அத்தியாயம் -19(2)

“போயிட்டாங்களா மதி?” என நண்பர்களை பற்றி விசாரித்த ரவி, அவளின் வெளிறிப் போயிருந்த முகத்தை கண்டு விட்டு, “ஹேய் என்ன?” என பதறிப் போய் கேட்டான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொள்ள, தானாகவே எழ முயன்று தடுமாறி நின்றான்.

வேகமாக வந்து அவனை பிடித்துக்கொண்டவள், “கூப்பிட வேண்டியதுதானே மாமா? விழுந்திருந்தா கஷ்டம்ல?” என்றாள்.

மெதுவாக தன் கையை உயர்த்தி அவளது மோவாயை பிடித்துக்கொண்டவன், “அப்பயி ஏதாவது சொல்லிடுச்சா?” எனக் கேட்டான்.

அவனை அமர வைத்து, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“சொல்லு மதி” என அவன் பிடிவாதமாக கேட்கவும் சொல்லியும் விட்டாள்.

“நீ என்னை அழைச்சிட்டு போ அங்க” என கோவமாக சொன்னான் ரவி.

“அச்சோ… சும்மான்னு இருங்க மாமா. அந்த பாட்டிக்கு மட்டுமா? நிறைய பேருக்கு இப்படித்தான் எண்ணம் இருக்கும், இதையெல்லாம் பெருசு பண்ணக்கூடாதுன்னு எனக்கும் தெரியும், ஆனாலும் நானும் மனுஷிதானே, டக்குனு அந்த பேச்சிலேருந்து வெளில வர முடியலை. உங்க பக்கத்துல கொஞ்ச நேரம் இருந்தா சரியாகிடுவேன்” என்றாள்.

“என் காதுக்கு விஷயம் வந்தப்புறமும் சும்மா இருக்க சொல்றியா? நீ நகரு, வாக்கர் வச்சிட்டு எனக்கே போயிக்க தெரியும்”

“வேணாம்னா வேணாம் மாமா” என அதட்டினாள்.

“இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டிச்சு வைக்கணும் மதி”

“அதிசயமா உங்க அப்பயி இதை எதிர்த்து பேசினாங்க, இந்நேரம் அவங்களே நல்லா கொடுத்திருப்பாங்க. நீங்க ஏன் சிரம படுறீங்க?”

“சும்மா சிரமம் சிரமம்னு சொல்லாத, இப்ப நானேதான் என் வேலையை பார்த்துக்கிறேன், சீக்கிரம் எதுக்குமே யார் உதவியும் தேவை படாது எனக்கு” என அவன் சற்றே குரல் உயர்த்த, முகம் வாடிப் போனவளாக அவனை விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

“ப்ச்… பக்கத்துல வா, அந்த பாட்டி பேசினது கோவம்னா அதை தட்டி கேட்க முடியலைன்னு கடுப்பு. அதுல எப்படியோ பேசிட்டேன், கோச்சுக்காத” என்றான்.

உடனே எதிர் வாதம் செய்யாமல் அவனை ஒட்டியமர்ந்து கொண்டவளை பார்த்து சிரித்தான்.

“நான் அநியாயம் செய்றேன்னு எனக்கே தெரியுது மதி, எவ்ளோ பார்த்து பார்த்து கவனிக்கிற? உங்கிட்டயே கோவ படற அளவுக்கு என் உடல்நிலை என்னை மாத்திடுச்சு. இதையெல்லாம் மனசுல வைக்க கூடாது, மனசறிஞ்சு நான் உன்னை ஹர்ட் பண்ணல, ஏதோ… ஸாரி மதி”

“எல்லாம் நோட் பண்ணி வச்சிட்டுத்தான் இருக்கேன்” என மிரட்டலாக சொன்னாள்.

“எங்க… எதுல நோட் பண்ணியிருக்க?”

“மனசுல”

“மனசா… எங்க காட்டு எல்லாம் சரியா எழுதி வச்சிருக்கியான்னு பார்க்கிறேன்” என குறும்பாக சொன்னான்.

அவனது முகத்தை நெருங்கி கடிப்பது போல செய்தவள், மீண்டும் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“நீ செய்ததை யார் செய்வா மதி? உன்னை பத்தி தெரியாதவங்க சொல்றதை இக்னோர் பண்ணிடு, கொஞ்ச நேரமா இருந்தாலும் அது உன்னை அஃபெக்ட் பண்றதுக்கு விடக்கூடாது நீ” என்றான்.

“அதென்ன யார் செய்வா அப்படினு கேட்குறீங்க?”

“இல்லையா? இப்ப எனக்கு சரியாகிட்டு வருது. ஆனா என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ ஃப்யூச்சர்ல என்னாகும்னு தெரியாதுதானே? கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனுக்கு முடியாம போய் பொண்டாட்டி கூட இருந்து பார்த்துக்கிறது வேற. தாம்பத்ய வாழ்க்கைனா என்னன்னு எதுவும் தெரியாம அதை பெருசு பண்ணாம நீ எடுத்த முடிவை யாரா இருந்தாலும் எடுக்க தயங்குவாங்கதான் மதி. இல்லைனு நீ சொன்னாலும் நீ செஞ்சது சேக்ரிஃபைஸ்தான்” என உள்ளார்ந்து சொன்னான்.

