மாலையில் அப்பாவிடம் பேசலாம் என ரவி நினைத்திருக்க, அவன் வீடு வந்து சேரவே நேரமாகி விட்டது. சீனுவோ நேரமாகவே சாப்பிட்டு உறங்கப் போய் விட்டார்.

ரவிக்கு நல்ல சோர்வு, இன்னும் வயிற்றுத் தொந்தரவு இருந்தது. அப்போது அழைத்த தண்மதி, “நான் நினைப்பில இருக்கேனா இல்லையா?” எனதான் ஆரம்பித்தாள்.

“மறந்து போயிட்டேன், என்னன்னு சொல்லு” என எரிச்சலாக கேட்டான்.

அதிர்ந்து போனவள் அமைதியாக இருக்க, “லைன்ல இருக்கியா என்ன? விஷயத்தை சொல்லு” என்றான்.

“ஏதாவது பிராப்லமா? ஏன் கோவமா இருக்கீங்க மாமா?” என உள்ளே போன குரலில் கேட்டாள்.

“நேர்ல சொல்றேன் மதி” என்றவன் சில நொடிகள் சென்று, “ஸாரி” என்றான்.

நான்கு வருட பழக்கத்தில் எப்போதாவது அவளை அவன் அதட்டியிருக்கிறான், திட்டியிருக்கிறான், கடிந்து கொண்டிருக்கிறான், ஆனால் தொனி அவளது மனம் நோகும் படி இருக்காது.

“மதி…” என அவன் அழைக்க, அந்த அழைப்பு கூட எரிச்சல் குரலிலேயே இருந்தது.

“சும்மாதான் கூப்பிட்டேன். நாளைக்கு பேசலாம்” என சொல்லி வைத்து விட்டாள்.

நடு இரவில் அவனுக்கு காய்ச்சல் வர, கைவசம் இருந்த மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விட்டான்.

அடுத்த நாள் காய்ச்சல் இல்லை, ஆனால் உடம்பு என்னவோ போலிருந்தது. ஆனாலும் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு சென்றான். சீனு அவனுக்கும் முன் வெளியில் சென்று விட்டார்.

அன்றைய இரவும் அப்பாவை சந்திக்க முடியாமல் போகவும்தான் தன்னை அவர் தவிர்க்கிறாரோ என்ற சந்தேகம் அவனுக்கு பிறந்தது.

அடுத்த நாள் காலையில் அவரது அறைக்கே சென்று விட்டான். சீனு கண் விழித்ததே மகனின் முகத்தில்தான். அவர் பேசாமல் இருக்க, இன்னும் பதினைந்து நாட்களில் பணம் கைக்கு வரும் என்றான் ரவி.

“உன் பணம் தேவையில்லை, எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என வீம்பாக சொன்னார் அவர்.

“உங்க சொத்து முழுக்க ரிதிக்கு கொடுங்க, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ரிதி நல்லா வாழணும்ங்கிறது மட்டும்தான் என் கவலை. ஸ்ரீதர் பத்தி இன்னொரு முறை விசாரிக்கலாம்னு தோணிச்சு”

“நீ இதுல தலையிடாத சொல்லிட்டேன்” இப்போதும் மகனை பேச விடாமல் கோவப் பட்டார் சீனு.

“உங்க கோவத்துக்காகலாம் பின் வாங்க மாட்டேன் ப்பா, உங்களுக்கு பொண்ணுன்னா எனக்கு கூட பொறந்தவ, உங்களை மாதிரி பொறுப்பு கடமைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், எனக்கு அவளும் அவ சந்தோஷமும் முக்கியம். வீடு வாங்குறது அது பாட்டுக்கும் நடக்கட்டும், கல்யாணத்துக்கு முன்னாடி ரிதி ஸ்ரீதர் கூட நல்லாருப்பான்னு எனக்கு நம்பிக்கை வந்திருக்கணும், அவசர பட்டு இன்விடேஷன் கொடுக்கிற வேலை ஆரம்பிக்க வேணாம், வெயிட் பண்ணுங்க”

“உனக்கு தெரியாம உன்னை கேட்காம ஸ்ரீதரை மாப்பிள்ளை ஆக்கினேனா நான்?”

“நானும் சாதாரண மனுஷன்தான் ப்பா, எங்கேயோ எதுலேயோ சறுக்கலாம், ஆனாலும் சரியான நேரத்துக்கு முன்ன சுதாரிச்சிருக்கேன்”

“உன் தங்கச்சிக்கு என்னடா பதில் சொல்வ?”

“கஷ்டம்தாம்ப்பா, கல்யாணம் ஆன பின்னாடி அவளுக்கு பதில் சொல்றது அதை விட கஷ்டம்”

“டேய் பயமுறுத்தற மாதிரி பேசாத”

“எனக்கு சந்தேகம்தான் ப்பா, அதுக்காக அப்படியே இருக்கணும்னு இல்லை, தெளிவு பண்ணிட்டா நிம்மதியா இருக்கலாம்” என அவன் சொல்ல, அச்சத்தோடு பார்த்தார் சீனு.

