண்டிருந்தது.
“ஜோ… உன்டாக்டர் ஃப்ரெண்டு சொல்றார் சரி. பட், இதுவரைக்கும் நாம கடல் ஓரத்துல நின்னு காலை நினைச்சிட்டு இருக்கோம். இந்த முன் விளையாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இதோட முடிவுன்றது அதேதான? அது மாறாதே? அதை என்னால ஏத்துக்க முடியுமா? உன்னை அடிக்காம சகிச்சிக்கவாவது முடியுமா? உனக்காக முடியணும். அதுக்கே நாம எவ்வளவு ட்ரை பண்ணனுமோ தெரியாது. இதுல நீ நினைக்கற மாதிரி மனமொத்து.. ம்ப்ச்.. ரொம்ப கற்பனையை வளர்த்துக்காத ஜோ. கொஞ்சம் ரியாலிட்டியோட இரு.”
அவள் வார்த்தைகளைக் கேட்டவன், “அப்படியா? நான் உன்னை நெருங்க, நீ என்னை சகிச்சிப்பியா? உனக்கு வேற எதுவும் தோணாது. அப்படிங்கற?”
சுவரில் சாய்ந்திருந்தவளை நெருங்கியிருந்தான் ஜோ. அவள் இரு புறமும் கைகளை சுவற்றில் ஊன்றி சிறை பிடித்திருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் நின்றிருந்தான். பின் அன்று போல அடித்துவிட்டால்?
சற்றே விரைத்த கீர்த்தி அவன் முகத்தை நிமிர்ந்து நோக்க, அவனும் அவள் விழிகளைத்தான் ஆராய்ந்திருந்தான். மூச்சு காற்று உரசிக்கொள்ளும் தூரத்தில் நின்றிருந்தார்கள். தடதடக்கும் உள்ளத்தை மறைத்தவன், அவள் விழிகளில் பயம் துளியுமின்றி திகைப்பும், என்ன என்ற லேசான எதிர்பார்ப்பும் மட்டுமே இருப்பதைக் கண்டு, மெல்லிய புன்னகை முகத்தில் படர,
“என்ன கீத்து?”, என்றபோது குரல் சற்றே ஆழ்ந்து வந்தது.
“ஹ்ம்ம்… இல்லை”,மென்று முழுங்கினாள். தொண்டைக் குழி ஏறி இறங்குவதை அவன் கண்கள் அளந்து முடித்து மீண்டும் அவள் விழிகளைக் கவ்வின. உள்ளுக்குள் இருக்கும் சாக்லேட் நிற கருவிழியின் உள்வட்டம் இன்னும் அடர்ந்து கருமை பூசியதோ, அதை சுற்றியிருந்த மஞ்சள் ப்ரவுன் நிறமும் அடர்த்தி கூடியிருந்தது என்று அவளும் பார்வையால் அவனை கபளீகரம் செய்து கொண்டிருந்தாள். ஜோவின் உதடுகள் சற்றே துடிக்க, பாவையின் அதரங்கள் தானாய் சற்று பிரிந்து உள்ளிருந்த நுனி நாக்கு மேல் உதட்டினை எட்டி ஈரப் படுத்தி பல்லிடுக்கில் இழுத்துக்கொண்டது. அத்தனையும் அருகிருந்து நோட்டமிட்டவனின் பாடு திண்டாட்டமாகப் போனது.
“கீத்து…ப்ளீஸ்… நீ… நீயே எனக்கு ஒரு டைட் ஹக் குடு”, கரகரத்து வந்த குரல், கண்கள் சற்றே சுருக்கி அவளை மன்றாடலாக பார்த்த பார்வை எல்லாமுமாக கீர்த்தியின் உள்ளத்தில் எதிரொலிக்க, லேசாக எம்பியவள் அவன் வலது தோள் மேல் மோவாயை வைத்து பலம் கொண்ட மட்டும் ஆரத் தழுவினாள். அவள் கைகள் மட்டுமே அவன் முதுகில் படர்ந்திருந்தது. அத்தனை உணர்விலும் ஜோவின் கைகள் சுவற்றை விட்டு நகரவில்லை. படர்ந்திருந்த விரல்கள் முஷ்டியாகி, அழுந்தியதால் வெளுத்திருந்த முட்டிகள் கட்டியம் கூறியது அவனின் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை. கீர்த்தி உணர்ந்ததெல்லாம் அவன் படர்ந்த தோள்களின் திண்மை மட்டும்தான். ஜோவின் பிரத்யேக வாசம் நாசியை நிறைந்திருந்தது. அவன் உடல் சூடு அவள் மேனியிலும் உணர, நெருக்கம் வேண்டி முகத்தை லேசாய் சாய்த்தவள், “ஜோ..”, என்ற முனகலோடு அவன் காது மடலை முத்தமிட, அவள் உதட்டின் ஈரம் உணர்ந்து, “ம்ம்..ஹா”,என்ற ஜோவின் வலது கை சுவற்றை விட்டு அனிச்சையாய் அவள் புறம் வர, முயன்று மீண்டும் சுவரில் குத்தி நிறுத்தினான். உடல் மங்கையின் மென்மையை உணர்ந்து இறுகிட சற்றே தலை திருப்பி, அவள் காதின் மேல் மடலை மின்னல் வேகத்தில் லேசாய் கடித்து, விலக, அதன் அதிர்வை உள்ளங்கால் வரை உணர்ந்தாள் கீர்த்தி. பட்டென்று விலகி சுவற்றில் சாய்ந்த அவள் உடல் மெலிதாக நடுங்கி அடங்க, அவன் முகத்தினை நோக்கியது அவளின் மருண்ட விழிகள். வேகமாக ஓடிவந்தது போல மூச்சிரைத்தாள்.
