Advertisement

சந்திப்பிழை

அத்தியாயம் 2

ஆயிற்று, இதோ அதோவென நறுமுகை திருச்சி வந்து மூன்று வாரங்கள் ஓடி விட்டது. மகனுடன் தினசரி பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டாள், பள்ளி மேற்பார்வையை தந்தையுடன் ஓரிரு நாட்கள் கவனித்தவள், “ப்பா, பரவால்லயே, நானே மேனேஜ் பண்ணிடலாம் போல இருக்கே?” என்று சொன்னதும்,

“அதான் நானும் யோசிச்சிட்டு இருந்தேன், நீயே பாத்துக்கோ, நான் அம்மாவோட டைம் ஸ்பென்ட் பண்ணறேன்”, என்று பொறுப்பு மொத்தத்தையும் மகளிடம் தள்ளிவிட்டு ரங்கேஸ்வரர் வீட்டில் இருக்கிறார்.  வீட்டில் சமையல் மற்றும் மேல் வேலை செய்ய ஆட்கள் வந்து செல்வதால் வேலை அதிகம் இல்லாதிருந்தது. வீடு பள்ளி இரு இடங்களிலும் சேர்ந்து இருப்பதால், வித்யுத் நறுமுகை இன்னமும் பின்னி பிணைந்தனர், சசியின் தாக்கம் மகனிடம் அதிகம் இருந்தது, வெட வெட ஒல்லி, ஆழமான பிரவுன் நிறக் கண்கள், சீரான செவ்வக முகவெட்டு, நிறம் அரவிந்த் ஸ்வாமி, ஒருவேளை இவள் சாப்பிட்ட குங்குமப்பூ விளைவோ?  காரணம் சசி கோதுமை நிறம், நறுமுகை மாநிற ஷேடுக்கு சற்று அதிகம், ஆனால் சசியைப்போல இவனும் இடக்கையாளன், .

மகனிடம் சசியின் தாக்கம் அதிகமிருப்பதாலோ என்னவோ,  எப்போது அவனுக்கு இரவு படுக்கையறைக் கதை சொல்லும்போதும், ஏதேனும் ஒரு நீதிக் கதையை, பெண்களை போற்றும் ஒரு வார்த்தையாவாது கோடிட்டு காட்டி அவன் மனதில் நிரப்புவாள். பின்னாளில் என்னவாய் ஆவானோ? ஆனால் தன்னால் முடிந்தது பிள்ளையிடம் நற் கருத்தை புகுத்தி வைப்போம், இன்னொரு நறுமுகை இந்த பூமிக்கு இவனால் வரவேண்டாம், என்ற எண்ணம் காரணம். இன்னுமொன்று, தான் தவறியதை தன் செல்வமும் தவறவிடக்கூடாதல்லவா?

மெல்ல அவன் சிகையைக் கலைத்து, நெற்றியில் முத்தமிட்டு எழுந்தாள், விடிந்துவிட்டது. நறுமுகை தினசரி வேலையைப் பார்க்கத் துவங்க, அரைமணி நேரத்தில் பிள்ளையும் எழுந்து தினப்படி காரியங்களை கவனிக்க ஆரம்பித்தான். முதலில் பாட்டியிடம் சென்று, விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய மதிம்மாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு, “மதிம்மா, குட் மார்னிங்”, என்று சன்னமாக கூறி விட்டு, யோகா செய்து கொண்டிருந்த ரங்கப்பாவிடம் தொற்றிக் கொண்டான்.

ரங்கப்பா யோகா முடித்து சிறிது நேரம் வராண்டாவில் அமர்ந்து இயற்கை காற்றை உள்வாங்கியவாறே தினசரியைப் படிக்க, வித்யுத் வீட்டின் முன்புறம் இருந்த தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுவான். நீளமான ட்யூபில் செடிகளுக்கு தண்ணீர் விடுவது அவனுக்குப் பிடித்த காலை நேர விளையாட்டு அதிலேயே அவனது பாதி குளியல் முடிந்திருக்கும்.

வித்யுத் குளித்து வருவதற்குள் அவனது பள்ளி சீருடை அயர்ன் செய்யப்பட்டு சுடச்சுட தயாராக வைத்திருப்பார், ரங்கப்பா.  ஷூ பாலிஷ் செய்யப்பட்டு பளபளவென்றிருக்கும். அவர்தான் பேரனை பள்ளிக்கு தயார்படுத்துவார், பழகியிருந்தனர் இருவருமே. நறுமுகை வந்த புதிதில் சில நாட்கள் வித்யுத்-திற்கு செய்ய  வர, விது வேண்டாம் என்றுவிட்டான். இவளும் விட்டுவிட்டாள்.

