ஷீத்தலிடம் சவடாலாக பேசிவிட்டாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கீர்த்தியை நெருக்குகிறோம் என்ற நினைப்பே கசந்தது. ஆனாலும் புரையோடிப் போன புண்ணை அறுத்துத்தான் சரி செய்ய வேண்டுமெனில் வலியை பொறுத்துத்தான் ஆக வேண்டும்.
நினைவு அவள் இரண்டாவது முறை சந்தித்துப் பேசியபின் நடந்தவற்றை அசை போட்டது. கீர்த்தியின் பேச்சு அவனைக் கூறு போட்டது நிஜம். இதில் ஷீத்தலை அவனுக்கு ஜோடியாக பேசியதில் கொதித்துப்போனவன் இருந்தால் எதுவும் பேசிவிடப்போகிறோம் என்று வெளியேறிவிட்டான். கால் போன போக்கில் அருகிலிருந்த மாலில் சுற்றியவன், வீடு வந்து சேர்ந்த பின்பும் மீளவில்லை.
அவன் கல்லூரித்தோழி வேணியின் கணவன் நினைவு வந்தது. ஜெயசந்திரன் சைக்காலஜிஸ்ட். கல்யாணத்துக்கு சென்ற போது அறிமுகம் என்றாலும், சில வருடம் கழித்து, அவர்கள் கன்யாகுமரிக்கு குழந்தையோடு சுற்றுலா வந்தாபோதுதான் நல்ல பரிச்சயம். அவன் தான் மூன்று நாட்களும் அவர்களோடு சுற்றினான். கலகலப்பான மனிதர். அவர்கள் திரும்பும்போது மச்சான் மாப்ளே என்ற அளவிற்கு சகஜமாகியிருந்தான்.
“அதுக்கெல்லாம் தைரியமும் இல்லை அதிர்ஷ்டமும் இல்லை மாப்ளே. கரெக்ட் பண்ண பொண்ணே நான் உனக்கு வேற பொண்ணு செட் பண்ணித் தரேன்னு கடுப்பேத்துறா. இதுல நீங்க வேற!”, நொந்து கொண்டான் ஜோ.
அவன் குரலிலேயே இது சீரியஸ் என்று உணர்ந்தவர், ““என்ன ஜோசஃப்? “ என்று வினவினார்.
“ஒரு சைக்காலஜிஸ்ட்டா அட்வைஸ் வேணும் சந்திரன். தனியா உங்ககிட்ட மட்டும் பேசணும். வேணிக்கு தெரிய வேணாம்”, சற்றே தயங்கியபடி கூறினான்.
“இரு..”, என்ற சந்திரன், சில நொடிகளுக்குப் பின், “ம்ம்.. என் ஆஃபீஸ் ரூம்ல இருக்கேன். டாக்டரா எங்கிட்ட பேசற எதுவும் உன்னை என்னை தாண்டி போகாது. சொல்லு என்ன ஆச்சு?”
அடுத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஜோ மட்டுமே பேசினான். வேணி இளங்கலை தோழி என்பதால் அவளுக்கு கீர்த்தியை தெரியாது. அவன் காதலே தெரியாது. கீர்த்திக்கு நடந்தது, அவளை தேடி அவன் இங்கு வந்தது, அவளது தற்போதைய மன நிலை என்று எல்லாவற்றையும் விவரித்தான்.
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சந்திரன்.
“உனக்கு என்ன தோணுது ஜோசஃப்?”
“அது தெரியாமத்தான மாப்ளே உங்களை கூப்பிட்டேன்?”
“உங்கிட்டதான் இருக்கு பதில். அது வெளிய வரதுக்கு வேணா நான் உதவ முடியும். ஃபர்ஸ்ட் கீர்த்திக்கு இப்படி ஆனதால அவளை எப்படி பார்க்கற? “
“அவளுக்கு இப்படி ஆனதுல ரொம்பவே வருத்தம் இருக்கு. கஷ்டமாவும் இருக்கு. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாததுல ஏமாற்றம் கோவம் இருக்கு. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தவிப்பாவும் இருக்கு”, தோன்றியதை மறைக்காமல் கூறினான்.
“சரி. அவளை கல்யாணம் செய்துக்கணும்னு எண்ணம் இன்னும் இருக்கா? அண்ட் நீ இல்லைன்னும் சொல்லலாம். இதுல தப்பான பதில்னு எதுவும் கிடையாது. அதுக்காக நான் உன்னை ஜட்ஜ் பண்ணவும் மாட்டேன். “
“கண்டிப்பா கல்யாணம் செய்துக்கணும்னுதான் தோணுது. அவளுக்கு நடந்த எல்லா கஷ்டத்தையும் மறக்கடிக்கற மாதிரியான ஒரு வாழ்க்கை அவளோட வாழணும்னுதான் ஆசை படறேன்”, உணர்ந்து கூறினான் ஜோ.