“நான் தான் கீத்துமா.. உன்னால மட்டும்தான். உடலும், மனமும் உணர்வும் ஒன்னா கலக்கும்போது பிறக்கற உணர்ச்சி வேற. புரியுதா? உன் குரல், உன் வாசம், உன் உடலோட மென்மை, வடிவம் இதெல்லாம் இவதான் என் இணைன்னு எனக்கு உணர்த்தற மாதிரி, என் குரல், வாசம், வடிவம் உனக்குள்ளும் பதியும், பழகும். ஃப்ரீயா விடு”, என்றவன் முயன்று இரண்டு எட்டுகள் பின்னே வைத்து இடைவெளியைக் கூட்டினான்.
கீர்த்தியின் கைகள் அனிச்சை செயலாக அவனை நோக்கி நகர, லேசாக சிரித்தவன், “வேணாம் இது போதும். எக்குத்தப்பா எதுவும் ஆகுறதுக்கு முன்ன நான் கிளம்பறேன்”, வாசலை நோக்கிச் சென்றான்.
நின்ற இடத்திலிருந்து நகராதவள், கால்களில் திடமில்லாததுபோல் உணர சுவற்றிலேயே சாய்ந்திருந்தாள். முகம் விகசிக்க, “ஸ்வீட் ட்ரீம்ஸ் ஜோ”, என்று விடைதர, வாயிற்கதவை திறந்தவன், லேசாக அவள் புறம் திரும்பி, “உனக்கு வேணா ஸ்வீட் ட்ரீம்ஸ் வரலாம், எனக்கு கண்டிப்பா எக்ஸ் ரேட்டட்தான்”, என்று கண்ணடித்து, அவள் திகைத்த பார்வையில் வெடித்து சிரித்தபடி வெளியேறினான்.
மறுதினம் காலைப் பொழுது மாற்றி மாற்றி வகுப்புகள் இருக்க, ஜோவை பார்க்க முடியவில்லை. மதிய உணவு நேரம் அவர்களின் வழக்கமான மேசைக்கு வர, ஷீத்தலும், கீர்த்தியும் அவன் வருக்கைக்காக காத்திருந்தார்கள்.
“அது… நேத்து ஒரு ஃபுல் பாடி மசாஜ் எடுத்தேனா, அதான்..” மேலே என்ன சொல்லியிருப்பானோ, ஒரு வாய் தண்ணி குடித்துக்கொண்டிருந்த கீர்த்திக்கு அவன் சொல்வது கேட்டு புரைக்கேறியது.
“ஹே… பார்த்து குடிக்க மாட்டியா?”, ஷீத்தல் அதட்டி தலையில் தட்ட, சுதாரித்தவள் பார்வையால் அவனை முறைத்து மிரட்டினாள். அவன் கண்களில் குறும்பு மேலும் கூடியது.
அவள் சரியாகிவிட்டாள் என்று புரிந்து மீண்டும் அவன் புறம் திரும்பிய ஷீத்தல், “அங்க லேடீஸ் மசாஜ் உண்டா ஜோசஃப் சர்? எனக்குக் கூட ஆசை”, என்று கேட்க, சிரிப்பை அடக்க பிரயத்தனப் பட்டான் ஜோ. முகம் சிவந்த கீர்த்தியோ, “ஏய்..என்ன கேட்கற“, என்று ஷீத்தலை அதட்டினாள்.
“ஐயோ…தப்பா இல்லை சர். எனக்கு மசாஜ் எடுக்கணும்னா லேடீஸ்க்கு லேடீசே பண்ணூவாங்களான்னு கேட்ட வந்தேன்”, அவசரமாக ஷீத்தல் விளக்க, தோள் குலுங்க சிரித்தவன், “தெரியலைம்மா. நான் கேட்கலை, இன்னிக்கு என்ன லஞ்ச்?”, என்று அவள் கவனத்தை திசை திருப்பினான்.
நேற்று அவன் சென்றதும் சில நிமிடங்கள் பிடித்தது ஆசுவாசமடைய. கனவில் மிதந்து சென்றுதான் படுக்கையில் விழுந்தாள் என்று சொல்ல வேண்டும்.