“மத்தவங்க அப்படி நினைக்கலாம், நீங்களுமா மாமா?” என அவனை விட்டு விலகாமலே கேட்டாள்.

“ஏய் உண்மைதானே அது?”

“நீங்க சொன்ன தாம்பத்ய வாழ்க்கையை தெரிஞ்சிக்க எனக்கும் ஆசை உண்டு மாமா, அது உங்க மூலமா. அது இல்லைனாலும் உங்க ஒரு பார்வை எனக்குள்ள ஏற்படுத்துற உணர்வு போதாதா எனக்கு?”

“கேட்க போயெட்டிக்கா நல்லாருக்கு, நீ எம்மேல உள்ள அளவுக்கதிகமான அன்புல நடப்பு தெரியாம பேசுற. உன் செயலோட ஹைட் உனக்கு தெரியலை”

“ப்ச்… என்னை பார்த்ததும் உங்களுக்கு பிடிச்சதுதானே? ஏன் பிடிச்சது?” எனக் கேட்டாள்.

நான்கரை வருடங்களுக்கு முன் ஒரு அதிகாலை நேரத்தில் அவளை முதன் முதலாக பேருந்தில் கண்ட இனிமையான அந்த நொடிகள் இப்போதும் அவனுள் பசுமையாக இருந்தது. அதை நினைவு படுத்திக் கொண்டே, “சத்தியமா பதில் தெரியாது மதி” என்றான்.

“நான் யாருன்னு தெரிஞ்சும் என்னை வேணாம்னு நினைக்கல நீங்க. என்னை உங்க மனைவியாக்கினா நிறைய பிரச்சனை வரும்னு உங்களுக்கு தெரியும். அப்படியென்ன நான் உங்களுக்கு முக்கியமா போயிட்டேன், ஏன் என்னை விடக்கூடாதுன்னு நினைச்சீங்க?” எனக் கேட்டாள்.

இப்படியெல்லாம் ஒரு நாளும் அவன் சிந்தித்ததே இல்லை. இவள் கேட்ட பிறகுதான் அந்த கேள்விக்கான பதிலை தேடினான். அவனுக்கு அவள் மீது பிடித்தம், அவ்வளவுதான்.

“ஏய் கன்ஃப்யூஸ் பண்ணாத. நான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன், அப்பறம் எப்படி விடுவேன்? அதெல்லாம் ஒரு உணர்வு, எக்ஸ்பிளைன் பண்ண முடியாது” என்றான்.

“என் சித்தப்பா முழு மனசோட சம்மதிக்கல, சித்திலாம் பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. எல்லாத்தையும் அசால்ட்டா ஹேண்டில் பண்ணுனீங்க? உங்களுக்கு அப்பவே இருபத்தேழு வயசு, கல்யாணம் பண்ணிக்கிற வயசுதான். கல்யாணம் பண்ணி வைக்க ஆத்தா அவசர படுத்தியும் எனக்காக யோசிச்சீங்க. ஆத்தா இறந்தப்ப நீங்க இல்லைனா…” என்றவள் அதை நினைத்து பார்க்க முடியாதவளாக மறுப்பாக கையை ஆட்டினாள்.

“மதி…” என மென்மையாக அழைத்தான்.

“அண்ணன் பொண்ணுக்காக என் சித்தப்பா பண்ணினது யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. சித்தியோட அவர் சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்புறம் என்னை கவனிக்கிறதுல சித்தப்பாக்கு நிறைய சங்கடம் இருந்துச்சு. சத்தியமா பாயிண்ட் ஒரு பெர்சென்ட்டேஜ் கூட சித்தப்பாவை குறையா சொல்லலை, ஆனா என்னால சித்தியோட செட் ஆகி அங்க இருக்கவே முடியலை. எனக்குன்னு நீங்க இருக்கீங்கங்கிற நினைப்பு ஒன்னுதான் என்னை சோர்ந்து போக விடாம இயக்கிட்டு இருந்துச்சு. எனக்குன்னு வீடு இல்லைனு நான் என்னிக்கும் ஃபீல் பண்ணினது இல்லை, காரணம் நீங்க, அப்படி என்னை நீங்க ஃபீல் பண்ண வச்சதே இல்லை” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “வீடுங்கிறது ஒரு கட்டிடம்… ஒரு இடம்… அப்படித்தானே எல்லாருக்கும்?” எனக் கேட்டாள்.

அவன் பதில் தராமல் அவளையே ஊன்றி பார்த்தான்.

