சிந்தை நிறை தண்மதியே -8

 

அத்தியாயம் -8

 

அப்போதுதான் எழுந்த தண்மதி ஓய்வறை செல்ல நடந்தாள். பர பரப்பாக வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார் பாட்டி. அன்று தண்மதியை பெண் பார்க்க வருகின்றனர்.

 

பாட்டி முன்னர் ரவியிடம் சொல்லியிருந்தது போலவே தண்மதியின் திருமணத்துக்கு மகனை சம்மதிக்க வைக்க மரணத்தை தழுவும் எல்லை வரை சென்று பயம் காட்டியிருந்தார்.

 

அவளின் திருமணத்துக்கு அவர் சொல்லும் காரணங்களும் ஏற்புடையதாக இருக்க, அவரை சமாளிக்க இயலாமல் அந்த வரன் பற்றிய விவரங்களை கேட்டார் கணேசன்.

 

எல்லாம் சரியாக வந்தால் இப்போது திருமணத்தை முடித்து விட்டு அந்தப் பையன் மீண்டும் வெளிநாடு சென்று விடுவானாம். அவன் திரும்ப வருவதற்குள் தண்மதிக்கும் படிப்பு முடிந்து விடும் என எடுத்து சொல்லியிருந்தார் பரமேஸ்வரி.

 

‘எப்போது எங்களுடன் வருவீர்கள்?’ என அப்பாவிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் ஷஷ்டி.

 

நெருக்கடியில் திணறிப் போனவர் பாலைய்யாவை அழைத்துக் கொண்டு அந்த பையனின் ஊர் சென்று விசாரித்துப் பார்த்தார்.

 

பையனை பற்றி மிகவும் நல்ல விதமாக சொன்னார்கள். ஒரு டிகிரியும் படித்திருக்கிறான், அப்பாவுக்கு முடியாமல் போனதால் வெளிநாடு சென்று, குடும்பத்தை பார்த்து என பொறுப்பாக இருக்கும் பையன். அந்தக் குடும்பத்தை பற்றியும் நல்லதாகவே சொன்னார்கள்.

 

உள் நாட்டிலேயே ஏதாவது வேலையில் இருக்கும் பையனாக இருந்தால் தேவலாம் என அப்போதும் குழப்பினார் கணேசன். வேறு யாரிடமோ பையனை பற்றி பாலைய்யா விசாரித்தார். ‘உங்கள் பெண்ணை கொடுக்க போகிறீர்களா?’ என கேட்டவரோ அவர்களை அந்தப் பையனின் வீட்டுக்கே அழைத்து சென்று விட்டார்.

 

கணேசன் இப்படி எதிர்பார்க்கவில்லை, அங்கே அழைத்து வந்தவரை சங்கடமாக பார்த்தார்.

 

“நீங்க குழப்பிட்டு இருக்கவும் நேர்ல பார்த்தா தெளிவாகிடுவீங்கன்னுதான் கூட்டியாந்திட்டேன்” என்றார் அந்த மனிதர்.

 

ஆனால் அப்படி வந்தது நல்லதுக்கே என கணேசன் நினைக்கும் படியாகி விட்டது. அந்தப் பையனின் வீட்டினர் மிகவும் நல்ல மனிதர்களாக இருந்தனர். தண்மதியின் பெற்றோர் குறித்த பேச்சு வந்த போது, “அதுக்கு நம்ம பொண்ணு என்னங்க செய்யும்?” எனக் கேட்டு வேறு பேச்சை மாற்றி விட்டனர்.

 

பூர்வீமான சொந்த வீடு, பையன் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் புணரமைத்திருக்கிறான். அந்தப் பையனிடமும் காணொளி அழைப்பில் பேச வைத்தனர். கண்ணுக்கு நிறைவாக இருந்தான். பேச்சிலும் தெளிவும் முதிர்ச்சியும் தென்பட்டது.

 

ஓரிரண்டு வருடங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் சேர்த்துக் கொண்டு சொந்த ஊரில் தொழில் தொடங்க போவதாக திட்டம் வைத்திருப்பதை சொன்னான். தண்மதி படிப்பை தொடர்வதில், அவளுக்கு விருப்பம் இருந்தால் வேலைக்கு செல்வதில் என எதற்கும் தடை சொல்லவில்லை.

 

வீட்டில் கலந்து கொண்டு சொல்கிறேன் என கூறி புறப்பட்டு விட்டார் கணேசன்.

 

வழியில், “கணேசா இதுக்கு மேல வேற எப்படிப்பட்ட பையனை பார்க்கலாம்னு இருக்க நீ? இப்படி சொல்றேன்னு கோச்சுக்க கூடாது,  தண்மதிய என் பொண்டாட்டிக்கே ரொம்ப பிடிக்கும், அவ தம்பி ஒழுங்கா வேலை வெட்டி இல்லாம சுத்திட்டு இருக்கான், கல்யாணம் பண்ணினா சரியாகிடுவான்னு அவனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க, தண்மதிய கேட்டு பார்க்கவான்னு கேட்டதுக்கு மொளு மொளுன்னு புடிச்சிட்டா என்னைய” என அவரிடம் சொன்னார் பாலைய்யா.

