ரிதி தன் அம்மாவை பார்த்தாள். “அப்படிலாம் சும்மா ரூம் சாத்துவாளா மதி? அவளே திறக்கட்டும், நீ போகாத” என மகளிடம் சொல்லி விட்டார் பூர்ணிமா.
“ரொம்ப நேரமாச்சுங்கிறேன், நீ என்ன இப்படி சொல்ற? பகல் நேரத்துல கதவ சாத்திகிட்டு… பொண்டாட்டி புள்ளைய தள்ளி வச்சவனும் புள்ளைங்கள ஒழுங்கா வளர்க்க தெரியாத கெழவியும் வளர்த்த பொண்ணு வேற எப்படி இருப்பா?” என்றார் பாட்டி.
“அப்பயி! சும்மான்னு இருக்க மாட்டியா நீ?” என கடிந்தாள் பாரதி.
“கல்யாணம் ஆச்சுன்னா புருஷன் பொண்டாட்டி நடுவுல போய் தலைய கொடுக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. கதவு தொறக்குற வரை வெயிட் பண்ணுங்க, இல்லைனா படுத்து எந்திரிச்சு சாவகாசமா வாங்களேன், சாயந்தரமா ஆசீர்வாதம் பண்ணக்கூடாதுன்னு ஏதும் இருக்கா என்ன?” என்றார் பூர்ணிமா.
“என்னடி பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு?” என நொடித்தார் பாட்டி.
“எனக்கே மருமகள் வந்தாச்சு. இன்னும் உங்க மாமியார் தோரணைய காட்டிக்கிட்டே இருக்கலாம்னு நினைக்காதீங்க. நீங்க எப்ப தங்க காசு கொடுப்பீங்கன்னு ஏங்கிப் போய் ஒன்னும் ரவி மதியை கல்யாணம் பண்ணிக்கல. இந்த வீட்ல யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாத உரிமையான இடத்துல அவளை வைக்கணும்னு பண்ணியிருக்கான்” என மாமியாரிடம் சொன்ன பூர்ணிமா,
தனக்குள்ளாக பேசுவது போல சத்தமாகவே, “போன வாரம் அந்த கூத்து கட்டி அடிச்சிட்டு இப்ப தங்க காசு கொடுக்கிறாங்களாம் தங்க காசு! அவ்ளோ பேசினோம் இப்ப இந்த வீட்லேயே ரைட் ராயலா வந்து உட்கார்ந்திட்டாளேங்கிற கடுப்புல அடுத்த ட்ராமா ஸ்டார்ட் பண்ணியாச்சு” என்றார்.
அவமானமாக உணர்ந்த சொர்ணம், “என் புருஷன் இடத்துல கட்டியிருக்க வீடுடி இது? உன் மருமக என்ன அவளுக்கே மருமக வந்தாலும் இங்க என்னை தாண்டிதான் எவளுக்கா இருந்தாலும் உரிமை” என சத்தம் போட்டு விட்டு பக்கத்து வீட்டுக்கு நடையை கட்டிவிட்டார்.
மாமியார் மீதான கோவத்தில் பூர்ணிமாவுக்கு மூச்சு வாங்கியது.
“என்னாச்சு உனக்கு ஏன் இப்படிலாம் பேசுற, நல்ல நாள்ல அவங்க வாயை கிளறணுமா பூர்ணிமா? புது ஜோடிக்கு நல்ல நேரத்துல விருந்து வைக்கணும். வேலைய பாரு” என ஓர்ப்படியை ஆற்று படுத்தினார் கோசலை.
அவரிடமும் சரியாக பேசாமல் அடுப்பில் மும்முரமாக எதையோ கிளறினார் பூர்ணிமா. கோசலை தன் மகள்களை பார்க்க, ‘ஒன்றும் பேசாதே’ என கண்களை காண்பித்தனர் அவர்கள்.
சற்று நேரத்தில் அங்கு வந்தாள் மதி, ஏதோ அசாதாரண சூழல் என புரிந்தாலும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
ரிதி, தன் அண்ணனுக்கு தயாரித்திருந்த சூப்பை கொடுக்க, வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.
