Advertisement

அத்தியாயம் 4
பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரமாகியும் வித்யுத் அவளது அலுவலக அறைக்கு வராததால், சரி மைதானத்தில் இருப்பான் என்று அங்கு செல்ல அங்கும் அவனைக் காணோம். ஒருவேளை கார் அருகே நின்று கொண்டிருப்பானோ என்று எண்ணி அங்கே சென்றால், அங்கே ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது, பங்கு பெற்றிருந்தவர்கள், முகம் சிவந்தவாறு கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்த ஆரவ், அவனது தாத்தா, மூக்கு விடைக்க கொஞ்சம் கோபத்தோடு விது. (இவனுக்கு கோபம் ஏன்?)
இவளது வருகை உணர்ந்ததும், மூவரும் கப் சிப். அதை கவனிக்காதவாறு, “விது, போலாமா?”, என்று சொல்லி நறுமுகை அவளது கார் அருகே சென்று கதவைத் திறக்க..
“எஸ்க்யூஸ் மீ, உங்க கிட்ட பேசலாமா?”, என்றார் ஆரவ் தாத்தா, ச்சே இத்தென்ன அவருக்கு பெயர் இல்லையா, ம்ம்.. தாமோதர் தாமோதர்தான்.
“ம்ம். சொல்லுங்க”
“விது சென்னை போறானாம், ஆரவ்-வும் போகணும்னு அடம் பிடிக்கிறான், வந்து.. if you don’t mind உங்களால கூட்டிட்டு போக முடியுமா?”, மிகுந்த தயக்கமிருந்து அவரது பேச்சில், ஆனால் அவரை அப்படி பேசும்படி தூண்டியது ஆரவ்-வின் முகம் என்பது நறுமுகைக்கு தெளிவு.
அதற்குள் விது நறுமுகையின் அருகே வந்து, “ம்மா, ப்ளீஸ் மா அவனையும் கூட்டிட்டு போலாம்மா, அதான் அவங்க தாத்தாவே கேக்கறாங்கல்ல? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்மா”, என்று கையைப் பிடித்து உலுக்கினான்.
“ம்ச். விது சும்மாயிரு”, மகனுக்கு ஒரு அரட்டு போட்டு, தாமோதரைப் பார்த்து “ஏன்?” என்றாள் மொட்டையாக.
அந்த ‘ஏன்’-ல், அத்தனை கேள்விகள். ஏன் உங்களால் கூட்டிப்போக முடியாதா? ஏன் அவனோடு நேரம் செலவழிக்க வேறு யாரும் இல்லை? ஏன் என்னோடு அனுப்ப உத்தேசித்தீர்கள்? ஏன் அவனது தாயார் / பெற்றோர் என ஆயினர்? இன்னும் பல ஏன்கள், தொக்கி நின்றன.
ஆனால், சாமத்தியமாக அந்த உள் விபரங்களை தவிர்த்து, “அவனுக்கு விது கம்பெனி பிடிச்சிருக்கு, இந்த நாலு நாள் அவன் கூட இருக்க முடியாதுன்னதும் ஒரு மாதிரி அப்செட் ஆயிட்டான், வந்து.. ஒருவேளை இவனை உங்களோட கூட்டிட்டு போக விருப்பமில்லன்னா.. விது-வை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்களேன், நான் பாத்துக்கறேன், வீட்ல சர்வண்ட்ஸ் இருக்காங்க, ஸ்விம்மிங் பூல் இருக்கு, நல்லா என்ஜோய் பண்ணுவாங்க”
“எப்படி..? ப்ளே ஸ்டோர், கம்ப்யூட்டர் கேம்ஸ் இல்லனா நீச்சலிடிக்க போறது, அதானே, நீங்க சொன்ன என்ஜாய்மென்ட்ஸ்?”, என்று நறுமுகை வெடுக்கென  பேசிவிட.. அவர் முகம் குழம்பி கன்றியது.
‘வல்லி, நீ பேசுவது தப்பு, இது அவர்கள் வீட்டு விவகாரம், அவர்கள் பிள்ளை, அவர்கள் வசதிப்படி, அவர்கள் இஷ்டம்போல வளர்க்கிறார்கள் இதில் நீ என்ன குறை சொல்வது?’, என்று மனம் இடித்துரைக்க..
