கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின் போது இயல்புக்கு மாறாக அமைதியாக இருந்த தண்மதியின் அருகில் அவளது தோளை இடித்துக் கொண்டே அமர்ந்தாள் அவளது தோழி சஞ்சனா.
சஞ்சனாவை கண்டனமாக ஒரு பார்வை பார்த்த தண்மதி, டெஸ்க்கில் தலை சாய்த்துக் கொண்டாள்.
தண்மதிக்கு நெருங்கிய தோழியென்றால் இவள் மட்டும்தான். பள்ளிக் காலத்திலிருந்தே ஒன்றாக படிப்பவர்கள். அவர்கள் படித்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் சஞ்சனாவின் தந்தை, தண்மதி பற்றி தெரிந்தாலும் அவளை புரிந்து கொண்டு அன்பு செலுத்தும் மனிதர், ஆகவே தன் மகள் அவளுடன் நட்பு பாராட்டுவதை எந்த வகையிலும் தடை செய்யவில்லை.
ஆமாம் தண்மதியின் பள்ளி பருவத்தில் அவளுடன் தங்கள் வீட்டு பிள்ளைகள் பழகுவதை அவர்களின் பெற்றோர் அவ்வளவாக விரும்பியதில்லை.
தந்தையில்லாமல் தாயும் காதலனுடன் சென்றிருக்க, எந்த வகையில் தண்மதி மீது தவறு கண்டார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.
தண்மதியின் பெற்றோரால் அவளது வாழ்க்கை மட்டும் பாதிக்கவில்லை, புதிதாக திருமணம் முடித்திருந்த கணேசன், ஜெயபாரதி இருவரின் வாழ்க்கையும் கூட சேதப் பட்டுப் போனது.
தண்மதியை உடன் வைத்துக் கொள்வதில் கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அதை பெரியவர்கள் பெரிதாக்கி விட்டனர். விளைவு கணேசனும் பாரதியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இப்போது அவர்களை இணைத்து வைக்க விரும்புகிறாள் தண்மதி. எல்லாமே சஞ்சனாவுக்கும் தெரியும்.
“அடி விடு கழுதை! ஃபோன் நம்பரைதான் அவர் பிளாக் பண்ண முடியும், ஆள் அட்ரஸ் கண்டுபிடிச்சு நேர்ல போய் நின்னா என்ன செய்வாராம்?” எனக் கேட்டாள் சஞ்சனா.
ஆமாம், தண்மதி சஞ்சனாவின் எண்ணிலிருந்து ரவியை தொடர்பு கொண்ட போதும் கடுமையாக எச்சரித்து அழைப்பை துண்டித்திருந்தவன் அந்த எண்ணையும் தடை செய்து விட்டான்.
“ப்ச் சித்தி அப்பவே எங்கேயோ மைசூர் பக்கம் போயிட்டதா ஆத்தா சொல்லிச்சு, இப்பவும் அப்படி எங்கேயாவது இருந்தா நான் எப்படி போக முடியும்? சித்தப்பா ஒத்துக்க மாட்டார்” என்றாள் தண்மதி.
“அவங்க வீடெல்லாம் திருச்சி பக்கத்துலதானே இருக்கு, அங்க போலாம்ல?”
“ஐயோ! சித்தியோட வீட்டு ஆளுங்கலாம் பயங்கரமானவங்களாம், எனக்கு சித்திய மீட் பண்ணினா போதும். சித்திக்கு அண்ணன் தம்பியே இல்லைனு சொல்லுது ஆத்தா, இந்த அங்கிள் யாருன்னு தெரியலை, சரியான முசுட்டு அங்கிள் போல” என்றாள் தண்மதி.
“இவர் எங்க இருக்கார்னு தெரிஞ்சிக்கலாம், வீட்டுக்கு போனாதானே ப்ராப்லம், இவரு வேலைக்குன்னு எங்கேயாவது போவார்தானே, அப்படி அந்த இடத்துல போய் பார்க்கலாம்”
“அதெல்லாம் ஈஸியா? எப்படி கண்டுபிடிக்கிறது? ஆவுறதா ஏதாவது பேசு”
“நடக்காத எதையும் பேச மாட்டா இந்த சஞ்சனா. மொபைல் நம்பர் வச்சே லொகேஷன் கண்டுபிடிக்க நம்மகிட்ட பசங்க இருக்காங்க”
“சைபர் கிரைம் ஆஃபீசர்ஸா?”
“அவங்களுக்கே டஃப் கொடுக்கிற ஆளு” என்ற சஞ்சனா தன் காதலனுக்கு அழைத்துக் கொண்டே தள்ளி சென்றாள்.
சற்று நேரத்தில் திரும்ப வந்த சஞ்சனா விரைவில் உன் சித்தியின் தம்பியின் இருப்பிடம் தெரிந்து விடும் என்றாள்.
தண்மதிக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. அப்படியே இருப்பிடம் தெரிந்தாலும் பக்கமாகவா இருக்க போகிறது நான் போய் சந்திக்க? எனதான் நினைத்தாள்.
சஞ்சனாவை தவிர வேறு எந்த நண்பரின் கைப்பேசியையும் உபயோகிக்க அவளுக்கு விருப்பமும் இல்லை. ஆகவே வேறொரு சிம் வாங்கி, வாட்ஸ் ஆப் மூலமாக தெளிவாக பேசி வாய்ஸ் நோட் அனுப்பலாம் என முடிவெடுத்துக் கொண்டாள்.
