“என்னையவே குத்தம் சொல்லாத ம்மா, உன் பையன்தான் எங்கேயாவது எடுத்து வச்சிருப்பான். நீ குனிஞ்சு நிமிந்து நல்லா தேடு” என இன்னும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

அவள் உதவி கிட்டாது என தெரிந்து, “உன்னையைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் தண்மதி” என்றான் ரவி.

என்னவென பார்த்தாள் தண்மதி.

“நான் உனக்கு அங்கிளா… ஹ்ம்ம்… ஓவரா தெரியலை உனக்கு?” இயல்பாக அவளை ஒருமையில் அழைத்து பேசினான்.

“ஹையையோ… நீங்க பாப்பான்னு சொல்லவும் யாரோ பெரியவங்கன்னு நினைச்சிட்டேன்” என முகத்தை கெஞ்சலாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

அவனும் அந்த உரையாடலை நினைவு படுத்திக் கொண்டான். பேச ஆரம்பித்த போது ‘ஸார்’ எனதான் ஆரம்பித்தாள், இவன் ‘பாப்பா’ என சொல்லவும்தான் அவளும் ‘அங்கிள்’ என மாற்றி விட்டாள்.

“அதுக்காக கோச்சுக்கிட்டீங்களா…” என்றவள் எதையோ யோசித்து, “ஷஷ்டி பாப்பா உங்களை எப்படி கூப்பிடுவா?” எனக் கேட்டாள்.

“மாமான்னுதான், ஏன்?”

“தப்பா ஒன்னும் கூப்பிடல நான், ஷஷ்டி பாப்பாக்கு நீங்க மாமான்னா எனக்கும் நீங்க மாமாதான்” என அவனை சமாதான படுத்துவது போல சொன்னாள்.

அவன் லேசாக முறைக்க, “அச்சோ நான் உங்களை எப்படியும் கூப்பிடல. பாப்பா இருக்கிறது தெரிஞ்சா சித்தப்பா கண்டிப்பா சித்திய விட மாட்டாங்க, சித்தியும் இவ்ளோ நாள் தனியா இருந்திருக்காங்கன்னா… எனக்கு சரியா சொல்ல தெரியலை, ஆனா சித்திகிட்ட பேசினா நல்லது நடக்கும்னு தோணுது. சித்திகிட்ட மட்டுமில்லை சித்தப்பாகிட்ட கூட நீங்கதான் பேசணும்” என்றாள்.

“என்னால முடிஞ்சத செய்றேன். நீ எதுக்கும் உன்னை காரணமா நினைச்சு கஷ்ட படுத்திக்க கூடாது, சரியா?” எனக் கேட்டான்.

அவள் சம்மதமாக தலையசைக்க, “டீ சாப்பிடுறியா? நிறைய அழுத்திட்ட, சூடா சாப்பிட்டா பெட்டரா இருக்கும்” எனக் கேட்டான்.

“இல்லையில்ல வேணாம்”

“இவ்ளோ பயப்படற அளவுக்கு ரொம்ப மோசமா இருக்காது என் டீ”

“உங்களுக்கு ஏன் சிரமம், நான் போடுறேனே” என அவள் சொல்ல, அவனும் மறுக்கவில்லை. ஏதாவது வேலை செய்தால் மனம் திசை திரும்பும் என நினைத்து அவளை சமையலறைக்கு அனுமதித்தான்.

இதை எப்படி கையாண்டு சரி செய்வது என ரவி யோசித்துக் கொண்டிருக்க, ஒரு வழியாக சஞ்சனாவும் வந்து விட்டாள்.

“அப்படி என்னத்தம்மா காணடிச்ச நீ?” என கிண்டலாக கேட்டான்.

“டிவி ரிமோட் ஸார், இன்னும் கிடைக்கல. அப்பாகிட்ட பேசி புதுசு வாங்கி கொடுக்க வச்சிட்டேன், அப்புறம்தான் என் அம்மா விட்டாங்க” என சஞ்சனா சொல்லவும் புன்னகைத்தான் ரவி.

“அவளை எங்க ஸார்?” என அவள் கேட்க, சமையலறையை காண்பித்தான் அவன்.

உள்ளே சென்ற சஞ்சனா, தேநீர் வடிகட்டி கொண்டிருந்த தண்மதியிடம், “என்னடி செஞ்சிட்டு இருக்க நீ? காயெல்லாம் வாங்கிட்டு வர சொல்லவா, சமைச்சி கொடுத்திட்டு போயிடலாம்?” என எரிச்சலாக கேட்டாள்.

“சும்மான்னு இருடி, அவரே டீ போடுறேன்னு சொன்னார், பாவம்ல… அதான் நான் வந்தேன்”

“டீ போடுறதுல என்னடி பாவம்?”

“பாவம் தனியா இருக்கார்டி”

“அடியே! அவரென்ன குழந்தையா?”

“ப்ச் ஏதாவது சொல்லிட்டே இருக்காத, இவர்தான் எனக்கு ஹெல்ப் பண்ண போறவர். டீ’தானே?”

“அது சரி! எனக்கு சுகர் கொஞ்சம் கூட போடு” என்ற சஞ்சனாவை முறைத்துக் கொண்டே, கூடுதலாக சர்க்கரை போட்டு அவளுக்கு தந்தாள் தண்மதி.