“ரிதிக்கு நல்ல வாழ்க்கைதான் கிடைக்கும், கவலை படாதீங்க”

“அதில்லடா…” என்றவர் மகன் மீதான கோவத்திலும் தனக்கிருந்த வீம்பிலும் அவசர பட்டு ஸ்டேஷனரி கடையை விலை பேசி விட்டதை திணறி திணறி சொன்னார்.

ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகனை மாறி விட்டதாக குற்றம் சாட்டிய அவரில்தான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

தாடை இறுக அமர்ந்திருந்தான் ரவி. தான் ஸ்ரீதரின் அப்பாவுக்கு வாக்கு கொடுத்து விட்டதையும் தயக்கத்தோடு தயக்கமாக சொல்லி விட்டார்.

“விட்டா கழுத்துல கத்தி வச்சு கேட்டு வாங்குவார் போல. நீங்க சும்மா அவருக்கு கொடுத்த பிராமிஸ் எல்லாம் பெருசு பண்ண வேணாம். அந்தாளு என்ன பெரிய…” என்றவன் அப்பாவின் கண்டனப் பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டான்.

சற்று நேரம் பொறுத்து, “நீ இப்ப பேசவும் எனக்கே சந்தேகம் வருதுடா ரவி” என்றார் சீனு.

“இன்னும் என்னலாம் மறைச்சு வச்சிருக்கீங்க ப்பா?” என கோவமாக கேட்டான்.

“இப்படி கோவ பட்டெல்லாம் ஒன்னும் ஆக போறதில்லடா, நீ அப்பவே ஒழுங்கா விசாரிச்சியா, இல்லை ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்தியா? என்னைய மட்டும் குறை சொல்லாத” என அவரும் கோவப் பட்டார்.

ரவிக்கு சில நாட்களாகவே தங்கை விஷயத்தில் ஏதோ கவனக்குறைவாக நடந்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு, அதனால் இப்போது அப்பா பேசவும் எதிர்த்து பேசவில்லை.

கடையை யாருக்கு விலை பேசியிருக்கிறார் என கேட்டறிந்து கொண்டவன், “இப்ப விற்கிறதா இல்லைனு முடிவா சொல்லிடுங்க” என்றான்.

“அட்வான்ஸ் வாங்கிட்டேன் டா” என மெல்லிய குரலில் சொன்னார் சீனு.

“திருப்பி கொடுத்திடலாம் ப்பா, நாள் கணக்குல வட்டி போட்டு கொடுங்க. பிரச்சனை ஆகுற மாதிரி இருக்கும்னா சொல்லுங்க, நானும் வர்றேன்” என்றான்.

“இல்லையில்லை நானே பேசிக்கிறேன், சரியா வரலைனா அப்பறம் என்னன்னு பார்க்கலாம்” என அவர் சொல்லவும், அவனும்  வெளியேறி விட்டான்.

ஸ்ரீதர் மற்றும் அவனது குடும்பத்தை பற்றி நன்றாக அறிந்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றைத்தான் அணுகியிருக்கிறான். ஸ்ரீதர் பற்றி திருப்திகரமாக ரிப்போர்ட் கிடைத்தாலே போதும் எனதான் நினைக்கிறான். அதுவரை அவனது மனம் நிலையிலிருக்க போவதில்லை.

நேற்றைய இரவும் தண்மதியிடம் அதிகம் பேசியிருக்கவில்லை. இப்போது அழைத்து நல்ல விதமாக அவளிடம் இரண்டு நிமிடங்கள் பேசியவன் வார இறுதியில் கண்டிப்பாக பார்க்கலாம் என சொல்லி வைத்தான்.

ஆனால் தண்மதிக்கு மனம் தவிப்பாக உணர்ந்தது, ஒரு முறை அவனை நேரில் பார்த்து விட்டால் சமாதானமாக இருக்கும் போலிருக்க, மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

“இப்போதானே வச்சேன், என்ன மதி?” எனக் கேட்டான்.

“ஈவ்னிங் பேங்க் பக்கத்துல எங்கேயாவது வரவா? ஒரு டென் மினிட்ஸ்…” என கெஞ்சலாக கேட்டாள்.

“ரெண்டு மாசத்துல ரிதிக்கு கல்யாணம்னு தெரியாதா உனக்கு? மனுஷன் இங்க உள்ள வேலையை பார்ப்பேனா உன்னை பார்ப்பேனா? இதென்ன சின்ன புள்ள மாதிரி பேச்சு?” என சினந்து கொண்டான்.

“உங்களுக்கு என்னாச்சு மாமா? எல்லாம் ஓகேதானே?”

“சும்மா பேச்சை வளர்த்தாத மதி, நாம அப்புறம் பேசலாம்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.