அவளை ஊடுருவிப் பார்த்தவன், “நீதான் உனக்கு தகுதி இல்லை. உனக்கு நான் வேணாம்னு சொன்ன”, என்று சொல்லவும், அவன் மார்பில் இரண்டு கைகளாலும் அடித்தவள், “சொன்னா?… சொன்னா?… கேட்டுட்டு விட்டுருவியா? இப்ப சொல்றேன். உனக்கு பொண்டாட்டின்னா அது நான் மட்டும்தான். அரை போதையாகியாவது உன் கூட குடும்பம் நடத்தறேன்.  உனக்கு புள்ளை வேணுமா, பெத்து தரேன். அதுக்கு நான்  நல்ல அம்மாவா இருக்கேனோ இல்லையோ, நீ நல்ல அப்பாவா இருப்ப. உன் வாழ்க்கையில் வேற எவளும் வரக்கூடாது. வர விடமாட்டேன். புரிஞ்சுதா….” மூச்சு வாங்க, அவனை உலுக்கினாள். “புரிஞ்சுதா?”, என்று மீண்டும் கத்த 

கண்கள் கலங்க, ஒரு புன்னகையோடு  அவன் சட்டையை பிடித்திருப்பவளின் கைகளைப் பிடித்தவன், “எனக்கு புரிஞ்சுது. ஆனா உனக்கு புரியுதா கீர்த்தி? இப்ப சொன்னதுதான் வாழ்க்கைக்கும். திரும்ப யாருக்காகவும், எந்த காரணத்துக்காகவும் மாறக்கூடாது… மாற விடமாட்டேன். நீதான் முடிவு எடுக்கணும்னு  சொன்ன. நான் தள்ளி நின்னேன். இப்ப முடிவு எடுத்துட்ட. தட்ஸ் இட். இனியொரு முறை எனக்காகவும் சேர்த்து நீ வேற மாதிரி முடிவெடுத்தா, வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டேன். கையை காலை கட்டி தூக்கிட்டு போயிடுவேன்”, அவன் மிரட்டலில் விழி விரித்து நின்றாள். 

“என்ன?”, ஜோ எகிரவும், கீர்த்தியின் தலை தன்னால் சம்மதம் என்று ஆடியது. 

சட்டென்று அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தவன், “கிளம்பு, உன்னை வீட்டுல விட்டுட்டு நான் வரேன்”, விலகி இரண்டு எட்டுக்கள் பின்னே வைத்தான். 

சற்று கவலையாக, “ஷீத்து… “, என்று சொல்ல, “நான் பேசிக்கறேன். நீ கிளம்பு” என்று மேலே யோசிக்க விடாது, அழைத்து வந்தான். 

சற்று நேரம் அமைதியாக அவனுடன் நடந்து வந்தவள், “நான் ரொம்ப செல்ஃபிஷ் ஜோ. பாவம் ஷீத்து… உன்னை..”, என்று ஆரம்பிக்க, 

“அவளுக்கு நம்ம கதை தெரியும். ஒன்னும் கஷ்டப்பட மாட்டா”, என்று நிறுத்தினான். 

“என்ன? அவகிட்ட என்னைப்பத்தி…”, என்று அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள். 

“ஏய்… காலேஜ் கதை மட்டும்தான் தெரியும். வேற மதம்னு உங்க வீட்ல ஒத்துக்கலைன்னு பிரிஞ்சிட்டன்னு சொல்லி வெச்சிருக்கேன். உன் பர்சன்ல் அப்படி நான் போய் சொல்லுவேனா?”, என்று மீண்டும் முறைக்க,  

இரண்டு காதுகளையும் பிடித்தவள், “சாரி…சாரி… அது ஒரு இன்ஸ்டன்ட் ரியாக்ஷன்ல கேட்டுட்டேன்.”, மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். 

“கீர்த்தி… இராத்திரி உன் மைன்ட் கொஞ்சம் அமைதியா வை. காலையில் ஒன்பது மணி ஷட்டில் பஸ்ல போலாம். நாள் பூரா பேசலாம். புரியுதா? உனக்கு என்ன டவுட்னாலும் எங்கிட்ட மட்டும்தான் கேட்கணும். எதுக்கும் ஷீத்தல் காரணமில்லை. எல்லாம் நாந்தான். ஹெல்ப் மட்டும்தான் அவ செய்தா. கீர்த்தியின் ப்ளாக் வாசலில் விட்டவன், “என்ன ஆனாலும் நீ மட்டும்தான் எனக்கு. அது மாறாது. அதை மட்டும் யோசி. அண்ட் எனக்கு அரை போதை பொண்டாட்டி  வேணாம். முழுசா என் மேல காதலா இருக்கறவ தான் வேணும். அதுக்கானதை செய்வோம். சரியா? இப்ப போ”, என்று கட்டளையிட்டு இருட்டில் மறைந்து போனான். 

