தண்மதியின் பெற்றோர் செய்து வைத்த செயல் அவளது திருமண விஷயத்தில் எதிரொலிக்கும் என்றும் நினைத்தார். பேத்திக்கு திருமணமாகி விட்டால் அவளது எதிர்காலம் நிலை பெற்று விடும் என எண்ணியதால் இப்போதே அந்தப் பேச்சு எடுத்திருப்பார் போலும்.
ஆனால் கணேசன் அதற்கு சம்மதித்திருக்கவில்லை. தண்மதி படிப்பை முடித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், யாரையும் எதிர்பார்த்து என்றில்லாமல் சுயமாக நிற்கும் அளவுக்கு அவள் வந்த பிறகுதான் கல்யாணம் என தெளிவாக சொல்லி விட்டார்.
“சித்தப்பா அவ்ளோ சொல்லியும் இப்ப எதுக்கு இப்படி பேசுது இந்த ஆத்தா?” என்ற தண்மதியின் முகம் சுணங்கியது.
கணேசனின் நிலைப்பாடு எப்போதுமே இப்படி இருக்குமா என ரவிக்கு சந்தேகமாக இருந்தது.
சற்று முன் அந்த வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
கோசலை தன் மகள் மருமகனுடன் இணைய வேண்டும் என பேசினாலும் அவர்கள் நன்றாக வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது; சின்ன பேத்தியையும் முக்கியமாக நினைக்க வேண்டும் நீங்கள்; என் மகளின் திருமணத்தின் முன்பே அவசியமில்லாத பொறுப்புகளை அவள் சுமக்க நேரிடும் என நாங்கள் நினைத்திருக்கவில்லை என்றெல்லாம் மென் குரலிலேயே சொல்லியிருந்தார்.
சண்டை போட்டிருந்தால் பாட்டியும் மல்லுக்கு நின்றிருந்திருப்பார். இப்படி பேசவும் அதென்ன என் பேத்தியை இடையூறாக நினைப்பது என்ற கோவம்?
தண்மதிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என சீனுவிடம் சொன்னவர், “கல்யாண செலவுக்கு கூட அவ பேர்ல பணம் போட்டு வச்சிருக்கோம். என் உழைப்புலன்னு என்னால முடிஞ்ச நகை நட்டு சேர்த்து வச்சிருக்கேன். அவ யாருக்கும் பாரமில்லை, அவ பக்க மனுஷாளுன்னு கணேசன் அவன் குடும்பத்தோட நின்னா போதும், அதை கூட செய்ய கூடாதா?” எனக் கேட்டார்.
“ஹையையோ கூடாதுன்னு நாங்க எப்படி சொல்வோம்? நானும் என் குடும்பத்தோட முன்ன நிக்கிறேன், அந்த பாப்பாக்கு நல்ல விதமா கல்யாணம் பண்ணி வைக்கலாம், என்னடா ரவி?” என மகனையும் கூட்டு சேர்த்தார் சீனு.
பூர்ணிமாவும் கணவரை ஒத்து பேசினார். பாட்டிக்கு சீனு தம்பதியினரை மிகவும் பிடித்து விட்டது.
“எதாவது நல்ல இடம் வந்தா சொல்லுங்க” என சீனுவிடம் கேட்டுக் கொண்டார் பாட்டி. அவரும் சில வரன்கள் இருக்கிறது என ஆரம்பிக்க, பாட்டியும் சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டார். சீனுவின் கைப்பேசி எண்ணை தாளில் எழுதி வாங்கிக் கொண்டார்.
ரவிக்கு இதெல்லாம் கொஞ்சமும் ரசிக்கவில்லை. வராத அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே வெளியேறி விட்டான்.
கல்யாணப் பேச்சு குறித்து தண்மதி சொன்னதையெல்லாம் கேட்டிருந்த ரவி, தாடையை தடவிக் கொண்டு ஏதோ யோசனையாக நின்றிருந்தான்.
“சித்தி என்ன சொல்றாங்க?” எனக் கேட்டு அவனது சிந்தனையை கலைத்தாள் தண்மதி.
“ம்ம்… அக்காவும் ஸாரும் இன்னும் பேசிட்டுத்தான் இருக்காங்க. ஆமாம்… கல்யாணம் பத்தி உன் அபிப்ராயம் என்ன?”
“ஏன் கேட்குறீங்க மாமா?”
“உனக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு”
“ஹையோ அதையெல்லாம் நான் யோசிச்சதே இல்லை. எனக்கு இன்னும் படிக்கணும்”
“உன் பாட்டி ஃபோர்ஸ் பண்ணினா?”
“ஆத்தாவை சித்தப்பா சமாளிச்சுக்குவாங்க”
“உன் சித்தப்பாவே கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னா?”
