உள்ளிருந்து எட்டிப் பார்த்த கணேசன், “ம்மா, அவளை போட்டு படுத்தாம இரு. பத்து மணிக்கு மேலதான் வர்றாங்க, மெதுவா ரெடியாகட்டும்” என்றார்.
“உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இருடா, அலங்காரம்லாம் பண்ணிக்க லேட் ஆவாது?” எனக் கேட்ட பாட்டி அதீத உற்சாகத்தில் இருந்தார்.
தலைக்கு குளித்து துண்டு ஒன்றை கொண்டையில் சுற்றியிருந்தவள் துவைத்து வைத்திருந்த ஆடைகளை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் முன் பக்கம் வந்தாள்.
தன் உணர்வுகளை மறைத்த வண்ணம் கொடியில் ஈரத் துணிகளை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.
இரு சக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு யாரென பார்த்தாள். சத்தியமாக ரவியை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.
வண்டியை நிறுத்தி விட்டு அவன் இறங்கவுமே உள்ளிருந்து கணேசன் வந்து விட்டார்.
டிராக் பேண்ட், டி ஷர்ட் என இருந்தவன் தண்மதியை பார்க்க, அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தவள், உடனே பார்வையை விலக்கி வேக வேகமாக துணிகளை காயப் போட்டாள். அவளது நாடித் துடிப்பும் மூச்சும் அதிகரித்து போயிருந்தன.
“வாங்க… வாங்க ஸார்” என வரவேற்றார் கணேசன்.
“ஒரு முக்கியமான விஷயம் ஸார்” என ரவி சொல்ல, வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் அவர்.
சித்தி ஏதாவது சொல்லி அனுப்பியிருக்க கூடும் என்பதாகத்தான் நினைத்தாள் தண்மதி. கணேசனுக்கு கூட தன் வாழ்க்கை சம்பந்தமாக எதுவுமாக இருக்கும் எனதான் நினைப்பு.
வரப் போகிறவர்களுக்கு கொடுக்க என இனிப்பு, காரம் எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டார் கணேசன். அப்படியும் கேசரி செய்து கொண்டிருந்தார் பாட்டி.
நெய்யின் மணம் வீடெங்கும் பரவியிருக்க, “பாட்டி இல்லையா?” எனக் கேட்டான் ரவி.
“இருக்காங்க” என்ற கணேசன் அம்மாவை கூப்பிட்டார். பாட்டியும் அவனை வரவேற்று, இன்று தன் வீட்டில் நடக்க போகும் நிகழ்வை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
துணிகளை உலர்த்தி முடித்திருந்த தண்மதி தயங்கி தயங்கி உள்ளே வந்தாள்.
“ரொம்ப நல்ல இடம் ஸார், எதுக்காகவும் விட்டுத் தர தோணல, அதான் பேசிடலாம்னு” என்றார் கணேசன்.
“எனக்காக விட்ருங்க ஸார்” பட்டென சொல்லி விட்டான் ரவி.
மெல்ல நடந்து கொண்டிருந்த தண்மதி அப்படியே நின்று விட, மற்ற இருவரும் புரியாமல் அவனை பார்த்தனர்.
“மதியை எனக்கு பிடிச்சிருக்கு, யார் என்னன்னு தெரியறதுக்கு முன்னாடியே வந்த விருப்பம். சரி உங்க பிரச்சனை செட்டில் ஆகட்டும், அவ படிப்பு முடியட்டும்னா… நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க” என்றான் ரவி.
வியப்பின் உச்சத்துக்கு சென்று விட்டார் பாட்டி. கணேசனோ குழப்பமாக மதியை பார்த்தார். சித்தப்பாவின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் உள்ளே செல்லப் பார்த்தாள் அவள்.
“மதி… நில்லு!” என அதட்டினார் கணேசன்.
“ஸார் ஸார்… இது முழுக்க முழுக்க என் பக்கத்திலிருந்து வர்ற பேச்சு. உங்க அண்ணன் பொண்ணு நீங்க யாருக்கு கை காட்டுறீங்களோ அவனுக்குத்தான் கழுத்தை நீட்டுவாங்க” என்றான் ரவி.
உள்ளே ஓடிச் சென்று மறைந்தாள் தண்மதி.
பேத்தி செல்லும் திசையை கவலையாக பார்த்து விட்டு திரும்பிய பாட்டி, “எப்படிங்க தம்பி ஒத்து வரும்? உங்க வீட்டு ஆளுங்களுக்கு இவளை ஆகாதே” என்றார்.