“ஸாரி, விது-வை கூட்டிட்டு வர்றதா friends கிட்ட சொல்லிட்டேன், உங்களுக்கு ஓகேன்னா ஆரவ்-வையும் அழைச்சிட்டு போக எனக்கு அப்ஜெக்ஷன் இல்ல”, என்றாள் யோசனையாக.
தாமோதருக்கும் தயக்கம்தான் ஆனாலும்.., பேரன் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து, “ரொம்ப thanks. உங்க பிளைட் எதுன்னு சொன்னீங்கன்னா நான் அவனுக்கு புக் பண்ணிடுவேன்”, என்றார் ஆரவ்-வை பார்த்தபடி. பெரியவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆரவ் விது இருவரும் பளிச்சென சிரித்து கட்டை விரலை தூக்கிக் காட்டி மகிழ்வைத் தெரிவித்தனர்.
‘ம்ம். வாலு, செமயா அடம் பிடிச்சிருக்காங்கபோல. எப்படி போறோம்ங்கிறது வரைக்கும் ஆரவ்-கிட்ட சொல்லியிருக்கான்’, மனதுள் நினைத்து, “காலைல சிக்ஸ் தர்ட்டி இண்டிகோ-ல புக் பண்ணியிருக்கேன், , ரிட்டர்ன் டீடெயில்ஸ் உங்களுக்கு மெசேஜ் பண்றேன், உங்க நம்பர்…?”
கொடுத்தார், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஆரவ் டிக்கெட் வந்துவிட, அதை நறுமுகையின் அலைபேசிக்கு அனுப்பி வைத்தார், “காலைல ஃபைவ்-கெல்லாம் ஏர்போர்ட் வந்துடுங்க, வந்து எனக்கு கால் பண்ணுங்க, ஓகே?”, என்று விட்டு கிளம்ப நினைக்க,
“ஒன் மோர் திங், தினமும் ஈவ்னிங் செவென் ஓ கிளாக் அவனுக்கு போன் பண்ணலாமா?”, என்றார் சங்கடமாக.
“யெஸ், ஈவ்னிங்-ன்னு இல்ல எப்போவேணா போன் பண்ணுங்க, பசங்க என் பக்கத்துலயேத்தான் இருப்பாங்க”, என்றாள் அவரது கவலை புரிந்தவளாக. பின்னே, திடீரென பேரனை அடுத்தவருடன் அனுப்புவதென்றால் பலப்பல சந்தேகங்கள் வருமே? பள்ளிப் பிள்ளைகளை ஒரு பிக்னிக் / சுற்றுலா அழைத்துச் செல்ல.. பெற்றோர்களின் விதவிதமான கேள்விகளை சந்தித்த வரலாறை தந்தை சொல்லிச் சொல்லி மாய்ந்ததைக் கேட்டவளாயிற்றே? எனவே தாமோதரிடமிருந்து விடை பெறும்போது சின்ன புன்னகை கூட முகத்தில் எட்டிப்பார்த்தது.
அன்று வீட்டிற்கு சென்ற வித்யுத்-திற்கு படுக்கையில் உறங்கும்வரை தலைகால் புரியவில்லை, அவனது உடைகள் அடுக்கவும், ஆரவ்-விற்கு மேட்ச்-சாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொன்றாக எடுத்து வைக்கும்போது நறுமுகையின் போனை வாங்கி ஆரவ்-விற்கு அழைத்து, ஒரேடியாக தொணதொணத்தான்.
பீச், ஹிக்கிம்பத்தெம்ஸ், ம்யூஸியம், பிர்லா பிளானட்டோரியம்,  லைப்ரரி, மால், ஐஸ் ஸ்கேட்டிங் என்று இருவரது பட்டியலும் நீளமாகிக் கொண்டே சென்றது. “விது நாம நாலு நாள்தான் அங்க இருக்கப்போறோம்”, என்று அம்மா சொல்ல, “நா….லு நாள்,  போர் டேஸ் மாம், போர்ட்டி எயிட் பிளஸ் போர்ட்டி எயிட் ம்ம் நைண்ட்டி சிக்ஸ் ஹார்ஸ்.. “, என்று உற்சாகத்தோடு, பிரயாணத்தை திட்டமிட்ட நறுமுகைக்கே நேரக் கணக்கு சொன்னான் மகன்.