“மைண்ட் பூரா பூரான் ஓடுது, இதுல மைண்ட் பூரா அமைதியா வையாம்?”, அதிகாலை மூன்று மணி அளவில் படுக்கையில் அமர்ந்து ஜோவை தாளித்துக்கொண்டிருந்தாள் கீர்த்தி. 

“தான் இப்படி சுய நலமாகிவிட்டோமா என்ற அதிர்வு ஒரு புறம். எனக்கு வேண்டியதை நானே செய்யலைன்னா வேற யார் வந்து செய்வா? வேற ஒருத்தனோடவும் கண்டிப்பா இருக்க முடியாது”, என்று நினைத்த நேரம், விளையாட்டு பொருட்கள் போட்டு வைத்திருக்கும் அறைக்கு அவள் சென்றதும், ஜோ வந்து கதவை சாற்றிய போதும் அவள் அவனோடு தனியறையில் இருப்பது கருத்தில் பதியவே இல்லை. இதில் அவனோடு சண்டையிட்டு அருகே சென்று அடித்து, சட்டையை பிடித்தும் உடல் அதிரவே இல்லை. அவளை பொருத்தமட்டில் இது மிகப் பெரிய விஷயம். 

இவள் வேதியல் ஆய்வுக்கூடத்தில் ஒரு முறை தனித்திருக்க, ஷர்மா ஏதோ கேட்க வேண்டி உள்ளே வந்தவர், கதவை சாற்றிவிட உள்ளம் அதிர எழுந்துவிட்டாள். அவர் பேசியது எதுவும் செவியில் விழவில்லை. தள்ளிச் சென்று கதவை திறந்து வாயிலில் நின்ற பின்னர்தான் சற்று நிதானமே வந்தது. வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தவரை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பினாள். அதிலிருந்து அப்படி ஒரு சூழலில் இருக்காதபடி பார்த்துக்கொண்டாள். அப்படியிருக்க, அவனோடு உச்ச கட்ட சண்டையிலும் பதற்றம் தோன்றவில்லை. 

அவன் கடைசியாக மிரட்டும்போது, அதுவும் கையை காலை கட்டி தூக்கிச் செல்வேன் என்று மிரட்டும் போது கூட உடல் அதிரவில்லை. அவளாக ஒரு ஆடவனை மார்பில் அடிப்பாள், சட்டையை பிடித்து சண்டைக்கு நிற்பாள் என்பது கூட இன்னும் திகைப்பாகத்தான் இருந்தது. 

என்னதான் தற்காப்பு கலை என்றாலும், பெண்கள் தான் பயிற்றுவிப்பார்கள், அதற்காக நெருங்குவது கூட முதலில் சங்கடமாக இருந்தது. அவள் பயிற்சியாளர் டீனா இரண்டாவது வகுப்பிலேயே சந்தேகப்பட்டு கேட்டுவிட்டார். அதுவும், “நீ விவரம் சொல்ல வேணாம் கீர்த்தி. அப்படின்னா, நான் கொஞ்சம் சுதாரிப்பா இருப்பேன். உனக்கு அப்படி ஒரு நிலைமையில என்ன செய்யணும்னு தனியா ட்ரெயின் பண்ணலாம். உன் விருப்பம். இந்த காரணத்துக்காக எங்கிட்ட ட்ரெயின் பண்ற முதல் பெண் இல்லை நீ.”, என்ற பின்னரே அவரிடம் தேவையான சிலவற்றை மட்டும் பகிர்ந்திருந்தாள். 

“அரை போதை பொண்டாட்டி வேணாமாமே அவனுக்கு. அப்போ முழு நினைவோட என்னால அவன் கூட இருக்க முடியுமா? “ நகத்தை கடித்து துப்பினாள். “முடியணும். அவனோட.. அவனுக்காக இது கூட பண்ண முடியாதா? ஊர் உலகத்துல இதை கடந்து வந்தவங்க வாழலையா? அவனை விட அனுசரணையான ஒருத்தனை பார்க்கமுடியுமா? அவங்கிட்ட குடுத்த மனசு அது அவனுக்காக மட்டும்தான இருக்கு. அது சுத்தமாதான இருக்கு?., எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.  

