மதியத்திற்கு மேல் மன்னிப்பு கேட்டு அவளுக்கு செய்தி அனுப்பி வைத்தான். அவள் ‘இப்போ கால் பண்ணவா?’ என செய்தி வழியே அனுமதி கேட்க, வேண்டாம் என சொல்லி விட்டான்.

மாலையில் வங்கியில் வந்து நிற்பாள் என அவன் நினைத்திருக்கவில்லை. வாடிக்கையாளர் சேவை நேரம் முடிந்திருக்க, அருகிலுள்ள காபி ஷாப் அழைத்துச் சென்றான். அவன் கடிந்து கொள்ள ஆரம்பிக்க, காதுகளை மூடிக் கொண்டாள் அவள்.

அவனும் இயல்பாகி அவளுக்கு மட்டும் காபி சொன்னான். அவனுக்கு வெளியில் எது சாப்பிடவும் பயமாக இருக்க, தனக்கு எதுவும் வேண்டாம் என சொல்லி விட்டான்.

வாயை பிடுங்கி ஸ்ரீதர் – ரிதி திருமண விவகாரங்களை அறிந்து கொண்டு விட்டாள். அப்போதும் சுதாரிப்பாக அப்பா பேசியதை அவளிடம் சொல்லவில்லை அவன்.

“ரிதி அண்ணி ஸ்ரீதர் அண்ணாவோட ரெண்டு வருஷம் பழகியிருக்காங்க, தப்பானவங்கன்னா தெரிஞ்சிருக்காதா? அதையே யோசிக்காதீங்க. உங்க முகமே சரியில்லை, இப்படி உங்களை பார்க்க நல்லாவே இல்லை” என்றாள்.

“என்னவோ மதி, மைசூர்ல கடை சாப்பாடா தண்ணியா என்னன்னு தெரியலை, உடம்புக்கு சேரல, இன்னும் ரிலீஃப் ஆகல” என்றான்.

“ஹாஸ்பிடல் போகலையா நீங்க?” எனக் கேட்டவள் உடனே செல்லலாம் என்றாள். மீண்டும் வங்கிக்கு செல்ல வேண்டும் என்பதை சொன்னவன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கிளினிக் செல்வதாக அவளுக்கு உறுதி தந்தான்.

“நல்ல ஆளு நீங்க? உங்க கூட எங்க வெளியூர் போனாலும் அடுப்பு பண்டம் பாத்திரம்னுதான் போகணும்” என்றாள்.

“காய்கறி மளிகை சாமான்லாம் விட்டுட்ட?” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, வருங்கால மாமியாருக்கு அழைத்து விட்டாள் அவள்.

இரவில் ரவியை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என தன் அம்மாவிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தவளை சிறு நகைப்புடன் பார்த்திருந்தான்.

பேசி விட்டு வைத்தவள், என்னவென கேட்டாள்.

“மைசூர் போயிட்டு வந்ததுல இருந்து உன்கிட்ட நிறைய ஹார்ஷா பேசிட்டேன், சண்டை போடாம ஸாஃப்ட்டா  டீல் பண்றியே, ச்சே எவ்ளோ நல்ல பொண்ணுன்னு யோசிச்சேன்”

“அப்படிலாம் விட மாட்டேன், அடி வாங்குற அளவுக்கு தெம்பாகுங்க, சேர்த்து வச்சுக்கிறேன்” என மிரட்டினாள்.

அவளை சந்தித்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவளுக்கு கேப் புக் செய்து கொடுத்து விட்டு வங்கிக்கு சென்று விட்டான்.

இரவில் மருத்துவரை பார்த்தான் ரவி, சாதாரண இரைப்பை குடல் தொற்று என சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.

அடுத்து வந்த நாட்களில் அவனது வயிற்று தொந்தரவும் சரியாகி விட்டது.

சீனு கடையை யாருக்கு பேசியிருந்தாரோ அவர் வெளியூர் சென்றிருந்ததால் அந்த விஷயம் அப்படியே இருந்தது.

இடையில் ஒரு நாள் மாலையில் சின்ன மகனின் வீடு வந்த சொர்ணம் பாட்டி, “இவ கல்யாணம் முடியட்டும், ரொம்ப நாள் கடத்தாம ரவிக்கும் செய்யணும், ரேஷ்மி ஜாதகம் இவனுக்கு பொருந்தி வருதா பார்க்கலாம்” என ஆரம்பித்தார்.

“அவ சின்ன பொண்ணு ம்மா, வேற பேசு” என பேச்சை மாற்றப் பார்த்தார் சீனு.

“ஜோதி வீட்டுக்காரருக்கு இஷ்டம் போல, ஒத்த பொண்ணுதானே அவங்களுக்கு, ரவிக்கு கொடுத்தா அவங்களுக்கு நல்லதுதானேன்னு யோசிக்கிறாங்க, வயசு பத்தி அவங்களுக்கு கவலை இல்லாதப்போ உனக்கென்ன?” எனக் கேட்டார் சொர்ணம்.

“அப்புறம் பேசலாம்னா விடும்மா” என சீனு எரிச்சல் பட, கோவம் கொண்டு சென்று விட்டார் சொர்ணம்.

