எடுத்ததுமே “அடுத்தவன்  நமக்கு தீங்கிழைத்தால் மன்னிக்கணும்னு சொல்றது சுலபம். ஆனால் அப்படி செய்ய முடியுமா? அவன் மீது கோவம் வருவது தானே இயற்கை? அவனை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால் நம் மனம் ஆறிவிடுமா? ஏற்றுக்கொள்ளுமா? அப்படி மன்னிப்பவன் அந்த மன்னிப்பிற்கு தகுதியானவனா? இதையே ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் நம்மை ஏமாளி ஆக்கி அதே தவறை இழைக்க மாட்டானா? ஏன் மன்னிக்க வேண்டும்? என்ன ஆறுதல் கிடைத்துவிடும் எனக்கு? எனக்கு தீங்கிழைத்ததோடு மட்டுமின்றி அவனை மன்னித்து இன்னும் ஏமாளி பட்டமும் எனக்கு வேண்டுமா?” என்று சரமாரியாக கேள்விகளை கேட்டுக்கொண்டு சென்றவரிடம் தானாக கீர்த்தியின் கவனம் பதிந்தது. 

எத்தகைய தீங்குகள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறினார், அதில் அவளுக்கு நடந்த நிகழ்வும் கூட அடக்கம். மன உளைச்சல் பற்றி பேசினார். அதன் பல்வேறு கட்டங்கள் பற்றி கூட அலசினார்.  

“எல்லாவற்றையும் தாண்டி ஒரு கோபம் மனதில் ஆறாது தகிக்கும். தனக்கு இப்படி ஒரு தீங்கை இழைத்தானே. அப்படி அவன் தீங்கிழைக்க அதை நான் பொறுத்துக்கொண்டேனே அல்லது அதை தடுக்க முயலவில்லையே. அப்போது இல்லையென்றாலும், வேறு ஒரு பொழுதில் கூட எதிர்க்கவில்லையே என்ற கோபம் ஆண்டுகள் கடந்தும் தேங்கி நிற்கும்”, என்று நிறுத்தினார். கூட்டம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. எப்படியும் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்தானே. பொருளோ, உடலோ, நம்பிக்கையோ ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம் அடையாது வாழ்க்கை ஏது? 

“உங்களுக்கு தீமையை உண்டுபண்ணியவனை மன்னிக்க சொல்வில்லை. மன்னிப்பைை நீங்கள் வழங்க வேண்டியது உங்களுக்கு.  உங்களை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவன் உங்களுக்கு இழைத்த அநீதியைக் கண்டு கொந்தளிக்கும் உங்கள் மனதை, சுட்டெரிக்கும் அதன் வெம்மை உங்களை பொசுக்குவதிலிருந்து விலக உங்களை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட தீங்கை மன்னித்துவிடுங்கள். அதை செய்தவனை அல்ல.” 

ஓங்கி ஒலிக்கும் ஃபாதரின் குரலில் கீர்த்திக்கு கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அவர் கூறியது போல இரகுராமனின் மீது இருக்கும் ஆத்திரம் என்பதைவிட, அந்த நேரமும் அதற்கு பின்பும் அவளால் எதுவும் செய்ய முடியாததை, செய்யாமல் அடங்கிவிட்டதை எண்ணித்தான் கட்டுக்கடங்காத கோபம். அதற்கு இரகுராமனின் உருவம் தந்திருந்தாளோ என்னவோ? 

எல்லோரும் அவனை மன்னித்துவிடு, கடந்து வந்துவிடு என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உன்னை மன்னித்துக்கொள் என்று கூறவில்லை. அவளுக்குமே தன் மீது கோபம் என்று புரிந்தாலும், தன்னை அவள் அதிலிருந்து விலகிக்கொள்ளவில்லை, மன்னித்துக்கொள்ளவில்லை என்பது லேசாக பிடிபட்டது. 

தன் விடுதலை என்பது அதில்தான் இருக்கிறது என்று புரிய ஆரம்பித்தது. பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டி பேசிக்கொண்டிருந்தவர் மீது முயன்று கவனம் வைத்தாள். 

