“அ..அண்ணாவா?…” என்றவள் கீர்த்தியின் முறைப்பைப் பார்த்து, “பேரு சுருக்க மாட்டேன். ஜோசஃப் சார்… போதுமா?”, என்று ஜோசஃபின் பின் பாதி பேரை அழுத்தி உச்சரித்தாள்.
“ஹ்ம்ம்… அவர் பாதம் எப்படி இருக்குன்னு சொன்ன?”, புருவம் உயர்த்தி, கைகள் கட்டி கேட்டாள் கீர்த்தி.
இரு கைகளையும் விரித்து, அமைதி என்று சைகை செய்த ஷீத்தல், “அந்தபக்கமா வா. கால்ல வேணாலும் விழறேன். சத்தியமா அவர் சொல்லிக் குடுத்ததை மட்டும்தான் சொன்னேன். இதுக்கு மொத்த பொறுப்பும் அவர்தான் ஏத்துக்கணும். மீ அப்பாவி யூ நோ?”, கெஞ்சலாய் முடிக்கும் நேரம் இரு காது மடல்களை பிடித்து மன்னிப்பை யாசிக்கும் குழந்தைபோல வேண்டினாள்.
அதில் லேசாய் புன்னகை மிளிர, “அநியாயத்துக்கு அவரைப் பார்த்து உருகி மறுகினியேடி. நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பேன்? உன்னை…” என்று உதடு கடித்து மீண்டும் முறைத்தாள்.
“ஜோ..சஃப் சார் லவ்வை நீ புரிஞ்சுக்கணும்னுதான் கீர்த்தி. பெத்தவங்களை கஷ்ட்டப்படுத்தக் கூடாதுங்கறதெல்லாம் சரிதான். ஆனா நம்ம மனசுன்னு ஒன்னும் இருக்கே. இத்தனை வரன் நீ வேணாம்னு சொன்னதுக்கு அப்பறம் கூட அவங்களும் மனசு மாறாம இப்படி இருந்தா எப்படி? நீ வேணாம்னு சொல்லிட்டு வந்தப்பறமும் உன்னைப் பத்தி கேட்டதுமே இப்படி கடல் தாண்டி சிந்துபாத் கணக்கா தேடிட்டு வந்துட்டாரே, இப்படி ஒரு மாப்பிள்ளை உங்கப்பாக்கு கிடைப்பாரா? “
“நீ என்ன அவருக்கு லாயரா? “
இன்னமும் அவள் கோபம் குறையவில்லை என்று நினைத்த ஷீத்தல், “என்ன கீர்த்தி?”, என்று சுருதி இறங்கிய குரலில் கேட்க,
உதடு பிதுக்கியவள், “எதுக்கும் உங்கம்மாகிட்ட சொல்லி நீ நல்லாயிருக்கணும்னு ஒரு வேண்டுதல் வெக்கச் சொல்லு.”, என்றாள் மொட்டையாக.
புரியாத புருவம் சுருக்கிய ஷீத்தல், “ எதுக்கு?” என்று அப்பாவியாய் கேட்க,
“ஹ்ம்ம்… என் வயித்தெறிச்சல்ல உன்னை நிறைய சாபம்விட்டேனா, அதுல ஒன்னு ரெண்டு பல்லிச்சிட்டாக்கூட சங்கடமாயிடும். அதுக்குத்தான்”, என்று ஷீத்தலில் தோளை ஒரு இடி இடித்துவிட்டுச் செல்ல, வாய்பிளந்து நின்றாள் ஷீத்தல்.
மதிய உணவின் போது, பளிச்சென்று புன்னகை சிந்தி அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான் ஜோ.
ஷீத்தல் அவசரமாக கீர்த்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள். அவள் செய்கையை புதிராகப் பார்த்தவன், “என்ன ஷீத்தல், தலையை குனிஞ்சிக்கற?”, என்றவன் “கீர்த்தி மிரட்டினாளா உன்னை?”, என்று கேள்வி கேட்டாலும், பார்வை முற்றிலும் கீர்த்தியிடம்தான் இருந்தது.
