அடைக்கும் தொண்டையை கனைத்து சரி செய்தவன், “நிறைய நிறைய பார்க்கலாம் கீத்து. ஆனா கொஞ்ச நாளைக்கு நீதான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும். போன மாசம் சம்பளம் வந்தப்பறம்தான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அம்மா மெடிக்கல் செக்-அப், அப்பறம் ப்ளான் வரைய, அப்ரூவல் வாங்கன்னு செலவுக்கு ஸ்டீஃபனுக்கு அனுப்பினேன்.”
சூழலை இலகுவாக்க பேச்சை திசை திருப்பினான். அவன் எதிர்பார்த்தபடியே வீடு கட்டுவது குறித்தான பேச்சுகள் ஆரம்பித்தன. மெல்ல நடந்து ஒரு சிறிய உணவகம் அருகே வந்தவர்கள், ஆளுக்கு ஒரு சாண்ட்விச், காபி ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தார்கள்.
“எங்கிட்ட சேர்த்து வெச்ச பணம் இருக்கு ஜோ. வேணும்னா எடுத்துக்கோ. அம்மா நொச்சு பண்ணவும் கொஞ்சம் நகை வாங்கினேன். எப்பவாவது கேட்டா வீட்டுக்கு அனுப்புவேன். மத்தபடி சேர்த்து வெச்கிருக்கேன்”, என்றவளை புன்சிரிப்போடு பார்த்து தலையசைத்தவன், வீடு அம்மாக்கு. நீ சேர்த்து வை, நானும் கொஞ்சம் போட்டு நமக்கு வேற ஃபளாட் வாங்கிக்கலாம்.”,
அதைக் கேட்டு இதழ் விரிக்கச் சென்றவள், “வேணாம் ஜோ. ரொம்ப ப்ளான் பண்ண வேணாம். அப்படி நிறைய பண்ணதுதான் எதுவுமே கைகூடலை. போற படி போகட்டும்”, என்றாள் சற்று பயத்துடன்.
அவள் கையை மீண்டும் மேசை மேல் பிடித்துக்கொண்டவன், “சரி… ஃபூச்சர் பத்தி பேச வேணாம். சரியா?”
“ம்ம். முதல்ல ராகினிக்கு போன் செஞ்சு தாங்க்ஸ் சொல்லணும்”, என்று அடுத்த விஷயத்திற்கு தாவினாள் கீர்த்தி.
அதைக் கேட்டு ஒரு கணம் கண் மூடி அனிச்சையாக முகம் சுளித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்ன?”
“அது… இப்ப இன்னிக்கே சொல்ல வேணாம்னு நினைச்சேன். பட் மே பீ பின்னாடி சொல்றதுக்கு பதிலா இப்பவே பெட்டர்.”, பீடிகை பலமாக இருக்க, எச்சரிக்கையாக கையை அவனிடமிருந்து விடுவித்து, முகம் பார்த்தாள்.
“அது… ராகினி உங்க அக்கா வீட்டு பக்கத்துலதான் கல்யாணம் முடிச்சு வந்திருக்கா, ப்ரீத்தியை பார்த்து பேசியிருக்கா. ஆனா எனக்கு சொன்னது அவ இல்லை.”, வேறு யார் என்று குழப்பமாக நோக்கினாள்.
ஒரு மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து விட்டவன், “ஒரு நாள் திடீர்னு ஒரு போன் வந்தது”, என்று ஆரம்பித்து இரகுராமன் தன்னிடம் பேசியது. இவள் கூறியதெல்லாம் கேட்டதும் தான் அவனை மீண்டும் அழைத்து திட்டியது என்று எல்லாமும் கூறினான். சொல்லும்போதே அவள் முகத்தைவிட்டு கண்னை எடுக்கவில்லை ஜோ. முதலில் திகைப்பைக் காட்டியவள், அதன் பின் முக பாவனைகள் துடைத்து அவன் கூறுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அந்த மட்டில் கோபப்படாமல், எழுந்து செல்லாமல் காது கொடுத்துக் கேட்கிறாளே என்று சற்று நிம்மதி கொண்டான் ஜோ. அவன் கூறி முடித்த பின்னும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
சில நொடிகளுக்குப்பின், “கீத்துமா… எதாவது சொல்லுடா”
“என்ன சொல்லணும்? நம்மை திரும்ப பார்க்க வெச்சதால அவனை மன்னிக்கணுமா? போன் செஞ்சு தாங்க்ஸ் சொல்லணுமா?”, குரலில் உஷ்ணம் ஏறியது.
“ஷ்ஷ்…” டென்ஷன் எதுக்கு? “நான் அப்படி எதுவுமே சொல்லலையே?”