******************** 

அன்று தேவாலயத்தில் பாதிரியாரின் உரை முடித்தபின் கீர்த்தியோடு பெரிதாக பேசிக்கொள்ளவில்லை ஜோ. ஒரு தலையசைப்போடு சென்றுவிட்டான். பாதிரியாரிடம் இந்த பொருளில் உரையாற்ற பரிந்துரையும் அவந்தான் செய்திருந்தான். அவள் யோசிக்க அவகாசம் தந்து, திங்கள் மதியம் உணவருந்தும் நேரம் கூட வேலையிருப்பதாக சொல்லியனுப்பியிருந்தான்.  இப்போது அவளை பார்த்து பேசிவிடும் முடிவோடு வந்திருந்தான். 

அழைப்பு மணி கேட்க, “யார்? ஷீத்தலா?” என்று யோசனையாக கதவை சென்று திறக்க, அங்கே ஜோ நின்றிருந்தான். கார்கோ பேன்ட், ஒரு வெளிர் மஞ்சள் காட்டன் குர்த்தா அணிந்து பளிச்சென்றிருந்தான். 

“ஸ்கூல் முடிஞ்சு இரண்டு மணி நேரமாச்சு. இன்னும் ட்ரெஸ் கூட மாத்தாம என்ன சோக கீதம் வாசிச்சிட்டு இருக்க?”, உள்ளே வர வழியை விடு என்று சைகை காட்டியவனை விலகி வழிவிட்டாள். 

“என்ன சோக கீதம்? அதெல்லாம் ஒன்னு மில்லை. டயர்டா இருக்கவும் அப்படியே படுத்திருந்தேன்.”, என்றாள் வீம்பாக. 

“ஹ்ம்ம்… நம்பியிருப்பேன், கண்ணுல, தூக்கத்தைவிட அழுத தடையம்தான் இருக்கு, கன்னத்துல கூட..”, என்று கண்ணீர் கோடுகள் இருப்பதை சுட்டிக்காட்டவும், வேகமாக துடைத்துக்கொண்டாள். 

“ம்ப்ச்… போய் முகம் கழுவி, ட்ரெஸ் மாத்திட்டு வா. டீ போட்டு வைக்கறேன்”, என்று அவள் பதில் பேசும் முன் சமையலறைக்குள் சென்றுவிட்டான். 

பத்து நிமிடத்தில் தேனீரின் வாசனை ஹாலில் பரவ, முகம் கழுவியிருந்தும் அதே சல்வாரில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி. 

“நான் இங்க இருக்கவே உன்னால ட்ரெஸ் மாத்திக்க முடியலையா? வேணா நான் போயிட்டு பத்து நிமிஷம் கழிச்சு வரவா?”, பட்டவர்தனமாக கேட்டவனைப் பார்த்து முறைத்தாள். 

மாற்றுடையை எடுத்து வைத்த போதும், ஜோ சமையலறையில் இருக்க, படுக்கை அறை தாழிட்டிருந்தும் உடையை களைய கை வரவில்லை என்பதே நிஜம். 

பதில் பேசாது தேநீர் கோப்பையை எடுத்துப் பருகினாள். அற்புதமாக இருந்தது.  இப்படி ஒருவர் தனக்காக போட்டுத் தரும் சுகம் எத்தகையது என்று தானே போட்டுக் குடிப்பவர்களுக்குத்தான் தெரியும். 

“இன்னும் வலிக்குதா ஜோ? மார்க் இருக்கா போயிடுச்சா?”, என்று கேட்டவளைப் பார்த்த்வன், கோப்பையை காலி செய்து டீப்பாயில் வைத்துவிட்டு, குர்த்தாவை தூக்கிக் காட்டினான். 

அவனின் மார்பைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் படபடத்து வந்தாலும், பார்வை லேசாக இன்னும் தெரிந்த அந்த வட்டத்தில்  நிலைத்தது. 

“நேரா கை வெச்சு அழுத்தினா மட்டும்தான் வலி இருக்கு, அதுவும் கொஞ்ச நாள்ல போயிடும்”, என்றவன் குர்த்தாவை கீழிறக்கினான். 

“சாரி ஜோ. விபரீத பரிட்சையெல்லாம் வேணாம். இன்னும் கொஞ்சம் ஓங்கி குத்தியிருந்தேன்னா, இல்லை நீ திரும்ப என்னை பிடிக்க ட்ரை பண்ணிருந்தா இன்னும் மோசமா போயிருக்கலாம். யோசிக்க யோசிக்க தூக்கமே வரலை. எனக்குள்ள இவ்வளவு கோவம் இருக்குன்றதே இப்பத்தான் புரியுது” 

“ஹ்ம்ம்… அதனால முதல் தடைக்கல்ல பார்த்ததும் ஆட்டத்தை முடிச்சக்கலாம்னு வழக்கம்போல எனக்கும் சேர்த்து  நீயே முடிவு செய்துட்ட ரைட்?” 