மதிய உணவு கூட அறையிலேயே சாப்பிட்டுக் கொண்டான் ரவி. இங்கு வந்து சாப்பிட வீம்பு காட்டிய அம்மாவை சீனுதான் போய் அழைத்து வந்தார்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் தண்மதிக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை பற்றிய பேச்சை எடுத்தார் கணேசன்.
“சிரமம்னு ஏதும் இல்லை மாமா. அவளுக்குனு உள்ள நகை லாக்கர்ல இருக்கு, கல்யாண செலவு சீர்வரிசைக்குன்னு எஃப் டில பணம் கெடக்கு” என்றார் கணேசன்.
“எல்லாம் அப்படியே இருக்கட்டும். என் பையன் மேல நம்பிக்கை வச்சு நீங்க பொண்ண கொடுத்தீங்க பாருங்க, அது போதும்” என்றார் பூர்ணிமா.
“லாக்கர்ல உள்ள நகையை இங்க உங்க பொறுப்புல கொடுத்திட்டா தேவலாம்னு தோணுது, அதை மட்டும் இந்த மாசத்துல ஒரு நாள் எடுத்து கொடுத்திடுறேனே” என கணேசன் சொல்ல, மகனிடம் கேட்டு விட்டு சொல்வதாக அந்தப் பேச்சை முடித்து விட்டார் சீனு.
சொர்ணம் பாட்டியின் முகமே சரியில்லை. வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் “என்னம்மா ஏன் எப்படியோ இருக்க, உடம்புக்கு ஏதும் முடியலையா?” என விசாரித்தார் சீனு.
அதற்காகவே காத்திருந்த பாட்டி, “எனக்கு இங்க என்ன மரியாதை இருக்கு? உன் பொண்டாட்டிக்கு மருமக வந்தாச்சாம், உன் மருமகளோட சேர்த்து எனக்கும் உன் பொண்டாட்டியே மாமியார் ஆகிட்டா” என ஆரம்பித்து விட்டார்.
கணேசன் எரிச்சலாக பார்த்தார். பிறகு பேசிக் கொள்ளலாம் என சீனு சொல்லியும் கேட்கவில்லை பாட்டி.
“வெளில சத்தமா இருக்கே மதி, என்னன்னு பார்த்திட்டு வா” என சொல்லி மனைவியை அனுப்பி வைத்தான் ரவி.
“உன் பொண்டாட்டி என்னை மதிக்கலைனா புதுசா இந்த வீட்டுக்கு வந்தவளும் அப்படித்தான் இருப்பா. இருப்பா என்ன இருப்பா… அப்படித்தான் இருக்கா. வீட்ல பெரிய மனுஷி நான், ரவிக்குதான் குனிஞ்சு நிமிர முடியாதுன்னா இவளாவது ஆசீர்வாதம் வாங்கினாளா? தாலி ஏறின அடுத்த நிமிஷம் ரூமுக்குள்ள அடைஞ்சாச்சு. நேத்திக்கு வரை ஒண்ட ஒரு இடம் இல்லை, இன்னிக்கு இந்த வீட்டுக்கு எஜமானி தோரணை காட்டுறா” என்றார் பாட்டி.
மதியால் இந்த சொற்களை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. கணேசனும் தன் அண்ணன் மகளைத்தான் பார்த்தார். அம்மாவை அதட்டினார் சீனு.
“இந்த மாதிரி பேச்செல்லாம் இங்க வேணாம், ரவிக்கு தெரிஞ்சா சும்மா விட மாட்டான் உங்களை” என அழுகையும் ஆத்திரமுமாக சொன்னார் பூர்ணிமா.
“என்னை யார் என்ன செய்வா? இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம். இப்படி அழுது அழுதுதான் என் மகனை கைக்குள்ள போட்டுக்கிட்டு பல வருஷமா எங்கள்ட்டேருந்து பிரிச்சு வச்ச, பெத்த தாயை கண்ணீர் விட வச்ச, அந்த பாவத்தைதான் இப்ப என் பேரன் சுமக்கிறான், இனியும் நாடகம் போடாத” என அபண்டமாக பேசி விட்டார் பாட்டி.