மூவரும் தேநீர் பருகிக் கொண்டிருக்க, ஓனர் வீட்டம்மா மாடியேறி வந்து விட்டார். இளம் பெண்கள் இருவர் வந்திருக்க, என்ன ஏதென தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வந்திருந்தார்.

“என் மாமா பொண்ணும் அவ ஃபிரெண்ட்டும் மா” என்றே அவர்களை அறிமுகம் செய்தான்  ரவி.

தண்மதியின் முகத்தில் அழுத தடம் தெரிய, “உன் அப்பாம்மா வரலையா மா?” என அவளை குறு குறுவென பார்த்துக் கொண்டே கேட்டார் அவர்.

ஏதோ கோர்ஸ் படிக்க போகிறார்கள், அதற்காக யோசனை கேட்க வந்திருக்கிறார்கள் என்றவன், “உள்ள வாங்களேன் மா” என அழைப்பு விடுத்தான்.

பரவாயில்லை என சொல்லி அவர் சென்று விட, “நாங்க இப்படி வீடு வரை வந்திருக்க கூடாதுதான், ஸாரி” என்றாள் தண்மதி.

ஸாரும் இல்லாமல் எந்த உறவுமுறையும் இல்லாமல் மொட்டையாக அவள் பேசியதை குறித்துக் கொண்டே, “அதெல்லாம் பிராப்லம் இல்லை” என்றான்.

ஷஷ்டியின் புகைப்படம் இருக்குமா என ஆவலாக தண்மதி கேட்க,  அவளது எண்ணின் தடையை நீக்கி, அக்கா மகளின் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தான் ரவி.

ஆசையாக பார்த்துக் கொண்ட தண்மதி, “தேங்க்ஸ் ஸார். பாப்பா பத்தி சித்தப்பாட்ட சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை” என பாவமாக சொன்னாள்.

“நீ வீட்டுக்கு போய் நிம்மதியா இரு. கணேசன் ஸார்கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

நிம்மதி கொண்டவளாக எழுந்தாள் தண்மதி. அவனுக்கும் மனம் ஆசுவாசம் கொண்டது.

இரு பெண்களும் கீழிறங்க, அவனும் அவர்களுடன் இறங்கினான்.

வாயில் வரை வருகிறான் போலும் என அவர்கள் நினைக்க, சாலையிலும் அவர்களை முன்னால் விட்டு நடந்தான்.

தண்மதி தோழியை பார்க்க, “என்ன ஸார், வேற எங்கேயும் போகணுமா?” எனக் கேட்டாள் சஞ்சனா.

அது கொஞ்சம் உள்ளடங்க இருக்கும் தெரு, ஆட்டோ கூட சற்று தூரம் நடந்தால்தான் கிடைக்கும்.

“ஆட்டோ ஏத்தி விடுறேன், நடங்க” என்றான்.

நாங்களே போய் கொள்வோம் என அவர்கள் சொன்ன போதும் அவன் விடவில்லை.

அவர்கள் ஆட்டோவில் ஏறியதும், “வீடு போய் சேர்ந்ததும் மெசேஜ் பண்ணு” என்றான்.

தண்மதி தலையாட்டிக் கொள்ள, அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் சஞ்சனா.

ஆட்டோ புறப்பட்ட பின்னரும் தண்மதியே அவனது நினைவில் நிறைந்திருந்தாள்.

“என்னடி ஆள் ஒரு மார்க்கம் ஆன மாதிரி இருக்கு, உன்னை ரொம்ப உரிமையா பார்க்கிறாரோ?” என தோழியிடம் சொன்னாள் சஞ்சனா.

“உனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வராது, எதுக்கெடுத்தாலும் சந்தேக படுவ. உன் ஆளை மட்டும் கண்ண மூடிக்கிட்டு நம்புவ” என குறை படித்தாள் தண்மதி.

“நீ பச்ச புள்ளடி, சூது வாது தெரியாது. உன் நல்லதுக்கு சொல்றேன் இவர்கிட்டருந்து கொஞ்சம்… ம்ம்ம்… இல்லையில்ல நல்லாவே டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணு” என சஞ்சனா கூற, ஏதும் சொல்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் தண்மதி.

அந்த சாலையின் முனையில்தான் வெறுமனே நின்றிருந்தான் ரவி.

‘சின்ன பெண் ரவி…’ என மனம் எச்சரிக்கை சொன்னது.

‘நானும் அப்படியொன்னும் வயசானவன் இல்லை’ என சமாதானம் சொன்னான்.

‘எல்லா விதத்திலும் சிக்கல். நிறைய சமாளிக்க வேண்டும் நீ’

‘அவளுக்கு பிடிச்சா அது போதும்’

‘முதலில் உன் அக்கா வாழ்க்கை பற்றி பார்’

‘ம்ம்… பார்க்கத்தான் போறேன், ஆனா இவளை எதுக்காகவும் விட முடியாது’

‘அப்படியென்னடா கண்டதும் காதல்!’

‘அதுக்கெல்லாம் பதில் தெரியாது, ரொம்ப கஷ்ட பட்ருப்பா போல, இனி அவ நல்லாருக்கணும்னா என்னாலதான் முடியும்’

‘அவ்ளோ தூரம் போயிட்டியா நீ?’ என மனம் கிண்டல் செய்ய, அவனிடம் சின்ன சிரிப்பு மட்டும்தான்.