ஜோவின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்டவள், “ஜோ… புரிஞ்சுதான் பேசறியா? இதுக்கப்பறமும் எப்படி ஜோ இதை தொடரமுடியும்னு நம்பற? எப்ப எனக்குள்ள இருக்க சைத்தான் முழிச்சிக்கும்னு உனக்கு பயமில்லையா? ஆனா எனக்கிருக்கே!”, மன்றாடினாள். 

“ஹம்ம்… ஆனா உனக்குள்ள இருக்க சைத்தானுக்கு நான் யாருன்னு பதிய வெக்கணும். உன் மனசும் மூளையும் என்னை உணரணும். அப்படி உணரும்போது என்னால உனக்கு எந்த நேரத்திலையும் ஆபத்தில்லைன்னு புரியவைக்கணும். அப்பா தூக்கிப் போட்டாலும் பிடிச்சிடுவார்ன்னு  நம்பி சிரிக்குதே குழந்தை அந்த மாதிரி உன்னை இறுக்கிப் பிடிச்சாலும் பிடிக்கறது நாங்கறதுனால உன் சைத்தானுக்கு பயம் வரக்கூடாது. உடனே நடக்காது ஆனா மசில் மெமரி மாதிரி இதுவும் பழகலாம்.” 

அவன் பேசப் பேச முகத்தை சுருக்கியவள், “யாரு… உன் சைக்காலஜி ஃப்ரெண்டு உருப்போட்டு அனுப்பி வெச்சாரா?” 

தோளை குலுக்கியவன், “காதலுக்காக சில பல வீர விழுப்புண்களை நானும் தாங்கியிருக்கேன்னு வரலாறு சொல்ல வேணாமா?”, என்று சொல்லியபடியே, பக்கவாட்டில் சாய்ந்து அமர்ந்து, அவன் கால்களை அவள் மடியில் போட்டான். 

அனிச்சையாக அவன் கால்களைப் பிடித்தவள், “ஏன் என்ன? “ என்று தூக்க முயன்றாள். 

“சொடக்கெடுத்து விடு. ஏன் என் கால் பிடிக்கலையா?”, என்று கால் விரல்களை குறுக்கி நீட்டினான். 

காலின் மேல் செல்லமாக ஒரு அடி வைத்தவள், “என்ன, இதுவும் உன் டாக்டர் சொன்னாரா? காலேஜ்ல அந்த ஒரு வாட்டிக்கப்பறம் தரவே மாட்டேன்னு சொன்ன?”, நீண்ட அவனது விரல்களைக் கோதி ஒவ்வொன்றாக சொடக்கெடுத்தாள்.” 

“என்ன அப்படி ஒரு கிரேஸ் என் கால் மேல உனக்கு? எனக்கு புரியவே இல்லை.”, என்று அவள் கேள்விக்கு பதில் சொல்லாது வம்பு வளர்த்தவனை பார்த்து உதட்டை சுழித்தவள், “அதெல்லாம் உனக்கு புரியவே வேணாம்”, என்று உள்ளங்காலை லேசாக அழுத்தி விட்டாள். 

“ஹ்ம்ம்…”,  உடல் தளர்ந்து படுத்தான். “நான் வேணா மடிமேல தலை வெச்சுக்கவா? கொஞ்சம் தலையும் பிடிச்சு விடேன். நல்லாயிருக்கு.”, என்று கேட்டவனை வினோதமாகப் பார்த்தாள். 

“டாக்டர் வெறும் கைடன்ஸ்தான் குடுத்தார். என்னை உனக்கு பழகணும். எனக்கென்னவோ, நான் உன்னை அணுகறதைவிட நீ என்னை அணுகறது உனக்கு ஈசியா இருக்கும்னு தோணுது. அதுதான். இல்லைன்னா, நீ உன் காலை  நீட்டு, பிடிக்கறதென்ன, ஒவ்வொரு விரலா முத்தம் கூட வெக்கறேன்.”, என்றவனை சற்று மிரட்சியாகப் பார்த்தவள், அவன் கால்களை தள்ளிவிட்டு எழுந்து  நின்றாள். 