மதிம்மாவிடமும் ரங்கப்பாவிடமும் ஆரவ்-வும் சென்னை செல்லும் தகவலை சொல்லி, விடிகாலை நான்கு மணிக்கே தயாராகி நின்றான், வித்யுத். ரங்கேஸ்வர் மகள், பேரன் இருவரையும் விமான நிலையத்தில் இறக்கி விட்டு, “அடுத்த வீட்டுப் பிள்ளையை கூட்டிட்டு போற, ஜாக்கிரதையா பாத்துக்கோ”, என்று மகளுக்கு அறிவுறுத்தி வீடு சென்றார்.
அடுத்த பத்து நிமிடத்தில் ஆரவ் வந்து விட, “ஹாய் ..”என்று விது அவனை கையசைத்து வரவேற்றான். தாமோதர் நறுமுகை அருகே வந்து, “தப்பா எடுத்துக்க கூடாது, இதுல 20கே இருக்கு, அண்ட் ஒரு டெபிட் கார்ட்,  பின் நம்பர் தனியா ஒரு சிட்-ல எழுதி கவர்ல இருக்கு,  ஆரவ் செலவுக்கு, இல்லல்ல பசங்க செலவுக்கு”, என்றார் வேண்டுதல் குரலில்.
மறுப்பு தெரிவிப்பதுபோல தலையசைத்து, “ப்ளீஸ், நோ. டிக்கெட் என்னவோ நீங்க புக் பண்ணிடீங்க, எனக்கு ஆரவ்-ன்னால எதுவும் அதிக செலவு வந்துடப்போறதில்ல”, என்ற நறுமுகை, “ஒன்னு பண்ணுங்க நெக்ஸ்ட் மந்த் லீவ்-க்கு நீங்க ஆரவ்-வையும் வித்யுத்-தையும் கூட்டிட்டு திருச்சி புல்லா  சுத்தி காமிங்க, இதுக்கு சரியாயிடும், இது ஆரவ்-கு மட்டும் சந்தோஷமான ட்ரிப் இல்ல, என் பையனுக்கும் தான். அவன் இவ்ளோ எஸ்சைடட்-டா நா பாத்ததே இல்ல”, சிரித்தபடி பிள்ளைகள் இருவரின் தோளில் கைபோட்டு வி. நி. உள்ளே செல்ல திரும்ப…
“ஒன் மினிட்.. வித்யுத் அம்மா, ம்ச்..  உங்க பேர்…?”
“நறுமுகை இல்லனா வல்லி”.
“வல்லி, இது ஈஸியா இருக்கு, அவங்கப்பா வீகென்ட் போன் பண்ணி ஆரவ் கூட பேசுவான் உங்க நம்பரை தரலாம் தானே? “,
“யா குடுங்க நோ ப்ராப்ளம்”,
“ஒன் மோர் திங், ஆரவ் கொஞ்சம் அடமண்ட், ஏதாவது வேணும்னா ரொம்ப பிடிவாதம் பிடிப்பான்”, என்ற தாமோதரின் புருவ சுழிப்பில் பேரனைப் பற்றிய வருத்தம் + கவலை.
“ம்ம். கவலைப்படாதீங்க நான் பாத்துக்கறேன்”, என்று ஆறுதலாக கூறி விடைபெற்றாள். வித்யுத் ஆரவ் இருவரையும் கூட்டிக்கொண்டு வானூர்தி நிலையத்திற்குள் சென்று, பிள்ளைகளை தாமோதரைப் பார்த்து கையசைத்து பை சொல்ல வைத்து, மூவருமாக விமானம் ஏறினார்கள்.
இரண்டு மணி நேரத்தில் சிங்கார சென்னையின் காலை போக்குவரத்து நெரிசலில் நறுமுகை, வித்யுத் ஆரவ் சென்ற கால் டாக்சி லாவகமாக வளைந்து நெளிந்து இவளது குடியிருப்பு வளாகத்தை வந்தடைந்தது.