 

பைக்கை நிறுத்தி விட்ட கணேசன் நண்பரை முறைத்து வைத்தார்.

 

“உன்னை கஷ்ட படுத்த இதை சொல்லலப்பா, என் பொண்டாட்டியே இப்படி பேசினா மத்தவங்கள பத்தி நினை. என்னதான் நல்லா படிச்சு வேலைக்கு போனாலும் புள்ளைய ஒத்தையாவேவா நிக்க வைக்க முடியும்? காலம் கடக்குறப்போ இப்படி இடம் அமையுமா?” எனக் கேட்டார் பாலைய்யா.

 

பக்கத்து ஊர், தண்மதி நன்றாக இருப்பாள் என எடுத்து சொல்லிக் கொண்டே வந்தவர், “உனக்கு சரியா வரலைனா சொல்லு, என் பொண்டாட்டியோட அக்கா பொண்ணுக்கு பார்க்கிறேன். அந்த புள்ளைக்கும் தண்மதி வயசுதான், ஆனா நல்ல இடம்னு தெரிஞ்சா விடாம புடிச்சிக்கிற கெட்டிகாரவங்க”என்றார்.

 

“ஸார்… இவ்ளோ தூரம் குடைச்சல் தராதீங்க, ஒரு நாள் போகட்டும், மதிகிட்ட பேசிட்டு அப்புறம்தான் அந்த பையன் வீட்ல பேச முடியும்” என கணேசன் சொல்லவும்,  சின்ன பெண்ணுக்கு என்ன தெரியும், நீயே நல்ல முடிவாக எடு என சொல்லி முடித்துக் கொண்டார் பாலைய்யா.

 

பகல் முழுக்க யோசித்து, இரவில் அண்ணன் மகளை அமர வைத்து பேசினார் கணேசன். பாட்டி அழுத்தம் கொடுத்து பேச, அம்மாவை பின் பக்கம் போயிருக்க சொல்லி விட்டார்.

 

அவள் குறித்தான தன் கவலை, இப்போது பார்த்த பையன், அவனது குடும்பம் பற்றிய விவரங்கள், இவளது படிப்புக்கு பாதகம் இல்லை என்பது என அனைத்தையும் சொன்னார்.

 

மனம் வேறொருவன் பக்கம் சாய்ந்து விட்ட கதையை அவரிடம் சொல்லும் தைரியமற்று கலங்கினாள் அவள்.

 

“சித்தப்பா அவசர படுறேன்னு நினைக்காத. நேர்ல விசாரிக்கும் போது திருப்தியில்லாம இருந்தா அதையே காரணமா சொல்லி அம்மாவை சமாளிக்க நினைச்சுதான் போனேன். இப்ப அந்த இடத்தை விட மனசில்லாமதான் செய்யலாம்னு யோசிக்கிறேன் பாப்பா.

 

தண்மதியின் மனதில் முட்டி மோதிக் கொண்டு நின்றான் ரவி. அவளின் தலை கோதி கொடுத்தவர், “உனக்கு வேணாம்னா வேணாம்தான், எதுவா இருந்தாலும் சொல்லு” என சொல்லி, அந்தப் பையனின் புகைப்படத்தை காண்பித்தார்.

அவளின் கண்கள்தான் அந்த உருவத்தை பார்த்தன, கருத்து முழுதும் ரவிதான் நிறைந்து போயிருந்தான்.

 

கணேசன் இன்னொரு முறை அவளின் சம்மதம் கேட்க, “உங்களுக்கு சரின்னு படறத செய்ங்க சித்தப்பா” என சொல்லி விட்டாள்.

 

மாப்பிள்ளை வீட்டினரிடமும் அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து பெண் பார்க்க வரச் சொல்லி விட்டார் கணேசன்.

 

பல் தேய்த்துக் கொண்டிருந்த பேத்தியிடம் வந்த பரமேஸ்வரி, “என்னடி பூச்சி பூச்சின்னு பல் தேக்கிற, பட படன்னு முடிச்சிட்டு காபிய குடிச்சிட்டு குளிக்க போ. அப்புறம் ரவிக்கை கை நுழையல கால் நுழையலன்னு கதை வைப்ப” என்றார்.

 

ரவி வந்து ஸ்வெட்டர் நீட்டிக் கொண்டிருந்தான். மொட்டை மாடியில் அவள் முன் நின்று ம் னு மட்டும் சொல்லு என்றான். ஆட்டோவில் அவளை பார்க்க குனிந்து நன்றாக படிக்க சொன்னான். அவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. பாட்டிக்கு முதுகு காண்பித்து நின்று தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.