“ம்ம்… ஹான்… இல்லை”, என்ன பதில் சொல்வது என்று புரியாது மென்று முழுங்கினாள்.
“கீர்த்தி…. “, என்று ஜோசஃப் இழுக்க, “நீங்க இதுல தலையிடாதீங்க. உங்களுக்கு தனியா இருக்கு மண்டகப்படி. இவளோடது தனி. இரண்டு வருஷமா ஒன்னுமண்ணா பழகிட்டு, சட்டுனு கட்சி மாறிட்டல்ல”, என்று அடுத்த ரவுண்டிற்கு தயாராகுபவளைப் பார்த்து, “அப்படில்லாம் இல்லை கீர்த்தி”, என்று மீண்டும் ஷீத்தல் ஆரம்பிக்க,
“ஆமாம்…அப்படித்தான். இடித்துரைப்பான் நண்பன்ங்கற இலக்கணத்துக்கு பொருத்தமா இருந்த பொண்ணு, உன் நல்லதுக்காகத்தான் செய்தா. இப்படித்தான் மிரட்டுவியா நீ?”, கீர்த்தியை அதட்டினான்.
“ம்ம்.. இவளுக்கு தேள் கொட்டணும்னெல்லாம் சாபம் விடற அளவு என்னை கடுப்பேத்தியிருக்கா.. எனக்கே அவமானமா போச்சு. எப்படி நான் மறக்க?”, என்று ஜோவிடம் வாதிட்டு திரும்ப, முழித்துக் கொண்டிருக்கும் ஷீத்தல் அவளின் பார்வை வட்டத்திற்குள் வந்தாள்.
“என்ன?”, அதட்டவும்,
“தேள் கொட்டணுமா? “, அப்பாவியாய் கேட்பவளைக் கண்டு சிரிப்பு வர அதை மறைத்த கீர்த்தி,
“அதுக்குத்தான் உங்க அம்மாகிட்ட பேசி பலிக்காம இருக்க எதாவது செய்யச் சொல்லு”, என்றாள்.
“ஜோசஃப் சார். எனக்கு தேள்னா… அப்ப உங்களுக்கு?”, கீர்த்தியின் புறம் திரும்பி, “அவருக்கு என்ன பாம்பா?”
“சீ… து…எவ்வளவு கோவம் வந்தாலும் ஜோக்கு சாபமெல்லாம் விட வராது எனக்கு”, என்று அவனைப் பார்த்து புன்னகை சிந்த,
“வேணும்டி ஷீத்து உனக்கு, இதுவும் வேணும் இன்னமும் வேணும்”, என்று தன்னைத்தானே சுட்டிக் காட்டிக்கொண்டு வெம்பினாள் ஷீத்தல்.
அதில் சிரித்த ஜோ, “ஹேய்… சாரிம்மா. கீர்த்தி சொல்றதை காதுல வாங்கிக்காதே, மனசுல வெச்சுக்காதே. ஒன்னும் ஆகாது”, என்று ஆறுதல் கூறினான்.
ஷீத்தல் வேகமாக உணவை முடித்து எழ, கீர்த்தி ஜோவைப் பார்த்தாள். அவனும் அனேகமாக முடித்திருந்தான்.
“எந்திரிச்சு போன…வகுந்துடுவேன்”, மிரட்டினவள் மெதுவாய் அடுத்த வாய் உணவை உண்டாள்.
அதில் பெரிதாய் புன்னகைத்த ஜோ, “நீ போ ஷீத்தல்”, என்று விடைகொடுத்தான். “என்ன வில்லி ரேஞ்சுக்கு வயலன்ட்டா பேசறா?”, என்று முனகிய ஷீத்தல், நடையைக் கட்டினாள்.
“ஏன் கீத்து அவளை இப்படி மிரட்டற? பாவம் நல்ல பொண்ணு.”, என்று பரிந்துரைத்து, கீர்த்தியின் முறைப்பை பெற்றுக்கொண்டான்.
“என் தம்பி ஸ்டீஃபனுக்கு ஷீத்தலை கேட்கலாமான்னு நினைச்சிட்டு இருக்கேன் கீர்த்தி.”