நறுமுகை தான் சென்னை வந்துவிட்டதை ஆன்ட்டியிடம் தெரிவிக்க, அலைபேசியில் முயற்சிக்க அது வீணே அடித்து ஓய்ந்தது. சரி எப்படி இருந்தாலும் அவர்கள் வீட்டினைக் கடந்துதான் இவளது வீட்டிற்கு செல்ல வேண்டும் ஆதலால் நேரிலேயே தகவல் சொல்லிவிடலாம் என்று அங்கே சென்றாள்.
அந்த பக்கத்து வீட்டு பெண்மணியின் வீடு கலகலவென திருமண வீட்டிற்குண்டான லட்சணத்துடன் இருந்தது, வீட்டு வாயிலில் பந்தலிட்டு, மாவிலை தோரணத்தோடு புதுப் பொலிவுடன் இருந்தது. எப்போதும் அமைதியாக, காரோ இருசக்கர வாகனமோ செல்லும் சப்தம் தவிர எதுவும் ஒலிக்காத அந்த மேல்தட்டு குடியிருப்பு அடுக்ககம், இந்த இவர்கள் வீட்டு திருமணத்தால் நிறம் மாறியிருந்தது.
நறுமுகைக்கே அவர்கள் வீடு வாசலில் கிடந்த செருப்பு ஜதைகளைப் பார்த்து சற்று திகைப்புதான், திருமணத்திற்கு இன்னமும் மூன்று தினங்கள் உள்ளனவே? அதற்குள்ளாகவா இவ்வளவு விருந்தினர்கள் வந்து விட்டனர்? என்ற எண்ணம் மனதோரம் எழத்தான் செய்தது. அதற்குள் இவளது வரவை யாரோ சொல்ல, வெளியே வந்த அந்த ஆன்ட்டி, “ஹே.. வல்லி, வந்துட்டியா? வா வா, இவங்கதான் உன் பசங்களா? வாங்கடா உள்ள வாங்க”, (மிக) உற்சாகமாக  நறுமுகையின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
பிள்ளைகள் கூட்டத்தினை பார்த்து தயங்கி நிற்க.., “அடி சிம்னி..  உன் குட்டிகளை அனுப்பி, இவங்களோட விளையாட சொல்லு”, என்று அவரையே போலிருந்த ஒரு அம்மணிக்கு உத்தரவிட்டார். அநேகமாக அவரது தங்கையாய் இருக்கும், நறுமுகையை சோஃபாவில் அமரவைத்து, “நேர இங்கதான வர்ற? முதல்ல காஃபி குடி”, என்று கேட்டு (சொல்லி?), அவள் பதில் சொல்லும் முன்  “ரூதி காஃபி கொண்டாம்மா, அப்படியே செந்திலை வரச்சொல்லு, இந்த பசங்க ரெண்டு பேருக்கும் பால்”, உள்ளே ஆர்டர் கொடுத்து…, “பால் குடுப்பீங்கல்லடா?”, இல்லையென்றால் நிச்சயமாக குடிக்க வைப்பேன் என்ற அவரது த்வனியில், ஆரவ்-வும் வித்யுத்தும்  மண்டையை எல்லா பக்கமாகவும் உருட்டினர்.
ட்ரேயோடு ஒரு பெண்மணி வர, “சிம்னி நீயே வந்துட்டியா? கொடு கொடு”
“இவ என்னோட ரெண்டாவது தங்க, சிந்தாமணி, மும்பை டெலிபோன்ஸ்-ல பெரிய வேலைல இருக்கா, ரூதி-னு சொன்னேனே அவ என் ஓரகத்தி, கடைசி மச்சினனோட பொண்டாட்டி, அவன் (மச்சினன்) சத்திரத்தில பூ டெக்கரேஷன் எப்படின்னு பாத்து, ஜானவாச கோவில் லைட்டிங்-கும் ஒரு நடை பாத்துட்டு வந்திடறேன்னு போயிருக்கான். அவ பையன் 4த் கிரேட் படிக்கிறான், டல்லாஸ் டெக்ஸ்சாஸ்-ல இருக்கான். இப்போ வருவான் பாரு, இவங்கதான் உன் வீட்ல படுத்துக்கறாங்க, கொஞ்சம் நாஜுக்கு, எதுக்கெடுத்தாலும் சுத்தம் பாக்கற பையன், அவன் பேசறதுல பாதி காதுல விழாது.., அப்டியே விழுந்தாலும் புரியாத விளக்கெண்ணெய் பேச்சு.. “, என்றவர் நிமிர்ந்து பார்த்து… “தோ வர்றான் பாரு”, என்று  ஒரு பையனை காண்பித்தார்.