“வெல், மறக்காது, ஆனா கடந்து வரலாம். அந்த வித்தியாசம் புரிஞ்சுக்கோ. அவளுக்கு நீ வாழ்க்கை தர விரும்பற மாதிரி எதுவும் சொல்லியிருந்தா, வேணாம்னு சொல்லியிருப்பேன். ஆனா அவளோட சேர்ந்து வாழணும்னு நீ சொன்னது நல்ல தொடக்கம்.”
“…”
“இரண்டு நாள் நல்லா யோசி ஜோசஃப். கீர்த்தியோட தாம்பத்தியம், குழந்தைகள் எல்லாமே உனக்கு சவாலா இருக்கும். அதுக்கெல்லாம் உனக்கு பொறுமையும், பக்குவமும் இருக்கான்னு நல்லா யோசி. உங்க இரண்டு பேரோட தனிப்பட்ட நேரத்துல அவன் நினைப்பும் சில நேரம் நுழையும். அதை வர விடாம இருக்க, அவளை டிரிக்கர் பண்ற எதுவும் நீ பண்ணாம இருக்க கவனமா இருக்கணும். அந்த நேர எரிச்சல்ல வர வார்த்தையோ, செய்கையோ, ஏன் பார்வையோ கூட உங்க ரிலேஷன்ஷிப்பை உடைக்கலாம்”, சந்திரன் அடுக்கிக்கொண்டே போக,
“என்ன சந்திரன் ரொம்ப பயமுறுத்தறீங்க? “
“இதெல்லாம் நீ யோசி மச்சான். இத்தனைக்கும் அவ வொர்த்துன்னு தோணுச்சுன்னா, மேல பேசலாம்.”
“கண்டிப்பா வொர்த்துதான்”, உடனே பதில் வந்தது.
“ஹஹாஹா… ப்ராக்டிகலா யோசி. முக்கியமா கீர்த்தி சொன்ன, நீ காதலிச்ச கீத்து நான் இல்லைங்கறதை நல்லா யோசி. இந்த அனுபவம் அவங்களை கண்டிப்பா மாத்தியிருக்கும். சோ, நல்லா யோசிச்சிட்டு எனக்கு கூப்பிடு.
“சரி. ஆனா அவ சரியாகிடுவால்ல? “
“ம்ம்…சரியாகணும்னு அவங்களுக்கும் தோணனும். இதுல பெரும் பங்கு முயற்சி கீர்த்திகிட்டருந்துதான் வரணும். ஓரளவு தன் பிரச்சனைங்களை புரிஞ்சி வெச்சிருக்காங்க. பட் அதெல்லாம் அடுத்தது. நீ முதல்ல யோசி. இல்ல ஒரு ஃப்ரெண்டா மட்டும் இருக்கேன்னு சொன்னா, அப்பவும் சரி பண்ண ஹெல்ப் பண்ணலாம், அவங்க விரும்பினா. ஓகே?”
ஜெயசந்திரன் தொடர்பை துண்டித்த பின்பும் யோசனையாகவே அமர்ந்திருந்தான்.
கீர்த்தி கண்டிப்பாக தன் வாழ்வில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவள் தன்னை நிராகரித்தால் கூட பரவாயில்லை ஆனால் அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் தேங்கிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான். மறு நாளே சந்திரனை அழைத்துவிட்டான்.
அவன் கூறியவற்றைக் கேட்டவர், “சரி. கீர்த்திகிட்ட நான் நேரா பேசலை. நீ சொல்றது வெச்சித்தான் நான் புரிஞ்சிக்கணும். அதுக்கு அவங்க பேசும் போது உபயோகிக்கற வார்த்தைகள், அவங்க முக பாவங்கள்னு நோட் பண்ணி எனக்கு சொல்லணும்”, என்று சொல்லியவர், முடிந்த வரை அவள் பேசிய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி எழுதி அனுப்பச் சொன்னார்.
அதை செய்து முடித்த பின்னர் அவனை அழைத்து, “அனேகமா ரேப் விக்டிம்ஸ் எல்லாருக்கும்மே கீர்த்தி சொன்ன, சுய மரியாதை இழப்பு, நம்பிக்கை இழப்புங்கறது ஏற்படறதுதான். நடந்த சம்பவத்துக்கு ஏதோ ஒரு வகையில் தான் காரணமா இருந்துட்டோம்னு தோணுறதும் இயற்கை. தனக்கு மட்டும் இப்படி ஆனதுக்கு சுய பச்சாதாபம், கழிவிரக்கம், கோவம் எல்லாமே வரும். சம்பவம் நடந்த கொஞ்ச நாள்லையே அவங்க சைக்காலஜிஸ்ட் கிட்ட போனது நல்லதுதான். ஓரளவுக்கு தன் தப்புங்கற எண்ணம் விலகியிருக்கு. கடந்து வரணும்ங்கற எண்ணமும் இருக்கு. செல்ஃப் டிஃபென்ஸ் கிளாஸ் போறாங்கன்றதும் ஒரு பாசிடிவ். மே பீ தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச்சிருந்தா, அல்லது குறைஞ்ச பட்சம் அவங்க விருப்பப்படி குழந்தையை கலைச்சிருந்தா சீக்கிரமே இதை கடந்து வந்திருக்கலாம்.”
