தண்மதிக்கு வீட்டிலிருந்தபடி வேலை செய்ய ஏதும் சிரமமாக இல்லை. வீட்டு வேலைகள் என எதுவும் அவளிடம் விடவில்லை பூர்ணிமா. மேல் வேலைக்கு ஆள் வர, சமையல் முழுக்க அவரே பார்த்துக் கொண்டார். ரிதியும் அண்ணனுடன் நேரம் செலவிடுவாள்.
ரவியின் வாழ்க்கை முறை மாறிப் போனதில் ஏமாற்றம் கலந்த விரக்தி அவனுள். அதனால் அவ்வப்போது யோசிக்காமல் சீறி விடுவான். அதிகம் பாதிக்க படுவது மதிதான். பதிலுக்கு கோவம் கொண்டு சத்தம் போடுவது, முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது என எதுவும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக அவனை கையாண்டாள் அவள்.
கடை விற்பனை விஷயத்தில் சீனுவுக்கும் பூர்ணிமாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
“கடைய வித்திட்டு மாமா என்ன பண்ணுவாங்க அத்தை? நமக்கு வேற சோர்ஸ் இல்லைனா பரவாயில்லை, இருக்கும் போது ஏன் விக்கணும்?” என மதிதான் எடுத்து சொன்னாள்.
“நிஜமாவா, வேற வில்லங்கம் வராதே?” என பூர்ணிமா சந்தேகமாக கேட்க, “ஒரு பிரச்சனையும் வராதுமா” என தைரியமாக சொன்னான் ரவி.
எல்லாம் மருமகளால்தான் என இரண்டு மூன்று முறை சொல்லி சிலாகித்து விட்டே சென்றார் சீனு.
“இப்படித்தான் இவருக்கு யாராவது எடுத்து சொல்லணும், இல்லைனா இவரும் டென்ஷன் ஆகி நம்மளையும் படுத்தி வச்சிடுவார். அப்பாடான்னு இருக்கு, நான் கோயிலுக்கு போய்ட்டு வந்திடுறேன்” என சொல்லி தயாராக சென்று விட்டார் பூர்ணிமா.
மதி மட்டும் தன்னுடன் இருக்கையில், “ஹ்ம்ம்… பேசுங்க பேசுங்கன்னு நானும்தான் அப்பாகிட்ட சொன்னேன். நம்ம சைட் ஸ்டராங்னு தெரியும், இவர்தான் தேவையில்லாத டென்ஷன் எடுத்துக்கிட்டார். ஆமாம் இந்த லேடிஸ் சைக்கலாஜிலாம் எங்க போய் படிச்ச?” எனக் கேட்டான் ரவி.
“மாமா… நானே பொண்ணுதான், டவுட்டை பாரு!”
“ஆமால்ல நீ பொண்ணுல்ல?” என பார்வையிலும் வார்த்தை உச்சரிப்பிலும் குறும்பு வழிய சொன்னான்.
அவனை செல்லமாக முறைத்து விட்டு வேலையை தொடர ஆரம்பித்து விட்டாள் மதி.
கடை பிரச்சனை ஓய்ந்தாலும் ரிதியின் திருமண விஷயம் பற்றி தெளிவு ஏற்பாடாமலே இருந்தது.
சீனுவிடம் கேட்டால், “நானும் பயத்துலதான் இருந்தேன். ரவியோட கல்யாணம் அப்போ மாப்ளயோட பாட்டிக்கு சீரியஸாம், நல்ல விஷேஷத்துல ஏன் இதை சொல்வானேன்னு இருந்திட்டாங்க, வேற பிரச்சனை இல்லை. ரொம்ப ஃபோன்ல பேசிட்டு இருந்தா சண்டை சச்சரவு எல்லாம் சகஜம்தான், அண்டர்ஸ்டாண்டிங் வந்தா சரியாகிடும்” என சாதாரணமாகவே சொன்னார்.
ஆனாலும் ஸ்ரீதர் குடும்பம் மீது ரவிக்கு சந்தேகம். தங்கை பற்றிய கவலையிலேயே உழன்று கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து அவனுக்கு முருங்கைக்கீரை சூப் எடுத்து வந்து கொடுத்தாள் மதி.
அவன் வேண்டாம் என மறுக்க, “குடிங்கன்னு சொன்னா குடிக்கணும், வேணுமா வேணாமான்னு நான் கேட்கவே இல்லை” என்றாள் அவள்.
“உனக்கு வேணும்னா நீ குடி, உயிரை வாங்காம போ” என சத்தம் போட்டு விட்டான் ரவி.
சூப் இருந்த கிண்ணத்தை ஓரமாக வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். எப்போதும் இப்படி சீறி விட்டு அவனே தணிந்து போய் அவளை அழைப்பான். இன்று கால் மணி நேரமாகியும் அவளை கண்டு கொள்ளாமல் தங்கை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் அவனிடம் வந்த மதி, “இப்போ மூட் ஓகேவா? சூப் குடிக்கலாமா?” எனக் கேட்டாள்.