வேறு ஏதேனும் பேச்சுக்கள் என்றால் பூர்ணிமா திருப்பி கொடுத்திருப்பார், தன்னால்தான் மகனுக்கு இப்படி எனும் குற்றச்சாட்டு அவரை வெகுவாக பாதித்து விட்டது. அவர் அறைக்குள் சென்று விட, ரிதியும் கோசலையும் அவரை சமாதானம் செய்வதற்காக சென்றனர்.
பாட்டியின் பேச்சால் மதி சற்று தளர்ந்து போயிருந்தாள். ரவியின் அறையை அடிக்கடி பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றாள். பாட்டி அங்கேயும் சென்று ஏதேனும் துஷ்டமாக சொல்லி விடுவாரோ என அவளுக்கு பயம்.
பாரதியும் ஜோதியும் பாட்டியை கடிந்து கொள்ள, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார் சீனு. ஸ்ரீதரின் வீட்டிலிருந்து யாரும் இன்று இங்கு வரவில்லை, கடைப் பிரச்சனை என ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவருக்கு இப்போது பட படப்பாக இருந்தது.
“இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் பயந்துதான் மதியை இங்க கல்யாணம் பண்ணி கொடுக்க ரொம்ப யோசிச்சேன் நான். இவங்க குணத்தை இனி யாராலேயும் மாத்த முடியாது, ஆனா என் பொண்ணை பேச இவங்களுக்கு உரிமை இல்லை, நீங்கதான் கண்டிச்சு வைக்கணும்” என சீனுவிடம் வெளிப்படையாக சொல்லி விட்டார் கணேசன்.
சீனுவுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது.
“உங்கள்ட்டலாம் எனக்கென்ன பேச்சு?” என எழுந்த சொர்ணம் நேராக ரவியின் அறைக்கு சென்று விட்டார். அவரின் பின்னாலேயே ஓடிச் சென்ற மதி, அவருக்கு முன் கணவனின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.
மதியை கண்டு கொள்ளாமல் பேரனின் கையை பிடித்துக்கொண்டு அவனது அம்மா பற்றியே குறை படிக்க ஆரம்பித்தார் பாட்டி. ‘இது என் புருஷன் இடம்’ என சொல்லும் போது மட்டும் மதியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ரவியிடம் சொன்னார்.
“அம்மாகிட்டேயும் இப்படி சொன்னியா அப்பயி? ஏன் தாத்தா இடத்துல நாங்க வீடு கட்ட கூடாதா?” எனக் கேட்டான் ரவி.
“உன் அம்மா எனக்கு இங்க உரிமை இல்லைனு சொல்றா? எல்லா உரிமையும் இதோ உன் புது பொண்டாட்டிக்கு வந்திடுச்சாம்” என்றார் பாட்டி.
“இவர்கிட்ட வந்து இதெல்லாம் சொல்லணுமா நீங்க? அப்புறம் பேசலாமே” என தயங்கினாலும் சொல்லி விட்டாள் மதி.
“பார்த்தியா எப்படி என்னை வெளில போக சொல்றான்னு, உரிமையை நிலை நாட்டுறாளாம்!” என்றார் பாட்டி.
தான் பேசிக் கொள்வதாக மனைவிக்கு ரவி சாடை காட்ட, அவளும் மேலே ஏதும் பேசாமல் இருந்து கொண்டாள்.
“உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு. அதை நீயே அடிக்கடி சொல்லிக்கணுமா அப்பயி? ஆனா எம்மேல எல்லா உரிமையும் மதிக்கு இருக்குங்கிறது நிஜம்தானே அப்பயி?” எனக் கேட்டான் ரவி.
“நியாயமா பேசுவேன்னு உன்கிட்ட சொன்னேன் பாரு. உம்மேல இவளுக்கு உரிமைனா என்கிட்ட ஆசி கூட வாங்க மாட்டாளா? எவ்ளோ நேரமா ரூம் சாத்தியே வச்சிருந்தா, நான் காத்து கெடந்தேன் தெரியுமா? நீ எனக்கு ஒரே பேரன்டா, உன்னை ஆசீர்வாதம் செய்ற உரிமை கூட எனக்கில்லையா?” பாட்டி இந்தப் பேச்சை விடுவதாக இல்லை.