ரத்தினத்துக்கு கொஞ்சமாக உதறல் எடுத்தாலும், மறைத்துக் கொண்டு, “என்னையவே மிரட்டுறீங்களா? நான் யார் தெரியுமா?” எனக் கேட்டு அந்தப் பக்க அரசியல் அடாவடி பேர்வழி ஒருவனது பெயர் சொல்லி அவனுடைய உறவுக்காரன் என்றான்.

“இவர் அசந்த நேரம் பார்த்து நகையை உன் கையால எடுத்தது எல்லாம் சிசிடிவில ரெகார்ட் ஆகியிருக்கு, நீ எவனா வேணா இரு, அவனுக்கும் இதுல சம்பந்தம் இருக்கான்னு போலீஸ் வந்து விசாரிக்கும்” என  ரவி மிரட்டியும் கல் போலவே இருந்தான் ரத்தினம்.

கணேசனை பார்த்த ரவி, “இவன் நல்லவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான், கேட்டா கொடுத்திடுவான்னு சொன்னீங்க, ஆனா ஆள் அப்படி இல்லை போலையே, நம்ம நேரத்தை ஏன் வேஸ்ட் பண்ணிக்கிட்டு… ஜெயில் பார்க்க ஆசை படுறான்னா அந்த ஆசைய ஏன் கெடுத்துகிட்டு? நாம கிளம்பலாம், வாங்க ஸார்” என்றான்.

கணேசனும் தன் பங்குக்கு கொஞ்சம் நயமாக பேசினார். வழிக்கு வந்து விட்ட ரத்தினம் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு விட்டான். அவனிடமிருந்து நகையை வாங்கிக் கொண்ட ரவி, பணத்தையும் எடுத்து வரச் சொன்னான்.

“அது எதுக்கு சார், அதுதான் நகை கொடுத்திட்டேனே” என்றான் அவன்.

“உன்னை மாதிரி கஸ்டமர் எங்களுக்கு வேணாம். பணத்தை கொடு, நாளைக்கு பேங்க் வந்து நகையை வாங்கிட்டு போ” என தீர்மானமாக சொன்னான் ரவி.

“அதெப்படி சார், பணமும் இல்லாம நகையையும் எடுத்திட்டு போவீங்களா?”

“சொல்றதை செய்றியா இல்லை போலீஸ்க்கு கால் பண்ணவா?” என அதிராமல் அதட்டினான் ரவி.

“சும்மா சும்மா போலீஸ் பேரை சொல்லாதீங்க சார், சான்ஸ் கிடைச்சா எவனா இருந்தாலும் ஒரு கை பார்ப்பான்தான், வேலை செய்றப்போ கொறட்டை விட்டா கொள்ளை போவும்தான்” என சொல்லிக் கொண்டே உள்ளே சென்றான் ரத்தினம்.

ரவி கணேசனை முறைக்க, பார்வையால் கெஞ்சினார் அவர்.

தயக்கத்தோடே பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தான் ரத்தினம்.

அந்நேரம் பார்த்து ரவிக்கு தெரியாத இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. ஏற்காமல் அப்படியே விட்டு, பணத்தையும் நகையையும் கணேசன் கையில் ஒப்படைத்து சரி பார்க்க சொன்னான்.

அவர் சரியாக இருப்பதாக சொல்லவும், ரத்தினத்திடம் “நகையை கொடுக்காம ஏமாத்துறதுக்கு நாங்க ஒன்னும் நீ இல்லை, காலைல நகைக்கு ஒரு நாள் வட்டி என்னவோ அதை கட்டிட்டு மீட்டுட்டு போ” என்றான் ரவி.

“நான் ஏன் வட்டி கட்டணும்? ஏதோ தப்பு பண்ணிட்டேன், ஒத்துக்கிட்ட பிறகும் இப்படி செஞ்சா நான் பொல்லாதவன் ஆகிடுவேன்” என கோவப் பட்டான் ரத்தினம்.

கண்டு கொள்ளாத ரவி வெளியேற திரும்பினான். அவன் எதிரில் போய் நின்ற ரத்தினம், “இப்பவே நகையையும் பணத்தையும் என்னால பிடுங்கிக்க முடியும், போலீஸ் வரும் போது நான் இந்த ஊர்லேயே இருக்க மாட்டேன், அப்படியே போலீஸ் புடிச்சாலும் கவலை இல்லை, எப்படி வெளில வர்றதுன்னு எனக்கு தெரியும், ஜாக்கிரதையா இல்லாம வேலை பார்த்த உங்களுக்கும் ஆப்புதான், ஆனதை பாருங்க” என கையை மடக்கிக் கொண்டு பேசினான்.

அவனது கையை வளைத்து பிடித்து இறுக்கினான் ரவி. இன்னொரு கையிலும் ஒரு தட்டு தட்டி விட்டான். லேசாக அடித்தது போலிருந்தாலும் வலியில் துடித்தான் ரத்தினம்.

அவனை அனாயாசமாக தள்ளி நிறுத்தி கணேசனோடு வெளியேறினான் ரவி.

மீண்டும் வங்கி வந்து சேரும் வரை வாயே திறக்கவில்லை கணேசன்.  வங்கியிலும் அனைவரும் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். விஷயம் வெளியில் தெரிந்தால் வங்கியின் நற்பெயர் கெட்டுப் போகும், நம்பிக்கையின்மை உருவாகும், மேலிடத்திலிருந்தும் பலவித நெருக்கடிகள் உருவாகும் என பலவித யோசனைகள் அவர்களுக்குள்.

கணேசன் விஷயத்தை பகிரவும் அனைவரின் முகங்களிலும் நிம்மதி.