ஆனால் ஒரு விஷயம் நறுமுகையின் மனதைக் குடைந்தது, விது எதைப் புதிதாக செய்வதாக இருந்தாலும், இன்னும் சொல்லப்போனால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ரங்கப்பாவைக் கேட்காமல் செய்வதில்லை என்பது தான் அது. ஏன் என்று பிள்ளையைக் கேள்வி கேட்கவோ, ரங்கப்பாவிடம் காரணம் கேட்கவோ நறுமுகைக்குத் துணிவில்லை. அவர் முகத்தில் அறைந்தாற்போல் ஏதும் சொன்னால்? என்ற பயம் ஒரு காரணம். சொல்லுவார், அவர் குணம் அப்படி.

காலை வேளையில், காபி தயாரிப்பது வித்யுத்-திற்கு ஸ்னாக்ஸ் தயாரிப்பது (சலாட், பிரட் சாண்ட்விச், கட்லெட், பழங்கள்) மட்டும் நறுமுகையின் அடுக்களை வேலை, அதன் பின் சமையல் வேலை செய்பவர் வந்து விடுவார். நறுமுகை அந்த நேரத்தில் அம்மாவை கவனித்து அவருக்கு உடல் துடைத்து, ஆடை திருத்தி, உணவளித்து விடுவாள். இவர்கள் மூவருமாக பள்ளிக்கு கிளம்பும்போது, பணிக்கு ஒரு செவிலியை வைத்திருந்தாள்.

ஆனால் அம்மா சங்கோஜி, செவிலியை எதற்கும் கூப்பிடவில்லை, உணவு உன்னவேண்டும் என்ற கட்டாயத்தினால் அந்த நேரத்திற்கு சிறிதளவு எடுத்துக் கொண்டார். இரண்டொரு நாட்களில் வேளைக்கு வந்த செவிலியே, ‘அவங்க எங்கிட்ட free யா இருக்க மாட்டேங்கிறாங்க மேம், உங்கப்பா கிட்ட தான் அவங்க என்ன வலின்னாலும் சொல்றாங்க’, நறுமுகையிடம் சொல்ல, ரங்கப்பா பள்ளி செல்வதை தவிர்த்து, மனைவியுடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்தார். நாளடைவில் செவிலியின் அவசியம் இல்லை என்றானது.

வாழ்க்கை ஆளரவமற்ற பைபாஸ் நெடுஞ்சாலையில் இதமான பென்ஸ் காரில் பயணிப்பதுபோல சின்ன குலுங்கல் கூட இல்லாமல் இலகுவாக சென்றது. நறுமுகைக்குதான் மூளை துருப்பிடிப்பதுபோல இருந்தது, இப்போது அவள் செய்யும் பணியில் புதிதான சவால்கள் ஏதும் இல்லை, ப்ரொஜெக்ட் முடிக்கவேண்டிய டென்ஷன் இல்லை, என்று இருப்பதால் வாழ்க்கை சவசவ வென்று இருந்தது. ஆனால், இது தன்னைப் பெற்றவர்களுக்கும், தான் பெற்றவனுக்கும் பிடித்தமாய் இருப்பதால் பழகிக் கொண்டாள்.

மாலையில் மகனுடன் சேர்ந்து, கேஸ் க்ளோஸ்ட் என்னும் ஜப்பானிய சீரிஸ், ஷின்ஷான், சோட்டா பீம், பின் படிப்பு என்று இருவர் பொழுது போகிறது. இப்போதே விது-விற்கு கோடிங் கற்றுத்தரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு நாட்கள் நகர்கையில் பள்ளியில் ஒருநாள், நான்காம் வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் அவனது ஸ்னாக்ஸ் டப்பாவில் வைத்திருந்த வாழைப்பழத்தின் ஒரு பகுதியை அவசரமாக விழுங்கிவிட, அது அவனது சுவாசக்குழாயை அடைத்துக் கொண்டது. அடுத்த ஓரிரு நிமிடங்களில் நறுமுகைக்கு தகவல் அளிக்கப்பட, விரைந்து சென்று கவனித்ததில், அச்சிறுவனுக்கு தொண்டையில் பழம் அடைத்துக் கொண்டிருப்பது புரிந்தது, சுவாசத்திற்கு தடுமாறிய சிறுவனைப் பார்த்து பதைத்தவள், “அடுத்த ஸ்ட்ரீட்-ல இருக்கற டாக்டர கூப்பிடுங்க, க்விக்”, என்றாள்.

