தண்மதியின் கைப்பேசி அழைப்பொலியில்தான் ரவிக்கு அன்றைய தினம் விடிந்தது.
இனி என்னிடம் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டவள் அழைக்கிறாள் என்றால் ஏதோ முக்கிய விஷயம் என்றெண்ணிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.
நிஜமாகவே முக்கியமான விஷயம்தான், நேற்று கணேசனுக்கு ரவி அத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் இன்று திருச்சிக்கு பயணப் பட தயாராகி விட்டார்.
“என்னால ஓரளவுதான் சொல்ல முடிஞ்சது, அங்க போறதுல என்ன ஆக போவுது நம்ம வீட்டு பொண்ண பார்க்க நாம ஏன் பயப்படணும்னு ஆத்தாவும் சித்தப்பாவை ஏத்தி விட்ருச்சு” என்றாள் தண்மதி.
“ஏது உன் பாட்டியும் கூட வர்றாங்களா?” என அதிர்ச்சியாக கேட்டான் ரவி.
“ம், நானும் வர்றேன், மூனு பேரும் கார்ல வர்றோம். கார் எடுக்க பாலைய்யா மாமாவை பார்க்க போயிருக்காங்க” என்றாள்.
பாலைய்யா சொந்தமாக கார் வைத்திருக்கிறார், டிரைவர் போட்டு இப்படி வாடகைக்கு அனுப்புவார்.
“கிழிஞ்சுது! சரி வாங்க பார்த்துக்கலாம்” என்றான்.
“அங்க ஏதும் பிரச்சனை ஆகிடாதே?”
“அது இப்பவே எனக்கு எப்படி தெரியும் மதி?” என அவன் கேட்க, என்ன சொல்லவென தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
“நீ பயப்படாம இரு, பிரச்சனை ஆனாலும் உன் சித்தப்பா பாட்டி அப்புறம் உனக்கும் எதுவும் ஆகிடாம பார்த்துக்கிறேன்”
“அங்கேயும் யாருக்கும் எதுவும் ஆக வேணாம். சித்தப்பா சண்டை போட வரலை அங்க, பாப்பாவை பார்க்கத்தான் வர்றோம்” என்றவள் சற்று தயங்கி, “நான் தள்ளியிருந்துப்பேன்னு சித்திகிட்ட சொல்லனும், இந்த வருஷம் படிப்பு முடிச்சிட்டேனா வீட்ல கூட தங்க மாட்டேன், ஹாஸ்டல் போயிடுவேன்” என்றாள்.
“இவ்ளோ பெரிய முடிவெல்லாம் எடுக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் ஆகல மதி. ரொம்ப யோசிக்காத, நான் அப்புறம் பேசுறேன்” என சொல்லி பேச்சை முடித்தவனுக்கு அவளின் பேச்சு வேதனையை கொடுத்தது.
நேற்று மாலை பாரதி வீடு திரும்பியதுமே விடாப் பிடியாக பிடித்து வைத்துக் கொண்டு பேசியிருந்தான்.
மென்மையான அணுகுமுறை எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால் காட்டமாகவே பேசி அக்காவை மனம் திறந்து பேச வைத்து, இப்போதைய அவளின் நிலைப்பாட்டையும் அறிந்து கொண்டான்.
பாரதிக்கு பிரச்சனை தண்மதி இல்லை. அவளை தட்டிக் கழிக்கும் எண்ணத்திலும் அவள் இருந்திருக்கவில்லை. தன் கணவனுக்கு தான் முதன்மையாக இல்லை, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற கோவம். நமக்கு குழந்தை வேண்டாம் என்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வீட்டினர் நல்வழி காட்ட தவறிப் போயிருந்தனர். அந்த வயதிற்குண்டான முதிர்ச்சி, பக்குவம் என்னவோ அதை வைத்து கணவன் மீதுதான் முழுத் தவறும் என இருந்து விட்டாள்.
ஒரு வழியாக அவளின் வாயை பிடுங்கி இப்போதும் கணேசனே அவளின் மனதில் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு விட்டான் ரவி. அந்த நொடியே பிரிந்தவர்களை சேர்த்து வைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்து விட்டது.
கணேசனும் அவளுடன் சேர்ந்து வாழத் தயாராக இருப்பதை சொல்லி விட்டான். உடனே ஒன்றும் அக மகிழ்ந்து போய்விடவில்லை பாரதி.
“என் கல்யாண வாழ்க்கை எல்லாம் ஏதோ போன ஜென்மத்துல நடந்தது மாதிரி இருக்கு. ரெண்டு பக்கமும் தப்புன்னாலும் ஷஷ்டி பத்தி கேட்டா என்னன்னு பதில் சொல்வேன்? ஷஷ்டி எப்படி எடுப்பா? அவரோட இயல்பா வாழ முடியுமா என்னால?” என சங்கடப் பட்டாள்.
“என்ன செய்யலாம்னு நீயே சொல்லு” என்றிருந்தான் ரவி.