“அவனோட குற்ற உணர்ச்சியை போக்கிக்கதான் இதை செய்தான். இனி அதுக்காகக் கூட கீர்த்தியோட நினைப்பு உனக்கு வரக்கூடாதுன்னு வார்னிங் குடுத்துதான் போனை கட் பண்ணேன். எல்லார் கூடவும் அப்பப்ப பேசுவேன். அந்த மாதிரி கண்டிப்பா ராகினிகிட்டவும் சில மாசத்துல பேசியிருப்பேன். ப்ரீத்தி வீடு பத்தி எனக்கு தெரிஞ்சிருக்கும். அதனால நீ நன்றிகடனெல்லாம் பட்டுக்க வேணாம். இந்த விஷயம் உன் கிட்ட சொல்லணும்னு நினைச்கிட்டே இருந்தேன். இப்ப சொல்லிட்டேன்”
அவர்கள் உணவு தயாராகவும், அவனே சென்று இருவருக்குமானதை ட்ரேவில் வைத்து எடுத்து வந்தான்.
அவன் வாங்கியிருந்த சாண்ட்விச்சை அவள் புறம் நகர்த்தி, “டேஸ்ட் பாரு. பார்த்துட்டு தா”, என்றான் ஒரு அரைப் புன்னகையோடு.
முகம் மலர்ந்தாள் கீர்த்தி. “எதுவும் மறக்கலையா?”
“நீ மறந்தியா?”
பதிலே சொல்லாது ஒரு வாய் கடித்து பின் அவனிடம் தந்தாள். காண்டீனில் முதல் முறை காதலை உணர்ந்து, மொச்சை காரக்குழம்பு சாதம் உண்ண அமர்ந்த போது முதலில் ஒரு ஸ்பூன் உணவை அவளிடம் தந்தவன், அடுத்த வாய் உண்ண ஆரம்பிக்க, பாதி சாப்பாட்டில் வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து ஸ்பூனைப் பறித்து தான் உண்டாள், வெட்கமும் பூரிப்புமாக. பின்பு உணவை பகிர்ந்து உண்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது.
இப்படி மீண்டும் இருவரும் பகிர்ந்துண்ணும் வாய்ப்பு அமைந்ததில் அப்படி ஒரு சந்தோஷம். கண்ணில் லேசாய் நீர் திரள சிமிட்டினாள். இந்த முறை அவளே அவன் கைபிடித்து அழுத்த, ஜோ தந்த பதில் அழுத்தத்திலேயே அவன் உணர்வுகளை கடத்தியிருந்தான்.
“ஜோ… நாளைக்கு ஸ்கூல்ல எப்படி உன்னை பார்த்தும் பார்க்காம போகமுடியும்?”, புது கவலை வந்து ஒட்டிக்கொண்டது கீர்த்திக்கு. அதில் சிரித்தவன், “அது சரி… இப்படி கை கோர்த்துட்டு டூயட் பாடாத குறையா சுத்த முடியுமா? நீ பார்க்கவே பார்க்காத. லன்ச் டைம் நான் எப்பவும் போல வரேன். ஷீத்தல் இருப்பா, சோ அடக்கி வாசி. நான் மேடம் டெயிலர்கிட்ட நாம காலேஜ் லவ் பத்தி சொல்லி, இப்ப திரும்ப பார்த்ததும் பத்திக்கிச்சு. இவளைத்தான் கல்யாணம் செய்யப் போறேன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து வைக்கறேன்”, என்றதில், “ச்சைய்… இப்படியா சொல்லுவ”, என்று சிணுங்கி மணிக்கட்டில் லேசாய் தட்டினாள்.
பேச்சு அப்படி சுற்றி வருகையில், “இப்படியெல்லாம் கேம் ஆட எங்க கத்துகிட்ட ஜோ? எனக்குத் தெரிஞ்சு, மத்தவங்க உணர்வுகளோட விளையாடறது எல்லாம் உனக்கு பழக்கமே கிடையாதே? நீ ஏன் செய்தன்னு ஒரு அளவு தெரிஞ்சாலும், இப்படி கூட உன்னால யோசிக்க முடியுமான்னு கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன்”, அவனிடம் கேட்பதா வேண்டாமா என்று நினைத்திருந்தவள், கேட்டேவிட்டாள்.