“என் அப்பயி பெரியம்மாலாம் என் வீட்டு ஆளுங்கதான் பாட்டி, இல்லைனு சொல்லலை. ஆனா என் அப்பா, அம்மா, தங்கச்சி இவங்கதான் என் வீட்ல இருக்கிறவங்க. என் விருப்பத்துக்கு கண்டிப்பா மறுப்பு சொல்ல மாட்டாங்க” என்றான்.
“எப்படியிருந்தாலும் அங்க பக்கத்துலதானே அந்தம்மா இருக்காங்க, உங்க வீட்டுக்கு வராம போயிடுவாங்களா? இவ பூஞ்சை மாதிரி ஸார், அவங்கள எல்லாம் சமாளிக்க தெரியாது. எந்த வகையிலும் பிரச்சனை இல்லாத நல்ல இடம் அமையும் போது அதை முடிக்கிறதுதான் சரின்னு தோணுது” என்றார் கணேசன்.
“எதையும் யாரையும் அவ சமாளிக்கிற அவசியம் வராது, அதுக்கெல்லாம் நான் விட மாட்டேன். நானா தேடி வந்து பேசுறேன், இப்படி சொன்னா எப்படி?” என கணேசனிடம் கேட்டவன், “என்ன பாட்டி… நீங்க சொல்லுங்க, உங்க பேத்திக்கு நான் பொருத்தமானவன் இல்லையா? மதியை நான் நல்லா வச்சுக்க மாட்டேனா?” எனக் கேட்டான்.
“ஐயையோ தம்பி! உங்களை எந்த விதத்துல குறை சொல்ல முடியும்? நீங்கதான் இங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்கீயளான்னு இன்னும் நம்ப முடியாம நிக்கிறேன் நான்” என்றார் பாட்டி.
ரவியை குறை சொல்ல என்ன இருக்கிறது, ஆனாலும் கணேசனுக்கு ‘அந்த மலேசியா பையனுடன் மகளுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்’ என ஏற்பட்டிருந்த நம்பிக்கை, இந்த பேங்க் மேனேஜருடன் கிடைக்குமா என்பதில் இல்லை.
ஆனால் பாட்டிக்கு அப்படியில்லை; சற்று முன்பு வரை மலேசிய பையனை பெரிதாக நினைத்து மகிழ்ந்திருந்தவர் ரவியின் பேச்சில் தடுமாறினார்; இரண்டு இடத்திற்கும் உள்ள நிறை குறைகளை ஆராய ஆரம்பித்தார். அவரது கண்ணோட்டத்தில் அந்த மலேசியா பையனால் ரவியின் பக்கத்தில் கூட நிற்க முடியவில்லை.
ரவி மேலும் வலியுறுத்தி பேச, “அவங்கள வர சொல்லிட்டோம் ஸார்” என்றார் கணேசன்.
“அட நிச்சயமா பண்ணிபுட்டோம்? அதெல்லாம் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிடலாம்” என்றார் பரமேஸ்வரி.
கணேசன் தன் அம்மாவை முறைக்க, “நான் சொல்லித்தானே அங்க பார்க்க போன, இப்ப நானே சொல்றேன், வர வேணாம்னு சொல்லிடு” என்றார்.
“உனக்கு எல்லாம் விளையாட்டா போச்சா? மூனு நாள் முன்னாடிதான் மதிகிட்ட பேசி ஃபோட்டோலாம் காட்டினேன், சும்மா சும்மா மாப்ளய மாத்த முடியுமா?” எனக் கோவமாக கேட்டார் கணேசன்.
“அட அவளுக்கு என்னத்தடா தெரியும்? கல்யாண பேச்சு எடுத்ததுமே முரண்டு பிடிச்சுகிட்டு நின்னா, இப்ப இந்த இடம் பத்தி நீ பேசின அன்னிலேருந்து பேயடிச்ச மாதிரி சுத்திகிட்டு இருக்கா. வேணும்னா அவகிட்டேயே கேளு. இப்பவும் உன் விருப்பம்தான்னு சொல்லுவா” என்றார் பாட்டி.
“உன் இஷ்டத்துக்கு நடக்க முடியாதும்மா” என சீறிய கணேசன், “அப்படிலாம் டக்கு டக்குனு முடிவு செய்ய முடியாது ஸார், மதிக்கும் பிடிக்கணும்” என்றார்.
“சரி கூப்பிட்டு கேளுங்க” என பதட்டமே இல்லாமல் சொன்னான் ரவி.
கணேசன் நெற்றி சுருக்க, “என்னால முடிஞ்ச வரை சுமூகமா பேசிட்டு போகத்தான் நினைச்சேன். அவகிட்ட கோவ படக்கூடாது நீங்க” என பீடிகை போட்டான்.
“மதிக்கும் என்னை பிடிச்சிருக்கு” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகளிருந்த அறைப் பக்கம் பார்த்தார் கணேசன்.