கண்காணிப்பு கேமராவும் பழுது சரி செய்யப் பட்டிருந்தது, அதை சோதித்து பார்த்து உறுதி செய்து கொண்டான் ரவி.

இது அனைவருக்கும் ஒரு பாடம், அதிக கவனத்தோடு இருங்கள் என பொதுவாக சொல்லி விட்டு, கணேசனை அறைக்கு அழைத்து இன்னும் கொஞ்சம் டோஸ் கொடுத்து விட்டே  ஓய்ந்தான்.

“இனிமே ரெண்டு மடங்கு கவனமா இருப்பேன் சார்” என்ற கணேசன் தயக்கமாக பார்த்தார்.

என்னவென ரவி கேட்க, “அந்த ரத்தினம் எதிர்ப்பட்டா இனி பார்த்து நடந்துகோங்க ஸார்” என அக்கறையுடன் எச்சரித்தார்.

“தப்பு பண்றவன்தான் பார்த்து பார்த்து நடக்கணும், நேர் வழில போறவன் எதையும் எவனையும் பார்க்க அவசியம் இல்லை ஸார், கஸ்டமர்ஸ் வரும் போது எவ்ளோ பிஸின்னாலும் ஒவ்வொருத்தரா அட்டெண்ட் பண்ணுங்க, அவங்க வேலை கம்பீளீட்டா முடிஞ்ச பிறகுதான் அடுத்த கஸ்டமரை கூப்பிடுறீங்க, என்ன?”

“சரிங்க ஸார்”

“சரி நீங்க போங்க” என சொல்லி அவரை அனுப்பி வைத்தான் ரவி.

வெளியில் வந்த கணேசனுக்கு மற்ற ஊழியர்களும் அறிவுரை சொன்னார்கள். அவருக்கு நெருக்கமான பாலைய்யா, “எல்லாரும் ஏதாவது தப்பு விடறதுதான், இப்ப சான்ஸ் கிடைச்சதுன்னு எல்லாரும் ஒன்னு கூடிக்கிட்டு உனக்கு அட்வைஸ் பண்றதை பார்த்தியா?” என்றார்.

“அதையெல்லாம் பெருசாவே எடுத்துக்கல ஸார், நம்ம ரவி ஸார் பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன். நானும் என்னமோன்னு நினைச்சேன், ரத்தினம் பயலுக்கு பயம் காட்டிட்டார்” என்றார் கணேசன்.

“இடத்துக்கு தக்க ஆளுக்கு தக்கன்னு மாறிடுவார் போல, இப்படி இல்லைனா இந்த காலத்துல பொழைக்கிறது கஷ்டம்” என்றார் பாலைய்யா.

“இதே பழைய மேனேஜர்னா என்னாகியிருக்கும், நினைக்கவே முடியலை. என் வேலையே போயிருந்திருக்கும்”

“இவரும் சாதாரணம் கிடையாது. கவனக்குறைவுன்னு அவர் நம்பினதால சார்ட் அவுட் பண்ணி கொடுத்திருக்கார், பிளான் போட்டு செஞ்சிருந்தா விட்ருக்க மாட்டார்”

“அட இது ஏதோ என் கெட்ட நேரம் இப்படி ஆகி போச்சு, வேணும்னா செஞ்சேன்?”

“அட நானும் அதைத்தானப்பா சொன்னேன், உன்னை பத்தி தெரியாதா?”என சமாதானம் செய்தார் பாலைய்யா.

அன்றைய இரவு ரவி வீடு வர மிகுந்த தாமதமாகி விட்டது. அந்த பகுதியிலேயே வீட்டில் ஒரு பெண்மணி மாதம் குறிப்பிட்ட தொகை என பேசி இவனுக்கு மூன்று வேளையும் உணவு சமைத்து தருகிறார்.

ரவிக்கு வெளி சாப்பாடு சுத்தமாக ஒத்து வராது, ஓரளவு சமையல் தெரியும் என்றாலும் செய்ய ஈடுபாடு இல்லை. இந்த வீட்டுக்கு குடி வந்த போதே ஓனர்தான் இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றார், அவருக்கு தெரிந்த பெண்மணிதான். ரவிக்கும் சாப்பாட்டின் சுவை பிடித்து விட சரியென சொல்லி விட்டான்.

கீழே ஓனர் வீட்டில் கேரியரில் சாப்பாடு கொடுத்து சென்றிருந்தார் அந்த பெண்மணி. அதை வாங்கிக் கொண்ட ரவி முதல் தளத்தில் உள்ள தனது வீடு வந்து சேரவும், அவனது அம்மா அழைத்து விட்டார்.

அவரிடம் பேசி விட்டு வைத்தவனுக்கு மாலையில் தான் ஏற்காமல் விட்ட அழைப்பு நினைவு வந்தது.

நல்ல பசியாக இருக்கவும் அப்போதும் அந்த எண்ணுக்கு அழைக்காமல் ஆடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டு முடித்தான். சாவகாசமாக அமர்ந்தவன் நேரத்தை பார்க்க, பத்து மணியாகியிருந்தது.

ரவியின் பெரியம்மா மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்க, தொடர்பு கொள்ள  இவனுடைய எண்தான் கொடுக்கப் பட்டிருந்தது. அது சம்பந்தமாக இருக்குமோ என்ற எண்ணத்தில், காலையில் மறக்காமல் அந்த எண்ணுக்கு அழைத்து பேச வேண்டும் என தீர்மானித்துக் கொண்டு உறங்க சென்றான்.

காலையில் ஏழு மணி போல காஃபி பருகிக் கொண்டே கைப்பேசியை எடுத்தான் ரவி. அதற்குள் அந்த எண்ணிலிருந்தே அவனுக்கு அழைப்பு வந்தது.