சற்று சங்கடமாக புன்னகைத்தான் ஜோ. உதடுகளை அழுத்தி, மோவாயைத் தேய்த்தவன் ஒரு பெருமூச்சுடன், “இதுவும் கொஞ்சம் பொறுத்து பேசலாம்னு நினைச்சேன். சரி… சொல்லிடறேன். அன்னிக்கு ஷீத்தலுக்கு என்னை ஜோடி சேர்த்தப்போ அப்படி ஒரு கோவம் எனக்கு. வீட்டுக்குப் போனதும் யோசிக்கும்போது, நீ அதுக்கு முன்னாடி பேசினதெல்லாம் யோசிச்சேன். அந்த மாதிரி ஒரு கோணத்துல நான் யோசிக்கவே இல்லை. அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. எனக்கு என்னதான் உன் மேல காதல் இருந்தாலும், இந்த அனுபவத்தால வந்த தாக்கம் உனக்கு எப்படியான மாற்றத்தை தந்திருக்கும்னு முழுசா புரிஞ்சுக்க முடியலை. என் ஃப்ரெண்டோட புருஷன் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவர் கிட்ட பேசினேன்.”
கண்கள் விரிய அவனை லேசான திகைப்போடு பார்த்தாள். ”எந்த ஃப்ரெண்டு?”
“ம்ப்ச்… யூ.ஜி ஃப்ரெண்டுமா, அவளுக்கு நம்ம லவ் பத்தியே தெரியாது. இது அவ ஹஸ்பெண்ட் சந்திரன் கிட்ட தனியாதான் பேசினேன். அவர் சொல்ல மாட்டார். சொல்லக் கூடாதுன்னு சொல்லித்தான் பேசினேன்.”
இரு கைகளையும் மேசையில் வைத்தபடி முகத்தை தாங்கியிருந்தாள். “என்ன சொன்னார்?”
“குடும்ப வன்முறையில சிக்கி பலதரம் இந்தக் கொடுமையை அனுபவிச்சவங்க கூட முயற்சி பண்ணி இதுலர்ந்து வெளிய வந்து நல்ல வாழ்க்கை வாழறாங்க. முயற்சி செய்தா கண்டிப்பா கடந்து வரலாம். ஏற்கனவே சுய முயற்சியில மேல படிச்சு, தனியா வந்து வாழறாங்க. இது எல்லாமே தன்னம்பிக்கையை மீட்டு குடுத்திருக்கும். செல்ஃப் டிஃபென்ஸ் கிளாஸ் போறதெல்லாம் பாசிடிவ் ஸ்டெப்புன்னு நல்லதாதான் சொன்னார் கீத்துமா. நீயே பாதி கிணறு தாண்டிட்டடா”, பெருமையாக சொன்னான்.
உதட்டை சுழித்தவள், “இந்த நேரத்துல தள்ளிவிட்டா கிணத்துக்குள்ளதான் விழுவேன்? என்ன தைரியத்துல இப்படி என்னோட விளையாடின?”
“சும்மா சும்மா விளையாடினதா சொல்லாத கீர்த்தி. முடிவு நீ எடுக்கணும்னு சொல்லியிருந்த. நான் பேசினாலும் உனக்கு நம்பிக்கை வராது. அவர்கிட்ட கலந்து பேசித்தான் ஒவ்வொரு ஸ்டெப்பும் நடந்தது. உன் ரியாக்ஷன், நீ பேசின வார்த்தைகள்னு அவர்கிட்ட சொல்லி அட்வைஸ் கேட்டுகிட்டேன். உன்னை எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் தள்ளிடக் கூடாதுன்னு எவ்வளவு பயந்தேன்னு எனக்குத்தான் தெரியும். இந்த சில வாரம் நரகமா இருந்தது.”, அவன் முகத்தில் தோன்றிய உணர்வுகள், கண்களின் வலி என்று பார்த்திருந்தவள் மனம் நெகிழ்ந்தது.
இருந்தும் அதை வெளிக்காட்டாது அவனைப் பார்த்து லேசாய் முறைத்தவள், “இது வரைக்கும் அவர் கிட்ட கேட்டு கேட்டு செய்த, சரி. இப்ப அடுத்து எப்படி? லவ் பண்றதுக்கும் அவர்தான் அட்வைசரா? நீயா ஒரு விஷயம் பண்றியா இல்லை அவர் சொன்னதால செய்யறியா, என்னோட ரியாக்ஷன் எல்லாம் பார்த்துட்டு அவர்கிட்ட போய் சொல்லுவியா? அப்போ நான் பார்த்து பார்த்து பேசணுமா? எனக்கு புரியலையே?”
அவள் கேள்விகளில் அதிர்ந்து முழித்தது ஜோசஃப்தான். உண்மைக்கும் அவன் இதெல்லாம் யோசிக்கவே இல்லை. அவள் தன்னிடம் வந்துவிடவேண்டும் என்பது மட்டுமே இதுவரை குறிக்கோளாக இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்திருந்தான்.