சிந்தை நிறை தண்மதியே -14

அத்தியாயம் -14

இரண்டு நாட்கள் மைசூரில்தான் தங்கியிருந்தான் ரவி. இடத்தை துப்புரவு செய்து, நண்பனின் உதவியுடன் புரோக்கர்கள் சிலரை பார்த்து, பேசி என அவனுக்கு நேரம் ஓடியதால் தண்மதியிடம் சரியாக பேச சந்தர்ப்பமே வாய்த்திருக்கவில்லை.

புரோக்கரை சந்திக்கவென சென்ற ஒரு இடத்தில் சரியான சாப்பாட்டுக் கடை அமையவில்லை. சைவம், அசைவம் என இரண்டும் கிடைக்கும் கடைதான் இருந்தது, அவனது நண்பன் அசைவம் சாப்பிட, அவன் சைவம் சாப்பிட்டுக் கொண்டான்.

அன்று இரவே அவனுக்கு வயிறு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டது. அடுத்த நாள் அவனது நண்பனுக்கு ஒன்றும் செய்யவில்லை, ரவிதான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டான்.

எப்போதடா வீடு போய் சேர்வோம் என நொந்து போய்தான் திருச்சிக்கு வந்து சேர்ந்தான்.

ஸ்ரீதரின் அப்பா சீனுவிடம் அவரை புகழ்ந்து பேசியிருந்தார். மகளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் தகப்பன், சாமர்த்தியசாலியாக இருந்து பிள்ளைகள் இருவரையும் ஆளாக்கி விட்டீர்கள், மகன் விருப்பத்தின் பெயரில்தான் நாங்கள் திருமண பேச்சை ஆரம்பித்தோம் என்றாலும் சிறந்த சம்பந்தி கிடைத்து விட்டாரென அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாம். சொந்தங்களும் அப்படித்தான் சொல்கின்றனராம்.

அதில் சீனு நன்றாகவே மயங்கி விட்டார், தன் சம்பந்தியின் பார்வையில் அப்படியே உயர்வான நபராகவே இருக்க வேண்டும் என ஆவல். திருமணம் முடிந்த கையோடு தான் வாங்கித் தரப் போகும் வீட்டுக்குத்தான் மணமக்கள் செல்வார்கள் என வாக்குறுதி கொடுத்து விட்டார்.

அந்த நேரத்து புகழ்ச்சி போதையில் வார்த்தையை விட்டு விட்டவருக்கு வீட்டில் சொல்ல பயம், எப்படியும் தன் வார்த்தைபடிதான் நடக்க போகிறது என இருந்தார்.

ரவி வீட்டுக்கு வந்ததுமே, இட விற்பனை பற்றித்தான் விவரங்கள் கேட்டார்.

“இப்போதானேப்பா சொல்லிட்டு வந்திருக்கேன், நல்ல ஆளா வரவும் சொல்வாங்க, உடனே எப்படிப்பா நடக்கும்?” என சோர்வாக சொன்னான் ரவி.

“என்னடா யாருக்கோ வந்த விருந்துன்னு பேசுற?”

“சும்மா ஏதாவது சொல்லாதீங்க ப்பா”

“நமக்கு ஒரு மாசத்துக்குள்ள பணம் கிடைச்சாதானேடா உதவியா இருக்கும்? ஏற்கனவே இடம் வாங்க ரெடியா இருக்க யாரையாவது பார்த்து பேசி முடிக்கிறதுக்கு என்ன? சும்மா சும்மா அங்க போய் வந்து இருக்க முடியுமா?” என கோவித்துக் கொண்டார் சீனு.

“ப்பா… நம்ம அவசர பட்டா விலை குறைச்சலாதான் கேட்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?”  எனக் கேட்டான் ரவி.

“தரகர்கிட்ட பணத்தை கூட்டி கொடுத்தா, ஏற்கனவே இடம் பார்த்திட்டு இருக்கவங்ககிட்ட நேக்கு போக்கா அவன் பேசிப்பான். நமக்கு அவசரம்னு தரகர் சொல்லாம, வாங்க போறவனக்கு எப்படி தெரியும்? நல்ல டிமாண்ட் இருக்கு சீக்கிரம் முடிக்கணும்னு அவன் பேசி முடிச்சு தந்திருப்பான். உன்னை அனுப்பினதே தப்பு, நான் போயிருக்க வேண்டியது”

“போக வேண்டியதுதானே ப்பா, ஏன் என்னை அனுப்பி வச்சீங்க?”

“நடக்கிறது உன் தங்கச்சி கல்யாணம், பொறுப்பே இல்லாம பேசுற, என்னவோ சேஞ்ச் தெரியுது உன்கிட்ட, சரியில்லை சொல்லிட்டேன்”

“என்ன சரியில்லை?”

“யாரோ இன்ஃப்ளூயன்ஸ் பன்றாங்க உன்னை, அதுக்கெல்லாம் இடம் தராதன்னு சொல்றேன்”

“என்ன… என்ன ப்பா சொல்ல வர்றீங்க?” கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டான் ரவி.