“ஹை!!”, மூன்று விரலசைத்து போனால் போகிறது என்று ஆரவ் & வித்யுத் இருவரையும் வரவேற்றான் செந்திலாகப்பட்டவன். [உள்ளே அவனது அம்மா சொல்லி அனுப்பியிருப்பாள் என்று நறுமுகைக்கு தோன்றியது], ஆரவ் தலையசைத்து அதை ஏற்க, வித்யுத் சின்ன சிரிப்போடு முடித்துக் கொண்டான்.
அதற்குள் வேறு யாரோ சொந்தங்கள் வர, இவளை “தோ வர்றேன்மா”, என்று விட்டு அவர்களை கவனிக்க சென்றார் ஆன்ட்டி.
மூவரும் காஃபி & பால் குடித்து முடித்ததும், கூடத்தில் வந்த விருந்ததோடு பேசிக் கொண்டிருந்த ஆன்ட்டியிடம்,  “நான் கிளம்பறேன் ஆன்ட்டி”, மறுத்துப் பேச வந்த அவரைத் தடுத்து, “இங்கதான் இருக்கப் போறேன், மறுபடியும் வர்றேன், ஆற அமர பேசலாம், இப்போ நீங்க கெஸ்ட்-டை கவனிங்க”, என்று கிளம்பினாள்.
அப்போதும் விடவில்லை அவர், “வல்லி, கொஞ்ச நேரத்துல டிபன் குடுத்து அனுப்பறேன்”, என்றார்.
“எதுக்கு ஆன்ட்டி? நாங்க பாத்துக்க மாட்டோமா?”
“அட.. உனக்குன்னு  தனியாவா பண்ண போறோம்?, சாப்பாட்டுக்கு பத்து நாள் கான்டராக்ட் விட்டுட்டேன்”, என்றார் அவர்.
ஒரு நாள் திருமணத்திற்கு பத்து நாள் உணவு வெளியிலேயே? திருமணம் என்றால் இத்தனை உற்சாகம் இருக்குமோ? சளசளவென எல்லா இடத்திலும் நிரம்பி வழியும் சொந்தங்கள். டல்லாஸிலிருந்து, மும்பையிலிருந்து.. இன்னும் எந்த இடங்களில் இருந்தோ? அந்த வீட்டில் ஒரு மகிழ்ச்சிப் பரபரப்பு, ஒரு கண்ணுக்குத் தெரியாத புத்தாக்க(rejuvenation) அலைவரிசை ஊடாடியது. டெலிபோன்ஸ்-சில் பெரிய வேலையில் இருப்பவள், இங்கே காஃபி தட்டோடு அலைகிறாள், டல்லாஸ் நாஜுக்கு இங்கே துடைப்பத்தோடு,  இன்னும் தேடினால், அனைவரும் வேறு வேறு நிலைகளில் உலகத்தின் பல மூலைகளில் இருப்பவர்களாக இருக்கலாம்.
‘இப்படி ஒரு திருமணம் எப்போது பார்த்தோம்? ம்ம். சித்தி? அல்லது மாமா திருமணமாக இருக்கலாம். ஹ்ம். இளைய தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், பிரதீப் அங்கே ஆஸ்திரேலியாவிலேயே உடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். நவநீத் திருமணமே வேண்டாம் என்று சொல்லி திரிகிறான். என்னுடையது? ஹ்ம்..’. எண்ணங்கள் சுற்றங்களை ஒருமுறை பார்த்து வருவதற்குள் வீடு வந்துவிட்டது.
அவளது சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து, பூட்டியிருந்த அவளது மாஸ்டர் பெட் ரூமையும் திறந்தாள். குழந்தைகளை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு, துணி மணிகளை வார்ட் ரோபின் ஹாங்கரில் தொங்க விட்டாள். கவனமாக ‘LUV IV’-யை மறைத்தாள்.
