திருச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்கு பணி மாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விட்டார் கணேசன். பாரதியின் அலுவலகம், ஷஷ்டியின் பள்ளி இரண்டும் இருந்த ஊரில் தனியாக வீடு எடுத்துக் கொண்டனர். கணேசன் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து வங்கிக்கு செல்ல வேண்டும்.
பாரதியின் அப்பா உயிருடன் இருந்த போதே தன் சொத்துக்களை தனது இரண்டு மகள்களுக்கும் பிரித்து எழுதி விட்டார். கோசலை பாரதியின் பொறுப்பில் இருக்கட்டும், வீட்டையும் அவளே எடுத்துக் கொள்ளட்டும் என அவர் சொன்ன போது, அதற்கு ஈடாக வேறொரு சொத்தை பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்து விட்டார் பாரதியின் அக்கா.
எதற்கு வாடகை வீட்டில் இருக்க வேண்டும், மாடியில் வாடகைக்கு விடப் பட்டிருக்கும் போர்ஷனை காலி செய்ய சொல்லி விட்டு அங்கேயே வசிக்கலாம் என யோசனை சொன்னாள் பாரதி.
அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து விட்டார் கணேசன்.
ஊரை, அம்மாவை, அண்ணன் மகளை விட்டு வரும் கணவருக்காக பாரதியும் இறங்கி வர வேண்டியதாகி விட்டது.
அதில் கோசலை, சொர்ணம் இருவருக்கும் மிகுந்த அதிருப்தி. “ரெண்டு பேரும் அவங்க விஷயங்கள்ல தலையிடுறத இத்தோட நிறுத்திக்கோங்க, சொல்லிட்டேன்!” என அவர்களை மிரட்டியே வைத்திருந்தான் ரவி.
கணேசன், பாரதி, ஷஷ்டி மூவரும் ஒரு குடும்பமாக குடியேறி விடவும் பாட்டிக்கும் தண்மதிக்கும் அளவில்லாத மகிழ்ச்சி.
‘மதிக்கும் அம்மாவுக்கும் என்ன உதவியென்றாலும் நான் செய்து தருவேன்’ என பாலைய்யா உறுதி கொடுத்திருந்தார். ரவி அங்கேதான் இருக்கிறான், சஞ்சனாவின் குடும்பமும் தண்மதியின் மீது அன்பு கொண்டவர்கள், ஆகவே ஓரளவு நிம்மதியாகவே தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கினார் கணேசன்.
ரவியும் தண்மதியும் பேசிக் கொள்வது இல்லை, அவள் படிப்பை பார்க்கிறாள், அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் தன் வேலையை பார்க்கிறான் அவன்.
பாட்டிக்கும் இப்போது நல்ல ஆசுவாசமான மன நிலை.
தண்மதியிடம் ரவியை பற்றி ஏதாவது கேட்டு பேசி கிண்டல் செய்வாள் சஞ்சனா. அவளோ ரவி பற்றி வாயே திறக்க மாட்டாள்.
“அவர் பார்வை வச்சு அப்பவே எனக்கு தெரியும், ஆனா நீதான் சைலன்ட்டா இருந்து என்னை ஏமாத்திட்ட, முடியாத கட்டத்துலதான் என்கிட்ட சொன்ன” என எப்போதாவது சொல்லிக் காண்பித்து கோவமும் படுவாள் சஞ்சனா. தோழியை புன்னகையாலேயே எதிர் கொண்டு சமாளித்து விடுவாள் தண்மதி.
“போடி!” என சஞ்சனாதான் அலுத்துக் கொள்ள வேண்டியதாகும்.
ரவி பணி புரியும் வங்கியில்தான் தண்மதிக்கும் கணக்கு இருக்கிறது. எப்போதாவது அவள் அங்கு செல்ல நேரிடும், பயந்து பயந்து அவனது அறைப் பக்கம் பார்ப்பவள் உடனே முகத்தை திருப்பி விடுவாள்.
அவனோ அவளை கண்டு கொண்டது போலவே இருக்காது.
படிக்கும் பெண்ணின் மனதை கெடுக்க கூடாது என்பது ஒன்று; சின்ன ஊர், சிறு விஷயம் கிடைத்தாலும் கற்பனை கலந்து கதை கட்டி பேசி விடுவார்கள், அவளின் பெயருக்கு எந்த கலங்கமும் வந்து விடக்கூடாது என்பது இன்னொன்று.
இப்படியே இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.
நன்றாக இருந்த பாட்டிக்கு ஒரு முறை நல்ல காய்ச்சல் வந்து விட்டு போனது, துவண்டு போனவர் குணமாக இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. அதிலிருந்து இப்போதே பேத்திக்கு திருமணம் நடக்காதா என கவலை பட ஆரம்பித்து விட்டார்.
ரவியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது தண்மதியை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
ரவிக்கும் தன் மனம் கொண்டவளை பார்க்க, பேச, பழக அலை அலையாக ஆசை எழுந்தது.
அப்போதுதான் கணேசன் தன் மனைவி மகளோடு ஊருக்கு வந்தார். சித்தி தன்னிடம் எப்படி நடந்து கொள்வாரோ என தண்மதிக்கு பயமாகத்தான் இருந்தது. பாட்டி கூட ஏதாவது என் பேத்தியை பேசட்டும் வைத்துக் கொள்கிறேன் என முறுக்கிக் கொண்டார்.