“ஷ்… தெரியாது. இன்னும் கேட்கலை. நீதான் கேட்டு சொல்லணும். அவனுக்கு நல்லா செட் ஆவான்னு தோணுது. வேணும்னா போன்ல பேசிப் பார்க்கட்டும். பிடிச்சா மேல வீட்டுல சொல்லி பேசிக்கலாம்.”
“இவ எனக்கு ஓர்படியா? ம்ம்… நல்லாத்தானிருக்கும்”, என்று சொன்னவள், “ம்ஹூம்… எந்த கனவும் வேணாம். “, என்று கையை கலைப்பதுபோல ஆட்டினாள்.
“உனக்கு முதல்ல முடிக்காம தம்பிக்கு எப்படி முடிப்பாங்க ஜோ?”
“நம்மளைப் பத்தி சொல்லணும் கீர்த்தி. அம்மாகிட்ட சொல்லிட்டுதான் அடுத்து இந்த பேச்சு. அதுக்குள்ள இவங்க இரண்டு பேரும் பேசி ஓகே சொன்னாதான்.”
இலகுவாய் சொல்பவனைப் பார்த்தவள், “இரு…எனக்கு நம்பிக்கை வர வரைக்கும் லவ் பண்ணலாம்னுதான சொல்லியிருக்க? அதுக்குள்ள வீட்ல சொல்றன்னா எப்படி ஜோ. வெயிட் பண்ணு.”, என்றாள் சங்கடமாக.
லேசாய் முறுவலித்தவன், “சாயந்திரம் வீட்டுக்கு வரேன். காஃபி, பஜ்ஜி போட்டு வை”, என்றான்.
“ஐய்ய…தோடா… இவருக்கு செய்யத்தான் காத்திட்டு இருக்கோம் பாரு. அதெல்லாம் முடியாது. நான் டயர்டா இருப்பேன்.”, அவன் வேண்டுகோளை நிராகரித்த படியே உணவு டப்பாவை மூடினாள்.
“சரி… நான் வந்து டீ போடறேன். அப்பறம் சேர்ந்து பஜ்ஜி போடலாம்“, என்று சொல்பவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
“எனக்கு மட்டும் இஸ்க் இஸ்க் என்று கேட்கிறதே மன்னா?”, பழைய கீர்த்தியின் குறும்பு எட்டிப் பார்த்தது.
“எனக்கு கிஸ்க் கிஸ்க் என்றே கேட்கிறது ராணி”, என்று பதிலளித்தவன், “இதுக்கு மேல வம்பாயிரும்”, என்று கூறி வேகமாக சென்றுவிட்டான். முகச் சிவப்பை மறைக்க கீர்த்திதான் பாடுபட்டாள்.
மாலை வரையிலுமே ஒரு எதிர்பார்ப்பு, தவிப்பு, ஒரு வேளை எதாவது பிசகிவிட்டால் என்ற லேசான பயம் என்று மாறி மாறி தோன்றும் உணர்ச்சிகளை ஒரு மாதிரி கட்டுக்குள் வைத்திருந்தவளுக்கு, இதோ அவன் வருகைக்காகக் காத்திருக்கும் இந்த அரை மணி நேரம் நெட்டித் தள்ள வேண்டியதாய் இருந்தது. கதவை ஒரு பக்கம் திறந்தே வைத்திருந்தாள்.
சட்டென்று வாசலில் அவன் உருவம் தெரிய, எழுந்து அட்டென்ஷனில் நின்றாள்.
“வரலாமா?”, என்று கேட்டுக்கொண்டே ஒரு எட்டு உள்ளே வந்தவன், மெல்ல அவனது செருப்பைக் கழட்ட, பார்வை கோலாப்பூரி் செருப்பில் பதிந்தது. அதைப் பார்த்தவள், வேகமாக ஜோவின் முகம் காண, அவனது கண்களில் குறும்புச் சிரிப்பு.
“இதுதான் டீ போடற நேரமா?”, என்றாள் ஐந்தரை மணியைக் காட்டும் கடிகாரத்தைப் பார்த்தபடி.