படுத்திருந்த நிலையிலேயே இருந்தவன், “நீச்சல் கத்துக்கும்போது, ஒரு சில நேரம் மூழ்கி தண்ணி குடிச்சிடுவோம். அதுக்குன்னு திரும்ப தண்ணியில குதிக்கலைன்னா எப்படி நீச்சல் கத்துக்கறது? அடியும் வலியும்விட எனக்கு என் வாழ்க்கையில் நீ வேணுங்கறது ரொம்ப ரொம்ப முக்கியம். உனக்கு நான் முக்கியம்னு பட்டா உன் முயற்சியிலர்ந்து பின் வாங்காதே.”, என்று சவாலாகக் கூறினான். 

கண்களைக் குறுக்கி அவனையே கூர்ந்து பார்த்தவள், “இரு, வேற ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.”, என்று வேகமாக படுக்கையறைக்குச் சென்றாள். 

“கதவை லாக் பண்ணிக்கோ. இப்போதைக்குத் தப்பில்லை.”, குரல் கொடுத்தான். கெட்ட வார்த்தை ஒன்று லேசாக காதில் விழ ஜோவின் புன்னகை பெரிதானது. 

கொஞ்சினால், கெஞ்சினால் மிஞ்சுவாள் என்றதாலேயே சவாலாக வைத்தான். ஆனால் அவன் கால்கள் அவள் கைகளில் கட்டுண்டிருந்த  நேரம் முழுதும் இன்ப அவஸ்த்தைதான். எப்பிடிடா அவ மடியில படுத்துட்டு சும்மா இருப்ப என்று அவன் மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அதற்குள் கதவு திறந்திருக்க, வேறு ஒரு சல்வாரில் வெற்றிக் களிப்போடு வந்து அமர்ந்தாள் கீர்த்தி. 

“குட் கேர்ள்”, என்று பாராட்டினான். 

அவன் மடி மீது தன் கால்களை போட்டாள். “ம்ம்… உன் டர்ன் இப்போ. ஆனா முத்தமெல்லாம் வெக்கக் கூடாது. பிடிச்சு மட்டும் விடு” 

கணுக்காலை மறைத்த பேண்ட்டை தள்ளிவிட, “என்ன?”, என்று தடுமாறினாள். 

“கணுக்கால் பிடிச்சுவிடணும் முதல்ல. மெதுவாக பாதத்தைப் ஒரு புறம் பிடித்து லேசாய் இட வலமாக சுழற்றி மெதுவாய் அழுத்தி விட, சுகமாய்த்தான் இருந்தது. “உன் கையளவுதான் என் கால் சைஸ் இல்ல?”, சிரித்தவளைக் கண்டு ஜோவின் முகமும் மலர்ந்தது. 

ஏதேதோ பேச்சு ஓடிக்கொண்டிருந்தாலும், அவன் விரல்கள் நேர்த்தியாய் சொடக்கெடுப்பதும், பாதங்களுக்கு அடியில் அவன் தொடைகளின் உறுதியும் உணராமல் இல்லை கீர்த்தி. அவளையும் மீறி பாதங்கள் இரண்டையும் அவன் தொடையில் அழுத்த, அவள் முகம் பார்த்தவன் கண்டது கள்ளுண்ட கீர்த்தியின் பார்வையைத்தான். 

“ஓய்… என்ன?”, என்று புருவம் உயர்த்திக் கேட்கவும், அவளைக் கண்டுகொண்டானே என்ற வெட்கம் பரவ, அவசரமாக எழுந்து சமையலறைக்குள் ஓடிவிட்டாள். 

சோஃபாவிலிருந்து நகராது, “நான் ஏன் காலை தரமாட்டேன்னு சொன்னதுக்கு அர்த்தம் இப்ப புரிஞ்சுதா?”, என்று சிரிப்பினூடே கேட்டவன், “நான் கிளம்பறேன். ஈசி”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். 

மீண்டும் வசந்தம் வந்தது அவள் வாழ்க்கையில். அப்படித்தான் தோன்றியது. ஷீத்தல் கூட கேலி செய்தாள். “அடடா, ஊடல் முடிஞ்சுது போலவே? இரண்டு நாளா டல்லடிச்சிட்டு இருந்த முகம் சும்மா டாலடிக்குது!” 

அவள் முதுகில் ஒன்று வைத்தாலும், கீர்த்தியின் முகம் மலர்ந்திருந்தது.