“வாட்ச் மேனை அனுப்பி இருக்கேன் மேம்”, இது PT  மாஸ்டர். அப்பையனின் முதுகை தட்டிக்கொண்டிருந்தார். பழத்தினை உள்ளே அனுப்பும் முயற்சி என்று புரிந்தது.

“வாயில கைவிட்டு கூட எடுத்துப் பாத்துட்டேன் மேம், கொஞ்சம் பழம்தான் வந்தது, இன்னமும் மூச்சு விட தினர்றான்”, இது அந்த வகுப்பு ஆசிரியை.

சடுதியில் ஒரு முடிவுக்கு வந்த நறுமுகை, “சார், நீங்க இந்த பெஞ்சில ஏறி நில்லுங்க”,

PT  மாஸ்டர் நின்றார்.

“பையன தலைகீழா பிடிங்க”,

பிடித்தார்.

பின்னங்கழுத்தில் சிறுவன் தாங்குமளவுக்கு ஆனால் வேகமாக ஒரு தட்டு தட்டினாள். “க் க் ஹஹக்”,  பெரிய நெல்லிக்காய் அளவுள்ள பழம் அவனது வாயில் இருந்து விழுந்தது. அவன் ஆழமாக மூச்சு வாங்கினான். கண்களில் கண்ணீர் இன்னமும் வழிந்து கொண்டிருந்தது. சட்டென பிள்ளையை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு, அவனைப் பிடித்திருந்தவரிடம் “விடுங்க, நா பாத்துக்கறேன்”, என்றுவிட்டு “ஒண்ணுமில்ல கண்ணா, பாரு எல்லாம் சரியா போச்சு”, என்று ஆறுதலாக பேச அச்சிறுவன் இவளை இறுக கட்டிக்கொண்டான்.

நிமிடத்தில் அவனே கீழே இறங்க எத்தனிக்க, இறக்கிவிட்டு தண்ணீர் குடிக்க வைத்தாள், தன்னைச் சுற்றி அனைத்து ஆசிரியர்களும், சக வகுப்பு தோழர்களும் நிற்பதை பார்த்ததில் அம்மாணவன் அசவுகர்யமாக உணர்ந்தான் போலும். முகம் சிறிது அசட்டுக்களை காண்பித்தது.

அது புரிந்தவளாக, “ஓகே மேம், இனிமே நீங்க பாத்துப்பீங்க இல்லையா?, டீச்சர்ஸ் எல்லாரும் அவங்கவங்க கிளாசுக்கு போலாமே?”, என்று நறுமுகை சொல்ல,

அனைவரும்….

“பா.. ரெண்டு நிமிஷத்துல உயிரே போயிடுச்சி”,

“என்ன பண்றதுன்னே தெரில”,

“ஏதாவது அசம்பாவிதமா ஆயிருந்தா அவ்ளோதான்? என் மாமியார் என்ன இந்த பக்கம் கூட அனுப்ப மாட்டாங்க”,

“நமக்கு இந்த ஐடியா தோணல பாரேன்?”

“ப்ரின்ஸி முகத்தை பாத்தியா? வேர்த்து போச்சு?”,

“நல்ல வேலையா புது பிரசி வந்தாங்க, இல்லன்னா?”

முணுமுணுத்தவாறே கலைந்தனர்.

“ஓகே, பாக் டு யுவர் ரொடின்”, என்று சிறுவர் சிறுமிகளை பார்த்து கூறிவிட்டு, “நாம ஆபிஸ் ரூம் போலாம்”, என்று ப்ரின்சிபாலிடம் சென்னாள்.

அலுவலக அறைக்கு சென்றதும் நறுமுகை, “உக்காருங்க மேம்”, என்றாள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராத பிரிசிபலை பார்த்து. அவருக்கு சடசடவென வியர்த்திருந்தது, சுமார் ஐம்பது வயதிருக்கும், கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இப்பள்ளியில் இருக்கிறார், படிப்படியாக மேலே வந்தவர். நேர்மையானவர்.  மூன்று கிலோமீட்டர் தொலைவில் அவரது வீடு இருந்தது.