இந்தப் பேச்சு அன்றே ரவியின் காதுக்கும் வந்து விட்டது. இத்தனை நாட்கள் நன்றாக சென்ற வாழ்வில் திடீரென என்ன இப்படி ரகம் ரகமாக பிரச்சனைகள் வந்து சேர்கிறது? என உள்ளுக்குள் அலுத்துக் கொண்டான்.

ஞாயிற்றுக் கிழமை தண்மதியை சந்திப்பதாக இருந்தான். நீண்ட தூரம் பயணிக்க அலுப்பாக இருக்க, காணொளி அழைப்பில் பேசி ஒப்பேற்றினான்.

“நீங்க ஆளே சரியில்லை மாமா, நிஜமாவே டாக்டர்கிட்ட போனீங்களா இல்லையா?” என சத்தம் போட்டாள் மதி.

“சாதாரண பிரச்சனைக்கு ஏன் பார்க்க வந்தடான்னு அடிச்சு தொரத்தி விட்டுட்டார் டாக்டர்” என வேடிக்கையாக அவன் சொல்ல, அவளும் சமாதானம் கொண்டு சற்று நேரம் பேசியிருந்தாள். அப்படியே அவன் உறங்கி விட, தொந்தரவு செய்யாமல் இணைப்பை துண்டித்து விட்டாள் அவள்.

அன்றைய தினம் அவனுக்கு சோர்வாகத்தான் சென்றது. அடுத்த நாள் எழ முடியாத அளவுக்கு உடல் வலி, சோர்வு என எல்லாம் சேர்ந்து கொண்டது. அப்பாவுடன் மருத்துவமனை சென்றான்.

இரத்தப் பரிசோதனைகள் செய்தனர், பயப்பட எதுவுமில்லை, வைரஸ் காய்ச்சல்தான் எனக் கூறி ஊசி போட்டு அனுப்பி விட்டனர். அன்று விடுப்பு எடுத்துக் கொண்டான்.

மாத்திரை போட்டுக் கொண்டு உறங்கி விழித்தவன், கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அந்த தனியார் நிறுவனத்திலிருந்து வந்த தவறிய அழைப்பை காண்பித்தது திரை. பரபரக்கும் மனதோடு அழைத்து பேசினான். ஸ்ரீதர் பற்றிய நல்ல விதமான ரிப்போர்ட் கொடுத்தனர்.

இந்த சில நாட்களாக அவனுக்குள் ஓடிய போராட்டம் முடிவுக்கு வந்தது.  கண்களை மூடிக் கொண்டு அப்படியே படுத்து விட்டான்.

நிதானத்திற்கு வந்த பின் ஓய்வறை செல்வதற்காக எழுந்தான். அவனால் சரியாக நடக்கவே முடியவில்லை. எப்படியோ முயன்று சென்று திரும்பியவன் படுக்கையை அடையும் முன் விழுந்து விட்டான்.

சத்தம் கேட்டு ரிதிதான் ஓடி வந்து அண்ணன் எழ உதவினாள். அப்படி ஓய்ந்து போனவனாக அவனை அவள் பார்த்ததே இல்லை. தன்னால்தான் அலைச்சல், அதில்தான் உடம்புக்கு இழுத்துக் கொண்டான் என நினைக்கும் போதே அவளுக்கு அழுகை வந்து விட்டது.

“ஹேய் ஒன்னும் இல்லடா, எனர்ஜி இல்லாம டயர்ட். படுத்தே இருந்ததுல கால்ல பிளட் சர்க்குலேஷன் இல்லை போல” என்றான்.

அண்ணனை நன்றாக படுக்க வைத்து, அவனது கால்களை பிடித்து விட்டாள் ரிதி.

“கால் பிடிக்கிற என் தங்கச்சிய பார்க்க கண்ணுக்கு நிறைவா இருக்கு” என கிண்டல் செய்தான்.

“ஒரு வாரமா என்கிட்ட நீ சரியாவே பேசல, ஸ்ரீதர்கிட்ட நானும்தான் சண்டை போட்டேன், ரெண்டு வருஷம் பழகிட்டு வேணாம்னா சொல்ல முடியும்? அதுக்காக கோச்சுக்கிட்டீல?” என குறை பட்டாள் ரிதி.

அவள் விஷயத்தில் தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வில்தான் அவளை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை சொல்லாமல், “அப்படிலாம் இல்லை, உடம்பு நல்லாயில்ல ரிதி” என்றான்.

“ஒரு வாரம் லீவ் போடு ண்ணா”

“உன் கல்யாணத்தப்போ நிறைய லீவ் போடணும்”

“சும்மா சொல்லாத, இதே வருஷம்தானே உனக்கும் கல்யாணம், அப்ப லீவ் வேணும்னு சொல்லு” என வம்பிழுத்தாள்.

அவன் சிரிக்க, “அப்ப அதானா? அடப்பாவி அண்ணா!” என்றாள்.

“ரெண்டுக்கும்தான்” என அவன் சொல்ல, அண்ணனும் தங்கையுமாக பேசிக் கொண்டிருந்தனர்.