ஆனால் பாரதி, தண்மதியிடம் எந்த விதத்திலும் எதிர்மறையாக நடந்து கொள்ளவில்லை. அதற்காக அதீத பாசம் இருப்பது போல நடிக்கவும் இல்லை. அவளுக்கென இரண்டு செட் ஆடைகள் எடுத்து வந்திருந்தாள். தன் பெண் “அக்கா அக்கா…” என அவளுடன் பழகுவதை தடுக்கவில்லை. அண்ணன் மகளை டவுன் வரை அழைத்து சென்று வந்தார் கணேசன். அதையும் குறை கூறி சண்டை பிடிக்கவில்லை.
என்ன… மாமியாரிடம் மட்டும் இலகுவாக நடந்து கொள்ளவில்லை பாரதி. அதில் பரமேஸ்வரியும் நொடித்துக் கொண்டார்தான், ஆனால் பிரச்சனையாக்கவில்லை.
அந்த வீடுதான் பாரதிக்கு அத்தனை வசதியாக இல்லை, முன்பு கணவருடன் அவள் வாழ்ந்த வீட்டை விட மிகவும் சின்னது, அத்தனை நேர்த்தியாகவும் கட்டப் பட்டிருக்கவில்லை. எப்போதாவது வருவதுதானே என நினைத்து அனுசரித்து இருந்து கொண்டாள்.
ரவியை நாளைக்கு மதிய உணவுக்கு வருமாறு அழைத்தாள் பாரதி. மதியை நேரில் பார்க்கலாம் என தோன்றினாலும் அக்கா அங்கிருக்கும் போது தள்ளியிருப்பதே நல்லது என நினைத்து மறுத்து விட்டான்.
விடாத பாரதி, மகளை விட்டு கூப்பிட வைத்தாள், கணேசனும் பார்த்து நாளாகி விட்டது வாருங்கள் என்றார். அவனும் சரியென ஒத்துக் கொண்டு விட்டான்.
ரவி வரப் போகிறான் என அறிந்ததிலிருந்து தண்மதியை ஒருவித இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அடுத்த நாள் சமையலுக்கு என்னென்ன வாங்கி வர வேண்டும் என கணவனிடம் லிஸ்ட் போட்டு கொடுத்தாள் பாரதி.
வாங்கிப் பார்த்தவர், “என்ன பாரதி, வடை பாயாசம் செய்ய போறியா? நான் வெஜ் செய்யலாமே” எனக் கேட்டார்.
“ஹையோ அவன் சுத்த சைவம்ங்க” என பாரதி சொல்லவும், நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார் பாட்டி. பின்னே வாரத்தில் குறைந்தது மூன்று நாளாவது அசைவம் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறாளே அவரின் அருமை பேத்தி.
“அப்படியா?” எனக் கேட்ட கணேசனுக்கும் யோசனை ஓடியதுதான், ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ரவியின் தங்கை நவ்ரிதி தண்மதியை விட இரண்டு வயது பெரியவள், ஆகவே அவளுக்கு திருமணம் முடிந்த பின், நானே எங்கள் விஷயத்தை வீட்டில் சொல்கிறேன், அதுவரை நீங்களாக எதுவும் சொல்ல வேண்டாம் என முன்னரே கணேசனிடம் தெளிவாக சொல்லியிருந்தான் அவன்.
ஆகவே அவரும் மனைவியிடம் இது குறித்து எதுவுமே பேசியிருக்கவில்லை, பாட்டியும் அவனது பேச்சை கேட்டு அப்படியே நடந்து கொண்டிருந்தார்.
அடுத்த நாளில் ஆசை ஆசையாக தம்பிக்கு விருந்து சமைத்தாள் பாரதி.
நிறைய இனிப்புகள், பழங்கள் என வாங்கிக் கொண்டு பதினோரு மணிக்கெல்லாம் வந்து விட்டான் ரவி. முன்னரெல்லாம் மாமாவிடம் ஒட்டிக் கொண்டு சுற்றுவாள் ஷஷ்டி, இப்போது அப்பா இருக்கவும் மாமனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி, அப்பாவின் நிழல் போலவே கணேசன் செல்லுமிடங்கும் அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர் கணேசனும் ரவியும். அவன் அசைவம் சாப்பிட மாட்டான் என்பது முன்னரே தெரியாது என்பதை சொன்னார் கணேசன். அப்படியா என கேட்டு வேறு பேச்சை மாற்றி விட்டான் ரவி. அவரும் ஷஷ்டியுடன் கடைக்கு சென்று விட்டார்.
சற்று நேரம் தம்பியுடன் பேசியிருந்த பாரதியும் சமையலை பார்க்க சென்று விட்டாள். பாட்டி மருமகளிடமிருந்து தள்ளியிருந்தே, அவராக பார்த்து சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுத்தார்.
“நீ படி” என தண்மதியிடம் பாரதி சொல்லியிருக்க, அவளும் புத்தகத்தோடு பின் பக்கம் அமர்ந்து விட்டாள். ரவியின் வருகை குறு குறுவென மண்டைக்குள் ஓடாமல் இல்லை, “வாங்க மாமா” என அவனை அழைத்ததோடு சரி, அனைவரின் முன்னிலையிலும் அவனை சரியாக பார்த்திருக்க கூட இல்லை.
அவனுடைய இருப்பு அவளை எதிலும் கவனம் வைக்க விடாமல் அவஸ்தை கொள்ள வைத்தது.
அடுப்பில் வேலையாக இருந்த பாரதி, ரவிக்கு தேநீர் கொடுக்கும் படி தண்மதியை அனுப்பினாள்.