அவர் உட்கார்ந்ததும், “ஈஸி மேம், ரிலாக்ஸ்”, என்று மேஜையில் மூடி போட்ட கண்ணாடி தம்ளரில் இருந்த நீரினை அவரிடம் தந்தாள்.

அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்து பின், “நம்மகிட்ட தோராயமான எத்தனை பேர் படிக்கிறாங்க மேம்?, ஆவரேஜா ஆயிரத்து ஐநூறு பேர் இருப்பாங்களா?”, கேட்டாள்.

“ம்ம். இந்த வருஷம் தவுஸண்ட் பைவ் பார்ட்டி டூ ஸ்டுடென்ட்ஸ்”, பிரின்சிபால்.

“ஓகே, இந்த வீகென்ட் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் போடுங்க, பக்கத்துல யாரவது டாக்டர் பேரென்ட் இருந்தா, நாம அவங்களோட ஒரு டை-அப் வச்சிக்கலாம்-னு ஒரு ஐடியா, எப்போவும் ஒரு ட்யூட்டி டாக்டர் ஸ்கூல் நேரத்தில இருக்கிறா மாதிரி பண்ணனும்”

“மேம், பண்ணலாம் ஆனா, இதெல்லாம் அதிக செலவு பிடிக்கும்”, மெல்ல ப்ரின்ஸி இழுக்க…

“ரெண்டு நிமிஷம் தாமதிச்சிருந்தா அந்த பையன் உயிர் போயிருக்கும் இல்ல?”

“யெஸ்”

“பேரன்ட்ஸ் கிட்ட இதை சொல்லுவோம்”

“இன்னிக்கு நடந்ததையா?”

“ஆமா”

“அது.. அது.. நம்ம அட்மிஷனை பாதிக்காதா?”

“சொல்லலைன்னாதான் பாதிக்கும், எப்படியிருந்தாலும் டீச்சர்ஸ் ஸ்டூடெண்ட்ஸ்க்கு தெரிஞ்ச விஷயம் பரவாம இருக்காது, சோ நாமளே சொல்றது நல்லது கூடவே ஒரு சொல்யூஷனையும் கொடுப்போம், அப்படியும் அட்மிஷன் குறைஞ்சா பாக்கலாம்”, என்றாள் தீர்மானமாக.

“ஓகே மேம்”.

“ப்ளீஸ் கால் மீ நறுமுகை ஆர் வல்லி, நீங்க ரொம்ப பெரியவங்க, மேம் சொன்னா என்னவோ போல இருக்கு”

“அது சரிவராது மேம், உங்க போஸ்ட்க்கு ஒரு மரியாதை இருக்கு, அதை மெயின்டைன் பண்ணியாகணும், மே பி தனியா இருக்கும்போது அப்டி கூப்பிட ட்ரை பண்றேன்”

“அண்ட் நீங்க ஒரு பிபி செக் அப் பண்ணிக்கோங்க, கூடவே இங்க பக்கத்துல ஃப்ரஸ்ட் எயிட் ட்ரைனிங் எங்க தர்றாங்க பாருங்க, அவங்க நம்ம டீச்சர்ஸ் எல்லாருக்கும் பயிற்சி தரட்டும், உடனே ஏற்பாடு பண்ணிடுங்க”

“மேம்”… என்றவர் நறுமுகை “நாம தனியாத்தான் இருக்கோம்”, என்று சிறு முறுவலுடன் பார்த்ததும், “நறுமுகை…, இதும் செலவுதான?”

“ஆமா, இது ஸ்கூல் தரவேண்டாம், ஒரு பேரண்ட்-டா நான் தர்றேன், இதை இங்க அக்கவுண்ட் பண்ணாதீங்க, ஆனா கண்டிப்பா எல்லா டீச்சரும் அட்டென்ட் பண்ணியாகணும்”.

“எஸ் நறுமுகை”, என்று புன்சிரித்தார் பிரின்சிபல்.

“உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு தோணினா, வீட்டுக்கு போங்க மேம், நான் பாத்துக்கறேன்”

“இல்ல, இப்ப ஓகே, வர்றேன்”, என்று அவரது அறை இருந்த வளாகத்திற்கு நடந்தார்.

அன்று மாலை நறுமுகை வேலை நேரம் முடித்து வித்யுத்துடன் வெளியே வரும்போது, ஒரு வெள்ளை நிற ரெனால்ட் டஸ்ட்டர் இவளுக்காக காத்திருந்தது.

Advertisement