ஒரு மணி நேரம் சிற்றுண்டி, வீடு வந்த இரண்டொருவரோடு பேசசு என்று பொழுதினை போக்கிவிட்டு, பத்து மணி வாக்கில் ஆரவ்+விது இருவரோடு கிளம்பி விட்டாள் ஊர் சுற்ற. கிண்டி பார்க், பிர்லா கோளரங்கம், முடிந்தால் பெசன்ட் நகர் பீச் என்று திட்டமிட்டு கிளம்பினாள்.
ஆரவ்-வோடு பேசிப் பழகும்போது நறுமுகைக்கு ஒரு விஷயம் தெள்ளென விளங்கியது. வீட்டில் ஆரவ் அதிக நேரம் செலவழிப்பது கணினி அல்லது தொலைக்காட்சி, சுற்றுலா செல்வதென்பது கனடாவில் இருக்கும் அவனது அப்பா விடுமுறையில் வரும்போது மட்டும்தான், ஆங், இந்தியா வந்த புதிதில், ( இங்கே வந்து இரு வருடங்கள் ஆகிறதாம்) கொஞ்ச நாட்கள் தாமோதர் ஆரவை வெளியிடங்களுக்கு அழைத்து சென்றார்தான், ஆனால் அவருக்கு பேரனுக்கு சமமாக ஆடி பாடி பேசி விளையாட முடியவில்லை.
நாளடைவில் ஆரவ் அவனாகவே எங்கும் செல்ல விருப்பமில்லை என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டான். இதுவரை அவன் வீட்டினரைப் பற்றி எல்லா விஷயமும் பகிர்ந்தவன், அவனது அம்மாவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. நறுமுகையும் எதையும் கேட்கவில்லை, அவனாக விதுவிடம் கூறும்போது இவள் கிரகித்தவைதான் இவை. தவிர, அடுத்தவர் வீட்டு விஷயங்கள் தேவையற்றது என்பது இவளது கோட்பாடு.
இதோ அதோ வென மூன்று நாட்கள் பறந்தே சென்றுவிட்டது. இன்று காலையில் திருமணம், மாலை ரிஸப்ஷன் என்று ஏற்பாடாகி இருந்தது, நறுமுகை காலை மண்டபத்தில் தலையை காண்பித்துவிட்டு பிள்ளைகளோடு ஷாப்பிங் கிளம்பி விட்டாள், சாயங்காலம் வருவதாக திருமண வீட்டாரிடம் சொல்லி நழுவினாள்.
ஆச்சர்யத்தக்க வகையில் ஆரவ் நிறைய விஷயங்களில் விது-வோடு ஒத்துப் போனான், பிடித்தங்கள், தலை சாய்த்து பேசும் பாவனை, பிடித்தமில்லாததை செய்யும்போது தானாக  வரும் புருவ நெரிப்பு, அவனுக்கும் செவ்வக முகவெட்டு, [என்ன ஆரவ் சற்று பூசினாற்போன்ற உடல் வாகு], மாநிறம், [நீச்சல்குள க்ளோரின் காரணமாக இருக்கும் என்று இவளது எண்ணம்], கொஞ்சம் அமர்த்தலான பேச்சு. ஒருவேளை தாத்தாவைக் கொண்டு இருக்கிறானோ? என்று தோன்றியது, ஆனால் இவன் கனடா நாட்டில் பிறந்தவனா? அல்லது இந்தியாவிலிருந்து அங்கு சென்று வந்தவனா? தெரியவில்லை.
மொத்தத்தில் இருவரும் இவளுக்கு தொல்லை தரவில்லை, எதையும் இருவருமாக கலந்து பேசி முடிவெடுத்தது நறுமுகைக்கு வித்தியாசமாக இருந்தபோதிலும் எதுவும் கூறவில்லை. சற்று வளர்ந்து பெரியவர்களானால், தானாகவே தன்னிச்சையாக முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவர். அதுவரையாவது இந்த ஒற்றுமை + நட்பு தொடரட்டும், என்று நினைத்தாள். சென்னை பிரயாணம் மூவருக்குமே நல்ல பொழுது போக்காகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருந்தது. கடைசியாக ரிஷப்ஷனில் கலந்து கொண்டு, ஊருக்கு புறப்படும் வரை.

Advertisement