“சித்தப்பா படிக்கத்தான் சொல்வாங்க”
“ப்ச் ஒரு வேளை கேட்டா?” என அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நின்றாள். அதுவே அவரின் பேச்சை இவள் மீற மாட்டாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
நல்ல பொறுப்பான பதவியில் இருப்பவன்தான், அவளுக்காக யோசித்து இப்போது அவளிடம் எதையும் சொல்லக் கூடாது என சரியாக முடிவெடுத்திருந்தவன்தான். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் கணேசன் பாரதி பிரச்சனை கூட முடிவுக்கு வந்து விடுவது போல சென்று கொண்டிருக்க, அந்த விஷயத்தை பின்னால் தள்ளி வைத்து விட்டான்.
தன் வீட்டில் தண்மதி நுழைந்த போதே, இவள் என்னுடன் வாழப் போகும் வீடு என்ற நினைவு ததும்ப, மனம் தடுமாறிப் போயிருந்தது. பாட்டியின் பேச்சும் இவளின் நிலைப்பாடும் கொஞ்சம் போல குழப்பி விட்டிருந்தது.
இந்த நேரம் இந்த நொடி எதற்காகவும் இவளை இழக்கக் கூடாது என்பது மட்டும்தான் அவனிடம்.
“எவ்ளோ நாள் வருஷம் வேணும்னாலும் உனக்காக நான் வெயிட் பண்ணுவேன். வீட்ல கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணினா எனக்கு சொல்லணும் நீ” என்றான்.
“என்ன… என்ன சொல்றீங்க?”
“உனக்கு கல்யாணம் பேசினா உன் வீட்டுக்கு வந்து உன்னை பொண்ணு கேட்கிறேன்னு சொல்ல வந்தேன்”
அவள் மலங்க மலங்க விழிக்க, “இதை இப்ப உன்கிட்ட நான் சொல்லியிருக்க கூடாதுதான். எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. என்னை பிடிக்கலைனா…” என்றவன், “என்னை பிடிக்கும்தானே உனக்கு?” எனக் கேட்டான்.
சின்ன பெண்; அவள் வளர்ந்த சூழல்; சுற்றத்தினர் அவளை குறித்து பேசிய பேச்சுக்கள்; இதில் என்ன காரணம் என தெரியாது; காதல் கல்யாணம் இப்படியாப்பட்ட சிந்தனைகள் இன்னுமே அவளுள் துளிர் விட்டிருக்கவில்லை.
தன்னை சமாளித்து அவன் விழிகள் திறக்கையில் தண்மதி அங்கிருக்கவில்லை.
வாடிய முகத்துடன் அவன் ஹால் வந்த போது ஷஷ்டி மட்டும்தான் அங்கிருந்தாள். அக்கா எங்கே என அவளுக்கு தெரியவில்லை. ரவி வீட்டிற்கு வெளியில் வர, மாடிப் படியின் ஆரம்பத்தில் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
ஆசுவாசம் கொண்டவன் ‘நீ படித்து முடி, அதுவரை தொந்தரவு செய்ய மாட்டேன், கல்யாணம் என வரும் போது என்னை நினைவில் வை’ என இப்போது அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என விஷயங்களை அடுக்கிக் கோர்த்தான்.
அதற்குள் அந்த வீட்டிலிருந்து நவ்ரிதி வெளிப் பட்டாள். ரவியால் எதுவும் பேச முடியாமல் போனது.
தண்மதியிடம் தன்னை தானே அறிமுகம் செய்து கொண்ட நவ்ரிதி, “ஏன் இங்க நிக்கிறீங்க, உள்ள வாங்க” என சொல்லி அவளை அழைத்துப் போனாள்.
ரவியை கடக்கும் போது, “அண்ணா… லஞ்ச் எல்லாருக்கும் ஆர்டர் போட சொன்னாங்க அம்மா” என சொல்லி சென்றாள் நவ்ரிதி.
உள்ளே தன் தங்கையுடன் நடந்து கொண்டிருந்த தண்மதி பின்னால் திரும்பி பார்ப்பதும் தான் அவளையே பார்த்திருப்பது கண்டு சட்டென முகத்தை திருப்புவதும் அவனை வெகுவாக பாதித்தது.
வயது வித்தியாசம் அதிகம் என யோசிக்கிறாளா? என்னை பிடிக்கவில்லையா? இந்த வீட்டில் வாழ பயமா? வேறு காதலோ? சமய சந்தர்ப்பம் தெரியாமல் நான்தான் அவசர பட்டு விட்டேனா? என அவனுள் மழையில் முளைத்த காளான்களை போல கேள்விகள் மண்டின.
வெளித் திண்ணையில் பதிக்கப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டான் ரவி. வெளிறிப் போயிருந்த முகத்தை இயல்பாக்கி, தலையை கோதி சரி செய்து, நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.
‘என்னடா இப்போ? சொல்லிட்டீல விடு, அவளுக்கும் உன்னை பிடிக்கும்’ என உறுதியாக சொல்லிக் கொண்டு, பெரியப்பாவின் வீட்டை நோக்கி நடந்தான்.