அவன் சலிப்பாக பார்த்தான். “குடிச்சிட்டு தெம்பா என்னை முறைக்கலாம்” என்றாள்.
“ஆறிப் போயிருக்கும் எனக்கு வேணாம்” என்றான். அலுக்காமல் சூடு செய்து எடுத்து வந்தாள். ஸ்பூன் கொண்டு அவனை பருக வைத்தாள்.
“ரிதிக்கும் ஸ்ரீதருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை போல. என்கிட்ட ஓபனா சொல்ல மாட்டேங்குறா” என்றான்.
“ஸ்ரீதர் அண்ணா வீட்ல பெரிய மாமாகிட்ட பேசிட்டுதானே இருக்காங்க”
“ஏதோ குழப்பம் மதி, விஷயம் புரியாம எனக்கு என்ன செய்யன்னு தெரியலை” என புலம்பினான்.
“என்ன சிடுமூஞ்சி ஆனாங்க, என்னை மாதிரி இருந்தாதான் என் கஷ்டம் புரியும். அதிலேயும் கொடுமைக்கு கொடுக்கிற பாரு இந்த சூப், வாய்ல வைக்க முடியலை” என்றான்.
சட்டென ஒரு வாய் பருகியவள், அவனை பாவமாக பார்த்தாள். கீரையில் கசப்புத் தன்மை அதிகமாக இருந்திருக்கும் போல, ரிதிதான் தயாரித்தது, அடிக்கடி அவள் செய்யும் சூப் வகைதான், இன்று என்னவோ சொதப்பியிருந்தாள்.
மிச்சமிருந்த சூப்பை அவனுக்கு கொடுக்காமல் வைத்தாள்.
“ஆல்மோஸ்ட் குடிச்சிட்டேன், அந்த நாலு ஸ்பூன் சூப் வீணா போக வேணாம், ஊத்து வாய்ல” என்றான்.
அவள் பாவமாக பார்க்க, சிரித்தவன், “உடம்புக்கு நல்லதுதானே கொடு கொடு” என்றான்.
தராதவள், “ஒரு வாய் சாப்பிட்டதுமே சொல்றதுக்கு என்ன?” என்றாள்.
“நல்ல ஆளு. ரெஸ்ட் ரூம் போகணுமா? வர்றீங்களா?” எனக் கேட்டு அவனை கவனித்தாள். பின் அவனை ஹாலில் அமர வைத்து டிவி போட்டு கொடுத்து விட்டு, அறையை ஒதுங்க வைத்தாள்.
திடீரென மழை பெய்ய, காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை எடுக்க மாடிக்கு ஓடினாள் ரிதி, மதியும் சென்றாள்.
அவர்கள் துணிகளை எடுத்து முடிப்பதற்குள் மழை வலுத்து விட்டது. துணிகளுடன் அங்கிருந்த அறைக்கு சென்று அமர்ந்து விட்டனர்.
இருவரும் இயல்பாக பேசிக் கொll ஆரம்பித்தனர். தண்மதியின் காதல் கதையைத்தான் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டாள் ரிதி.
அப்படியே “என்ன அண்ணி, ஸ்ரீதர் அண்ணாகிட்ட பேசுறீங்களா இல்லையா? ஏதும் ஊடலா?” என விசாரித்தாள் மதி.
“அதெல்லாம் இல்லை அண்ணி” என தடுமாற்றத்துடன்தான் சொன்னாள் ரிதி.
“என்கிட்ட சொல்லக்கூடாதா அண்ணி?” என மதி கேட்டதுதான் தாமதம், அழுது விட்டாள்.
ரவியின் பெயரில் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் சரி செய்து கொள் என ஸ்ரீதரின் அம்மா சொல்லியிருந்தார் இல்லையா? அதை ரிதி, ஸ்ரீதருக்கு தெரிய படுத்திய போது, அவன் தன் அம்மா பேசியதை கண்டிக்காமல், பெரியவர்கள் அப்படித்தான் எனும் ரீதியிலேயே அவளிடம் பேசியிருக்கிறான்.
ஒரு கட்டத்தில், “என் சம்பளம், எங்கப்பா தர போற சொத்து எல்லாமே எனக்குத்தான், எனக்குன்னா நீயும் சேர்ந்துதான் அனுபவிக்க போற. இது என் சைட், உன் சைட்லேருந்து என்ன இருக்கு?” என கேட்டிருக்கிறான்.
ரிதி பகிர்ந்ததை கேட்ட மதி அதிர்ச்சியாக பார்த்தாள். “அவரை அவர் வீட்ல நல்லா மண்டை கழுவி விட்ருக்காங்க போல அண்ணி. முன்னாடிலாம் இப்படி பேச மாட்டார். ஆனா அடுத்தவங்க பேச்சை கேட்டு இப்படி பேசுறது இன்னும் தப்பில்லையா?” எனக் கேட்டாள் ரிதி.
“வேற என்ன பேசினாங்க?” என முழுவதையும் தெரிந்து கொள்ள முயன்றாள் மதி.