கடந்து சென்ற நிமிடங்கள் மீண்டும் மீண்டும் ஓட, வெட்கத்தில் முகம் சூடேறியது. ஜோவா இப்படி என்று ஆச்சரியம் ஒரு புறம். தன்னால் மட்டும்தான் என்று அவன் சொன்னது கண்டு பெருமிதம் மறுபுறம். எல்லாம் தாண்டி அவனை கட்டியணத்திருந்த போது சிறு துளியும் அச்சமோ, அருவருப்போ எதுவுமே தோன்றவில்லை. அசந்துதான் போனாள் கீர்த்தி. அந்த நெருக்கம் இன்னும் இன்னும் வேண்டும் என்ற உணர்வைத் தாண்டி, இதோ இப்போது நினைக்கும்போது கூட தப்பாகத் தோன்றவில்லை. நடந்து போன நிகழ்விற்கும், இப்போது சுவைத்திருந்த நெருக்கத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரிந்தது.
ஜோவுடன் வாழ்க்கை அவன் நினைப்பது போலவே சாத்தியமாகும் என்று நம்பிக்கை தோன்றியது.
“கீர்த்தி”, ஜோவின் குரலில் சுதாரித்து சுற்றம் உணர்ந்து நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் கண்களின் மயக்கத்திலும் முகத்தின் லேசாக சிகப்பிலும்மே அவள் யோசனை என்ன என்று புரிந்தவனின் உடல் அவனையும் மீறி இணையின் அறைகூவலை உணர்ந்து ஆர்பரிக்க, இருவரையுமே மீட்க வேண்டி சற்றே சத்தமாக அவளை அழைத்தான்.
“என்ன எங்கேயோ பார்த்து யோசிச்சிட்டு இருக்க? சாப்பிடும்போது சாப்பாட்டு மேல கவனம் இருக்கணும்”, என்று எச்சரிக்கையாய் பார்க்க,
“சாரி.. ஒன்னும் இல்லை. சாப்பிடறேன்”, என்று அவசரமாய் ஒரு வாய் உணவை உண்டாள்.
“அவ அப்பப்ப அப்படித்தான் சார்”, என்ற ஷீத்தல் “நான் டப்பாவை கழுவிட்டு வரேன். நீ முடிச்சிட்டு வா கீர்த்தி”, என்று இவர்களை தனியே விட்டுச் சென்றாள்.
“கீத்துமா. இப்படி பண்ணா நானும் எவ்வளவுதான் கன்ட்ரோலா இருக்க முடியும்?”
அவன் பாவனையில் கிளுக்கிச் சிரித்தாள் கீர்த்தி.
அள்ளிக்கொண்டு செல்ல பரபரத்த கைகளை கட்டுப்படுத்தியவன், “நான் கிளம்பறேன். இதுக்கு மேல தாங்காது”, என்று அவன் ட்ரேவை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டான்.
நாட்கள் இனிமையாக செல்ல, ஒரு வியாழன் காலை பள்ளிக்கு பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தாள் கீர்த்தி. கைப்பேசி அழைக்கவும், வாரிய தலைமுடியை கிளிப்பில் அடைத்துவிட்டு, மேசை மேலிருந்த கைப்பேசியை எடுக்கக் போகும் முன் அடித்து ஓய்ந்திருந்தது.
அவள் தந்தையின் எண்ணிலிருந்து அழைப்பு. இங்கே ஆறு மணி என்றால் அங்கே காலை ஏழரை. இந்த நேரத்தில் அழைப்பா என்று பரபரத்து இவளே அழைத்தாள்.
“அம்மாடி… கீர்த்தி…”, அழுகையோடு வந்தது தந்தையின் குரல்.
“ம்ம்… இரகுவரன்…நைட்டு …ஆக்சிடென்ட்ல…”, அவர் திக்க,
அடி பட்டிருக்க, சிகிச்சைக்கு பணம் வேண்டி அழைத்திருக்கிராரோ என்று எண்ணி, படபடத்த நெஞ்சை நீவியவள்,
“என்னாச்சுப்பா? டாக்டர் என்ன சொல்றாங்க?”
“…ம்ம்… போயிட்டான்மா… ஒரேடியா உங்கக்காவ நிற்கதியா நிக்கவெச்சிட்டு போயிட்டான்”, என்றவர் அதற்கு மேல் பேச முடியாது குலுங்கி அழுவது கேட்க, கீர்த்திக்கு, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
“ஹலோ… அப்பா?” , யாரோ அவரை தேற்றும் குரல் கேட்டது..
“ஹலோ.. நான் இரகு வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கேன்மா. நேத்து நைட்டு வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வர வழியில கார் ஒன்னு இரகு பைக் மேல மோதி, ம்ம்… ஸ்பாட்லையே….” , என்று இழுத்தவர்,
பதிலில்லாமல் போகவே “ஹலோ….” என்று மீண்டும் அழைத்தார்.
“ஹான்… இருக்கேன். சொ…சொல்லுங்க. ப்ரீத்தி, குழந்தை…?” என்று கேட்கும்போதே குரல் நடுங்கியது.