மீண்டும் ஜோ பேசியதை அசை போட்டது மனது. “எதுக்கும் ஷீத்தல் காரணமில்லை, நான் தான்னு சொன்னானே, அப்போ வேணும்னே என் பொறாமையை கிளறிவிடத்தான் இரண்டு பேரும் நெருக்கமா இருக்க மாதிரி நடிச்சாங்களா?”, யோசனையாய் படுக்கையில் அமர்ந்தாள். அவர்களைப் பார்த்து தான் பட்ட வேதனை, விடவும் முடியாது, விலக வேண்டும் என்று நினைத்து கண்ணீர் சிந்திய இரவுகள் நினைவில் வந்தது. ராஸ்கல் என்னை… என்னை ப்ளான் பண்ணி, ஃபீலிங்க்ஸோட விளையாடிருக்கான். தலையை பிடித்துக்கொண்டு  கட்டிலின் ஒரு புறம் சாய்ந்த படி விட்டத்தைப் பார்த்தாள். கோலாபூரி செருப்பிலிருந்து, மதிய உணவில் அவர்கள் சேர்ந்து நடத்திய நாடகம், ஒரே மாதிரி உடை, வேண்டுமென்றே அவள் ஊற்றும் ஆப்பத்தை நிராகரித்தது என்று வரிசையாக நினைவுகள் வலம் வர, அவளது கோபத்தின் அளவும் அதிகரித்தது. 

அவளுக்குத் தெரிந்த ஜோ இது மாதிரியெல்லாம் செய்பவன் இல்லை. அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு தருபவன். எதையும் மறைத்து வைத்து பேசுபவன் இல்லை. ஏன் ? ஏன் இப்படி செய்தான்?  விலகுவது போல விலகி..எதற்கு இப்படி ஒரு தகிடுதத்தம்? இதில் ஜிம்மில் என்ன சொன்னான்? கல்யாண வாழ்க்கையை வாழ முடியாதுன்னு புரிஞ்சு பிரிஞ்சு போறானா?” 

“ம…” கெட்ட வார்த்தையொன்று வந்து விழுந்தது. கூடவே அவன் மிரட்டியதும் ஞாபகத்தில் வந்து சென்றது. “என்னை வேணாம்னு  வேற ஒருத்துனுக்கு கழுத்தை நீட்டினா…அது என்னது …ம்ம்… சங்கறுத்துடுவானாமே..”, அவளை மீறி  ஒரு புன்னகை வந்து உதட்டில் ஒட்டிக்கொண்டது. 

“ஆக ரொம்பத் தெளிவா என்னை கார்னர் பண்ணி கவுத்திருக்கான்”, விளங்கியதும், என்ன உணர்கிறாள் என்று புரியவில்லை. அவள் மனதை உணர வைக்கவே இத்தனை போராட்டம் என்று லேசாக பிடிபட்டது. அவன் தொண்டை கிழிய உங்கிட்ட பக்கம் பக்கமா பேசியிருந்தாலும் நீ புரிஞ்சுகிட்டு இருப்பியா? அவனுக்கு நீ வேணாம்னு உன் பிடியிலேயேதான் நின்னுருப்ப. ஒத்துக்கோ. நியாய மனது வாதிட்டது. 

பொட்டில் அடித்த மாதிரி புரிய வைத்தது கடந்த சில வாரங்களாய் அவன் நடத்தியிருந்த இந்த நாடகம்தான்.  

 “ஒரு வேளை…. நிஜமாக தன்னால் அவனுடன் ஒரு வாழ்க்கை வாழ முடியாது போனால்?”, மனம் வேதாளமாக மாற கீர்த்தியின் உடல் லேசாக தூக்கி வாரிப்போட்டது. 

“முடியணும் கீர்த்தி. உனக்கானது வேணும்னா நீதான் போராடணும். எதுவும் ஈசியா வந்துடாது. தனியா இப்படி துபாய் வந்து உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க முடியும்னு அப்போ தோணுச்சா. திருநெல்வேலியில எத்தனை முறை காலிங் பெல் சத்தம் கேட்டு மனசு அடிச்சிக்கும்?” அவள் தங்கியிருந்த  பெண்கள் விடுதி ஒரு வீடு. கதவு திறக்க அடிக்கும் மணி சோதனையாக ப்ரீத்தியின் வீட்டு மணி சத்தம் போலவே இருக்கும்.  

ஒரு முறையும் இவள் சென்று கதவை திறந்தது இல்லை. மணி சத்தத்திற்கே அள்ளுவிடும், இதில் மற்றது எங்கே யோசிக்க. அந்த சத்தம் சற்று பழகி உடல் தூக்கிப்போடுவது நிற்கவே ஒரு வருடம் போல் ஆனது. 

“கடந்து வரணும் வரணும்னு நினைச்சா மட்டும் போறாது. இது… இந்த முயற்சி உனக்கு அடுத்த படிக்கல். தொலைஞ்சு போன உன் வாழ்க்கை மீட்டுக்க ஒரு வாய்ப்பு”, என்று அவளுக்கு அவளே நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டாள். 

சொல்லுக்கு எளிதாக இருப்பது, செயலாக வரும்போது இருக்கப்போகும் கடினம் உணர்ந்திருந்தாளா? ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்க, கடந்து வர கீர்த்தியிடம் தேவையான நெஞ்சுரம் இருக்கிறதா? ஜோவிடம் அதற்கான பக்குவம் இருக்கிறதா? இதெல்லாம் யோசித்தார்களா என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்குமா?