“இவ்வளவு வருஷம் இருந்த மாதிரியே இருந்துக்குறோம், அவர் எப்ப வேணா வந்து ஷஷ்டிய பார்க்கட்டும், கொஞ்ச நாள் கூட வச்சிக்கிறதா இருந்தாலும் வச்சுக்கட்டும்” என்ற அக்காவை நன்றாக முறைத்து வைத்தான்.
“நீ ஒரு துணையோட வாழணும்னு நாங்கலாம் எப்பவோ முடிவு பண்ணிட்டோம் க்கா, புதுசா வர்றவர் எப்படியிருப்பார், உன் லைஃப் எப்படி போகும், ஷஷ்டிக்கு செட் ஆகுமான்னு எல்லாம் எனக்கே கவலை இருந்தது” என அவன் சொல்ல சொல்ல, நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டாள் பாரதி.
“ரெண்டாவதா புதுசா ஒரு வாழ்க்கையை ஸ்டார்ட் பண்றத விட, கணேசன் ஸார் கூட வாழறது ரொம்ப ஈஸியாதான் இருக்கும். ஷஷ்டி பத்தி கவலையே பட வேணாம், அண்ணன் பொண்ணையே அப்படி பார்க்கிறார், தன் பொண்ணை நல்லா பார்த்து வளர்ப்பார்க்கா” என அவன் சொல்லவும் ‘அப்படியா!’ என்பது போல பார்த்தாள்.
“உங்களுக்குள்ள எப்ப எந்த மாதிரி சிட்டிவேஷன்ல குழந்தை வேணாம்ங்கிற பேச்சு வந்ததுன்னு எனக்கு எதுவும் தெரியாது, அதை பேசி சரி பண்ணியிருக்கணுமே தவிர பிரிஞ்சி போறது முடிவு கிடையாது”
“அவரை மறக்கவும் இல்லை, சேர்ந்து வாழவும்… ப்ச்!” என ஆயாசமாக சொன்னாள்.
“உன் பயம், குழப்பம் எல்லாமே நார்மல், அதை நான் பேசியோ இல்லை வேற யாரும் பேசியோ போக்க முடியாது. என்னை நம்புக்கா… நீங்க ரெண்டு பெரும் ஒன்னா இருக்க ஆரம்பிச்சாலே ஃப்லோல எல்லாமே சரியாகிடும்” என்றான்.
பாரதி மௌனமாகவே இருக்க, “நைட் முழுக்க யோசி, ஷஷ்டியோட அப்பாவை ரொம்ப நாள் எல்லாம் அங்க பிடிச்சு நிறுத்த முடியாது. மனுஷன் கால்ல றெக்கை கட்டிக்கிட்டு நிக்கிறாரு, எப்ப வேணா இங்க பறந்து வந்திடுவாரு” என சொல்லி விட்டுத்தான் அக்காவுக்கு தனிமை கொடுத்து விட்டு வந்திருந்தான்.
ஷஷ்டிக்கு இரவு உணவு ரவியின் வீட்டில்தான். ரவியின் தங்கை நவ்ரிதி என்றால் ஷஷ்டிக்கு மிகுந்த பிரியம். தங்கையை கொண்டுதான் அக்கா மகளிடம் அவளது அப்பா குறித்து பேச சொல்லியிருந்தான்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை, அதனால் அப்பா கோவத்தில் தூரமாக எங்கேயோ போய் விட்டார் என்ற அளவில் ஷஷ்டிக்கு தெரியும். அப்பாவை தவறாக சித்தரிக்காமல் அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொன்னாள் நவ்ரிதி.
“இவ்ளோ நாள் வராம இப்ப ஏன் வர்றாங்க அப்பா?” என கேள்வி கேட்டாள் ஷஷ்டி.
நவ்ரிதி தன் அண்ணனை பார்க்க, அவன் தன் அம்மாவை பார்த்தான்.
“குட்டிமா… உன் அப்பா ரொம்ப முன்னாடியே வெளியூர் போயிட்டாங்க, நீ பொறந்தது அவருக்கு தெரியவே தெரியாது. இப்பதான் தெரிஞ்சுது, உடனே உன்னை பார்க்க வர்றாங்க” என உண்மையையே சொன்னார் பூர்ணிமா.
ஒன்பது வயது என்றாலும் விவரமான குழந்தை, ஓரிரு வருடங்கள் ஓட எல்லாமே அவளுக்கும் புரியும். இப்போது ஒன்று சொல்லி பின்னர் மாற்றி பேசி அவளை குழப்ப வேண்டாம் என்றே நினைத்தார் பூர்ணிமா.
ஒரு வாரத்துக்கு இப்படி பேசி பேசியே பாரதியையும் ஷஷ்டியையும் கணேசனை ஏற்றுக் கொள்ள தயார் செய்து விடலாம், பின்னர் கணேசன் வந்தால் இலகுவாக இருக்கும் என நினைத்துதான் செயல்பட்டான் ரவி.