ஞாயிற்றுக் கிழமை விடியற்காலையே தலைக்கு குளித்து விட்டு புடவை அணிய தயாரானாள் தண்மதி. புடவை கட்டுவது முதல் முறை இல்லையென்றாலும் அது அவளுக்கு அத்தனை இலகும் இல்லை. பிளவுஸ் போடப் போக, அது நல்ல இறுக்கமாக இருந்தது.
வகுப்புத் தோழியின் அக்காவின் திருமணம் பக்கத்து ஊர் கோயிலில் நடக்கிறது, வற்புறுத்தி அழைத்திருந்தாள். சஞ்சனாவின் நெருங்கிய உறவில் வேறொரு விஷேஷம் என்பதால் அவள் இல்லாமல் இவள் மட்டும் செல்கிறாள். மற்ற நண்பர்கள் அவரவர் ஊரிலிருந்து நேராக அங்கு வந்து விடுவார்கள்.
“போட்டு பாருன்னு எத்தன தரம்டி சொன்னேன், இப்ப வந்து என்னைய குத்தம் சொல்றியா? கொடு அதை பிரிச்சு தரேன்” என பாட்டி சொல்லவும், அவரிடம் பிளவுஸ் கொடுத்து விட்டு பின்னலிட்டு மற்ற ஒப்பனைகளை செய்து கொண்டாள்.
பாட்டியின் உதவியுடன் புடவை கட்டி முடித்தவளை நேராக நிற்க வைத்து ஆசையாக பார்த்தார் பாட்டி. சின்ன வயதில் அழகு பூஞ்சிட்டாக அவள் நின்றது அவரின் நினைவிலாடியது.
‘எப்படித்தான் இவளை விட்டுட்டு போவ அந்த சண்டாளிக்கு மனசு வந்ததோ!’ என நினைத்து ஆதங்கமாக மூச்சு விட்டார்.
‘நானே கொண்டு போய் விடுகிறேன்’ என முதல் நாளிரவே சொல்லியிருந்த கணேசன், இப்போது நல்ல உறக்கத்தில் இருந்தார். இரவில் அறைக்குள் உணரும் தனிமை அவரை அத்தனை எளிதாக உறங்க விடுவதில்லை.
பெரியவர்கள் பார்த்து செய்த திருமணம் என்றாலும் பாரதியை விருப்பப்பட்டு மணந்து கொண்டார். பாரதிக்கு தோஷம் உள்ள ஜாதகம், நினைத்த படி வரன்கள் அமையவில்லை. தங்களின் வசதிக்கு நிகரில்லை என்றாலும் பரவாயில்லை எனதான் கணேசனுக்கு சம்மதம் சொன்னார்கள் அவளின் வீட்டினர்.
அந்த நேரம் கணேசனும் இதே பகுதியில் உள்ள வேறொரு ஊரில் அண்ணனுடன் சேர்ந்து சின்னதாக நகைக் கடை வைத்திருந்தார். நிலம், தோப்பு என ஓரளவு வளமாகத்தான் இருந்தார்கள்.
அவரின் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அண்ணன் நிறைய கடன் பட்டிருப்பது தெரிய வந்தது. கொடுக்கல் வாங்கலில் நிறைய ஏமாந்து போயிருந்தார். கடனை அடைக்க நிலங்களை விற்க நேர்ந்த போதே பாரதி வீட்டில் பிரச்சனை செய்தார்கள். நகைக் கடையை தம்பிக்கே விட்டு கொடுத்து விடுகிறேன் என அண்ணன் சொல்லவும் சற்றே ஓய்ந்தார்கள்.
நிறைய பொருளாதார நெருக்கடிகள், திருமணம் முடிந்த புதிது என்பதால் கணவன் மனைவிக்குள் புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை. கணேசன் அன்பானவர், பொறுமையானவர் என்றாலும் மனைவியின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நடக்கத் தெரியவில்லை.
கணேசனின் அண்ணன் குடிக்கு அடிமையாகி விட்டார். அவரின் மனைவியோ பெற்ற மகளையும் நினைத்து பாராமல் தான் விரும்பியவனுடன் சென்று விட்டாள். அவமானத்தை தாள முடியாத கணேசனின் அண்ணனும் மகளை யோசிக்க மறந்து, உலக வாழ்விலிருந்து நிரந்தர விடுதலை பெற்றுக் கொண்டு விட்டார்.
பத்து வயது தண்மதியை தன்னோடு அழைத்து வந்து விட்டார் கணேசன். பாரதிக்கு குட்டிப் பெண்ணை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகள் இல்லாமல் தானே பார்த்துக் கொண்டார் பரமேஸ்வரி.
ஆனாலும் பாரதியின் வீட்டினர் தண்மதி தங்கள் மகளுடன் இருப்பதை விரும்பவில்லை. அதற்கு ஏற்றது போல எங்கேயாவது கணவன் மனைவி வெளியில் சென்றாலும் அவர்களுக்கான தனிமையை கொடுக்காமல் “பாவம் பாப்பா தனியா இருக்கா அழைச்சிட்டு போ” என பேத்தியையும் உடன் அனுப்பி வைத்தார் பரமேஸ்வரி.