“சொன்ன வேலையை ஒழுங்கா முடிச்சிட்டு வராம என்கிட்ட கேள்வி கேட்காத”

“நீங்க புரியற மாதிரி பேசுங்க முதல்ல”

“என்னடா புரியனும் உனக்கு? கல்யாண தேதி ஃபிக்ஸ் ஆயாச்சு, இன்னும் பத்து நாள்ல இன்விடேஷன் வைக்க ஸ்டார்ட் பண்ண போறோம். சீக்கிரம் வீட்டை வாங்கி ரெடி பண்ணி கொடுத்தாதானே நமக்கு பெருமையா இருக்கும்?”

“நாம ட்ரஸ்ட் பண்ற அளவுக்கு அங்க உள்ள புரோக்கர்ஸ் நமக்கு பழக்கமானவங்க இல்லை, டபுள் கேம் பிளே பண்ணினா என்ன செய்றது? யார் எப்படின்னு ஓரளவுக்காவது தெரிஞ்சாதான் நீங்க சொல்ற மாதிரி செய்ய முடியும்? வீடு வாங்கி தரப் போறோம்னா போறோம்தானே? மேரேஜ்க்கு முன்னாடியே செய்யணும்னு என்ன இருக்கு? அதை கூட அவங்க டிமாண்ட் பண்றாங்களா?”

“நீ அவங்கள கெட்டவங்கன்னு முடிவு பண்ணிட்டு அதே கண்ணோட்டத்துல பேசாத”

“அவங்க நல்லவங்கனு மட்டும் தயவுசெஞ்சி சொல்லிடாதீங்க”

“தப்பு ரவி, கெட்டவங்க வீட்லதான் ரிதிய கல்யாணம் பண்ணி தரப் போறோமா நாம?”

“அதென்னவோ உண்மைதான் ப்பா, ஸ்ரீதரும் அப்படியிருந்திட கூடாதுங்கிறதுதான் என் கவலை. ஏதோ தப்பா போகுதோன்னு… ப்ச்… எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, நான்…”

“நீ எதுவும் சொல்ல தேவையில்லை, இந்த கல்யாணம் நடக்கிறதுல உனக்கு விருப்பம் இல்லையா? என்ன யோசிக்கிற நீ? என்ன பிரச்சனை? அவங்க கேட்கலைனா கூட என்கிட்ட இருக்கிறத உனக்கும் ரிதிக்கும் சமமாதான் கொடுக்கிறதா இருந்தேன்”

“என்ன மீன் பண்றீங்கப்பா? ரிதிக்கு செய்ய நான் தயங்குறேன்னா?”

 “எனக்கு தெரியலை, எப்பவுமே சட்டு சட்டுன்னு எல்லாத்தையும் பார்க்கிற நீ இந்த விஷயத்துல வேணும்னே டிலே பண்ற மாதிரி இருக்கு, இதை நீயா செய்யல, அந்த பொண்ணு சொல்லித்தான்…”

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, “அப்பா!” என அதிர்ந்தான் ரவி.

“இல்லைனு சொல்றியா? எப்ப அந்த இடம் சேல்ஸ் ஆகி எப்ப பணம் கைக்கு வரும், எப்ப வீட்ட ரெஜிஸ்டர் பண்றது சொல்லு? பேசாம கடைய விக்கிறேன் நான், என் பொண்ணு கல்யாணம் எனக்குத்தான் கடமை இருக்கு” என்றவர் நிற்காமல் சென்று விட்டார்.

 வயிறு சுருட்டி சுருட்டி வலிக்க, மனமும் வேதனை கொள்ள, அப்படியே படுத்து விட்டான் அவன்.

இடம் விற்பனையாவதில் தாமதம் ஏற்படலாம் என்பது ரவிக்கு தெரியாதா? வீட்டிற்கு முன் பணம் கொடுத்து உறுதி செய்தாகி விட்டது, எதற்காக நட்டத்திற்கு இடத்தை விற்று அவசரம் அவசரமாக வீட்டை வாங்க வேண்டும்? வாங்கித்தான் ஆக வேண்டும் அப்பா தீர்மானமாக சொன்னாலும் விற்பனை செய்யும் இடத்தில் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ளும் வசதியுள்ளது, இல்லா விட்டாலும் இவன் வேறு வகையில் ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிட்டிருக்கிறான்.

சீனு மகனிடம் பொறுமையாக ஆலோசனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உடல் நோவும் பயணக் களைப்புமாக இருந்தவனிடம் வாய்க்கு வந்ததை பேசி விட்டு சென்று விட்டார்.

அப்பா தன்னிடம் பேசியதையெல்லாம் அம்மாவிடம் அவன் பகிர்ந்திருக்கவில்லை. இடம் சம்பந்தமாக மட்டும் சொன்னான். அவர் கலக்கம் கொள்ள, “அதுக்காக வீடு வாங்கறது தடை ஆகாது மா, அந்த டென்ஷன்லாம் எடுக்காம ரிலாக்ஸா இரு” என அவன் சொல்லவும் உடனே தெளிந்து விட்டார்.

மகனுக்கு முடியவில்லை எனத் தெரிந்து மாத்திரை கொடுத்து கை வைத்தியமாகவும் ஏதோ செய்தார் பூர்ணிமா.

அம்மாவின் கைப் பக்குவத்தில் கஞ்சியும் ரசமுமே அவனுக்கு அமிர்தமாக இருந்தது. அரை நாள் வீட்டில் ஓய்வாக இருந்தவன், ஓரளவு நன்றாக உணரவும் மதியமே வங்கிக்கு சென்று விட்டான்.