“அது… சும்மா கிளம்பியிருந்தா முன்னாடியே வந்திருப்பேன். லவ்வரைப் பார்க்கப் போறதுன்னா கொஞ்சம் மெனக்கெட வேணாமா? குளிச்சு, ஃப்ரெஷ்ஷா, வாசனையா என்று அருகே வர, சோப்பின் நறுமணம் முகர்ந்தாள். ஆனால், அவளைக் கடந்து சமையலறைக்குள் சென்றுவிட்டிருந்தான்.
வாசலில் நின்றவள், “எல்லாம் எடுத்து வெச்சிட்டேன். நானே போடறேன்.”
அவளை அசட்டை செய்தவன், “சேர்ந்து போடலாம்னு தான பேசினோம். ஓ பஜ்ஜி மாவு ரெடி பண்ணிட்டியா? சரி வெங்காயம், கத்தரிக்காய் கட் பண்ணு. வா, அந்த பக்கம் இடம் இருக்குல்ல? அங்க நின்னு செய்”, என்று காரியமாக தண்ணீரை கொதிக்க வைத்து, அவள் இடித்து வைத்த ஏலக்காய், கிராம்பு என்று அதில் போட்டான்.
ஒரு மூச்சை உள்ளிழுத்தவள், லேசாய் ஒதுங்கி சிங்க் பக்கம் செல்ல, “படாது படாது… தைரியமா போ”, என்று அவனும் ஒதுங்கி வழிவிடுவது போல பாவனை செய்தான்.
ஒரு விரல் நீட்டி அவனை எச்சரித்தவள், ஃப்ரிஜ்ஜிலிருந்த குட்டி கத்திரிக்காய்கள் இரண்டை எடுக்க, ஒரு கப்பில் நீர் பிடித்து வைத்தான். “கட் பண்ணி இதுல போடு” என்றுவிட்டு பாலை அளக்கப் போய்விட்டான்.
அவன் நிஜமாகவே சேர்ந்து சமைக்க மட்டும்தான் கேட்டிருக்கிறான், நாம் தான் மனக் கண்ணில் சாமி பட டூயட் பாடிவிட்டோமோ என்று நினைத்தவள், சற்றே தளர்ந்து, காயை வெட்ட ஆரம்பித்தாள்.
அவள் முடிக்கும் நேரம், சூடான டீ ஏலக்காய் மணத்துடன் கைக்கு வந்தது.
“அருமையா போட்டிருக்க ஜோ”, என்று பாராட்ட, “நான் சமைச்சு நீ சாப்பிடற முதல் ஐட்டம். ஸ்வீட்டா இருக்கணும்னு கொஞ்சம் சக்கரை தூக்கலா போட்டேன். பாயசம் பண்ணதில்லை. சோ அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ”, என்ற ஜோவின் பதிலில் நெகிழ்ந்து நின்றாள்.
“ஆமாம்… உங்க அம்மா பண்ண முந்திரி கொத்து, தம்பி செஞ்ச கேக் எல்லாம் கூட சாப்பிட்டிருக்கேன். நீ பண்ணதுன்னு இதுதான் முதல்.”, சந்தோஷமாய் குடித்தாள்.
“டீ போட்ட கைக்கு என்ன தரப்போற?”, புருவம் இரண்டையும் நெளித்து, புன்னகையும் எதிர்ப்பார்ப்புமாக ஜோ கேட்க, “அச்சோ, தங்கம் விக்கிற விலைக்கு வளையல் போட முடியாது, அட மோதிரம் கூட கஷ்டம்பா. ம்ம்…வாட்ச்?”
பொய்யாய் முறைத்தான், “கடையில வாங்கித் தர பொருள் எதுவும் வேணாம்.”
அவள் முதன் முறை அவனுக்காக சமைத்து எடுத்து வந்த போது, விரல்களுக்கு முத்தம் வைத்தான். அது ஞாபகம் வர, கண்கள் சற்றே அகல அவனைப் பார்த்தாள்.
உன்னிஷ்டம் என்பது போல தோளை குலுக்கினான். அடுத்து கைவிரல்களை காற்றில் பியானோ வாசிக்கவிட்டான்.