“எனக்கு…” என்றவள் மிகவும் உணர்ந்து ஆழ்ந்தடர்ந்த குரலில், “யூ ஆர் மை ஹோம்” என்றாள். அதை சொல்லும் போதே உணர்ச்சி மிகுதியில் அவளுக்கு கண்ணீர் வழிந்தது. அவனது தோளிலேயே தன் கண்ணீரை மிகவும் உரிமையோடு துடைத்துக் கொண்டாள்.

என்ன எதிர்வினை ஆற்ற என்றே அவனுக்கு தெரியவில்லை.

“எனக்கு நீங்க எது செய்யவும் உங்களுக்கு காரணமே தேவை படல. என்னை விட்டு போக ஆயிரம் காரணம் இருந்தும் என்னை விடவே இல்லை. அதை விடவா மாமா, எனக்கு எல்லாமுமா இருந்த உங்க கூட நான் இப்ப இருக்கிறது பெருசா போயிடுச்சு?” என அவள் கேட்க, ரவியின் கண்களில் இருந்தும் கண்ணீர் மணிகள் திரண்டு உருண்டன.

அவனது கன்னத்து ஈரத்தை மென்மையாக துடைத்து விட்டவள், “நீங்க எம்மேல வச்ச அன்புக்கு நான் என்ன செஞ்சாலும் ஈடில்ல. சேக்ரிஃபைஸ்ங்கிற வார்த்தைக்கு இடமே இல்லை மாமா. திரும்ப இப்படிலாம் பேசாதீங்க”என்றாள்.

வாயடைத்துதான் போயிருந்தான் ரவி. அவனது அணைப்பு வேண்டும் என்பது போல அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனும் மென்மையாக அணைத்து, பின் தன்னால் முடிந்த வரை அணைப்பை இறுக்கிக் கொண்டான்.

“நீங்க எனக்கு சொந்தமானவர். நான் சேர வேண்டிய இடம் நீங்கதான், உங்க கைக்குள்ள இருக்கத்தான் இந்த பொறப்பே”

“மதி போதும்!” என்றான்.

“உங்களுக்கு கேட்க அதிகமா இருக்கலாம், எனக்கு அப்படித்தான் மாமா” என்றாள்.

நிமிடங்கள் கழிந்து அவனது மார்பில் முத்தமிட்டு விலகினாள். எங்கே எழுந்து போய் விடுவாளோ என அவனுக்கு சிறு பதற்றம், அவளை விடாமல் தன்னருகிலேயே வைத்துக் கொள்ள அவனுள் அப்படியொரு தீவிரம். அவளுக்கும் அப்படி தோன்றியதோ என்னவோ, அவனை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தாள்.

“என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கு இப்படியொரு நோய்னு மனசு நொந்து போய் கடவுள்கிட்ட சண்டை போட்ருக்கேன். டேய் மடையா கொஞ்ச நாள் உன் மதி கைல குழந்தையா இருந்து பாருன்னு சொல்லித்தான் என்னை இப்படி ஆக்கிட்டார் போல கடவுள்” என்றான்.

“ஆமாமாம் குழந்தைதான் நீங்க! தனியா இருக்கப்போ பேசுற பேச்சும் பார்க்கிற பார்வையும்…” என நொடித்தாள் மதி.

“ஏய்! நீ எமோஷனலா பேசுறப்ப மட்டும் நான் எப்படி சைலன்ட்டா இருந்தேன், நான் பேசினா மட்டும் கலாய்ப்பியா? நீ… நீ திருப்பி பேசு, நானும் கலாய்க்கிறேன்”

“நான் ஒன்னும் கலாய்க்கல, உண்மையைத்தான் சொன்னேன். இப்ப கூட ஹக் பண்ணிட்டா அமைதியா இருக்கணும், அதை விட்டுட்டு…” அவள் முடிக்கவில்லை, அதற்குள் அவளிடமிருந்து விலகியவன், “என்ன… என்ன பண்ணினாங்க உன்னை?” எனக் கேட்டான்.

சொல்ல அவள் வார்த்தைகள் தேட, “ம்ம்… சொல்லு” என குறும்பாக சொன்னான். சொல்ல இயலாமல் வெட்கப்பட்டு அவள் சிணுங்க, அதில் மயங்கியவன் அவளுக்கு ஆசை ஆசையாக முத்தமிட்டான்.

அவனுக்கு சிரமம் ஏற்பட்டு விடாதபடி அவனது முதுகிலிருந்து பிடரி வரை தாங்கிப் பிடித்து, இடுப்பிலும் ஆதரவாக பற்றிக் கொண்டு தன்னை அவனுக்கு ஒப்பு கொடுத்திருந்தவளின் விழிகள் மூடிக் கிடந்தன. சற்றே முகத்தை விலக்கி அவளை பார்த்தவனது மனம் கனிந்து போனது.

இவள் எனக்கென இருக்கையில் இந்த நோயெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் மனநிலை அவனுக்கு.

அப்படியே அவளது முகத்தை தன் நெஞ்சோடு அணைத்து பொத்திக் கொண்டான். ரவியின் ஒவ்வோர் அணுவிலும் நீக்கமற நிறைந்து போயிருந்தாள் தண்மதி.