“இப்பவும் லேட்டாகிடலை இல்லையா சந்திரன்? பி.எட் முடிச்சு, தனியா இருந்து, தைரியமா வெளினாட்டுலையும் வேலை வாங்கிட்டு வந்திருக்கா. “, ஜோசஃபின் குரலில் இருந்த பெருமையை கண்ட சந்திரன் முகத்திலும் புன்னகை.
“ம்ம்.. அவங்களே சுய முயற்சியில் பாதி வழி வந்துட்டாங்க. நீ சொன்ன விஷயமெல்லாம் அவங்க சுய மரியாதையை, தன் நம்பிக்கையை ஓரளவு மீட்டு குடுத்திருக்கும். அவங்களுக்கு நடந்ததெல்லாம் அவங்களாவே உங்கிட்ட ஷேர் பண்ணியிருக்காங்க. உன் மேலான ட்ரஸ்ட் இன்னும் இருக்கு. சோ மனுஷங்க எல்லார் மேலையும் நம்பிக்கை போகலை.”
“ஆமா சந்திரன். ஆனா அவள் நிலைமை புரிஞ்சு நான் வேற வாழ்க்கை அமைச்சுக்கணும்னுதான் எல்லாம் சொன்னதா சொன்னா”, என்று சற்று கவலையான குரலில் கூறினான்.
“நடந்த விஷயத்தை இத்தனை விலாவாரியா சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே மச்சான். ரொம்ப நாளா மனசில இருக்கறதை கொட்டணும்னு வெச்சிருப்பாங்க போல. உன் மேல இருந்த நம்பிக்கை ப்ளஸ் உன்னை ப்ரேக்-அப் பண்ணதுல இருந்த குற்ற உணர்ச்சி பேச வெச்சிருக்கு. அப்படி கொட்டினதும் நல்லது.”
“ஆனா அவ எனக்கு ஏத்தவ இல்லைங்கற நினைப்பை எப்படி மாத்த சந்திரன்?”
“கொஞ்சம் பொறுமையாத்தான். முக்கியமா அவங்க சொன்ன விஷயம் ‘என் முடிவை நானே எடுக்கணும்’. அதனால அவங்களை உணர வைக்கணும். நீ தான் வேணுங்கற முடிவு அவங்கதான் எடுக்கணும். அது வரை நீ தள்ளித்தான் இருக்கணும்.”
“அப்படி இருந்தா அவளே அந்த ஷீத்தலை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுவா!”
“அதனால நீ என்ன பண்ற அவங்க சொன்னபடி ஷீத்தலை நிஜமாவே கன்சிடர் பண்ற மாதிரி நம்ப வைக்கணும். இதுல ஷீத்தலையும் கூட்டு சேர்த்தா வேலை இன்னும் சுலபம். முடியுமா?”
இப்படித்தான் ஷீத்தலை அழைத்து உதவி வேண்டியிருந்தான். சந்திரனின் ஆலோசனையின் பேரில் செவ்வனே கீர்த்தியின் பொறாமையை தூண்டி விடும் வேலை நடந்து கொண்டிருந்தது. பொறாமையில் கோபப்படுவதும், பின்பு தனக்கு உரிமையிலை என்று விட்டுக்கொடுத்து தள்ளி நிற்பதும், வருந்துவதுமாக அவளை அலை கழிப்பது அறவே பிடிக்கவில்லை எனினும் சந்திரன் விம் போட்டு விளக்கியதில் அதன் தேவை புரிந்தது.
அவனால் அவள் படும் வேதனையால் ஜோ அடைந்த துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் எடுத்த காரியத்திலிருந்து பின் வாங்கவில்லை. அவர்கள் எதி்ர்பார்த்தபடி அவனை உரிமை கொண்டாடுவாளா இல்லை விட்டுக் கொடுத்து விலகிடுவாளா என்பதுதான் அவனுக்கு பிடிபடாதிருந்தது.
ஜிம்மில் அவள் வந்து சண்டையிட்டு சென்றதும்தான் சந்திரனுக்கு நம்பிக்கையே வந்தது. அதே சூட்டோடு சூடாக மேலும் வெறுப்பேற்ற எதாவது செய்யும் படி கூறவும் நல்வாய்ப்பாக ஜென்சி சொன்ன மேடமின் பிறந்த நாள் கொண்டாட்டம் வாய்த்தது.
பொறாமை என்பது இரு முனை கத்தி. காதலை கூறு போட்டு வெறுப்பை கிளறிவிடுமா அல்லது காதலை உணர்த்தி அதற்காக போராட வைக்குமா?