சத்தத்தில் எழுந்து வந்து விட்ட சீனு மனைவியை முறைத்தார்.
“எப்ப பாரு என்ன தூக்கம், வாங்க” என அவரையும் இழுத்தார் பூர்ணிமா.
ரிதி தன் இடத்தை அப்பாவுக்கு கொடுத்து விளையாட சொல்ல, அவரோ நன்றாக சொதப்பினார்.
“அப்பா…” என பொய்யாக அழுதாள் ரிதி.
“ஹேய்! அவர் அவரோட மிஸஸ் வின் பண்ணனும்னு வேணும்னே செய்றார், அவரை தள்ளிட்டு நீ வா” என்ற ரவியும் அடுத்து சொதப்பினான்.
“அப்பாவை சொல்லிட்டு நீ என்ன ண்ணா பண்ற, நீயும் உன் ஆளுக்காக மிஸ் பண்றியா?” எனக் கேட்டு விட்டாள் ரிதி.
சீனு மகளை உற்று நோக்க, விழித்த ரிதி ஓடியே சென்று விட்டாள். மதியிடம் ஸ்ட்ரைக்கர் காய்ன் தள்ளி வைத்த ரவி, அப்பாவை பார்த்து சம்பந்தமே இல்லாமல் சிரித்து வைத்தான். மனைவியை கேள்வியாக பார்த்தார் சீனு.
“கடைக்கு டைம் ஆகுதுங்க” என பூர்ணிமா சொல்ல, சீனுவும் ஏதும் சொல்லாமல் வெகு அமைதியாக அறைக்கு சென்று விட்டார். பூர்ணிமாவும் கணவரிடம் சென்றார்.
மதி பயத்துடன் ரவியை பார்த்தாள். “ரிலாக்ஸ் மதி, பின்னாடிதான் ரிதி இருப்பா, நீ போ” என அவளை அனுப்பி வைத்தவன் அப்பாவின் விசாரணையை எதிர் கொள்வதற்காக காத்திருந்தான்.
ரவி ஒன்றும் விடலைப் பையனோ, விவரம் இல்லாதவனோ, பொறுப்பில்லாதவனோ இல்லையே. அவனது விருப்பத்தை மீறி தன்னால் ஏதும் செய்ய இயலாது என்று சீனுவுக்கும் தெரியும். மதி மீது வேறு வெறுப்புணர்வுகளும் அவருக்கு இல்லை.
அம்மா, அண்ணியை நினைத்தெல்லாம் அவருக்கு யோசனையாக இருந்தது. ஆகவே அப்போதைக்கு மகன் விஷயத்தை தள்ளி வைக்க முடிவு செய்து விட்டார்.
பத்து நிமிடங்களில் தயாராகி வந்த சீனு மகனை கோவமாக பார்த்து விட்டு ஒன்றும் கேளாமல் கடைக்கு சென்று விட்டார். கணவரை வழியனுப்பி வைத்து விட்டு வந்த பூர்ணிமா இருக்கையில் ஆசுவாசமாக அமர்ந்தார்.
“அதில்லடா, இப்பவே தெரிய வேணாம்னு பார்த்தேன், எங்க அவளை?” என கோவமாக எழுந்த அம்மாவை அங்கேயே இருக்க சொல்லி விட்டான்.
“எல்லாம் நல்லதுக்குதான், விடு பார்த்துக்கலாம்” என அவன் சொல்லும் போதே, கணேசன் வந்து விட்டார்.
அவரிடம் அவன் விஷயத்தை சொல்ல, “மதியை இங்க அழைச்சிட்டு வந்தது உங்க ஐடியாதானே? ஏன் இப்படி?” என நெற்றியை பிடித்துக்கொண்டார்.
“அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன், உங்கள்ட்ட எந்த வில்லங்கமான கேள்வியும் கேட்க மாட்டார், சம்மதமான்னு கேட்டா சரின்னு மட்டும் சொல்லுங்க மாமா” என்றான் ரவி.
சீனு எப்படி இதை எடுப்பார் என்றே கணேசனால் கணிக்க முடியவில்லை.
“மதி எங்க வீட்டுக்குதான் வர போறா, எதுக்கும் கவலை படாதீங்க” என்றார் பூர்ணிமா.
“மதி அப்பாம்மா இல்லாதவன்னு நினைக்க வேணாம், எப்பவுமே நான் விட்டு கொடுத்திட மாட்டேன்” என்றார் கணேசன்.
“இதெல்லாம் நீங்க சொல்லணுமா?” என்ற பூர்ணிமா தேநீர் போட சென்றார்.
ரிதியும் மதியும் கூட ஹால் வந்தனர். அனைவரும் தேநீர் பருகியதும், மதியை கிளம்ப சொன்னார் கணேசன்.
“நான் கொண்டு போய் விடுறேன் மாமா” என எழுந்தான் ரவி.
“வேணாம், கல்யாணம் முடிவாகுற வரை வேற பிரச்சனை வேணாமே?” என்றார் கணேசன. ரவியால் மறுத்து பேச முடியாத படி இருந்தது அவரின் தொனி. மதியின் முகம் வாடிப் போயிருக்க, அவனுக்கு என்னவோ போலானது.
இங்கிருந்து விடுதி தூரம் என்பதால் கேப் புக் செய்து கொடுத்தார் கணேசன். சித்தியிடம் சொல்லிக் கொள்ளவில்லை என மதி தயங்க, “அவ தூங்குறா, நான் சொல்லிக்கிறேன்” என சொல்லி விட்டார் கணேசன்.
மதி புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் வெளியில் போய் வருவதாக சொல்லி ரவியும் கிளம்பி விட்டான்.
காரில் பத்து நிமிடங்கள் கூட பயணித்திருக்க மாட்டாள் மதி. வழியிலேயே அவளை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு விட்டான் ரவி.
“கேப்லேயே போயிருப்பேன் மாமா, ஏன் அலையுறீங்க?” என கடிந்து கொண்டாள் மதி.
“நல்லா ஸ்டார்ட் ஆன நாள் கொஞ்சம் ஷாக்ல முடிஞ்சிருக்கு உனக்கு, அப்படியே விட மனசில்லை” என அவன் சொல்லவும் அவளின் மனம் அவன்பால் கரைந்து போனது.
விடுதி பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். அப்பா பற்றிய கவலையெல்லாம் வேண்டாம் என தைரியம் சொன்னான்.
அவள் ஏதோ சொல்ல தயங்கினாள். அவன் வற்புறுத்தி கேட்கவும், “இல்லை மாமா, அந்த ரேஷ்மி பொண்ணு… உங்களை… எனக்குத்தான் அப்படி தோணுதா தெரியலை, கோச்சுக்காம கேட்கணும்” என பீடிகை போட்டாள். ரேஷ்மி ஆர்வமாக ரவியை பார்ப்பதை மதியால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன், “நீ கவனிச்சிருக்கப்போ நான் நோட் பண்ணிருக்க மாட்டேனா? சின்ன பொண்ணு அவ, விவரம் தெரியலை. கொஞ்சம் பக்குவமா ஹேண்டில் பண்ணனும், நான் பார்த்துக்கிறேன்” என்றான். அவளுக்கும் அப்பாடா என இருந்தது.
“என்னவோ பயந்திட்டே இருப்பியே, என் வீடு உனக்கு செட் ஆகும்னு இப்பவாவது நம்பிக்கை வந்திச்சா?” எனக் கேட்டான்.
இல்லை என்று எப்படி சொல்வாள்? இப்படியொரு குடும்பம் தனக்கே தனக்கென கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை விட, எப்போது இங்கேயே நிரந்தரமாக வருவோம் என்ற ஏக்கம்தான் அவளிடம் அதிகமாக இருந்தது.
அதை அவள் சொல்ல, “நாலு வருஷமா லவ் பண்றோம்னு பேருதான், என்னத்த லவ் பண்ணினோம்? அதனால இப்ப ஜாலியா லவ் லைஃபை என்ஜாய் பண்ணுவோம், டைம் போறதே தெரியாது” என கேலியாகவே அவளுக்கு சமாதானம் சொன்னான்.
தண்மதி நல்ல தெளிந்த மனநிலைக்கு வரவும் நிம்மதியுடன் அவளை விடுதியில் விட்டுச் சென்றான் ரவி.
இரவு உணவின் போது அப்பாவாக ஏதாவது கேட்பார் என காத்திருந்தான் ரவி. அமைதியாக சாப்பிட்டு முடித்த சீனு நேராக அறைக்கு சென்று விட்டார். அப்பாவின் கவலையான முகம் அவனையும் கவலைப்படுத்தியது. தான் நினைத்தது போல அப்பா இதற்கு எளிதாக சம்மதிக்க மாட்டாரோ என்றெல்லாம் யோசித்தான்.
பூர்ணிமாதான் கணவரிடம் தனிமையில் நயமாக பேசி விவரத்தை சொன்னார். அவர் ஏதும் சொல்லாமல் இருக்க, மதியின் சிறப்புகளை பற்றி சொல்லி மகனுக்கும் வருடக் கணக்காக விருப்பம் என்பதை தெரிவித்தார்.
“அம்மா, பையன், பொண்ணுன்னு எல்லாரும் கூட்டு சேர்ந்துகிட்டு என்னை அந்நியன் ஆக்கிருக்கீங்க!” என அவர் திட்ட, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார் பூர்ணிமா.
“உன்னைத்தான்… ஏதாவது பேசு, நான் இல்லாததையா சொல்றேன்?” என கோவமாக கேட்டார் சீனு.
“ஏன் நீங்க உங்கம்மான்னு வரும் போது என்னைத்தானே அனுசரிச்சு போன்னு சொல்றீங்க, என்னிக்காவது எனக்காக ஏத்துகிட்டு உங்கம்மாவை பேசியிருப்பீங்களா? என் பசங்க என் கூட க்ளோஸா இருந்தா தப்பு சொல்வீங்களா?” என எகிறிய பூர்ணிமா, கடந்த கால கதைகளை எடுத்து விட்டார்.
“ஏன் அவ கல்யாணத்துல என்ன பிரச்சனை?” என கவலையோடு கேட்டார் பூர்ணிமா.
ஸ்ரீதரின் வீட்டில் அதிகமான எதிர் பார்ப்புகள் இருந்தன. நிச்சயம் வரை நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தனர், இன்று சீனுவை அவரது கடையில் வந்து சந்தித்திருக்கிறார் ஸ்ரீதரின் அப்பா.
நகரத்தின் மையத்தில் கட்டி முடிக்கப் பட்டு விற்பனைக்கு காத்திருக்கும் வீடு பற்றிய விவரங்களோடு வந்திருந்தார். அதை உங்கள் மகள், மருமகன் வாழ என வாங்கி கொடுத்து விடுங்கள் என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார், உயர் ரக கார் இருந்தால் வசதியாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.